Showing posts with label அழகு குட்டி செல்லம்-திரை விமர்சனம்:. Show all posts
Showing posts with label அழகு குட்டி செல்லம்-திரை விமர்சனம்:. Show all posts

Thursday, January 07, 2016

அழகு குட்டி செல்லம்-திரை விமர்சனம்:

குழந்தை என்னும் அற்புதம் நமது வாழ்வில் என்னென்ன அதிசயங் களை நிகழ்த்தும் என்பதைச் சில குடும்பங்கள், ஒரு பள்ளிக்கூடம், ஒரு அநாதை ஆசிரமம் ஆகியவற்றின் பின்புலத்தில் சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர் சார்லஸ்.



ஏதோ ஒரு விதத்தில் குழந்தை குறித்த ஏக்கங்களும் சிக்கல்களும் சந்தோஷங் களும் கொண்டவர்கள்தாம் இந்தப் படத்தின் கதை மாந்தர்கள். குழந்தை என்னும் அம்சம் ஒவ்வொரு குடும்பத் தின் உணர்வு தளத்தில் என்னவாக உருமாறுகிறது என்பதைக் காட்சிப் படுத்தியபடி நகரும் படம் மையப் பிரச்சினையாக ஒரு பள்ளிக்கூடத்தின் நாடகத்தை முன்னிறுத்துகிறது. அந்த நாடகத்தின் மையமும் ஒரு குழந்தைதான்.


குழந்தை பிறக்கவில்லையே என்று ஏங்கும் ஆசிரியை, ஆண் குழந்தைக்காகத் தவிக்கும் ஆட்டோ ஓட்டுநர், பிறந்த குழந்தையைப் பார்க்கக்கூடத் தன் கணவன் வரவில்லையே என்று தவிக் கும் தாய், வயிற்றில் கருவையும் பொறுப் பற்ற காதலன்குறித்த வேதனையை மனதிலும் சுமக்கும் இளம் பெண், பெற் றோரின் பொறுப்பற்ற சண்டையால் பாதிக் கப்படும் சிறுவன், புத்திர சோகத்தால் தவிக்கும் இணையர், நாடகத்தில் குழந்தை இயேசுவாகத் தோன்ற நிஜக் குழந்தையை அழைத்துவர வேண்டுமே என்று தவிக்கும் மாணவர்கள் ஆகியோரின் உணர்ச்சிகள் வலுவாகப் பதிவாகியிருக்கின்றன. இவற்றினிடையே அநாதை ஆசிரமம் ஒன்றின் அன்றாட வாழ்வும் இயல்பாகக் காட்சிப்படுத்தப்படுகிறது.



தனித்தனியாக இருக்கும் இந்தக் கதைகளின் பொது அம்சம் குழந்தை என்றாலும் அந்தக் குழந்தை ஒரே குழந்தை அல்ல. வெவ்வேறு குழந்தைகள். எனவே இந்தக் கதைகளை இணைக்க வேறு சரடுகள் தேவைப்படுகின்றன. அந்தச் சரடுகளை உருவாக்கிய விதத்தில் இயக்குநர் அதீதமான சுதந்திரத்தை எடுத்துக்கொண்டுள்ளார்.


பரஸ்பரம் சம்பந்தமே இல்லாத நபர் களைத் தற்செயல் நிகழ்வுகள் இணைத்து வைப்பது இயற்கைதான். ஆனால் தற் செயல் நிகழ்வுகள் இயல்புத் தன்மையை மீறிச் செல்லும்போது நம்பகத்தன்மையை இழந்துவிடுகின்றன. ‘வேண்டாத’ குழந்தை கூவத்தில் போடப்படுவது நம்பகமான நிகழ்வுதான். ஆனால் குழந்தை ஒன்றைத் தேடி அலையும் சிறுவர்கள் கண்ணில் அந்தக் குழந்தை படுவது தற்செயலின் மந்திரக் கணம். இப்படி ஒரு இடத்தில் நடந்தால் அதை விட்டுவிடலாம். இதே அதிசயம் திரும்பத் திரும்ப நிகழும்போது தற்செயல் என்பதே திரைக்கதையை ஓட்டும் உத்தியாக மாறிச் செயற்கையாக வெளிப்படுகிறது.


