Showing posts with label ஆசை. Show all posts
Showing posts with label ஆசை. Show all posts

Saturday, May 04, 2013

அஜித் 42!


தமிழ் திரையுலகின் முக்கியமானவர்கள் பட்டியலில் இருப்பவர் அஜித். பஸ்ஸில் கண்டக்டராக இருந்து  நடிகரான ரஜினியை அடுத்து தனது சொந்த முயற்சியில் வெற்றியும் தோல்விகளையும் ஒரு சேர பார்த்தவர் அஜித். இன்றும் எனது விருப்பதற்காக எனது ரசிகர்களை பயன்படுத்த மாட்டேன் என தனது நற்பணி மன்றங்களை எல்லாம் களைத்து விட்டு இன்றும் தான் உண்டு தனக்கு பிடித்த சினிமா உண்டு என்று ஒதுங்கி வாழ்பவர் இன்று தனது 42 வயதில் அடியெடுத்து வைக்கிறார். அவரை பற்றிய 42 துளிகள் இங்கே...


தெலுங்கு படமான பிரேம புஸ்தகம் மூலம் திரையுலகிற்கு (1992) அறிமுகம் ஆனார்.


தமிழில் 'அமராவதி' என்ற படம் மூலம் அறிமுகம் ஆனார். அத்திரைப்படத்தை அடுத்து பாசமலர்கள், பவித்ரா, ராஜாவின் பார்வையிலே என பல படங்களில் நடித்தார்.


தனக்கு எதிர்பார்த்த வெற்றி இல்லையே என தவித்தவர்க்கு 'ஆசை' என்ற படத்தின் மூலம் வெற்றியை கொடுத்தவர் வஸந்த். அந்த படத்தை தயாரித்தவர் மணி ரத்னம்.


அடுத்தடுத்து பல படங்களில் நடித்தாலும் காதல் கோட்டை, காதல் மன்னன் போன்ற படங்களின் வெற்றியால் முன்னணி கதாநாயகனாக வலம் வர தொடங்கினார்.


1998ம் ஆண்டு வெளிவந்த 'காதல் மன்னன்' என்ற படத்திற்கு கிடைத்த பெரும் வரவேற்பை அடுத்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தார்.


'அமர்க்களம்' படப்பிடிப்பில் ஏற்பட்ட காதலால் ஷாலினியை 2000-ம் வருடம் திருமணம் செய்து கொண்டார். நட்சத்திரத் தம்பதியினருக்கு வாரிசு 'அனோஷ்கா' என்ற குட்டி தேவதை.


தனது பெயருக்கும் முன்னால் எந்த பெயரையும் போட விரும்ப மாட்டார். ஆனால் 'அமர்க்களம்' படத்தில் 'அல்டிமேட் ஸ்டார்' என்ற பட்டத்தை கொடுத்தவர் சரண்.  அடுத்து சரண் இயக்கிய 'அசல்' படத்தில் பட்டம் எதுவும் போட வேண்டாம் என அஜித்தே நீக்க சொல்லிவிட்டார்.


ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வந்த வெற்றிப்படம் 'தீனா'. படத்தில் " தல இருக்கும்போது வால் ஆடக்கூடாது.. நீ ஆடு தல.. " என்று வசனம் வரும். அன்று முதல் ரசிகர்களுக்கும் 'தல' ஆனார் அஜித்.


அவரது சினிமா வாழ்க்கையில் சர்ச்சைகளும் விடவில்லை. 'நியூ', 'மிரட்டல்', 'நான் கடவுள்', 'ஏறுமுகம்' என பல படங்கள் இவர் கமிட் ஆகிவிட்டு கருத்து வேறுபாடால் நடிக்க முடியாது என்று கூறி விட்டார்.


'வாலி', 'வில்லன்', 'வரலாறு' போன்ற படங்களில் இரண்டு/மூன்று வேடங்களில் நடித்தார். அப்படி நடித்த படங்கள் எல்லாம் ஹிட்.! 'ஆனந்தப் பூங்காற்றே', 'உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்', 'நீ வருவாய் என' போன்ற படங்களில் கௌரவ வேடத்திலும் நடித்திருக்கிறார்.


