Showing posts with label அரவாணிகள். Show all posts
Showing posts with label அரவாணிகள். Show all posts

Monday, January 26, 2015

இயக்குநர் ஷங்கருக்கு ஒரு பகிரங்கக் கடிதம்!

இயக்குநர் ஷங்கருக்கு...
தங்களின் ‘ஐ’ படம் கண்டேன். தாய்நாட்டு அகதிகளான திருநங்கைகளைப் பாலியல் வெறியர்களாக, அருவருப்பான சமூக விரோதிகளாகத் தங்கள் மனம் போன போக்கில் எப்படியும் சித்தரிக்கக்கூடிய தகுதி கொண்ட தங்களைப் போன்ற ‘மகா கலைஞர்’களின் ‘படைப்புத் திற’னுக்கு இங்கு யாரும் எந்தத் தடையும் விதிக்கப்போவதில்லை.
‘சிவாஜி’ படத்தில் போகிற போக்கில் திருநங்கைகள் மீது காறி உமிழ்ந்ததை நினைத்துப் பார்க்கிறேன். சின்னக் கலைவாணர் என அழைக்கப்படும் விவேக் “இப்பத்தான் ஆப்பரேஷன் பண்ணிட்டு வந்திருக்கு’’ என்று ஏளனமாகக் கூறியதும் “சீ..சீ…’’ என்று அருவருப்புடன் எங்கள் சூப்பர் ஸ்டார் விலகிச் சென்றதைத் தூசி தட்டி, தற்போது “அதற்கும் மேல” என்று பிரம்மாண்டமாய்க் காறி உமிழ்ந்திருப்பதைத்தான் பேச விரும்புகிறேன்.
படத்தின் நாயகன் விக்ரம் வில்லனைப் பார்த்து, முதல் பத்து நிமிடங்களிலேயே “டே… பொட்ட…” என்கிறார். நான் அதிர்ச்சியடையவில்லை, நானும் என்னைப் போன்ற பொட்டைப் பிறவிகளும் தமிழ் சினிமாவின் இத்தகைய தொடர் பதிவுகளால் இவற்றுக்கு நன்கு பழகியிருக்கிறோம்.
விக்ரமுக்கும்கூட இந்த வசனம் ஒன்றும் புதிதல்ல, தமிழ் சினிமாவின் நவீன பிதாமகன் என்று பாராட்டப்பட்ட பாலாவின் இயக்கத்தில் வெளிவந்த “சேது’’ படத்தில்கூட “ டே.. இப்பிடி பண்ணிப் பண்ணியே ஒருநாள் நீ அஜக்காவே மாறப்போற…” என்று சொன்னவர்தான்.
‘சதுரங்க வேட்டை’ என்னும் சமூக அக்கறை கொண்ட படத்தை இயக்கிய வினோத் ‘பொட்ட’ என்ற சொல்லை எளிதாகப் பயன்படுத்தி, அதைத் திரை விமர்சகர் கேபிள் சங்கர் போன்றவர்கள் சப்பைக்கட்டு கட்டும்போது, உங்களிடம் மட்டும் அந்தக் கரிசனத்தை நாங்கள் எதிர்பார்க்கவா முடியும்? 
‘பொட்டை’ என்று உங்களால் ஏளனமாக அறியப்படும் நாங்கள் உங்களது ஆண்மை பராக்கிரமத்துக்கு முன் அப்படி என்னதான் குறைந்துவிட்டோம்? உள்ளம் முழுவதும் பெண்மை குடியிருப்பதை அறிந்து எம் பாலினத்துக்கு நேர்மையாக இருக்கிறோம். திருநங்கையாகக் குடும்பத்தையும், அது தரும் அரவணைப்பையும், பாதுகாப்பையும் விட்டு வெளிவரத் துணிகிறோம்.
பெற்றோர்களின் சொத்து, சுகம் எதுவுமில்லாமல் சூன்யத்திலிருந்து எங்கள் வாழ்க்கையை எவரையும் சாராமல் வாழ்கிறோம். தெருவிலும், வெள்ளித் திரையிலும் ஆண் பராக்கிரமசாலிகள் சொல்லாலும், செயலாலும் எங்கள்மீது நிகழ்த்தும் வன்முறைகளைத் துணிவோடு எதிர்கொண்டு தொடர்ந்து செல்கிறோம். இவை எல்லாவற்றுக்கும் மேல் உங்கள் பராக்கிரமம் சிறந்ததா? அல்லது ‘பொட்டைகள்’ சோற்றில் உப்பு போட்டுத் தின்பதில்லை என்பது உங்களின் எண்ணமா?
