Showing posts with label அலை. Show all posts
Showing posts with label அலை. Show all posts

Wednesday, March 20, 2013

பீறிட்டுக் கிளம்பும் மாணவர்களின் உணர்ச்சி -தனித் தமிழீழம்


மாணவர் போராட்டம்...


உடைந்தது அறுபது ஆண்டு மெளனம்!

இந்தி ஆட்சி மொழியாக்கப்படுவதை எதிர்த்து தமிழகத்தில் 1965--ல் மாணவர் போராட்டம் வெடித்தது. 'மதுரையில் இரண்டு நாட்களில் அறுபத்து மூன்று முறை தடியடி நடத்தினேன்’ என்று ஜாலியன் வாலாபாக்கில் ஜெனரல் டயர் சொன்னது போல அன்றைய மதுரை மாவட்ட ஆட்சியர் பெருமிதத்துடன் சொன்னார். அன்றைய மொழிப் போர்க் கிளர்ச்சி மூன்று விபரீதமான நகர்வுகளை இந்திய அரசிடம் உருவாக்கியது.

1. இந்திய விடுதலைக்குப் பிறகு, மாநிலங்களில் நுழைந்திராத (காஷ்மீர் தவிர) இந்திய ராணுவம், முதன் முதலாக தமிழகத்துக்கு வரவழைக்கப்பட்டது. ராணுவத்தின் கரகரத்த பூட்ஸ் ஓசையை தங்களது சொந்த பூமியில் தமிழக மக்கள் கேட்டனர்.

2. முதன்முதலாக தமிழ்நாடு முழுவதும் அஞ்சல் தணிக்கை செய்யப்பட்டது. அஞ்சல் நிலையம் ஒவ்வொன்றும் காவல் நிலையமாக மாறியது. போலீஸ்காரர்கள் ஒவ்வொரு கடிதத்தையும் பிரித்துப் படித்தனர்.

3, முதன் முதலாக மாணவர்கள் மீது பாய்ந்தது இந்தியத் தேசியப் பாதுகாப்புச் சட்டம் (Defence of  India rules). மாணவர் தலைவர்கள் 10 பேர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்​பட்டனர்.அன்று மாணவர் கிளர்ந்தெழுதலின் பின்னணியில் செயல்பட்டதாகக் கருதப்பட்ட அரசியல் இயக்கமான திராவிட முன்னேற்றக் கழகம், ''போராட்டத்தைக் கைவிடுங்கள்; தமிழினப் பாதுகாப்பும் இந்தி எதிர்ப்பும் எங்கள் கைகளில் பத்திரமாக இருக்கும்'' என மாணவர்களிடம் உறுதியளித்தது. அவர்கள் அடுத்து வரவிருக்கும் 1967 பொதுத் தேர்தலில் அரியணை ஏறுவது நிச்சயம்; இந்தி எதிர்ப்பை நடுவணரசுடன் மோதி முன்னெடுப்பார்கள் என்று அன்றைய மாணவர்களாக இருந்து போராடிய நாங்கள் நம்பினோம்; நம்பி ஏமாந்தோம். அதுதான் உண்மையான வரலாறு.


அதிகாரச் சுகிப்பு மனமும் போர்க்குணமும் ஒருபோதும் ஒன்றிணையாது. ஆட்சியதிகாரம், போராட்டக் குணத்தை புலம்பெயரச் செய்துவிடும் என நாங்கள் அப்போது அறியவில்லை. ஓரிரு ஆண்டுகள் கடந்ததும் அந்த உண்மை எங்களுக்குப் புலனானபோது 1969-ல் இந்தி எதிர்ப்புப் போரில் மீண்டும் தீவிரம்கொண்டோம். அதன் உச்சம் கோவை அரசுப் பொறியியல் கல்லூரியில் மாணவர்கள், தனித் தமிழ்நாடு கொடியை ஏற்றி விடுதலை முழக்கம் எழுப்பினர். நாற்காலிக்காரர்கள் மாணவர்களிடம் மறுபடியும் ஓடி வந்தனர். துப்பாக்கிகளோடு அல்ல; துயரம் தோய்ந்த முகத்தோடு; கெஞ்சுதல் 
சொற்களோடு. ''இப்போது ஆட்சியில் நாங்கள்தானே இருக்கிறோம்; உங்களின் ரத்தம்தானே! எங்களை நீங்கள் நம்பவில்லையா?' என்றனர். மீண்டும் ஒருமுறை நாங்கள் ஏமாந்தோம். 1965 இந்தி எதிர்ப்பு மௌனிக்கப்பட்டது.



