Showing posts with label அமைச்சர்களே... ஆறுதல் வேண்டாம்... அவசர உதவிகள் செய்யுங்கள்!. Show all posts
Showing posts with label அமைச்சர்களே... ஆறுதல் வேண்டாம்... அவசர உதவிகள் செய்யுங்கள்!. Show all posts

Sunday, December 06, 2015

அமைச்சர்களே... ஆறுதல் வேண்டாம்... அவசர உதவிகள் செய்யுங்கள்!

அமைச்சர்களே... ஆறுதல் வேண்டாம்... அவசர உதவிகள் செய்யுங்கள்!”
கலங்கி நிற்கும் கடலூர்
ந்த இதழ் உங்கள் கையில் தவழும்போது, இன்னும் ஆயிரக்கணக்கான குடிசைகள் அடித்துச்செல்லப்பட்டு பல குடும்பங்கள் வெள்ளத்தில் மிதக்கலாம். உணவுக்கும் மருத்துவத்துக்கும் வழியில்லாமல் பல உயிர்கள் தவிக்கலாம். ஆம், இதுவரை அழித்தது போதாது என, ‘இன்னும் நான்கு நாட்களுக்கு...’ கடலூரில் விஸ்வரூபம் எடுத்துள்ளது மழை. எங்கும் குடிசைகள் மிதக்கின்றன... ஊருக்குள் மனிதர்கள் நீந்துகிறார்கள். கடலூர், பாண்டி, நாகை என அடுத்தடுத்து பல ஊர்களை அழித்துக்கொண்டே போகிறது அடைமழை.