வித்தியாசமான வில்லன் வேண்டுமென, ஒரு ஸ்டைலிஸ்டாகத் திருநங்கையை வைத்ததையும், அதுவும் உலக அழகியையே மேலும் அழகாகக் காட்டிய நிஜ ஸ்டைலிஸ்ட் ஓஜாஸ் ரஜானியையே (கதாபாத்திரப் பெயர் ஓஸ்மா ஜாஸ்மின்) நடிக்கவைத்ததையும் பாராட்டலாம்.
ஆனால், தான் வியக்கும், விரும்பும் விளம்பர அழகியின் வாயாலேயே ‘இந்தியாவிலேயே முன்னணி ஸ்டைலிஸ்ட்’ என்று அறிமுகப்படுத்தப்பட்டபோதும், முதல் பார்வையிலேயே ஓஜாஸ் மீது நாயகன் விக்ரமுக்கும், நண்பர் சந்தானத்துக்கும் அவ்வளவு கீழ்த்தரமான பார்வை ஏன் வருகிறது?
எல்லா இன்னல்களையும் கடந்து திருநங்கைகள் பலர் பல துறைகளில் சாதித்துவருகிறார்கள். ஆனாலும், அவர்கள் ஏளனத்துக்குரியவர்கள், என்பதைப் பார்வையாளர்கள் மனதில் இன்னும் ஆழமாக விதைக்கத்தானே? தமிழ் ரசிகர்களே தற்போது திருநங்கைகளைக் கலாய்க்க, ‘காஞ்சனா’ என்று அழைக்கத் தங்களை மேம்படுத்திக்கொண்டிருக்கும் நிலையில் ‘ஊரோரம் புளிய மரம்…’ என்று பாடுவது எதனால்? 
பருத்தி வீரன்’ படம் வந்த புதிதில் ஒரு காலை வேளையில், எனது அலுவலகத்துக்குச் செல்லும் வழியில் சற்றும் எதிர்பாராத விதமாக 10 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் பாதி குடித்த வாட்டர் பாக்கெட்டை எனது முகத்தில் வீசிட்டு அன்று இதே பாடலைத்தான் பாடினான். ஒரு தெருவே வேடிக்கை பார்க்க, இல்லை சிரிக்க நடுத்தெருவில் குறுகி நின்றேன். பத்தே வயது நிரம்பிய ஒரு சிறுவனுக்கு இப்படிச் செய்யச் சொல்லிக் கொடுத்தது யார்?
இன்று அதே நிலைமையில்தான் ‘ஓஜா’ஸை நினைத்துப் பார்க் கிறேன். இந்தியாவின் முன்னணி ஸ்டைலிஸ்டான தனது மதிப்பை அறியாமல் இவ்வளவு அற்பமாக முகத்துக்கு நேராகத் தன்னை அவமானப்படுத்தும் ஒருவனை ஒரு திருநங்கை விடாமல் மோகம் கொள்வாள் என எப்படி நினைத்தீர்கள்? ‘பிச்சையெடுக்கவும், பாலியல் தொழில் செய்யவும் நேர்ந்துவிடப்பட்ட பிறவிகள் இவர்கள்.. இவர்களுக்குத் தன்மானமே இருக்காது’ என முடிவெடுத்துவிட்டீர்களா? அற்பமான இந்த தர்க்கங்கள் உங்கள் பிரம்மாண்டச் சிந்தனைக்கு வரவேயில்லை இல்லையா?
திரையிலும், சுவரொட்டிகளிலும் மட்டுமே கண்ட ஒரு அழகியை, அவள் அழகி என்பதால் மட்டுமே ஒரு ஆணழகன் காதலிக்கிறார். அது உண்மையான, நியாயமான, கல்மிஷம் இல்லாத காதலாகிறது. குற்றவுணர்வாலும், பரிதாபத்தாலும் அந்த அழகியும், ஆணழகனைப் பரிசுத்தமாகக் காதலிக்க முடிகிறது. ஆனால், ஒரு திருநங்கையின் காதல் உணர்வு மட்டும் நாயகனாலும், நண்பனாலும், நாயகியாலும், படத்தில் வரும் விளம்பரப் பட இயக்குநராலும் அருவருப்பாகவே பார்க்கப்படுகிறது. இது நியாயமா?