அதிகார அரசியலை மாணவர்களால் இனம் கண்டுகொள்ள முடியாமல்போனாலும், அதிகார மனிதர்களைக் கீழே இறங்கி வரவைக்க மாணவர்களால் முடியும் என்பதை உணர்ந்தோம்.

அன்று அடக்கப்பட்ட மாணவர்களின் உணர்ச்சி இன்று பீறிட்டுக் கிளம்புகிறது.
'தனித் தமிழீழம் அடையும் வரை ஓய மாட்டோம். தமிழீழத்துக்கான பொது வாக்கெடுப்பை நடத்து’ என்ற முழக்கத்தை இன்றைய மாணவர்கள் முன்வைக்கின்றனர். 'கொலைகாரர்​களின் நாடாக இலங்கை இருந்துவிட்டுப் போகட்டும். கொலை செய்யப்பட்டவர்களின் ஈழப் பகுதி விடுதலை செய்யப்பட வேண்டும்’ என்பது மாணவர்களின் கோரிக்கை. 'ஈழத்தைத் தனி நாடாக ஆக்க, ஐ.நா. பொது வாக்கெடுப்பு நடத்தவேண்டும்’ என்றும் இவர்கள் கோரிக்கை வைக்கின்றனர். அரசியல்வாதிகள் வைக்கும் போலி வாக்குறுதிகளைப் போல அல்லாமல் தீர்க்கமாக இருக்கின்றன இவர்களது முழக்கங்கள்.


அல்ஜீரிய மக்கள், பிரான்சின் காலனி ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடினர். மக்களின் போராட்டத்தை ஒடுக்க ராணுவத்தில் சேருமாறு இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்தது பிரெஞ்சு அரசு. 'அல்ஜீரிய மக்களின் விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவாக நிற்போம். ராணுவத்தில் சேர மாட்டோம்’ என்றனர் இளைஞர்கள். மிகப்பெரிய எழுத்தாளரும் பிரெஞ்சு அறிஞருமான ழீன் பால் சார்த்தர், 'இளைஞர்களின் இந்த மறுப்பு நியாயமானது. தேசபக்தியின் பெயரால் நடக்க இருந்த மோசடியை முறியடித்து விட்டனர்’ என்று பாராட்டினார். இன்றைய தமிழக மாணவர் போராட்டத்தைக் கவனிக்கும்போது இப்படித்தான் சொல்லத் தோன்றுகிறது.

ஈழ மண்ணுக்காக இந்த மாணவர்கள் கண்ணீர் வடிக்கிறார்கள் என்பது மட்டுமல்ல, இலங்கை நட்டுவைத்த உலகக் கொடுமையின் உயரமான விருட்சம் வேறெங்கும் துளிர்விடக் கூடாது என்ற மானுடநேயப் பார்வைகொண்டவர்களாய் மாணவர்கள் வெளிப்படுகிறார்கள்.    .