கடலூர்... ஆறுதல் தேவையில்லை!
பெயருக்குத் தக்க ‘கடல் ஊராக’ மாறிவிட்டது கடலூர். மக்கள் முகாம்களைத் தேடி நீந்திக்கொண்டிருக்கிறார்கள். கிட்டத்தட்ட ஒரு மாதம் பெய்ய வேண்டிய மழை கடந்த 9-ம் தேதி, ஒரே நாளில் கொட்டித்தீர்த்ததில் கடலூர் தண்ணீருக்குள் மூழ்கியது. லட்சக்கணக்கான குடிசைகள்  அடித்துச்செல்லப்பட்டன. மக்கள் தங்கள் உடைமைகளை இழந்து சோற்றுக்கும் தண்ணீருக்குமே வழியில்லாமல் தண்ணீரில் தத்தளித்தார்கள். பெரியக்காட்டுப்பாளையத்தில் ஒரே குடும்பத்தில் 10 பேர், விசூரில் மூன்று பேர் என 40-க்கும் மேற்பட்டோர் மழையால் இறந்துபோனார்கள். கணக்கே இல்லாமல் கால்நடைகள் அடித்துச் செல்லப்பட்டன. இதில், எந்தவித முன்னேற்பாடும் செய்யாத தமிழக அரசு விழிபிதுங்கி நின்றது.
பிரச்னை ஏற்பட்டபின் நடவடிக்கையில் இறங்கியது அரசு. முகாம்கள் அமைத்தது, அமைச்சர்கள் ஆய்வுசெய்தது என அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகளால் மக்கள் பிரச்னை தீர்ந்ததாகத் தெரியவில்லை. பழைய தண்ணீர் வடிவதற்குள்ளாகவே, இதோ... கடலூருக்கு அடுத்த அடி.
கடந்த ஞாயிற்றுக்கிழமை லேசாக ஆரம்பித்த மழை கொஞ்சம் கொஞ்சமாக திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் தீவிரமாகி, கடலூரின் நீர்மட்டத்தை(!) அதிகப்படுத்திவிட்டது. கடலூர் நகரப் பகுதிகளிலேயே 1,500-க்கும் மேற்பட்ட வீடுகள் தண்ணீரின் பிடியில் சிக்கியிருக்கிறது என்றால், மற்ற இடங்களைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை.
கடலூர் தவளத் நகரைச் சேர்ந்த நடராஜன், ‘‘ஒரு வாரத்துக்கு மேலாக இந்தப் பகுதி முழுக்க தண்ணியிலதான் மிதந்துகிட்டு இருக்கு. இங்க இருக்கும் வடிகால்கள் எதுவுமே தூர்வாரப் படவில்லை. அப்புறம் எப்படி தண்ணீர் வெளியேறும்? யாரும் வீட்டைவிட்டு வெளியே வரமுடியாமல் முடங்கிக்கிடக்குறோம். ஆங்காங்கே, பிரசவ வலி, காய்ச்சல்னு ஏகப்பட்ட வேதனைகள். அவசர உதவிக்கு கூப்பிடுங்கனு மாவட்ட நிர்வாகம் கொடுத்த நம்பருக்குக் கூப்பிட்டா... வந்து பாக்குறோம்’னு சொல்லிட்டு வெச்சிடுறாங்க. ஆனால், யாருமே வர்றதில்லை. முகாம்ல இருக்கவங்களோட நிலைமை இன்னும் மோசம். சாப்பாட்டுக்கு வழியில்லாம தண்ணில கிடக்குறாங்க. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு மொத்த அமைச்சர்களையும் களத்தில் இறக்கிய முதல்வர், இவ்வளவு சேதம் ஏற்பட்ட கடலூர் மாவட்டத்தின் நிவாரணப் பணிக்கு வெறும் இரண்டு அமைச்சர்களை அனுப்பியிருக்காங்க. அமைச்சருங்க வந்து உதவியா செய்யுறாங்க..?  அதிகாரிகளைக் கூட்டிக்கிட்டு வலம் வர்றாங்க. அவ்வளவுதான். அதையும் மீறி யாராவது வந்தாகூட, அந்தந்த பகுதி முக்கியஸ்தர்களை மட்டும் பார்த்து ஆறுதல் சொல்லிட்டு கிளம்பிடுறாங்க. எங்களுக்கு ஆறுதல் எல்லாம் சொல்ல வேண்டாம். அவசர உதவியாவது செய்யுங்க” என்று ஆதங்கத்தைக் கொட்டுகிறார்.
வெள்ள நிவாரணப் பணி சிறப்பு அதிகாரி ககன்தீப் சிங் பேடி, “போர்க்கால அடிப்படையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றி, ஆக்கிரமிப்புகளையும் அகற்றி நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளது. அதனால்தான் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பீமாராவ் நகர், சிதம்பரம் போன்ற பகுதி மக்கள்  இப்போது பிரச்னைகள் இல்லாமல் இருக்கிறார்கள். மாவட்டம் முழுவதும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது” என்று ஆறுதல் சொல்கிறார்.
திக்... திக்... புதுச்சேரி!
எப்படிப்பட்ட வெள்ளமாக இருந்தாலும் உடனடியாக வடிந்துவிடும் கட்டமைப்பை கொண்ட புதுச்சேரியையும்  இந்த மழை புரட்டிப் போட்டுவிட்டது. தீபாவளிக்கு முந்தைய வாரம் பெய்த மழை சுமார் ஏழாயிரம் ஹெக்டேருக்கும் அதிகமான விவசாய நிலங்களையும், சுமார் நான்காயிரத்துக்கு அதிகமான வீடுகளையும்  சூரையாடியது. புதுச்சேரிக்கு மழை நிவாரணத் தொகையாக ரூ.182.45 கோடி கேட்டு மத்தியக் குழுவை அனுப்பி வைக்கக்கோரி முதல்வர் ரங்கசாமி பிரதமருக்குக் கடிதம் எழுதினார். “தமிழகத்தின் மழை பாதிப்புப் பகுதிகளைப் பார்வையிட வந்திருந்த மத்தியக் குழு கடந்த 29-ம் தேதி புதுச்சேரி, பாகூர், ஆராய்ச்சிக்குப்பம், கொமந்தன்மேடு உள்ளிட்ட பகுதிகளை ஆய்வுசெய்து சென்றார்கள்.