வயிற்றில் நிறைமாதக் குழந்தையுடன் தற்கொலை செய்துகொள்ள ஒரு பெண் முயற்சி செய்ய, ஆண் குழந்தைக்கு ஏங்கும் தம்பதியின் கண்ணில் அவள் படுவதும் அவளுக்கு ஆண் குழந்தை பிறப்பதும் தற்செயல் உத்தியின் அதீதப் பயன்பாடுதான். குழந்தையைக் கடத்துவது என்னும் விபரீத முடி வைச் சிறுவர்கள் எடுப்பது ஏற்றுக் கொள்ளத்தக்கதுதான். ஆனால் பிறந்து இரண்டு மூன்று நாட்களே ஆன ஒரு குழந்தையைக் கடத்திச் செல்லும் முறையில் வேடிக்கையும் விறுவிறுப்பும் இருக்குமளவுக்கு நம்பகத்தன்மை இல்லை.


நாடகம் நடக்கும் நேரத்தில் குழந்தை காணாமல்போகும் உப நாடகமும் இதே ரகம்தான். ஜான் விஜய்யின் பாத்திரம் வலிந்து திணிக்கப்பட்டதாக உள்ளது. விவாகரத்துக்கு விண்ணப்பித்திருக்கும் இணையர் ஒன்றிணையும் காட்சியும் நாடகத்தனமாகவே இருக்கிறது. சதுரங்கப் போட்டி தொடங்கியதுமே அதன் முடிவு என்ன என்பது தெரிந்து விடுகிறது.



இந்தக் குறைகளை மீறியும் படம் பார்வையாளர்களைக் கவர்கிறது என்றால் அதற்குக் காரணம் இயக்குநர் உணர்ச்சிகளைக் கையாண்ட முறையும் நடிகர்கள் அவற்றை வெளிப்படுத்திய முறையும்தான். பெரும்பாலான காட்சி களில் வெளிப்படும் உணர்ச்சிகள் மனதைத் தொடுகின்றன. குறிப்பாக, இலங்கைத் தமிழ் இணையரின் புத்திர சோகம். ஈழத்தைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் தனிமையின் வெறுமையில் அமர்ந் திருக்கும் காட்சி படத்தின் சட்டகத்தைத் தாண்டி விரியும் யதார்த்தச் சித்திரம். இந்தச் சித்திரம் எழுப்பும் சலனங்கள் ஆழமானவை.


கருணாஸின் பாத்திரப் படைப்பு கச்சிதம் என்றால் அவருடைய நடிப்பு அற்புதம். கருணாஸுக்குள் இருக்கும் இவ்வளவு திறமையான நடிகரை இயக்குநர் சார்லஸ் அழுத்தமாக அடையாளப்படுத்தியிருக்கிறார். இலங் கைத் தமிழ்ப் பெண்ணாக வரும் ரித்விகா வின் நடிப்பும் குறிப்பிடத்தக்கது.



தம்பி ராமய்யா, வினோதினி, கரு ணாஸ், ரித்விகா ஆகியோரின் தேர்வு மிகவும் பொருத்தமானது. கேப்டன் சாணக்யா, யாழினி, நேஹா பாபு, ராஜேஷ் குணசேகர் ஆகிய சிறுவர்கள் நன்றாக நடித்திருக்கிறார்கள். படத்தை விறுவிறுப்பாக ஓட்டிச் செல்லவும் குழந்தைகள் பற்றிய படத்துக்கான உணர்வைப் படம் முழுவதும் ஏற்படுத்த வும் இவர்கள் பெரிதும் பயன் பட்டிருக்கிறார்கள். குழந்தைகளை அதிகப்பிரசங்கித்தனமாகப் பேசவிடாதது ஒரு பெரிய ஆறுதல்.


விஜய் ஆம்ஸ்ட்ராங்கின் சிறப்பான ஒளிப்பதிவு படத்தின் ஆதார பலம். வேத்சங்கர் சுகவனத்தின் இசை படத்தின் மற்றுமொரு சிறப்பு. ‘அழகு குட்டி செல்லம்’ என்ற பாடல் முதல் முறை கேட்கும்போதே மயக்குகிறது. இந்தப் பாடலைத் திரும்பத் திரும்பப் பயன்படுத்திக்கொள்ளும் விதம் மனதை அள்ளுகிறது.


‘அழகு குட்டி செல்லம்’ குழந்தை களை மையமாகக் கொண்ட படம். முழுக்க முழுக்கக் குழந்தைகளின் உலகை வெளிப்படுத்தும் படம் அல்ல. குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் பொதுவான உலகின் சில பகுதிகளைப் படம் சித்தரிக்கிறது. நுண்ணுணர்வுடனும் கவித்துவத்துடனும் சில காட்சிகள் பதிவாகியிருக்கின்றன. தனித் தனிக் கதைகளை இணைத்த விதத்திலும் சில கதைகளை வடிவமைத்த விதத்திலும் நம்பகத்தன்மை கூட்டியிருந்தால் படம் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி யிருக்கும். கலாபூர்வமான சாதனையாக வும் இருந்திருக்கும்.


நன்றி - த ஹிந்து