‘9’ என்ற அறை எண்ணைக் காட்டிப் பின் ஓஜாஸைக் காட்டிய உங்கள் அரதப் பழசான, அருவருப்பான விளையாட்டை எண்ணி என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இதே ‘9’ என்ற சொல்லைத்தான் எந்த அற்பனும் எங்களைச் சிறுமைப்படுத்தப் பேராயுதமாகப் பயன்படுத்துகிறான். 
இப்படத்தில் எந்த மிருகமும் துன்புறுத்தப்படவில்லை’ என்ற சட்டபூர்வ அறிவிப்புடன் தொடங்கும் படத்தில், கிடைக்கும் ஒரு வாய்ப்பைக்கூட விடாமல் பாலியல் சிறுபான்மையினர் முதல், மாற்றுத் திறனாளிகள்வரை காயப்படுத்த தங்களுக்குக் கட்டற்ற சுதந்திரம் அளித்திருக்கிறது நமது தணிக்கைக் குழு. மிருகங்களுக்கு மனமிரங்கி மனிதர்களான எங்களை ஏலியன்களாகப் பார்க்கும் அதன் தாராள மனதைக் கண்டிக்காமல் உங்களைக் கேள்வி கேட்டு என்ன பயன்?
வாசிப்பும், பகுத்தறிவும் கொண்ட நடிகரென நவீன இலக்கிய வாதிகளும் கொண்டாடும் நடிகர் கமல், ‘பொட்டை’ என்னும் சொல்லை வெகு ஆண்மையோடு தமது பல படங்களில் பயன்படுத்தியுள்ளார், அதற்கும் மேலே, ‘வேட்டையாடு, விளையாடு’ படத்தில் திருநங்கைகளையும், தன்பால் ஈர்ப்பினரையும் மலினப்படுத்தியிருக்கிறார் எனும்போது சந்தானத்தையும் விக்ரமையும் மட்டும் என்ன சொல்ல?
தமிழ்த் திரையுலக இயக்குநர்கள், நடிகர்கள், நடிகைகள், காமெடியன்கள் நினைப்பதுபோல, ஆண் பராக்கிரமசாலிகளும், பெண்களும் மட்டுமே உங்கள் ரசிகர்கள் அல்ல. உங்களால் அன்னியப்படுத்தப்பட்டு, மலினப்படுத்தப்படும் நாங்களும் உங்கள் ரசிகர் பட்டாளங்களின் ஒரு பகுதிதான்.
நாங்களும் படங்கள் பார்க்கிறோம். ரசிக்கிறோம், சிரிக்கிறோம், நீங்கள் மலினப்படுத்துவதையும் கடந்து எங்கள் உலகத்துக்குள்ளும் உங்களில் பலருக்கும் ரசிகைகள் இருக்கிறார்கள். அதற்காக எங்கள் சோற்றில் உப்பில்லை என்றுமட்டும் நினைத்துவிடாதீர்கள்.
இப்படிக்கு
லிவிங் ஸ்மைல் வித்யா 


நன்றி - த இந்து

  • karthivel  
    இது மிகவும் வேதனைகுரிய விஷயம் இதற்க்கு டைரக்டர் SANKAR ,விக்ரம் பதில் சொல்லியே ஆகா வேண்டும்
    about 8 hours ago ·   (5) ·   (1) ·  reply (0) · 
  • suresh  
    தமிழ் திரையுலகம் தொடர்ந்து உங்களை இதுபோல் சித்தரித்து வருவதால் உங்களது நியாயமான உணர்வுகளை எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை.இது போன்ற காட்சிகளை ரசித்ததற்காக வருத்தப்படுகிறேன். அதே திரையுலகம் மனது வைத்தால் உங்கள் மீது மரியாதையை உருவாக்க முடியும்.நிச்சயம் காலங்கள் மாறும்.
    about 9 hours ago ·   (5) ·   (0) ·  reply (0) · 
  • செல்வக்குமார்  
    நமது நாட்டில் மட்டும்தான் திருநங்கைகளை படு ஏளனமாக சித்தரிக்கின்றனர்...அவர்களுக்கு இது போன்ற ஒரு குழந்தை பிறந்தால்தான்....இவர்களது குட்டம் அடங்கும்.
