பிரசாந்தி சேகர்
இதுவெல்லாம் தெரியாது போனதுவே! ஈர மனதில் பாசி படர்வதும். உள்ளுக்குள் புகுந்து
உடம்பெல்லாம் நிரம்பும் சக்தியாவதும். தேகமெல்லாம் காய்ச்சல் காண்பதும். அது தீயெனக்
காய்வதும். திகட்டத் திகட்ட இனித்துப்போவதும். மீறமீற மெய்யாகிப்போவதும். சுவரில்
சாய்ந்தபடி முழங்கால்களுக்குள் முகத்தைப் புதைத்து விசித்திரமான உணர்வுகளுடன் ஊசலாடி
அலையுறுவதும். கண்மூடி வண்ணங்களுக்குள் தோய்ந்துகிடப்பதும். அவை வசந்தமாய்ப்
பூப்பதும். அதுவே வாழ்வாகிப் போவதும். அந்த வாழ்வில், ஒரு கணத்தில், மெய்மறந்த
மகிழ்வில், இன்பத்தின் உச்சத்தில் பொசுங்கிவிட மனசு துடிப்பதும் .
. .
பிரியம் வைப்பது என்பது இதுதானா?
இன்னொரு உசிரின்மேல் உசிரை வைத்துப் பிரிந்துபோவது இதுதானா?
இதுவெல்லாம் மேலுக்கும் மெய்யுக்கும் தெரியாது போனதுவே! மனதில் தெரிந்ததெல்லாம்
கறுப்பும் வெள்ளையும்தான். இலையுதிர்ந்த மரங்களில் படிந்த பனியும்.
பனிப்புகாருக்குள் குறுகுறுத்துப் பறந்த புறாக்களும். அடர்ந்த காட்டினுள் விழுந்து
உலவிய நிலவும். அள்ளியெடுத்துப் பூசிய வீபூதியில் வைத்த கறுத்தப் பொட்டும் . எல்லாமே
கறுப்பும் வெள்ளையுமாய். அதற்கும் அப்பால், வாழ்தலில் வண்ணம் தெரியாது போயிற்று. அட,
வண்ணம் ஏன்? கறுப்புக்கும் வெள்ளைக்கும் இடையில் கசிந்த சாம்பல் கூட கண்ணில் படாது
போயிற்றே! மனது உறைந்து பனியாய் இறுகிக்கிடந்ததுவே!
கஃப்காவும்அப்படித் தான். இலைகள் அற்ற ஒற்றை மரமாய், உறைந்துபோன வெள்ளைப் பனியாய்
என்முன் தனித்து நின்றான். காலைச் சுற்றினான். நடந்தபோது தொடர்ந்து வந்தான்.
தெளிந்த வெளிகளில் இருண்டு தெரிந்தான். இருண்டு போகையில் ஒளியாய்ப் படர்ந்தான். பனி
போர்த்தியிருந்த பாதைகளில் தெறித்துக் கிடந்த குறுங்கற்களைப் போல அங்கும் இங்கும்
நெரிபட்டான். கறுப்பாய் . . . வெள்ளையாய் . . . வேறெந்த வண்ணமும் அற்றதாய். வறண்டு,
வண்ணமில்லாது என் வாழ்வினுள் வந்தவன். இவன் ஃப்ரான்ஸ் கஃப்கா (Franz Kafka). அழியாத
பெரும் காவியங்களுக்குச் சொந்தக்காரன்.
1883 ப்ராக் (Prague)
இன்று செக் ரிபப்ளிக் (Czech Republic), அன்று ஆஸ்திரிய-ஹங்கேரிய
சாம்ராஜ்யத்திற்குச் (Austrian Hungarian Empire) சொந்தமான ப்ராக் நகரின் ஓல்ட்
டவுன் ஸ்குவார் (Old Town Square)இல் ஜெர்மன் பேசிய யூதப் பெற்றோருக்கு ஆறு
பிள்ளைகளில் மூத்தவனாகப் பிறந்தவன் கஃப்கா. இரு தம்பிமாரும் சிறு வயதில் இறந்துவிட,
அம்மா, அப்பா, மற்றும் மூன்று தங்கைகளுடனானது அவனது வாழ்வு. செக் மொழி
பெரும்பான்மையாகப் பேசப்பட்ட அன்றைய ப்ராக் நகரில், ஜெர்மன் மொழி பேசியவர்கள்
மிகச்சிலரே.