'ஈழத் தமிழர்க்கு நீதி கிடைக்கும் வரை எமது போராட்டம் ஓயாது’ எனத் தமிழகம் முழுவதும் பற்றிப் பரவிய தீ 1965-ஐ நினைவூட்டுகிறது. 60 ஆண்டுகள் கடந்துவிட்ட போதும் துருப்பிடித்துப் போகாத உணர்வுகளைக் காலம் தனது கைகளில் ஏந்தி மாணவர்களிடம் வழங்கியிருக்கிறது. 'போர்க் குற்றம் பற்றிப்பேச அமெரிக்காவுக்கு என்ன அருகதை இருக்கிறது?’ என்று கேட்டதுதான் இன்றைய மாணவர்களின் தீர்க்கதரிசனத்துக்கு உதாரணம்.
சென்னை லயோலா கல்லூரி மாணவர்களின் இந்த முன்மொழிதல்கள் தீப்பொறிகளாக விதைக்கப்பட்டன. அவர்களைத் தொடர்ந்து அனைத்துக் கல்லூரிகளிலும் வெப்பம் தெறித்தது. இதுபோன்ற உணர்வுவசப்பட்ட தன்னெழுச்சிகள் நீண்ட காலம் தாக்குப்பிடிக்காதென்று சில மேல்மட்ட அறிவாளிகள், படிப்பாளிகள் சிந்திக்கிறார்கள். போராட்டத்தின் நோக்கம் சரியாக இருக்கும்போது அந்த வடிவத்தை மேலும் செழுமைப்படுத்த எண்ணாமல், பழி சுமத்த முயலும் போக்கே  இவர்களிடம் வெளிப்படுகிறது. இன்னும் சிலரோ 'கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் மட்டுமே ஈடுபடுகிறார்கள். தொழிற்கல்விக் கூடங்கள், பொறியியல், மருத்துவக் கல்லூரிகளில் உள்ள பெரும்பான்மை மாணவர்கள் போராட்டக் களத்தில் இல்லை’ என்று உட்பெருமிதம் கொள்கிறார்கள்.
1965-ன் தொடக்கத்திலும் இப்படித்தான் நேர்ந்தது. சமூகத்துக்குப் பயன்படாத கல்வி எங்களுக்கு மட்டும் ஏன் என்று மனசாட்சி குத்தியெடுக்க, இந்தத் தொழிற்கல்வி மாணவர்​களும் பின்னர் இணைந்தனர் என்பது வரலாறு. சில காலங்களில் சில பிரச்னைகள் தன்னெழுச்சி​யாகவே மேலெழும். அந்த எழுச்சியை வழிநடத்தத் தலைமையும் அமைப்பும் இருக்கிறதா என்பதே முக்கியமானது. 1965 போராட்டத் தன்னெழுச்சியினூடாக தலைமையும் மாணவர் அமைப்பும் உருக்கொண்டன. பேரணி, வகுப்புப் புறக்கணிப்பு, அஞ்சலக முற்றுகை, ரயில் மறியல் எனக் கட்டம் கட்டமாகத் திட்டமிட்டு அறிவித்​தோம். தை, மாசி, பங்குனி என்ற இளவேனில் மாதங்கள் இந்தப் போராட்டத்தில் கரைந்துபோயின.
இன்றைய போராட்டத்தில் இத்தகையத் தலைமையும் வழிகாட்டுதலும் உருவாகி இருக்கிறது என்று நான் காண்கிறேன். பல பகுதிகளிலும் போராட்டத்தை முன்னெடுக்கும் மாணவர் அமைப்புகள் அவர்களுக்குள் கலந்துபேசி கோரிக்கைகளுக்கு வடிவம் கொடுக்கின்றனர். பொழுதுபோக்குக் கலாசாரத்துக்கும், போக்கிரித்​தனத்துக்கும் ஆளாகாமல், தன் பிள்ளை நேர்மைகொண்ட நெஞ்சினராய் நீதிக்குப் போராடுகிறான் என்பதால், பெற்றோரும் பிள்ளை​களின் வசமாகிவிடுகிறார்கள். குடும்பங்களின் ஆதரவும் அவர்களுக்குக் கிடைத்தது. இதன் முன்னுதாரணம் 1967 பொதுத் தேர்தலில் சாட்சியமாகியது.
போராடும் மாணவ சக்தியை ஒருபோதும் ஆட்சியாளர்களாலோ ஆதிக்கச் சக்திகளாலோ அடக்கிவைக்க முடியாது. ஆனாலும் மயக்கிவைக்க பல்வேறு வழிகளைக் கையாளுகிறார்கள். 60 ஆண்டு நெடிய மயக்கநிலை உடைந்திருக்கும் காலம் இது. மாணவர்களின் எழுச்சியை வெறுமனே ஈழத் தமிழர்களுக்கான குரலாக மட்டும் பார்த்துவிடக் கூடாது. அதன் பெயரால் அவர்கள் அரசியல் உணர்வும் பெற்றுள்ளனர். அது வளர்த்தெடுக்கப்பட வேண்டியது. தமிழக மாணவர்களின் எழுச்சியை உலகின் கவனத்துக்கு எடுத்துச்செல்லும் ஊடகங்கள், குறிப்பாக வடஇந்திய ஊடகங்கள் திட்டமிட்டுப் புறக்கணிக்கின்றன. டெல்லி மாணவி பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டதன் தொடர்பில் டெல்லி மாணவர்கள் நடத்திய போராட்டத்தை, வட இந்திய ஊடகங்கள் உலகின் கவனத்துக்குக் கொண்டுசென்றன. ஈழத்தில் ஆயிரக்கணக்கான தமிழ்ப் பெண்கள் சிங்கள ராணுவத்தால் பாலியல் வன்புணர்ச்சி செய்யப்பட்டதை, இன்றும் வன்புணர்ச்சிக் கொடுமை தொடர்வதை வடக்கிலும், கிழக்கிலும் 90 ஆயிரம் விதவைகள் வதைபடுவதை வட இந்திய ஊடகங்கள் கண்டுகொள்வதே இல்லை. அமெரிக்க அரசியலைப் புரிந்துகொண்ட மாணவர்களுக்கு இது புரியாமல் இருக்காது.
1965 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் முன்னின்ற நாங்கள், அப்போது 20-களில் இருந்தோம். இப்போது 60-களில் நிற்கிறோம். இன்று களம் கண்ட மாணவர்கள் 20-களில் நிற்கிறார்கள். 20-களிலேயே வெல்வார்கள். களத்தில் நிற்கும் மாணவர்களுக்கு நாங்கள் சொல்வது இதுதான்;
'போராடுவதற்காகக் கற்றுக்கொள். கற்றுக்கொள்​வதற்காகப் போராடு.’