    about 10 hours ago ·   (1) ·   (0) ·  reply (0) · 
  • M.AMBIKAPATHI  
    நான் இதுவரை i படம் பார்க்க வில்லை .இதை படித்தபிறகு அந்த படத்தை பார்க்க கூடாது என முடிவுசெய்து விட்டேன் .
    about 12 hours ago ·   (2) ·   (4) ·  reply (0) · 
  • Balaji  
    அந்த காட்சிகளுக்கு ரசித்து சிரித்ததற்கு வெட்க்க படுகிறேன்.... உங்கள் மனவேதனையை ஆற்ற என்ன செய்வதென்ன தெரியவில்லை
    Points
    1105
    about 12 hours ago ·   (9) ·   (0) ·  reply (0) · 
  • அபயா நடராசன்  
    எந்த ஒரு இந்திய, தமிழ் சினிமாவிலும் திருநங்கைகள் இது காறும் நல்ல முறையில் சித்தரிக்கப்படவில்லை. வெறும் நகைச்சுவை காட்சிகளில் மட்டுமே காட்டி வருகிறார்கள். அவர்களுக்கு ஒரு நல்ல குணச்சித்திர வேடம் யாரும் கொடுத்ததில்லை என்றே நான் கருதுகிறேன். முதலில் இந்த நிலை மாறவேண்டும். மகா பாரதத்தில் சிகண்டியும் ஒரு எதிர்மறை பாத்திரம்தான் அனைவரும் அறிந்ததே.
    about 15 hours ago ·   (2) ·   (0) ·  reply (1) · 
    • Logeswaran  
      Have you seen that "vaanam" movie?? Somewhat better Characterization on that movie
      about 11 hours ago ·   (3) ·   (0) ·  reply (0) · 
  • senthil  
    உங்களின் வேதனைகளை புரிந்துகொள்ள முடியாதவர்கள் நிச்சயம் மனித தன்மை அற்றவர்கள் தான்...
    Points
    135
    about 15 hours ago ·   (2) ·   (0) ·  reply (0) · 
  • மஞ்சூர் ராசா  
    திரைப்பட உலகம் நினைத்தால் உங்கள் மீது வலிந்து ஏற்படுத்தப் பட்டிருக்கும் இந்த அவலத்தை நிச்சயம் மாற்ற முடியும். மாறுவார்களா?
    Points
    590
    about 16 hours ago ·   (3) ·   (0) ·  reply (0) · 
  • Mohamed Anwar  
    ஐ படத்தை பொறுத்தவரை ஆரம்ப காட்சியில் அந்த திருநங்கையை அறிமுகம் செய்யும் போது இந்தியாவிலே சிறந்த ஒப்பனை கலைஞராக அறிமுகப் படுத்தியிருப்பார்கள். ஆனால் அவரை முதன் முதலாக பார்க்கும் போது விக்ரமும் சந்தானமும் பாடல் பாடி கேலி செய்வது கண்டிக்க தக்கது. அந்த காட்சிக்கு காமெடி வேண்டுமென்றால் எப்போதும் போல் சந்தானம் கலாய்ப்பது போலவும் அதை விக்ரம் கண்டித்து ஓரு இரண்டு வரிக்கு அவர்களை பெருமைப்படுத்தும் விதமாக ஏதாவது வசனம் பேசுமாறு காட்சி வைத்திருக்கலாம். அதனால் அந்த திருநங்கைக்கு விக்ரமின் மேல் ஒரு ஈர்ப்பு வந்து அது காதலாக மாறி பின்பு வெறியாக மாறுமாறு காட்சிப்படுத்தியிருக்கலாம். வெறும் உடலழகினால் காதல் வருவது போல் காட்டுவது தவறு. ஏனென்றால் இங்கு காதல் வருவது ஒரு பெண்ணுக்கு அல்ல ஒரு திருநங்கைக்கு. அதனால் அது அவர்களது ஒட்டு மொத்த இனத்தை அங்கே பிரதிபலிக்கும். ஆனால் படத்தில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் படம் முழுக்க ஒரு திருநங்கைக்கு முக்கியமான வில்லன் ரோல் கொடுத்திருப்பது. இது போன்ற தமிழ் சினிமாவில் மிகவும் குறைவு. ( வானம்,காஞ்சனா இன்னும் சில படங்கள் தவிர)
    about 16 hours ago ·   (6) ·   (1) ·  reply (0) · 
  • ibrahim  
    இயக்குனர் ஷங்கரின் ai படம் migavum பாடாவதி படம். paththu பைசாவுக்கு தேராது.