இரு சமூகமும் தமது அடையாளத்தை வலுப்படுத்திய சூழலில், சொந்த நிலம், மொழி
அற்று ஜெர்மன் பேசிய யூத மக்கள் நிலையாய்க் கால்ஊன்ற முடியாது கேள்விகளுடன் நின்றனர்.
கஃப்கா இரண்டு மொழிகளையும் தடையின்றிப் பேசி, ஜெர்மன் மொழியை தனது தாய்மொழியாகக்
கருதியபோதும், அவனின் யூத வேர் பெரும் நெருக்கடிகளைக் கொடுத்தது. நான்கு ஆண்டுகள்
சட்டத் துறையில் கல்விகற்று வழக்கறிஞராக பட்டம் பெற்றபோதும், காப்புறுதி
அலுவலகத்திலேயே ஓய்வூதியம் பெறும்வரை அவனின் வாழ்வு சிறுகிக் கிடந்தது.
உழைத்து
வயிற்றைக் கழுவிய வாழ்வு என்று அவன் வெறுப்பாய்ச் சொன்னதுமுண்டு. கசந்து,
சிறுமைப்பட்ட வாழ்வு பற்றி இங்குப் பேசவரவில்லை நான். அரிதாய்க் கிடைத்த நேரங்களில்
கஃப்கா என்ற பெரியவன் எழுதிய அழியாக் காவியங்கள் (The Trial, The Metamorphosis,
The Judgement, The Castle, Contemplation) பற்றியும் பேசவரவில்லை நான்.
காவியங்களுக்கும் அப்பால் ஒரு படைப்பு இருக்குமானால் அதனை அவன் படைத்தான். உயிர்
கொடுத்தான். அவை உருவம் பெற்றன. கவிதை அல்ல. சிறுகதையும் அல்ல. நாவல்? அல்ல. அது
தனித்த ஒரு கலைவடிவம். அவனின் உயிர் அலைந்த உலகம் அது. அது பற்றிப் பேச நெஞ்சு
நிறைய வார்த்தை உண்டு.
மனதின் சுவர்களில் ஊறி, இதயத்தில் சுரந்து, இரத்தத்தில் கலந்து, பச்சை நரம்புகளில்
பாய்ந்த மொழி அது. நெஞ்சின் ஓசை. உயிரின் வார்த்தை. புனைவின் உச்சம். என்றெல்லாம்
சொல்லத் தோன்றுகிறது. அவை வேறொன்றும் அல்ல. கடிதங்கள். கடிதங்கள் உலகின்
மிகச்சிறந்த இலக்கியம் எனச் சொல்வேன் நான். நாவல் ஒன்று நீண்டு விரிந்து மெல்ல
மெல்ல சொல்வதை கடிதம் நாலு வரியில் உயிரைப் போய்த்தொடும் அல்லவா? அதன் சக்தியே வேறு.
மலை உச்சியில் கசிந்து ஊற்றெடுக்கும் கலப்பற்ற தெளிந்த நீரைப்போல. அள்ளி எடுத்துப்
பருகப்பருகத் தீராது தாகம்.
கடிதங்கள். அத்தனை தூய்மை. அத்தனை புனிதம். தெய்வீகம்.
கடிதம் எழுதுவது தவம் செய்வதுபோல. எனக்கு அப்படித்தான். ஒற்றைத்தாள் கிழித்து,
மைதொட்டு, மெய்மறந்து உனக்கும் எனக்குமான ஓர் உலகை உருவாக்குவது. அதனுள் பயணிப்பது.
காத்திருப்பது. ஒருவரி வராதா என்று ஏங்கித் தவிப்பது . அந்த வரி வந்தால் . . .
அதனுள் உருகி உருகிப் போவது. தவம் செய்யும்போது உள்ளுக்குள் தேன் சொட்டுமே!
அப்படித்தான். மயங்கிக் கிடப்பது. கிறங்கிப்போவது. மீண்டும் ஒரு தாள் கிழித்து . .
. கடிதங்களுடன் வாழ்ந்தோர் உண்டு. உசிரைப் போலக் கட்டிக்காத்தோர் உண்டு.
உன்னதமாய்
இறந்தோரும் உண்டு. கஃப்கா கடிதங்களில் வாழ்ந்தவன். மூச்சுவிட்டவன். குடித்து உண்டவன்.