ஓயாது மாணவர் அலை!

சொந்தங்களுக்கு தமிழகக் கல்லூரி மாணவர்களின் கண்ணீர் பொங்கிப் பிரவாகம் எடுத்து​வருகிறது.
 கல்லூரிகளுக்குத் காலவரையற்ற விடுமுறை அறிவித்தாலும், தமிழகம் முழுவதும் மாணவர்களின் போராட்டம் தகிக்கிறது. பல்வேறு ஊர்களில் பொதுமக்களும் தன்னெழுச்சியுடன் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர். ஈழ விவகாரத்துக்காகத் தொடர் உண்ணா​விரதம் இருக்கும் மாணவர்​களின் கொதிப்புகள், குமுறல்கள் இங்கே...  
''மிரட்டியது கல்லூரி நிர்வாகம்!''
சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தை முதலில் தொடங்கிய லயோலா கல்லூரி மாணவர்களை நள்ளிரவில் குண்டுக்​கட்டாகத் தூக்கிச் சென்ற காவல்துறையால், ஏழு நாட்களைக் கடந்து உண்ணாவிரதம் மேற்கொள்ளும் சட்டப் பல்கலைக்கழக மாணவர்கள் மீது கைவைக்க முடியவில்லை. ஆனாலும், மாணவர்களின் போராட்டத்தைத் தடுக்க பல்வேறு வழிகளிலும் முட்டுக்கட்டை போடத் தவறவில்லை. பந்தல் அமைக்க வந்தவர்களை மிரட்டுதல், தண்ணீர் கேன் கொண்டுவந்தவர்களை எச்சரித்தல், மின்தடை ஏற்படுத்துதல், ஆதரவு தெரிவிக்க வருபவர்கள் மீது கழுகுப் பார்வை... என்று, பல வழிகளில் போராட்டத்தை முடக்க நினைத்தும் முடியவில்லை.
உண்ணாவிரதப் பந்தலில் இருந்த சவுந்திர​ராஜன் உடல்நிலை மிகவும் பலவீனம் அடைந்த நிலையில் சோர்வுடன் பேசினார். ''எங்கள் பல்கலைக்கழகத்தில் போராட்டம் ஆரம்பித்த உடனேயே, காலவரையற்ற விடுமுறை அறிவித்துவிட்டனர். விடுதியில் இருந்தவர்களையும் வெளியேற்றிவிட்டனர்.  'உங்களை ஃபெயில் ஆக்கிடுவேன். போராட்டத்தைக் கைவிடுங்க’ என்று நிர்வாகத் தரப்பில் இருந்து மிரட்டினர். எதற்கும் அசராமல்​தான் எட்டாவது நாளாக உண்ணா​விரதம் இருக்கிறோம். சில மாணவர்களுக்கு உடல்நிலை ரொம்பவும் முடியாமல், அரசு மருத்துவமனையில் சேர்த்து இருக்கிறோம். எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்'' என்றார்.
''அகிம்சை வழியில் போராடுவதுகூட தவறா?''
சென்னை சட்டக் கல்லூரி மாணவர்கள் ஐந்து நாட்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்தனர். இந்த நிலையில் பல மாணவர்களுக்கு உடல்நிலை மோசமடைய... மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மீண்டு வந்தனர். சட்டக் கல்லூரி மாணவர் யுவராஜ், ''எங்களுக்கு விடுதியில் தங்குவதற்கு இடம் இல்லை. கல்லூரியிலும் உட்கார்ந்து போராட அனுமதி இல்லை. எங்குதான் சென்று போராடுவது? அதனால்தான் காந்தி சிலைக்கு முன் அகிம்சைப் போராட்டம் நடத்த திட்டமிட்டோம்.  