    Points
    170
    about 16 hours ago ·   (2) ·   (3) ·  reply (0) · 
  • இருமேனி Irumeni  
    இரக்கம் கொள்ள வேண்டாம், ஆதரவு கூட கொடுக்க வேண்டாம். எள்ளி நகையாடாமல் இருந்தாலே போதும். அவர்களையும் வாழ விடுங்கள். அப்படி இருந்தும் ஷங்கர்கள் கண்டிப்பாக தமிழ் சினிமாவுக்குத் தேவை என்று தான் புலம்பிக் கொண்டிருக்கிறோம்.
    Points
    4145
    about 16 hours ago ·   (2) ·   (0) ·  reply (0) · 
  • PREMKUMAR  
    இப்படி செய்யும் சினிமா வியாபாரிகளுக்கு கேளிக்கை வரி சலுகை ,,,அனைவரும் சிந்தியுங்கள்
    about 17 hours ago ·   (2) ·   (0) ·  reply (0) · 
  • PREMKUMAR  
    இங்கே சினிமாகாரர்கள் மனிதாபி மானம் மீறி வியாபாரம் செய்துள்ளார்கள் ,மன்னிப்பு கேட்பது சிறந்தது
    about 17 hours ago ·   (4) ·   (0) ·  reply (0) · 
  • Mohamed Anwar  
    நமது சமுகத்தில் திருநங்கைகள் கீழ்த்தரமாகத்தான் பார்க்கப்படுகிறார்கள் என்பதும் அதற்கு மிகமுக்கிய காரணம் நம் தமிழ்சினிமாதான் என்பதும் மறுக்க முடியாத உண்மைதான். ஆனால் இன்று சமுகத்தில் பெரும்பாலான திருநங்கைகளின் நிலை என்ன? பொதுஇடங்களில் பிச்சை எடுப்பதும் சிலநேரங்களில் மிரட்டி பணம் புடுங்கவதும் பாலியல் தொழிலுக்கு அழைப்பதுமாகவும் தானே இருக்கிறது. இதுதானே நிகழ்கால நிலைமை. இதை மாற்றுவதற்கு அரசு எல்லா முயற்சியும் எடுத்துதான் வருகிறது. ஆனால் அவை வெற்றி பெறுவது திருநங்கைகளின் கையில்தான் இருக்கிறது. நம்நாட்டில் பெண்களுக்கு அங்கீகாரம் கொடுக்கவே பல நூற்றாண்டுகள் ஆகும் போது இவர்களை நமது சமுகம் அங்கீகரிப்பது அவ்வளவு சுலபமல்ல.திருநங்கைகள் பிச்சை எடுப்பது, பாலியல் தொழிலில் ஈடுபடுவதை முற்றிலும் நிறுத்தினால் ஒழிய அது மாறுமே தவிர இது போன்ற சினிமாக்களை கண்டிப்பதால் ஒன்றும் நடக்கப் போவதில்லை. இரண்டு நாள் பேசிவிட்டு மறந்துவிடுவார்கள். திருநங்கைகள் தங்கள் புறத்திலிருந்து தங்களை மாற்றிக்கொள்ள முயற்சி செய்ய வேண்டும். - to be continued
    about 17 hours ago ·   (6) ·   (2) ·  reply (0) · 
  • P.Padmanabhan  
    வித்யா அவர்களுக்கு, அவமனத்தை ஆழமாக் உணர்ந்து மிக அற்ப்புதமாக் வெளியிட்டுள்ளீர்கள் .உங்களுக்கு ஆதரவும் பாரட்டுக்களும். தற்காலதிரையுலகம் பணம் , புகழுக்காக மட்டுமே இயங்குகிறது. மனிதரின் நுண்ணிய உணர்வுகளுக்கு அங்கே அக்கறை யெதுவுமில்லை!
