அதிரடி இரண்டாம் கட்ட விவாதம்: ராம்னிக்கு வட்டியும் முதலுமாக திருப்பிக் கொடுத்த ஒபாமா!
ஹாம்ஸ்டெட்
(யுஎஸ்): சற்று முன் (நியூயார்க் நேரப்படி செவ்வாய் இரவு 9 மணி) நடைபெற்ற
அமெரிக்க அதிபர் தேர்தலின் இரண்டாவது நேரடி விவாதத்தில், தன்னை கடுமையாக
எதிர்த்துப் பேசி வரும் குடியரசுக் கட்சி வேட்பாளர் ராம்னிக்கு வட்டியும்
முதலுமாக திருப்பிக் கொடுத்தார் அதிபர் பாரக் ஒபாமா.
அடிக்கடி தனது நிலையை மாற்றிக் கொள்ளும் ராமனி மீது, புள்ளி
விவரங்களுடன் கடுமையாக அதிரடி தாக்குதல் நடத்தினார். மேடையில்
தேர்ந்தெடுக்கப்பட்ட நடுநிலை வாக்காளர்களுக்கு மத்தியில், அவர்கள் கேட்கும்
கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் அமைந்த இந்த விவாதத்தில் ஒபாமா
அதிரடியாய் வென்றார் என்றுதான் சொல்ல வேண்டும்.
இதுதான் ஒபாமா ஸ்டைல்...
'முதல்
விவாதத்தின்போது கொஞ்சம் பெருந்தன்மையா இருந்துட்டேன். அதுக்காக எப்போவும்
அப்படியே இருந்துடுவேன்னு நினைச்சிடாதீங்க" - என்று மறைமுகமாக ராம்னிக்கு
சொல்லும் வகையில்தான் இன்றைய ஒபாமாவின விவாதம் இருந்தது.
சில
நேரங்களில் ‘நீங்கள் சொல்வது தவறு" என்று முகத்திற்கு எதிராக குற்றம்
சாட்டிய போது, பதில் சொல்லத் தெரியாமல் திணறி விட்டார் ராம்னி.
பார்வையாளரின்
கேள்விக்கு சொல்ல வேண்டிய நிலையில் அதை சொல்ல முடியாமல், ஒபாமாவை நோக்கி
கேள்வி கேட்ட ராம்னியை பார்க்கும் போது பரிதாமாக இருந்ததாக பார்வையாளர்கள்
கருத்து தெரிவித்துள்ளனர்.
ராம்னியின் கேள்விகளை படு லாவகமாக கையாண்ட
ஒபாமா, தான் அமெரிக்காவின் அதிபர்.. சின்னப்புள்ளத்தனமாக பேச முடியாது
என்பதைச் சொல்லாமல் சொன்னார்.
சீனாவுக்கு வேலைகளை அனுப்பிய ராம்னி...
அமெரிக்க
வேலை வாய்ப்பை பெருக்க என்ன செய்யப்போகிறீர்கள் என்று பார்வையாளர் கேட்ட
போது ராம்னி அன்னிய செலாவணியைக் குறைத்துக் காட்டும் சீனாவைக்
கட்டுப்படுத்துவேன் என்றார்.
அடுத்து பேசிய ஒபாமா, தன்னுடைய
ஆட்சியில் சீனாவுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் மூலம் கடிவாளம்
போட்டுள்ளேன். அமெரிக்காவில் உள் நாட்டு உற்பத்திகள் பெருகியதோடு
மட்டுமல்லாமல், பல ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்க ஏற்றுமதி அதிகரித்துள்ளது.
சீனாவுக்கு
எதிராக சட்டம் போடுவதில் அமெரிக்காவின் கடைசி மனிதர் ராம்னி ஆகத்தான்
இருக்க முடியும். ஏனென்றால் அவரது கம்பெனிதான் சீனாவுக்கு அதிநவீன
உற்பத்தித்துறையின் வேலைகளை அனுப்பியதோடு மட்டுமல்லாமல், அமெரிக்க
பாதுகாப்புக்கு கேடு விளைவிக்கும் செக்யூரிட்டி சிஸ்டம்ஸ் உற்பத்தியையும்
சீனாவுக்கு அனுப்பி வைத்தவர் இதே ராம்னிதான். இவரை எப்படி நம்புவது? என்று
ஒபாமா கேள்வி எழுப்பிய போது ஆடிப்போய்விட்டார் ராம்னி.
இதன்
தொடர்ச்சியாக வெளிநாட்டுக்கு செல்லும் வேலை வாய்ப்புகளை எப்படி தடுத்து
நிறுத்தப்போகிறீர்கள் என்ற கேள்விக்கு, விளக்கமாக தொலை நோக்கு பார்வையுடன்
சொல்லத் தெரியாத ராம்னி ' வருமான வரியை குறைத்து நான் அமெரிக்காவில்
வேலைவாய்ப்பை பெருக்குவேன்' என்று பொத்தாம் பொதுவாகதான் பதில் சொன்னார்.
சில வேலைகள் அமெரிக்கர்களுக்கு இல்லை...
ஒபாமாவோ,
சில வேலைகள் அமெரிக்காவுக்கு திரும்பாது என்ற உண்மையை அழுத்தமாக
சொல்லியதோடு மட்டுமல்லாமல், அமெரிக்கர்களுக்கு அதிக ஊதியம் கிடைக்கும் உயர்
தொழில்நுட்ப வேலைகளை உருவாக்குவதே எனது திட்டம். அதற்காக எனர்ஜி,
உயர்தொழில் நுட்ப தொழிற்சாலைகள், புதிய கண்டுபிடிப்புகள், கட்டமைப்பு என
அடுத்த நூற்றாண்டுக்கான எதிர்கால திட்டம் உருவாக்கியிருக்கிறேன். அதன் பலன்
ஏற்கனவே கிடைக்க ஆரம்பித்து உள்ளது. சோலார், காற்றாலை உள்ளிட்ட புதிய
தொழில் நுட்பத்தில் ஆயிரக்கணக்கானோருக்கு, அதிக ஊதியத்தில் புதிய
வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளது என புள்ளி விவரத்தோடு அடுக்கினார்.