அங்கு வந்த போலீஸார், எங்களைக் கேவலமாகப் பேசித் துரத்துவதிலேயே குறியாக இருந்தனர். நாங்கள் அசரவில்லை. அந்த இடத்திலேயே படுத்துவிட்டோம். ஆனால், எங்களை வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றினர். அப்போது போலீஸ் நடத்திய தடியடியில் தனசேகரன் என்ற மாணவனுக்கு தலையில் பலத்த அடி. ஆம்புலன்ஸைக்கூட போலீஸார் அழைக்கவில்லை. ஒரு போலீஸ் அதிகாரி, 'நடிச்சது போதும்... வண்டியில ஏறுங்கடா’ என்று மிரட்டினார். கடைசியாக அந்த மாணவனை போலீஸ் ஜீப்பில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். இலங்கைத் தமிழர்களுக்கு ஒரு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் வரை எங்கள் போராட்டங்கள் ஓயாது'' என்றார்.
''போராட்டத்தில் வெளிமாநில மாணவர்கள்!''
சென்னை ஐ.ஐ.டி. மாணவர்களும் போராட்டத்தில் குதித்திருப்பது கூடுதல் சிறப்பு. பல மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களும் போராட்டத்தில் கலந்துகொண்டு இலங்கைக்கு எதிரான வாசகம் ஏந்திய பலகையைப் பிடித்தபடி அமர்ந்திருந்தனர். மாணவர் ரத்தினவேல், ''ஐ.ஐ.டி-யில் தமிழ் மாணவர்கள் குறைவாகத்தான் இருக்கின்றனர். வெளிமாநிலத்தில் இருந்து வந்து படிக்கும் மாணவர்கள்தான் அதிகம். இங்கு ஒரு போராட்டம் செய்தால், நிச்சயமாக அது இந்தியாவையே ஒரு கணம் திரும்பிப் பார்க்கவைக்கும். அதனால்தான் இங்கே ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருக்கிறோம். பீகார், கேரளா, ஆந்திரா, கர்நாடகா என்று பல மாநில மாணவர்களும் இந்த உண்ணாவிரதத்தில் கலந்துகொண்டதுதான் எங்களுக்கு மனநிறைவாக இருந்தது. எங்கள் போராட்டம் தொடரும்'' என்றார்.
''பெற்றோரிடம் பேசுகிறது போலீஸ்!''
கோவையில் சட்டக் கல்லூரி மற்றும் பாரதியார் பல்கலைக்கழக மாணவர்கள், சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகின்றனர். போராட்ட ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான பாண்டியனிடம் பேசினோம். ''பொது இடத்தில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி மறுத்தனர். தனியார் இடங்களில் இருந்தபோதும், போராட்டத்தை நீர்த்துப்போகச் செய்ய முயற்சிக்கின்றனர். உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களின் பெற்றோரை அழைத்து உளவுப் போலீஸார் பேசுகின்றனர். தனியார் கல்லூரி மாணவர்களை நிர்வாகத்தின் மூலம் மிரட்டுகின்றனர். இதுவெல்லாம் சரியானது அல்ல. தமிழகம் முழுவதும் மாணவர்களை ஒருங்கிணைக்கும் முயற்சிகள் நடக்கின்றன. முதல் கட்டமாக, கோவையில் உள்ள மாணவர்களை ஒருங்கிணைத்துள்ளோம். விரைவில், கோவையை உலுக்கும் வகையில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்'' என்றார். இந்த நிலையில், மாணவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து சுந்தராபுரம் அருகே உள்ள பிள்ளையார்புரம், பெரியார் நகர், நேதாஜி நகர் உள்ளிட்ட பகுதிகளில் 3,000-க்கும் மேற்பட்ட வீடுகளில் கறுப்புக் கொடி ஏற்றி மக்களும் போராட்டத்தைத் தொடங்கி இருக்கின்றனர்.