    Points
    19330
    about 19 hours ago ·   (3) ·   (0) ·  reply (0) · 
  • THANGAMANI  
    இந்த சினிமா காரர்கள் எப்போதுதான் திருந்துவார்களோ .
    Points
    3475
    about 19 hours ago ·   (3) ·   (0) ·  reply (1) · 
    • nivas,,,  
      நீங்க திருந்தி எவளோ நாள் ஆட்சி,,,,
      about 12 hours ago ·   (2) ·   (0) ·  reply (0) · 
  • THANGAMANI  
    சினிமா காரர்களுக்கு எது மனிதத்தன்மை?
    Points
    3475
    about 19 hours ago ·   (5) ·   (0) ·  reply (0) · 
  • chandraa  
    DddDIRECTOR SHANKER HAD COMMITTED himalayan mistake IN THIS FILMBY DEPICTING TRANSEGENDERS IN VERY POOR TASTE
    Points
    2090
    about 22 hours ago ·   (3) ·   (0) ·  reply (0) · 
  • Sithu Muruganandam  
    திருநங்கைகள் பிச்சைஎடுப்பதால்தான் அவர்கள் கீழ்த்தரமாகப் பார்க்கப்படுகின்றனர். அவர்கள் இனிமேல் பிச்சைஎடுப்பதை விட்டு விட வேண்டும். அப்போதுதான் சமுதாயத்தில் மரியாதை கிடைக்கும்.
    Points
    150
    about 23 hours ago ·   (2) ·   (1) ·  reply (0) · 
  • Anitha  
    வித்யா உங்கள் உள்ளத்தில் வடியும் ரத்த கண்ணீர் தெரிகிறது
    about 23 hours ago ·   (1) ·   (0) ·  reply (0) · 
  • belginraja  
    இதேபோல் ரயிலில் வந்து பணம் பறிமுதல் செய்யும்(வலுகட்டாயமாக) உங்கள் நண்பர்களுக்காவும் மெரீனா கடற்கரையில் பணம் பணம் பறிமுதல் செய்தையும் நங்கைகள் நினைவில் கொள்ளலாம்.........அப்போது எல்லாம் எழாமல் இருந்த கண்டன குரல் இப்போது எதற்கு...........உங்களை நாங்கள் மதிக்கிறோம் ஆனால் நீங்கள்
    a day ago ·   (10) ·   (1) ·  reply (0) · 
  • chandran  
    நோ நோ. இன்னும்கூட சில பேருந்து நிலையங்களில் மற்றும் பொது இடங்களில் திருநங்கைகள் வழியில் வருவோர் போவோரிடம் தங்களுக்கே உரித்தான பாணியில் சில்மிஷங்கள் செய்து பணம் வசூல் செய்கின்றனர். பணம் இல்லை என்று மறுத்தாலும் விடாமல் தொந்தரவு செய்து மற்ற திருநங்கைகளையும் அழைத்து அந்த இடத்தில் பணம் இல்லை என்று சொன்னவர் வெட்கி தலைகுனியும் அளவுக்கு நடந்து கொள்கின்றனர். வேறு வழி இல்லாமல் பணம் தர வேண்டிய நிலைக்கு தள்ளுகிறார்கள். நன் பலமுறை இத்தகைய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன். சமுதாயத்தில் இன்னும் இவர்கள் திருந்தவில்லை. யாரோ தூண்டுதலின் பேரில் வெறும் விளம்பரத்துக்காக இவ்வாறு இவர்கள் ஆர்ப்பாட்டம் செய்வது ஏற்றுகொள்ள முடியாது. இப்படி எல்லாம் இவர்களை திரைப்படங்களில் சித்தரிப்பதில் தவறில்லை
    a day ago ·   (5) ·   (4) ·  reply (0) · 
  • ikaram  
    சரிதான் சிலசமயம் திருனங்க்ய்களை கிண்டல் செய்து வரும் படங்களின் காமெடிகளை பார்த்து சிரிக்கிறோம் அதையே அவர்கள் இடத்தில இருந்து யோசனை செய்தால் அவர்கள் மனம் எவ்வளவு வேதனை அடையும் இந்நியவது அவர்களை கொச்சை படுத்தி படம் எடுக்காதீர்கள்
    a day ago ·   (1) ·   (1) ·  reply (0) · 
  • Ramesh Sargam at Deccan Chronicle Holdings Limited 
    சாட்டை அடி அடிச்சிட்டாங்க வித்யா அவர்கள். இதக்கு ஷங்கர் என்ன பதில் சொல்ல போறாரோ தெரியவில்லை. How come Shankar did not notice our Hon'ble Supreme Court's verdict on transgenders. If not, let him read it now. - "India's Supreme Court creates official third sex for eunuchs and transgenders. After two thousand years of persecution, India's two million eunuchs to be formally recognised as third sex."