அதுவே மிகச் சரி. சிறுகதைகளிலும் நாவல்களிலும் கஃப்காவின் மொழியும் அதனுள் விரிந்த
உலகும் நெஞ்சுக்குள் இறங்காது மூளையில் மட்டுமே பனிப்படலமாய் மிதந்தன. அவனின்
கடிதங்கள் அப்படியல்ல. அதுவேறு கஃப்கா. அதுவேறு மொழி. அதுவேறு உலகு. அது நெருப்பு.
“எனது எழுத்து. அது எனது உலகு. இருந்தும் அது உன்னைச் சுற்றியே. உனது நெஞ்சினில்
முகத்தைப் புதைத்துச் சொல்ல முடியாததை எல்லாம் எழுத்தில் குமுறினேன். இனி, இந்தக்
கடிதத்துடன் உனக்காகக் காத்திருக்கிறேன்.”
இந்த வரிகள் கஃப்கா கடிதம் ஒன்றில் எழுதியவை. இப்படி எழுதியவனை எப்படி என்னால்
கறுப்பு வெள்ளையாய் மட்டுமே பார்க்க முடிந்தது? இந்த மனதிற்கும் வேறொன்றும் தெரியாது
போனதுவே! இலைகள் அற்ற ஒற்றை மரமாய், உறைந்த வெள்ளைப் பனியாய் வந்து நின்றவனை எப்படி
அந்தரத்தில் விட்டேன்? காலைச் சுற்றினானே. கூட வந்தானே. மேலெல்லாம் முள்பட்டது.
மௌனமாய் விம்மினேன். சற்றுத் தவித்தேன். எட்டி அவனின் கைகளை இறுகப் பற்றினேன்.
விறைத்திருக்கும் என நினைத்தேன். தொட்டபோது சுட்டன அந்த விரல்கள். எடுத்து கண்களில்
ஒற்றினேன். இறுகிய பனி மெல்ல உருகத்தொடங்கியது. கசிந்து நீராகியது. வெள்ளை, அது
காணமல் போயிற்று. கறுத்த மரங்கள் முளைமுளையாய் மொட்டுகள் கண்டன. இருண்ட மேகங்கள்
வானமெங்கும் அலைந்து திரிய பனியல்ல மழையே பெய்தது. ஒவ்வொரு சொட்டிலும் மாலை
சாம்பலாய் மடிந்தது. எனது கைகளில் இவனின் கடிதங்கள். கஃப்காவின் கடிதங்கள்.
கறுப்புக்கும் வெள்ளைக்கும் இடையில் கசியும் சாம்பலைப் போல விரிகிறது ஒரு உறவு.
இரத்தம் கொடுத்த உறவு அது.
1919, ஷேலேசன் (Schelesen)
அன்புள்ள அப்பா,
அன்புள்ள அப்பா,
உன்னால் மாறமுடியாது. அதனை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், எமக்கிடையிலான உறவில் ஏதோ
ஒன்று சரியல்ல. அதனை நீயும் சேர்ந்து உருவாக்கிவிட்டாய். அது உனது தவறே அல்ல.
இருந்தும், அதை நீ புரிவாயானால், எம் இருவரின் கருத்தும் ஒன்றே. உன்னை ஒரு நண்பனாக,
ஒரு மேலதிகாரியாக, உறவுமுறையில் மாமனாக, பாட்டனாக, ஏன் ஒரு வளர்ப்புத்
தந்தையாகக்கூட பார்ப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். ‘அப்பா’ என்று வரும்போது தான்
அதீத பலத்துடன் நீ தெரிகிறாய். நானோ பலமற்றவனாய், பயந்தவனாய் உன்முன்.
கொஞ்சம்
தட்டிக் கொடுத்தல், கொஞ்சம் அன்பான அரவணைப்பு, கொஞ்சம் புரிந்துணர்வு . . .
இவையெல்லாம் எனது வாழ்வுப்பாதையில் தேவைப்பட்டன. மாறாக, இவை அனைத்தையும்
மாறச்செய்தாய். அது நல்லிணக்கத்தால் இருக்கக்கூடும். வேறொரு பாதையில்
நடக்கச்சொன்னாய். ஒரு புழுவின் இறுதிப்பாகத்தை கால்களால் நசுக்கிவிட, அது தனது முதல்
பாகத்தைப் பிய்த்துக் கொண்டு ஓரமாய் ஒதுங்குவதைப் போல். ஓசையற்றுக் கிடந்தேன்.