''தொப்புள் கொடி உறவுகளுக்காக நாம் என்ன செய்யப்போகிறோம்..?''
அரியலூர் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் 27 பேர், கடந்த 13-ம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதத்தைத் தொடங்கினர். போராட்டம் தொடங்கிய மூன்றாவது நாள், கார்த்திக், ராகுல், அசோக்குமார் ஆகிய மூவரும் மயங்கி விழுந்தனர். போலீஸார் ஆம்புலன்ஸ் வரவழைத்து, அவர்களைக் குண்டுக்கட்டாகத் தூக்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் தென்னரசுவிடம் பேசியபோது, ''இலங்கையில் இனப் படுகொலை செய்யப்பட்ட நம் தொப்புள் கொடி உறவுகளுக்காக நாம் என்ன செய்யப்போகிறோம்..? என்ற கேள்வியின் அடிப்படையில்தான் இந்தப் போராட்டங்களை முன்னெடுத்து இருக்கிறோம்'' என்றார்.
''அமெரிக்கா ஒரு கசாப்பு வியாபாரி!''
திருச்சி சட்டக் கல்லூரியில் தொடர் உண்ணாவிரதம் இருந்த மாணவர்களில் நான்கு பேர் உடல்நலம் பாதித்து மயங்கி விழ, அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மீதியுள்ள 15 பேர் கல்லூரியின் நுழைவுவாயில் அருகே உண்ணாவிரதம் இருக்கின்றனர். பாரதிலிங்கம் என்ற மாணவரிடம் பேசினோம். ''ஐ.நா-வில் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் எனச் சொல்வதே பெரிய துரோகம். அமெரிக்கா ஒரு கசாப்பு வியாபாரி. அவர்களின் உண்மையான நோக்கம் இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்க வேண்டும் என்பது அல்ல. சீனாவின் ஆதிக்கத்தைக் குறைக்க வேண்டும் என்பதற்காகவும், இலங்கையில் நிறைந்திருக்கும் வளங்களுக்கு ஆசைப்பட்டும்தான் இலங்கைக்கு எதிராக ஐ.நா-வில் அமெரிக்கா தீர்மானம் கொண்டுவருகிறது. இனப்படுகொலை செய்த இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை பெற்றுத்தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம்'' என்றார்.
''ராஜபக்ஷேவைத் தூக்கிலிட வேண்டும்!''
செங்கல்பட்டு சட்டக் கல்லூரி மாணவர்கள் கடந்த 11-ம் தேதி உண்ணாவிரதத்தைத் தொடங்கினர். தலைமைத் தபால் அலுவலகம், ஸ்டேட் பேங்க் போன்ற மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். சாலை மறியல்களும் அடிக்கடி நடத்தப்பட்டன.  
உண்ணாவிரதம் இருந்தவர்களில் ஒருவரான கோகுல கிருஷ்ணனிடம் பேசினோம். ''தமிழ்நாட்டை நம்பி இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்தவர்களை நிரந்தரமாகவும் சுதந்திரமாகவும் இங்கே வாழ இந்தியக் குடியுரிமையை அவர்களுக்கு வழங்க வேண்டும். ஐ.நா. கொண்டுவந்துள்ள தீர்மானம் ஒரு மாயமான தீர்மானம். அதில் போர்க்குற்றம் என்ற வார்த்தை மட்டுமே உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. அதில் இனப்படுகொலை என்ற வார்த்தையை சேர்க்க வேண்டும். இரட்டை வேடம் போடும் அந்தத் தீர்மானத்துக்குப் பதிலாக இந்தியாவே தமிழர்களைக் காக்க தனியாக ஒரு தீர்மானம் கொண்டுவர வேண்டும். இத்தனைத் தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்ஷேவை அனைத்து தமிழர்கள் மத்தியிலும் பொதுஇடத்தில் வைத்து பகிங்கரமாகத் தூக்கிலிட வேண்டும்'' என்று சீறினார்.