மனதில் பட்டதை அப்படியே பேசிவிடுவார். அதனாலேயே பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை தவிர்த்து விடுவார். 'பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா' என்ற நிகழ்ச்சியில் " ஐயா.. அடிக்கடி ஏதாவது நிகழ்ச்சினு மிரட்டி வர சொல்றாங்கய்யா.. " என்று மேடையில் முதல்வர் கருணாநிதியிடமே முறையிட்டார். அஜித் பேச்சிற்கு மேடையில் இருந்த ரஜினி எழுந்து நின்று கை தட்டினார்.


இன்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு நெருக்கமானவர் அஜித். ரஜினி நடித்த 'பில்லா' படத்தின் ரீமேக்கில் அஜித் தான் நடிக்க வேண்டும் என்று சிபாரிசு செய்தவர் ரஜினி.


கல்யாணத்திற்கு முன்பு புகைபிடிக்கும்  பழக்கம் கொண்டவர். கல்யாணம் ஆனவுடன் தனது மனைவிக்காக சிகரெட்டை விட்டொழித்தார்.


சிம்பு, ஜீவா, ஆர்யா என தமிழ் திரையுலகின் அடுத்த தலைமுறை நாயகர்கள் ஃபேவரைட் எப்போதும் அஜித் தான்.  அதிலும் சிம்பு ஒரு அஜித் வெறியர்.


பல நாயகர்கள் தாங்கள் நடிக்கும் படங்களுக்கு நாயகியாக இவர் தான் வேண்டும் என்று சிபாரிசு செய்வார்கள். ஆனால் அஜித் எப்போதும் நாயகி விஷயத்தில் தலையிடுவது இல்லை.


'நேருக்கு நேர்' படத்தில் அஜித்தும் விஜய்யும் இணைந்து நடித்தனர். இருந்தாலும், கருத்து வேறுபாடு காரணமாக அஜித் படத்திலிருந்து விலக, சரவணன் என்ற இளைஞரை அஜித் நடித்த வேடத்தில் நடிக்க வைத்தார் இயக்குனர் வஸந்த். சரவணனுக்கு சினிமாவுக்காக சூட்டப்பட்ட பெயர் சூர்யா.


அஜித்தும் விஜய்யும் இணைந்து நடித்த ஒரே படம் 'ராஜாவின் பார்வையிலே'. அதன் பிறகு இருவருக்கும் என தனித்தனியாக ரசிகர்கள் கூட்டம் சேர, இணைந்து நடிப்பதைத் தவிர்த்தனர். இருவரும் தொழில்முறையில் போட்டியாளர்கள் என ஆகிவிட, அவர்களது ரசிகர்கள் தங்களுக்குள் மோதிக் கொண்டனர். 'மங்காத்தா' படப்பிடிப்பில் விஜய்யும் அஜித்தும் சந்தித்து கொண்டதிலிருந்து இன்றும் இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகிறார்கள்.


சுப நிகழ்ச்சிகளுக்கு போகிறாரோ இல்லையோ துக்க நிகழ்ச்சிகளில் நிச்சயம் கலந்து கொள்வார். சமீபத்தில் பாடகி சித்ராவின் குழந்தை  நந்தனா இறந்ததற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார்.


தனது 50வது படமான மங்காத்தாவில் ஜார்ஜ் க்லூனி போன்ற கெட்டப்பில் நடித்தார். 'வாலி', 'வரலாறு' என தான் கதாநாயகனாக நடித்த படத்தில் வில்லனாகவும் நடித்திருந்தாலும், 'மங்காத்தா' படத்தில் நடித்தது  நெகட்டிவ் ரோலில் மட்டுமே.


சில மாதங்களுக்கு முன்பு நீங்கள் அரசியலில் ஈடுபட வேண்டும் என்று அஜித் ரசிகர்கள் சிலர் கூறவே " எனது பெயரை தவறாக உபயோகித்தால் ரசிகர் மன்றத்தை கலைத்து விடுவேன்" என்று எச்சரித்தார்.  நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் இவரது பெயர் தவறாக  உபயோகப்படுத்தப்படவே தனது அனைத்து ரசிகர் மன்றங்களையும் கலைத்து விட்டார் அஜித்.