பேச்சு மறந்துபோச்சு. திக்கினேன். உனது வளர்ப்பில், உனது கைகளும் எனது உருவமும்
இசையாது போயிற்று. ஓர் உண்மையும் உண்டு. ஒரு பொழுதாயினும் என்னை நீ அடித்தது
கிடையாது. இருந்தும் உனது முகம் சிவப்பதும் உரத்த குரலில் நீ கத்துவதும், வேகமாகக்
காற்சட்டையைச் சரி செய்வதும். இதுவெல்லாம் ஒருத்தனைத் தூக்கிலிடுவது போல.
தூக்கிலிட்டால் அவன் செத்துவிடுவான்.
எல்லாம் முடிந்து விடும். ஆனால்
தூக்கிலிடுவதற்கானஅனைத்து தயார்ப்படுத்தல்களையும் அவனைக் கிட்டஇருந்து பார்க்க
வைத்து, கழுத்திற்குமுன் கயிறு தொங்கும் அந்தக் கணத்தில் ஆயுள் தண்டனை எனஅவனுக்குச்
சொல்வதைப் போல. வாழ்வு முழுதும் அவனை அந்த வலியில் துடிக்க வைப்பது. ஏன், மணம்
முடிப்பதும், ஒரு வாழ்க்கைத் துணையைத் தேடிக்கொள்வதையும்கூட எனது தோல்விகளின்
வரிசையில் அடுக்கினாய். மணம் முடிப்பதன் நோக்கமே ஓர் இருப்பிடம் அமைப்பது, சுயமாய்
வாழ்வது. அந்த சிந்தனை உனக்கு ஒத்திருந்ததுதானே? ஆனால், உண்மை இப்படி இருந்தது. ஒரு
சிறுபிள்ளை விளையாட்டைப் போல. ஒருவன் இன்னொருவனின் கைகளைப் பிடித்து அழுத்தி
அமுக்கியபடி “ஓடு, ஓடு, ஏன் ஓடாமல் நிற்கிறாய்” எனக் கத்துவதுபோல. எனது கைகள் உனது
கைகளுக்குள். எனது வாழ்வும் இப்படியே உன்னுடன் முடிகிறது. இனிவரும் காலங்களுக்கு
விளைவுகளைத் தாங்கியபடி.
மழை ஓய்ந்த பாடில்லை. குளம் கட்டித் தேங்கி நிற்கிறது நீர். கஃப்காவின் மனதில் ஆறாது
கிடந்த காயங்களைப் போல. ‘அப்பாவுக்கு’ என்று தலைப்பிட்ட இந்தக் கடிதம் சிறுவயது
முதல் அவனுக்குள் கிடந்து, சுரந்து, நுரைத தும்பி, கொதித்து, பொங்கிச்சீறிய
உணர்வுகள். ‘அப்பா’ என்றழைத்து நேராய் கண்களுக்குள் பார்த்து நெஞ்சு நிமிர்த்தி அவன்
அனைத்தையும் கூறியிருக்க வேண்டும். கூறவில்லை. அவனால் கூறமுடியாது. பயம். அது அவன்
மேல் முழுதும் பூசிக் கிடந்தது. சாம்பலாய். புழுவாய். தனித்துப் போய் இயலாமையில்,
தோற்றுப் போனவனாய் எழுதினான்.
ஒவ்வொரு பருவமும் பாரமாய்ப்போன வாழ்வு. கனத்த கடிதங்களில். வரிகளாக, வலிகளாக. ஒன்பது
நாட்களில் ஒரு நூறுபக்கங்கள். எழுதியவன் அதனை மடிக்கவில்லை. உறைக்குள் வைத்து
ஒட்டவில்லை. மேசைப் பெட்டிக்குள் போட்டு மூடிவிட்டான். அதனால் காற்றும் அதனைக்
காவாது போயிற்று. கண்களிலும் படாது போயிற்று. சென்றடைய வேண்டிய கைகளுக்கும் சேராது
போயிற்று. இது கொடுமை. விரதம் கிடந்து, இரவிரவாய்த் தூக்கம் விழித்து, ‘சிவசிவ’ என
அவன் நாமம் சொல்லி, விடிந்ததும் சன்னதியில் திரைவிலக அந்தச் சாமியைப் பார்க்காமல்
எழுந்து போவதுபோல. மிகச் சாதாரணமாக. அந்த சாமிக்காகத்தானே இத்தனை விரதமும் இத்தனை
வேதமும்? இது சாதாரண செயல் அல்ல. மனிதனால் முடியாதது. புடம் போட்ட மனதில் அதற்கென்று
ஒரு திடம் வேண்டும். தெளிவு வேண்டும்.