மக்கள், நிவாரணம் வரும் என்று காத்திருந்தார்கள். ஆனால், மழை வேகமாக முன்பைவிட இன்னும் வேகமாக  வந்தது. கடந்த திங்கள்கிழமை இரவு ஆரம்பித்த மழை. செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியிலிருந்து புதன்கிழமை காலை 8.30 மணிவரை மட்டும் 303 மி.மீ. அளவுக்குக் கொட்டித் தீர்த்திருக்கிறது. புதுவையில் உள்ள 84 ஏரிகளில், ஊசுட்டேரி உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பியிருக்கின்றன. அதில், விழுப்புரத்தை அடுத்த வீடூர் அணையிலிருந்து 12,000 கன அடி அளவுக்குத் தண்ணீர் வெளியேற்றப்பட்டுக் கொண்டிருப்பதால் கரையோரம் வசிப்பவர்கள் அப்புறப்படுத்தப்பட்டு சமுதாயக் கூடம், பள்ளிக்கூடம் போன்ற இடங்களில் தங்க வைக்கப் பட்டுள்ளார்கள்.
இந்த இக்கட்டான சூழலில், “புதுச்சேரி முழுவதும் 150 மீட்பு மையங்கள் அமைக்கப் பட்டுள்ளன. ஆனாலும், மக்கள் தங்கள் வீடுகளையும் உடைமைகளையும் விட்டுவரத் தயங்கி வருகிறார்கள். இதுவரை 27,000 உணவுப்பொட்டலங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 80,000 உணவுப் பொட்டலங்கள் தயாரித்து தயார் நிலையில் இருக்கிறது. தாழ்வான பகுதிகளில் சிக்கியுள்ளவர்களை மீட்டுக்கொண்டு வர மீனவர்களிடம் படகுகளைக் கேட்டிருக்கிறோம்” என்று கணக்கு காட்டுகிறது பாண்டி அரசாங்கம்.
வெங்கட்டா நகர், கிருஷ்ணா நகர், ரெயின்போ நகர், டி.வி நகர் உள்ளிட்டப் பகுதிகளிலும் அரியாங்குப்பம், நோனாங்குப்பம் போன்ற பகுதிகளில் இருக்கும் வீடுகளில் இடுப்பளவுக்கு மழை நீர் புகுந்தது. இதனால் அங்கிருந்தவர்கள் அக்கம் பக்கத்து வீடுகளில் தஞ்சமடைந்திருக் கிறார்கள். “இரண்டு நாட்களாக எங்கள் வீட்டுக்குள் தண்ணீர் வந்துவிட்டது. ஃபிரிட்ஜ், வாஷிங்மெஷின், பீரோ என்று அனைத்தும் மழை நீரில் மூழ்கிவிட்டன. வீட்டிலிருந்த சேர், சோபாவெல்லாம் மிதந்துகொண்டிருக்கிறது. வீட்டுக்குள் தண்ணீரில் பாம்பு நீந்திச் செல்கிறது. அதிகாரிங்க அரசியல்வாதிங்க’னு யாரும் வந்து பார்க்கலை” என்றார் செல்லான் நகரைச் சேர்ந்த கீதா.
பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்ட முதல்வர் ரங்கசாமி, “உடனடி இடைக்கால நிவாரணமாக 100 கோடியும், தானே புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அளிக்க வேண்டிய 70 கோடி ரூபாய் நிலுவைத் தொகையையும் உடனே அளிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கேட்டிருக்கிறேன். கிடைத்தவுடனே நிவாரணப் பணிகள் தொடங்கப்படும்’’ என அவகாசம் கேட்கிறார்.
டெல்டா பகுதிகள்... தண்ணீரில் மூழ்கிய பயிர்கள்!
வெள்ள சேதத்தைப் பார்வையிட வந்த மத்தியக் குழு டெல்டா பகுதியை நிராகரித்துவிட்டது. நாகை மாவட்டத்தில், கொள்ளிடம், வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளத்தால் பயிர்கள் மிதக்கின்றன. ஏரி, குளங்கள் என எதுவும் தூர்வாரப்படவில்லை.  மழை தொடர்ந்தால் சென்னையைவிட இங்கு மோசமாக இருக்கும் என்று கலங்குகிறார்கள் டெல்டா விவசாயிகள்.
கொள்ளிடத்தைச் சேர்ந்த விவசாயி தனபால், “கொட்டித்தீர்த்த மழையால் கொள்ளிடம் அருகே உள்ள எடமணல் கிராமத்தில் பள்ளிக்கூடம், அங்கன்வாடி, நூலகங்கள் போன்ற இடங்களை வெள்ளம் சூழ்ந்துவிட்டது. எந்த அதிகாரியும் வந்து பார்க்கவில்லை. நாங்கள் முயற்சி செய்தும் மழைநீரை வெளியேற்ற முடியவில்லை. எங்கு பார்த்தாலும் தண்ணீர் சூழ்ந்திருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த வடிகால்களையும் தூர்வாராததால், கால்வாய்க்குப் போகவேண்டிய தண்ணீர் ஊருக்குள் வருகிறது” என்கிறார் ஆதங்கக் குரலில்.
இப்போது பெய்துள்ள மழையால் விவசாயி களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிட்டது. கிட்டத்தட்ட ஒரு லட்சம் ஏக்கருக்கு அதிகமான பயிர்கள் தண்ணீரில் மூழ்கிவிட்டன. வேதாரண்யத்தில் உள்ள வெள்ளப்பள்ளம் ஏரி அதைச் சுற்றியுள்ள நான்காயிரம் ஏக்கர் நிலங்களின் பாசனத்துக்கு ஆதாரமாக இருக்கிறது. 640 கோடி ரூபாய் செலவில் அந்த ஏரி தூர்வாரப்படும் என்று ஒரு வருடத்துக்கு முன்பு, 110 விதியின் கீழ் அறிவித்தார்கள். அறிவித்ததோடு சரி... தூர்வாரப்படாததால் வெள்ளப்பள்ளம் ஏரி நிறைந்து தண்ணீர் வெளியேறிவிட்டது. இதில் 3,000 ஏக்கருக்கு அதிகமான விளைநிலங்கள் மூழ்கிவிட்டன. பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் தலைஞாயிறு பகுதியைச் சேர்ந்த விவசாயி பக்கிரிசாமி தற்கொலை செய்துகொண்டார்.
தமிழ்நாடே தீவாகி இருக்கிறது. மத்திய, மாநில அரசுகள் முனைப்புடன் நிவாரணப் பணியில் இறங்கவேண்டும்.
 - க.பூபாலன், ஜெ.முருகன், ஏ.ராம்
படங்கள்: எஸ்.தேவராஜன்,  அ.குரூஸ்தனம், க.சதீஷ்குமார்

விகடன்