அஜித் ரசிகர் மன்ற கலைப்புக்கு கூறும் காரணம் " மாறிவரும் காலகட்டத்தில் மக்கள் எல்லாரையும் உன்னிப்பாகக் கவனிக்கிறார்கள் என்பதைக் கருத்தில் கொண்டு, திரைப்படங்களுக்கு அப்பால் பொதுமக்களின் பார்வையிலும் கண்ணியமாக தென்பட்டால் மட்டுமே, நடிகருக்கும் அவரது ரசிகர்களுக்கும் கவுரவம் கிட்டும் என்பது என் நம்பிக்கை. அந்த கவுரவமும், எனது இந்த முடிவுக்கு ஆதரவு அளிக்கும் என் உண்மையான ரசிகர்களின் கருத்தும் மட்டுமே எனது இந்த பிறந்த நாளுக்கு உண்மையான பரிசாகும்!"


தீவிரமான சாய்பாபா பக்தர். கார், பைக் என எந்தப் பொருள் வாங்கினாலும் பாபாவுக்குச் சமர்ப்பணம் செய்துவிட்டுதான் பயன்படுத்துவார்!


வெளி இடங்களில் தண்ணீர், பழரசம் போன்றவற்றை அருந்த வேண்டியிருந்தால், இடது கையால் தான் கிளாஸைப் பிடித்துக் கொள்வார். பெரும்பாலான வலது கைக்காரர்கள் பயன்படுத்தியபோது உதடுகள் பட்ட பகுதியைத் தவிர்ப்பதற்காகத்தான் இந்த முன்னெச்சரிக்கை!


சினிமாவில் நடிப்பதற்கு முன் வேலை பார்த்த ஏற்றுமதி-இறக்குமதி வணிகத்தின் நிலவரங்களை இப்போதும் அடிக்கடி அப்டேட் செய்துகொள்கிறார்!


வீடு, அலுவலகம் என எங்கு ரசிகர்களைச் சந்தித்தாலும், 'உங்க குடும்பத்துக்கு முக்கியத்துவம் கொடுங்க. மன்றப் பணிகளை நேரம் இருந்தா பார்த்துக்கலாம்!' எனப் பாசமாக வலியுறுத்துவார்!


உள்ளூர் அரசியல் பற்றித்தான் கருத்துச் சொல்ல மாட்டார். ஆனால், உலக அரசியலின் இன்றைய நிலவரம்பற்றி எந்த நிமிடமும் அவரிடம் பேச, விவாதிக்க அவ்வளவு விஷயம் இருக்கும்!


சாய்பாபாவுக்குப் பிறகு அஜித்துக்குப் பிடித்த தெய்வம் திருப்பதி வெங்கடாஜலபதி. சென்னையில் இருந்தே இதுவரை இரண்டு தடவை நடந்தே சென்று திருப்பதி சாமி தரிசனம் செய்திருக்கிறார்!


ரேஸ் போட்டிகளில் அஜித்துக்கு ரோல் மாடல் பிரபல ரேசர் அயர்டன் சென்னா. அஜித்தின் பிறந்த நாளான மே 1-ம் தேதிதான் அயர்டன் ஒரு கார் விபத்தில் இறந்தார். அதை நினைத்து தன் பிறந்த நாளன்றும் உருகி வருந்துவார் அஜித்!


ரசிகர்களின் திருமணங்களுக்குத் தன்னுடைய பெயர், படம் போட்டு ஃப்ளெக்ஸ் பேனர்கள் அடிப்பதை விரும்பவே மாட்டார். 'கல்யாணம் ரொம்ப பெர்சனல் விஷயம்ல!' என்பார்!


தனது மொபைல் போனில் குழந்தை அனோஷ்கா பிறந்ததில் இருந்து இப்போது வரை நடப்பது, பேசுவது, ஓடுவது, சிரிப்பது என எல்லாமே குட்டிக் குட்டி வீடியோ கிளிப்பிங்குகளாக இருக்கின்றன. படப்பிடிப்பு இடைவேளைகளில் அவற்றைப் பார்த்து ரசித்துக்கொண்டு இருப்பார்!