மரத்துப்போய் நின்றேன். அலைஅலையாகக் கண்ணீர் கொட்டியது. முதல்முறையாக இதயம்
சொன்னதையெல்லாம் மல்லுக்கு நிக்காமல் மூளை தலையசைத்துக் கேட்டது. அவனின் முதுகைத்
தடவி அணைத்து நெஞ்சினில் சாய்த்துக்கொண்டேன். அகத்தில் இனி அவன் இருக்க
இருள்போயிற்று. கறுப்பு, வெள்ளை, ஏன் சாம்பலும் போயிற்று. குளிருக்கு அஞ்சி
தூரப்பறந்த குருவிகள் கூட்டமாக மீண்டும் வந்து கரைந்தன. வாழ்தலின் ஓசை அது.
விழித்தேன். மனது பறந்தது. நீலம் கண்டது. மஞ்சள் பூசியது. பெருத்த மொட்டுகள்
வெடித்து விரியப் பச்சை தெரிந்தது. இத்தனை காலமும் இத்தனை வண்ணம் தெரியாது போயிற்று.
வசந்தமும் வராது போயிற்று. இப்போ, அனைத்தையும் அள்ளிச்சுமந்து வந்திருக்கிறான்
கஃப்கா. கஃப்காவின் வாழ்விலும் வண்ணம் இருந்த காலம் ஒன்று இருந்தது. வசந்தம்
வீசியபொழுதுகள் நிறைந்து இருந்தன. அது மூன்று ஆண்டுகால நிஜம். பரவசம். அமிர்தம்.
இதையெல்லாம் ஒன்று திரட்டினால், அது மிலேனா!
“மிலேனா, எத்தனை செழிப்பு, செறிவு இந்தப் பெயரில். காவமுடியாது. அத்தனைக் கனம்.
மிலேனா என்றால் அன்பிற்குரியவள். அது செக் மொழியில். ஆரம்பத்தில் பிடிக்காது
போயிற்று. இப்போ, இந்தப் பெயர் வண்ணத்திலும் வடிவத்திலும் ஒரு பெண். இந்தப் பூமியில்
இருந்து எடுத்தேன். தீயில் இருந்து எடுத்தேன். எனக்குச் சொல்லத் தெரியவில்லை. தன்னை
எனக்குள் பதித்து என் கைகளில் மிதக்கிறாள். சுமந்து போகலாம் போல.”
இது கஃப்கா மிலேனாவுக்கு எழுதிய 300க்கும் மேற்பட்ட கடிதங்களில் ஒன்று. யார் இவள்?
யார் இந்த மிலேனா?
மிலேனா கஃப்காவின் வாழ்வு! கஃப்கா மிலேனாவின் வாழ்வில் ஒரு அத்தியாயம்! அவ்வளவுதானா?
ஒரு மிடறில் குடித்துவிட முடியுமா அந்த வாழ்வையும் அதன் அத்தியாயத்தையும்?
மிலேனா ஜெஸ்சென்ஸ்க்கா (Milena Jesenska) செக் ரிபப்ளிக்னின் மிக முக்கிய
பத்திரிகையாளர், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். 18 வயதில் யூதஇன எர்ன்ஸ்ட்
பொலாக் (Ernst Pollak) என்பவரை மணம் முடித்து ஆஸ்திரியாவின் வியன்னா நகரில் 30
ஆண்டுகள் வாழ்ந்து பிரிந்தவள். கஃப்காவின் படைப்புகளைச் செக் மொழியில்
மொழிபெயர்ப்பதில் தொடங்கிய ‘கஃப்கா மிலேனா’ உறவு மூன்று ஆண்டுகாலம் பலநூறு
கடிதங்களில் தீராக்காதல் கண்டது. இல்லை, இப்படித்தான் சொல்லவேண்டும். ப்ராக் நகரின்
மொல்டௌவ் நதிக்கும், வியன்னா நகரின் டோனௌவ் நதிக்குமிடையில் உயிர் உலவியது. இன்பமும்
துன்பமும் உச்சம் தொட்டன. கடிதங்கள் மூன்றுநேர ஆகாரம் போலப் பரிமாறப்பட்டன.
