
‘ஓம் சாந்தி ஓம்’ ஸ்ரீகாந்த், நீலம் உபாத்யாயா
“மூளைக்குள் உதிக்கும் ஒரு யோசனையை எழுத்தாக கொண்டு வருவதே பெரிய வேலை.
அந்த எழுத்தை காட்சியாக படம்பிடிப்பது அதை விட கடினமான பொறுப்பு. இதை
இந்தப் படத்தின் வழியே ஆரோக்கியமாக கொண்டு வர முயற்சி செய்திருக்கிறேன்.
ஒரு அறிமுக இயக்குநராக நுழையும் எனக்கு இந்தப் படம் நல்ல பேரை
வாங்கிக்கொடுக்கும்’’ என்று நம்பிக்கையுடன் பேசத் தொடங்குகிறார், ‘ஓம்
சாந்தி ஓம்’ படத்தின் இயக்குநர் சூரிய பிரபாகர்.

ஸ்ரீகாந்த், நீலம் உபாத்யாயா நடிப்பில் ஆத்மாக்களின் மனநிலையை கருவாகக்
கொண்டு இந்தப் படத்தை இயக்கி வருகிறார். அவருடைய முதல் பட அனுபவங்களைப்
பற்றி பேசினோம்...
இந்தப் படம் திகில் படம் என்று கூறப்படுகிறதே?
எல்லோரும் இதை ஆவிகள் சம்பந்தப்பட்ட படம் என்றுதான் நினைக்கிறார்கள். அது
உண்மையல்ல. இறந்துபோன நம் முன்னோர்களை நினைவுபடுத்திக்கொள்ளும் ஆத்மா
சார்ந்த படம் இது. அவர்கள் நம் அருகில் இருந்தால் எப்படி உதவியாக
இருப்பார்கள் என்பதைத்தான் இதன் கதை உணர்த்தும். இந்தப் பின்னணி யில் ஒரு
கார் கம்பெனியில் வேலை பார்க்கும் ஸ்ரீகாந்த், நீலம் உபாத்யாயா
இருவருக்குமான காதலை கலந்து பொழுதுபோக்காக படம் நகரும்.
தமிழ் சினிமாவில் இப்போது திகில் படங்கள் மீது ஒரு காதல் ஏற்பட்டுள்ளதே?
நாங்கள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே இப்படத்தின் வேலைகளை தொடங்கிவிட்டோம்.
அப்போது திகில் மற்றும் பேய் படங்கள் வரவே இல்லை. இன்று பல படங்கள்
தொடர்ச்சியாக வருவதால் இன்றைய சூழலுக்கு பொருத்தமான படம் இது என்று
சொல்லலாம்.
‘ஓம் சாந்தி ஓம்’ என்ற பெயரில் ஏற்கெனவே ஷாருக்கான் நடித்த படம் வெளிவந்திருக்கிறதே?
இது ஆத்மாக்கள் சார்ந்த கதை என்பதால் சாந்தி என்ற வார்த்தை பொருத்தமாக
இருக்கும் என்று இந்த பெயரை வைத்தோம். மற்றபடி அந்தப் படத்தின் கதைக்கும்
இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
இப்படத்தின் சில காட்சிகளை கம்போடியாவில் படமாக்கியிருக்கிறீர்களே?
கம்போடியாவில் உள்ள அங்கோர் வாட் கோயில், சுமார் 40 ஏக்கர் பரப்பளவிலான
இடம். இந்திய அளவிலான படங்களில் இதுவரை யாரும் அங்கு படம்பிடித்ததாக
தெரியவில்லை. உலகின் அழகான இடங்களில் அதுவும் ஒன்று என்பதால் அங்கு
படப்பிடிப்பு நடத்தினோம்.
உங்களைப்பற்றி..?
திருச்சி அருகில்தான் என் சொந்த ஊர் இருக்கிறது. பொறியியல் படிப்பு முடித்த
நான், சினிமா ஆசையில் சென்னைக்கு வந்தேன். கதிர், சரவ ணன் சுப்பையா,
செந்தில்குமார், சுப்ரமணியம் சிவா, எஸ்.ஜே. சூர்யா என்று பல
இயக்குநர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றி உள்ளேன். நண்பர் எம்.ராஜேஷின்
படங்களின் கதை விவாதங்களிலும் பங்குபெற்றுள்ளேன். அப்படி ஒரு
சந்தர்ப்பத்தில் உருவான கதைதான் இது.
இந்தப்படத்தின் தயாரிப்பாளர் அருமைச்சந்திரனிடம் கதை சொல்வதற்கு வாய்ப்பு
அமைந்த போது, எம்.ராஜேஷ்தான், இந்தக் கதையை கூறுமாறு சொன்னார். அவர்
சொன்னபடியே இந்தக் கதை தயாரிப் பாளருக்கும் பிடித்துப் போனது. தயாரிப்பாளர்
கட்டப்பொம்மன் உள்ளிட்ட மேடை நாடகங்களில் நடித்த அனுபவம் உள்ளவர் என்பதால்
அவரிடம் எளிதாக ஒட்டிக்கொள்ள முடிந்தது.
thanx - the hindu