'இது நான் பேச உங்களுக்கு உகந்த நேரமா?' என கேட்டுவிட்டுத்தான் தொலைபேசி, அலைபேசிகளில் பேச ஆரம்பிப்பார்!



thanx - vikatan



பொதுவாக, சுயசரிதை நூல்கள் வாசிப்பது பிடிக்கும். ரஜினி பரிசளித்த 'ஹிமாலயன் மாஸ்டர்ஸ்' புத்தகத்தை அடிக்கடி வாசிப்பார். வீட்டில் மினி நூலகமே உண்டு!


அஜித்தின் விமான ஆசை கிளை விரித்தது ஆசான் மெமோரியல் பள்ளியில். அங்கே அவர் பாடமாகப் படித்த ஏரோ மாடலிங்தான் இன்றைய ரிமோட் விமானம், பைலட் அசோசியேஷன் நடவடிக்கைகள் வரை வளர்ந்து நிற்கிறது!


உருளைக்கிழங்கு பொரியல், சாம்பார், சிக்கன் பிரியாணி சமைப்பதில் எக்ஸ்பர்ட். சூட்டிங் இல்லாமல் வீட்டில் இருப்பதாகத் தெரிந்தால், நண்பர்கள் வீட்டில் குவிந்து, பிரியாணி சமைக்கச் சொல்லி அஜித்தை வம்பிழுப்பார்கள்!


எந்த ஹோட்டலுக்குச் சென்றாலும் புதுவித உணவு வகைகளாக ஆர்டர் செய்வார். அந்த உணவு அருமையாக இருந்தால், அதைத் தயாரித்தவர்களை நேரில் அழைத்துப் பாராட்டித் தள்ளிவிடுவார்!


படிக்கிற காலத்தில் தீவிர கிரிக்கெட் பிரியர். ஆனால், இப்போது 'கிரிக்கெட்டுக்கான முக்கியத்துவம் எல்லா விளையாட்டுகளுக்கும் தேவை' என்கிறார்!


மனித முகங்களைப் படம் பிடிப்பதில் கேமராமேன் அஜித்துக்கு அத்தனை ஆர்வம். நண்பர்களின் கேமரா பழுதடைந்தால் பைசா செலவில்லாமல் ரிப்பேர் சரி செய்து தரும் அளவுக்கு கேமராக் காதலர் இவர்!


அனோஷ்கா, தந்தையை 'அஜித் குமார்' என்றுதான் அழைப்பாள். அப்படி ஒவ்வொரு முறை அனோஷ்கா அழைக்கும்போதும் பூரிப்பில் முகம் இன்னும் சிவக்கும் அஜித்துக்கு!


மினியேச்சர் ஹெல்மெட்களைச் சேகரிப்பது அஜித்தின் பொழுதுபோக்கு. விதவித நாணயங்கள், தபால் தலைகளைக் காட்டிலும் அபூர்வமான கலெக்ஷன்ஸ் இது!


தான் நடித்த படம் ரிலீஸ் ஆன பிறகு ரிசல்ட் கேட்டு அதைப்பற்றிய விமர்சனத்தில் ஈடுபடவே மாட்டார் அஜித். 'சந்தைக்கு வந்திருச்சு. இனி ரசிகர்கள்தான் தீர்மானிக்கணும். நம்ம பங்கு முடிஞ்சுபோச்சு!' என்பார்!


தங்களது படம் வெளியாகும்போது படத்துக்கான பப்ளிசிட்டிக்கு பல நடிகர்கள் ஊர் ஊராக செல்லும் நிலையில்,  'மங்காத்தா' படத்திலிருந்து என் படம் குறித்து  எதுவும் பேசக்கூடாது என முடிவு செய்திருக்கிறேன்.."   என படம் குறித்து பேச  திடமாக மறுத்திருக்கிறார்.


சமீபத்தில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான நடிகர் சங்க உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டு ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை இருந்த ஒரே முன்னணி நடிகர் அஜித் மட்டுமே!


    thanx - vikatan