காற்றுக்கும் அது புரிந்திருந்தது. புயல்போல அவற்றைக் கசங்காது காவிச்சென்று கைகளில்
பதித்தது. வெள்ளைத்தாள்களில் எழுதிய விரல்களின் வெப்பம்கூடத் தணியவில்லை. இறகு
கறுப்பு மையைத் தான் தொட்டது. வாழ்வோ வண்ணங்களுக்குள் தோய்ந்து கிடந்தது. வண்ணங்கள்
வசந்தமாகின. பூத்துச் சொரிந்தன. மிலேனாவுக்கென கஃப்கா எழுதிய கடிதங்கள்.
பிரிக்கிறேன். ஒவ்வொன்றாக.
“மிலேனா, கையில் எடுத்தவுடன் புரட்டிப் படிக்க முடியா படைப்புகள் உண்டு. சற்று நேரம்
அவற்றைத் தொட்டுத் தடவி, கண்மூடி நுகர்ந்து, பொழுதெல்லாம் அதன்மேல் உறங்கி அதன் பின்
மெல்லப்பிரித்து. நான் ஒப்புக்கொள்கிறேன். மிலேனா, உனது கடிதங்களும் அப்படித்தான்.
என்னை இன்பத்தில் ஆழ்த்துகின்றன. இந்த அமைதியான கடிதங்கள். அதன் காலடியில்
கிடக்கத்தோன்றும். அளவற்று. ஆனந்தமாய். எரியும் தலையில் பெய்யும் முதல் மழை அவை!
இன்று மதியம், இரண்டு கடிதங்கள் சேர்ந்து வந்தன. படிப்பதற்காக அல்ல அவை.
விரிப்பதற்கு. முகத்தை அதனுள் பதிப்பதற்கு. அறிவைத் தொலைப்பதற்கு. மிலேனா, உனது
கடிதங்கள் எனது இரவுகளை எழுப்புகின்றன. பகலெல்லாம் என் தலையணையாய். இனி, உனது
கடிதங்கள் அல்லாத பொழுதுகள் இல்லை. உனதும் எனதுமற்ற உலகு அந்நியமாய்ப் போயிற்று.
என்னையும் உன்னையும் பற்றியே ஆயிற்று எனது எழுத்து. பாலும் நெய்யும் இலைகுளையும்
போதாதா? உனது அருகாமையின் உணவுதான் எனக்குத் தேவையா? இது அநியாயம்! புரிகிறது.
மீண்டும் மீண்டும் ஞாயிறின் கடிதங்களையும் திங்களின் கடிதங்களையும் கையில்
எடுக்கிறேன். உனது முகத்தை எனது இருகைகளுக்குள்ளும் வைக்கவேண்டும். நெருங்கி உனது
விழிகளுக்குள் பார்க்கவேண்டும். மிலேனா, ஒருமுறை எனது விழிகளுக்குள் பார்! உனக்குப்
புரிகிறதா நீ யார் என்று. நீ எனக்குச் சொந்தமானவள். ஆயுள் முழுதும் உன்னைப்
பார்க்காது போனாலும் நீ என்னைச் சேர்ந்தவள். உண்மையான மிலேனா வியன்னாவில் இல்லை.
இங்கு இருக்கிறாள். என்னுடன் இருக்கிறாள். நடக்கும் போது என் அருகில் சேர்ந்து
நடக்கிறாள். வெளியெல்லாம் நிரம்பும் சக்தி அவள். வலி தரும் மாயம்! மிலேனா, ஒன்று
செய்வாயா? உனது கடிதங்கள் செக் மொழியிலேயே இருக்கட்டும். அது உனக்குரிய மொழி. உனது
மண்ணின் மொழி. அங்குதான் உன்னை முழுதாய் நான் பார்க்கிறேன். உன் உடலும் கைகளும்
அசைவது எனக்குத் தெரிகிறது. கண்களை மெல்ல உயர்த்தி உன் முகத்தைப் பார்க்கும் அந்தக்
கணம். கடிதங்களில் இருந்து தீ பறக்கிறது. தீயைத் தவிர வேறேதும் தெரியவில்லை எனக்கு.
மிலேனா, நீ மகத்தானவள்!”