    Points
    16195
    a day ago ·   (1) ·   (4) ·  reply (0) · 
  • Subhashini Vasanth at Padmavathy realty and Promoters Pvt Ltd 
    மிகவும் பாதித்த விஷயம்...
    a day ago ·   (1) ·   (1) ·  reply (0) · 
  • R.Ganesan  
    An excellent letter and nothing can be expressed better than the last line. Iam stunned by the intellect of Vidya and I would like to know her more.
    a day ago ·   (1) ·   (0) ·  reply (0) · 
  • Raajagreat Raaja  
    எங்கள் சோற்றில் உப்பில்லை என்றுமட்டும் நினைத்துவிடாதீர்கள். இதற்கு மேல் என்ன வார்த்தை வேண்டும்?
    a day ago ·   (1) ·   (0) ·  reply (1) · 
    • nivas,,,  
      நீங்க படத்த பார்த்துருக கூடாது,,,,,
      about 12 hours ago ·   (0) ·   (2) ·  reply (0) · 
  • Vignesh Thirumalai Rajan  
    ஷங்கர் சார் , மன்னிப்பு கேட்டுவிட்டு அந்த கண்டனத்துக்குரிய காட்சிகளை எடுத்துவிடலாம் அல்லது Mute செய்துவிடலாம் .ப்ளீஸ் இது மிகவும் வேதனைக்குரியது . திரைப்படங்கள் மக்களை மகிழ்விக்கவே அன்றி கஷ்டபடுத்த அல்ல.திருநங்கைகலும் நமது உடன் பிறப்புக்களே. புரிந்து கொள்ளுங்கள்.
    a day ago ·   (62) ·   (5) ·  reply (0) · 
  • m Sivashanmugam  
    இப்படத்தில் எந்த மிருகமும் துன்புறுத்தப்படவில்லை’ என்ற சட்டபூர்வ அறிவிப்புடன் தொடங்கும் படத்தில், கிடைக்கும் ஒரு வாய்ப்பைக்கூட விடாமல் பாலியல் சிறுபான்மையினர் முதல், மாற்றுத் திறனாளிகள்வரை காயப்படுத்த தங்களுக்குக் கட்டற்ற சுதந்திரம் அளித்திருக்கிறது நமது தணிக்கைக் குழு. மிருகங்களுக்கு மனமிரங்கி மனிதர்களான எங்களை ஏலியன்களாகப் பார்க்கும் அதன் தாராள மனதைக் கண்டிக்காமல் உங்களைக் கேள்வி கேட்டு என்ன பயன்? - நான் இந்த படம் பார்க்கவில்லை ஆனால் உங்களின் இந்த கருத்து இந்த படத்தில் ஒரு ஒடுக்கப்பட்ட சமுகத்தை இந்த சமுகம் முடிந்த அளவிற்கு தாழ்மையாக சித்தரித்துள்ளது புரிகிறது. ஆனால் உங்களின் இந்த கருத்து யாராலும் பதில் சொல்ல முடியாத வண்ணம் சிறப்பாக உள்ளது. வாழ்க உங்கள் சிந்தனை, வளர்க உங்கள் போரரட்டம். மு சிவசண்முகம் தாரமங்கலம்.
    a day ago ·   (27) ·   (1) ·  reply (0) · 
  • pandy  
    லிவிங் ஸ்மைல் வித்யாவுக்கும் ,தி இந்து விற்கும் பாராட்டுகள். திருந்துங்கள் ஐயா,நாங்கள் பாவம் என கெஞ்சி கொண்டிருக்காமல், தங்களுக்கெதிரான,சொல்லியல்,கருத்தியல்களுக்கெதிராக,எழுத்தாயுதம் ஏந்திய வித்யாவுக்கு வாழ்த்துகள். திருந்தாத சில ஜென்மங்கள் இனியாவது திருந்தட்டும்.