''கடற்படையால் கொல்லப்பட்டவர்களைக் கணக்கெடுங்கள்!''
சேலம் சட்டக் கல்லூரியில் தொடங்கப்பட்ட காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நீடிக்கிறது. கல்லூரிகளுக்கு விடுமுறை விட்டிருந்தாலும், அனைத்துக் கல்லூரி மாணவர்களும் ஒருங்கிணைந்து கலெக்டர் அலுவலக முற்றுகை, ரயில் மறியல் எனப் பல போராட்டங்களை நடத்துகின்றனர். மாணவர் சின்னமுத்து, ''மத்திய அரசு உளவுத் துறை மூலமாக அறிக்கை தயாரிப்பதாகத் தகவலைச் சொல்லி மாணவர்களின் போராட்டத்தை நசுக்கப் பார்க்கின்றனர். எங்களைக் கணக்கெடுப்பதை விட்டுவிட்டு சுதந்திரம் அடைந்ததில் இருந்து இதுநாள் வரை எத்தனை இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை சுட்டுக் கொன்றிருக்கிறது என்று கணக்கெடுக்கட்டும். இல்லை என்றால், இந்தியாவில் பிரிவினைவாதம் ஏற்படுவதைத் தடுக்கவே முடியாமல் போய்விடும்'' என்றார்.
''தூதரக உறவுகளைத் துண்டிக்க வேண்டும்!''
மதுரை சட்டக் கல்லூரி மாணவர்கள் ஆறு பேர் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். உண்ணாவிரதத்தில் இருந்த மாணவர் கணேஷ் பிரபுவிடம் பேசினோம். ''போர்க் குற்றம் புரிந்த ராஜபக்ஷே உள்ளிட்டோரை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி, தண்டனை பெற்றுத் தர வேண்டும். இலங்கையுடனான தூதரக உறவுகளைத் துண்டிப்பதோடு, அந்த நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதிக்கவும் இந்தியா முன் வர வேண்டும்'' என்றார்.
தமிழகக் கொந்தளிப்பு டெல்லிக்குத் தெரியுமா?
- ஜூ.வி. டீம்
 ''லீவு விட்டாச்சுன்னா மாணவர் இல்லியா?''
பாளையங்கோட்டை சவேரியர் கல்லூரி மாணவர்கள் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள திலீபன் அரங்கில் தொடர் உண்ணாவிரதம் இருக்கின்றனர். இதைத் தடுக்க வழி தெரியாமல் தவிக்கும் மாவட்ட நிர்வாகம், போலீஸ் ஆகியவை, பேச்சுவார்த்தை நடத்தி மாணவர்களை வழிக்கு கொண்டுவர முயற்சித்தது. ஆனால், போராட்டத்தைக் கைவிட மாணவர்கள் மறுத்துவிட்டனர். இதனால், கோபம் அடைந்த நெல்லை கலெக்டர் சமயமூர்த்தி, மாணவர்களுடன் செல்போனில் பேசினார். 'இப்போது கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருக்கிறது. இனிமேலும் நீங்கள் கல்லூரி மாணவர்கள் என்ற பெயரில் உண்ணாவிரதம் இருக்க அனுமதிக்க முடியாது’ என, காட்டம் காட்டி இருக்கிறார். சளைக்காத மாணவர்கள், 'அப்படின்னா நீங்க ரெண்டு நாள் லீவு போட்டீங்கன்னா, அப்போ நீங்க கலெக்டர் இல்லியா..?’ என்று பதிலுக்குக் கேட்டதும் இணைப்பைத் துண்டித்துவிட்டாராம்.