உனது F
பிரியம் வைப்பது இதுதானா? அந்த பிரியத்தையெல்லாம் கலையாக்குவது இதுதானா? அந்த
உன்னதக் கலைப்படைப்பு என் கைகளில். உடலெல்லாம் நடுங்கிற்று. சேராது என நினைத்த
வண்ணம் என் வாழ்வில் சேர்ந்தது. இந்த உலகில் அளவற்ற பிரியத்திற்கு வண்ணம் ஒன்று
இருந்தால், அது சிவப்பா? எனக்கு என்னவோ போலிருக்கு . . . அரக்குப் புடவையில்
அள்ளியெடுத்து நெற்றி நிறைய குங்குமம் வைத்தேன். சுண்ணாம்பிட்ட வெற்றிலையை மென்று
சுவைத்தேன். கைகளுக்கும் கால்களுக்கும் மருதாணி வைத்தேன். இத்தனை அழகா நான்? மெய்
மறந்தது. மகிழ்வில். தேகமெல்லாம் காய்ச்சல் கண்டது. தீயாய்க் காய்ந்தது.
மருந்துக்கும் மாறாத காய்ச்சல். இது வேறல்லவா! மேலுக்கும் மெய்யுக்கும் மெல்லப்
புரிகிறது. எல்லாமே. மிலேனா, அவள் கொள்ளை அழகு. அளவற்ற அறிவு. அறிவையும் கடந்த அன்பு.
சேர முடியாதது எல்லாம் அவளில் ஒருசேரக் கொட்டிக்கிடந்தது. அப்படிப்பட்ட ஒருத்தியை
எப்படி ஒரு பெண்ணாகப் பக்கத்தில் வைத்துப் பார்ப்பது? ஒரு மனுசியாகக் கண்களுக்குள்
வைப்பது?
“என்னால் முடியாது, மிலேனா! நான் வியன்னாவிற்கு வரமுடியாது. எப்படி அது
சாத்தியப்படும்? இந்த மனம் அந்த உளைச்சலை எப்படித் தாங்கும்? மனதால் நான்
பலமற்றவன். எனது நுரைஈரலின் நோய்கூட மனது பலவீனப்பட்டு கரைபுரண்டதன் விளைவே.
உன்னிடம் சொல்லாமல் என்னால் வரமுடியும். மாயம் நிகழ்த்த முடியும். நினைக்கும் போதே
உடலெல்லாம் உதறுகிறது. நீயும் நானும் பார்க்காமல் இருப்பது. அதுவே எனக்கும் உனக்கும்
நன்று. ஒன்றை மட்டும் சொல்ல விடு. நான் உன்னிடம் வருவேனேயானால் உனது ஒரு அசைவில்,
ஒரு வார்த்தையில் ஒரு பார்வையில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து கிடந்திருப்பேன்.
எந்த மருந்தும் என்னை மீட்டிருக்க மாட்டாது. புரியுதா உனக்கு?”
இல்லை இல்லை என்று அவன் மறுக்க, அந்தப் பயணம் ஒரு நாள் மெய்யாகிப்போனது. நான்கு
நாட்கள். அவளுடன். கண்களுக்குள் கண்கள் பார்த்து. பக்கத்தில் வைத்து. தேனை அருந்தி.
திகட்டத் திகட்ட இனித்துப்போன பொழுதுகள். உள்ளுக்குள் கிடந்த பிரியத்தை எல்லாம்
கொட்டிவிட்டுப் பிரிந்து போயின அந்த இரண்டு உசிரும்.
“இன்று, இந்தக் கணம். மிலேனா, மிலேனா, மிலேனா. வேறொன்றும் என்னால் எழுத முடியவில்லை.
விடியல்களையும் இரவுகளையும் வெட்டிவிட்டு நான்கு பொழுதுகளை மட்டும் வாழக்கொடுத்தால்
என்ன செய்யும் இந்த நோயுற்ற இதயம்? மிலேனா, எப்போ நீ கண்கொள்ளாத அழகாய் இருந்தாய்
தெரியுமா? அதுபற்றி வேறுசொல் கிடையாது! ஞாயிறு அன்று. நான் சொல்வது சரி தானே? உனது
காதுகளுக்குள் இதனைச் சொல்கிறேன். நீ முகத்தைத் திருப்பி என்னைப் பார்க்கிறாய்.
வேறென்ன நான் சொல்ல? கடந்து போனவை பற்றிச் சொல்லவா? அடர்ந்த காடு.
உன் அருகில் நான்.
உனக்குள் கரைந்து. நீரில் விழுந்த மைத்துளி போல. இருவரையும் சேர்த்த அந்தப் பயணம்,
அந்தக் காடு, நகரின் சுற்றுப்புறம், அந்தி வெய்யில். ஒன்றும் கடந்து போகாது.
முடிந்து போகாது. விட்டுப் போகாது. உடம்போட உசிரோட வைத்து இறுகத் தைத்தது எப்படி
விட்டு விலகிப்போகும்? புகையிரத நிலையத்தில் விடை பெற்ற அந்தக் கணம். வெளுத்து
வாடிய அந்த முகம். வறண்ட அந்த விழிகள் . . . நான் சுமந்து போகிறேன். காதுக்குள் ஒரு
ஒலி. “அவள் இனி உனதல்ல” என மணி ஒலிக்கிறது. இருந்தும், இதனை மிஞ்சும் சக்தி வாய்ந்த
இன்னொரு ஒலி ஆகாயத்தில். “அவள் உன்னை விட்டுப் போகமாட்டாள்” என்று பலத்துக்
கேட்கிறது. காதுக்குள் கேட்பது மட்டும் ஓயாது ஒலித்தபடி. குரல்வளை மறுக்கிறது.
விரல்களும் மறுக்கின்றன.”
கஃப்கா மிலேனா - இந்தச்சேர்க்கை பல உன்னத கடிதங்களுக்கும் அப்பால், அந்த நான்கு
பொழுதுகளுக்கும் அப்பால் மீண்டும் சேராது போயிற்று.
“மிலேனா, இனியொரு சந்திப்பும் நிகழவேண்டாம். நாம் சேரக்கூடாது. இனி, எழுதவும்
வேண்டாம். நான் சொல்வதை ஓசைபடாது செய்வாயா?”
என கஃப்கா கடிதம் எழுதினான். மிலேனா, பதில் கடிதம் எழுதினாள். கஃப்காவிற்கு அல்ல.
கஃப்காவின் தோழன் மக்ஸ் ப்ரொட் (Max Brod) என்பவனுக்கு.
“ஒடுங்கிய தெருக்களுக்குள் ஓடுகிறேன். இரவுகளெல்லாம் வெறிச்சபடி. ஜன்னல் அருகே.
கத்தியைத் தீட்டும்போது பறக்கும் தீப்பொறிகளைப் போல. நினைவுகள் சிலநேரங்களில்
தெறித்தெழுகின்றன. ஒரு தூண்டிலில் தொங்குகிறது எனது இதயம். உங்களுக்குப் புரிகிறதா?
ஒரு மெல்லிய கொளுக்கியில். அது
அறுக்கிறது. வலியை மெலிதாய்க் கூராய் அறுக்கிறது.
இனி, அவனுக்கு நான் எழுதப்போவது இல்லை. ஒருவரி தானும் இல்லை. உங்களுக்கு சந்தர்ப்பம்
கிடைத்தால் அவனிடம் உள்ள எனது கடிதங்கள் நெருப்புக்குள் போகட்டும். அவனின்
எழுத்துக்கள், கடிதங்கள் யாவும் என்னிடமே. ஒரு வார்த்தை சொன்னால், அவை உங்களிடம்
வந்து சேரும். இனி, இலைகள் துளிர்க்கும் அந்தப் பொழுதில் நான் அங்கு வருவேன்.
அதற்கிடையில், நேரம் வாய்த்தால், அவன் எப்படி இருக்கிறான் என்று ஒரு வரி எழுதுங்கள்.
ஒவ்வொரு நாளும் தபால் பார்க்க நான் செல்வேன். அது மாறாது.
நன்றியுடன்,
மிலேனா பொலாக்
மிலேனா பொலாக்
மரங்களில் இலைகள் இல்லை. பனி படிகிறது. பனிப் புகாருக்குள் குறுகுறுத்துப்
பறக்கின்றன புறாக்கள். அடர்ந்த காட்டுக்குள் நிலவு விழுந்து உலவுகிறது. எதையோ தேடி.
பொழுது இருள, அள்ளியெடுத்துப் பூசிய வீபூதியில் கறுத்தப் பொட்டுடன் நான். தனித்து.
எங்கும் வெள்ளைத்தாள்கள். மை தொட்டு எழுதிய கடிதங்கள். மனதெல்லாம் கறுப்பும்
வெள்ளையுமாய் உறைந்து இறுகி, சூன்யமாய். இனி, நீ சொல்! எப்போ வசந்தம் வரும்? வண்ணம்
சேர்க்கும்? வாழ்வு முளைவிடும்?
thanx - kalachuvadu