 ''இலங்கையா? தமிழ்நாடா? இந்திய அரசே முடிவு செய்!''


தமிழீழத்துக்கான மாணவர் போராட்டக் குழு சார்பில், கடந்த 18-ம் தேதி கவர்னர் மாளிகை முற்றுகைப் போராட்டத்துக்கு சென்னை மற்றும் செங்கல்பட்டு சட்டக் கல்லூரி, சட்டப் பல்கலைக்கழகம், குருநானக், டி.பி.ஜெயின், நந்தனம், பச்சையப்பா, பிரெஸிடென்சி உட்பட 23 கல்லூரிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர். இலங்கைக்கு எதிராக கண்டனக் குரல் விண்ணைப் பிளந்தது.


 ''இந்திய அரசே... இந்திய அரசே... இலங்கை உங்களுக்கு நட்பு நாடென்றால், இந்தியா எங்களுக்கு எதிரி நாடு!'' என்ற அதிரடி கோஷம் கேட்டு காக்கிகளே கொஞ்சம் கலங்கித்தான் போனார்கள். சுற்றிலும் மண்டை ஓடு அடுக்கப்பட்ட பல்லக்கில், ராஜபக்ஷே கத்தியுடன் கோர முகத்துடன் அமர்ந்திருக்க... அந்தப் பல்லக்கை சோனியா, மன்மோகன் சிங் ஆகியோர் சுமப்பது போன்ற கார்ட்டூனையும் காண முடிந்தது. மொத்த மாணவர்களும் பெருந்திரளாக கவர்னர் மாளிகையை நோக்கி ஓட... 'இனியும் தாமதித்தால் கலவரமே நடக்கலாம்’ என்று கருதிய போலீஸார், மாணவர்களை வலுக்கட்டாயமாகக் கைதுசெய்து போலீஸ் வாகனத்தில் ஏற்றினர்.

thanx - ju vi