சொன்னதை செய்வேன்.. செய்வதைத்தான் சொல்வேன்..
நான்கு ஆண்டுகளில் என்ன செய்து முடித்துள்ளீர்கள் என்று ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு ஒபாமாவின் பதில் இது:
படு
பாதாளத்தை நோக்கி சரிந்து கொண்டிருந்த பொருளாதார வீழ்ச்சியை தடுத்து
நிறுத்தினேன். மடிந்து கொண்டிருந்த அமெரிக்க கார் உற்பத்தி தொழிற்சாலைகளை
மீட்டெடுத்து பல லட்சம் வேலைவாய்ப்புகளை காத்து, புதிய தொழில் நுட்பத்துடன்
அதிக மைலேஜ் கொடுக்கும் கார்களை தயாரிக்க காரணமாக இருந்தேன்.
அமெரிக்க
வரலாற்றிலேயே குறைந்த அளவு எண்ணெய் இறக்குமதி என்ற் சாதனையை நிறைவேற்றி,
உள் நாட்டு உற்பத்தியை பெருக்கியுள்ளேன். ஈராக் போரை முடிவுக்கு கொண்டு
வந்து பணத்தை உள்நாட்டு வளர்ச்சிக்கு திருப்பியுள்ளேன். ஒசாமா பின் லேடனை
ஒழித்து கட்டினேன். ஆஃப்கானிலிருந்து படைகளை திரும்ப அழைத்துக்
கொண்டிருக்கிறேன்.
தொடர்ச்சியாக 49 மாதங்கள் வேலை வாய்ப்பு
பெருகியுள்ளது. இன்னும் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கிறது அதை நோக்கி
தனது திட்டங்கள் என்ன என்றும் வரிசைப்படுத்தினார்.
ஒபாமாவை குற்றம்
சாட்டுவதிலேயே குறியாக இருந்த ராம்னியோ வேலையை உருவாக்குவேன் உருவாக்குவேன்
என்று கிளிப்பிள்ளை போல் சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லிக்
கொண்டிருந்தார்.
ராம்னியின் தப்புக் கணக்கு...
கவர்னர்
ராம்னி பணக்காரர்கள் , ஏழைகளுக்கு ஒரே அளவில் 20 சதவீதம் வருமான வரி
என்றும் ஆனாலும் வருமானத்தை அதிகரித்து பற்றாக்குறையை சரி செய்வேன் என்றும்
சொல்கிறார்.
அவரது கணக்குப்படி 20 சதவீதம் வரி என்றாலும் 5
ட்ரில்லியன் டாலர்கள் அரசுக்கு வருவாய் இழப்பு. ராணுவத்தினர் கேட்காத
நிலையிலும் 2 ட்ரில்லியன் டாலர் கூடுதல் செலவு. ஆனாலும் பற்றாக்குறையை
குறைப்பதாகக் கூறுகிறார். பொது தொலைக்காட்சி (தூர்தர்ஷன் போல்), குழந்தை
பிறப்பை திட்டமிடும் பெண்களுக்கான காப்பீடு ஆகிய இரண்டிலும்தான் நிதி
ஒதுக்கீடை ரத்து செய்வேன் என்று சொல்லியிருக்கிறாரே தவிர எப்படி நிதி
நிலையை சமாளிபார் என்று தெளிவான விவரம் அவரால் சொல்ல முடியவில்லை.
சாமானியனை விட குறைவாக வரி கட்டும் ராம்னி...
பல
கோடிகள் சம்பாதிக்கும் ராம்னி 14 சதவீத வரி செலுத்தும் போது, சாதராண
தொழிலாளியோ அவரை விட அதிகமான சதவீத வரி செலுத்துகிறார். இவரா நடுத்தர
மக்களின் வரியை குறைப்பார் என மக்களை நோக்கி கேட்டார் ஒபாமா.
ராம்னி
பல நிறுவனங்களை நடத்துபவர், அவரிடம் புதிதாக ஒருவர் வந்து லாபம்
காட்டுகிறேன். ஆனால் திட்டங்களை சொல்ல மாட்டேன் என்றால் பணத்தை கொடுப்பாரா?
அல்லது பொது மக்களாகி நீங்கள்தான் இதை ஏற்றுக்கொள்கிறீர்களா? என்று சூடான
கேள்வியை எழுப்பினார்.
அப்போதும் கூட தன் திட்டங்களைச் சொல்லாமல்,
"நான் இருபத்தைந்து வருஷமா தொழில் செய்றேன், எனக்கு எப்படி நிதி நிலை
சமாளிக்கனும்னு தெரியும்" என்று கூறிக் கொண்டிருந்தார். இது ஒரு கட்டத்தில்
பார்வையாளர்களின் கேலிக்குள்ளானது.
ராம்னியை விட புஷ் நல்லவர்
க்ளிண்டன்
ஆட்சியில் எட்டு வருடமாக அமெரிக்க பொருளாதாரம் உச்சத்தில் இருந்தது. எட்டு
ஆண்டு புஷ் ஆட்சியில் தான் நிலமை மோசமடைந்து நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டு
பொருளாதாரம் மோசமானது. இதை நினைவூட்டும் விதமாக 'உங்க கட்சியை சார்ந்த
புஷ்ஷை விட நீங்கள் எவ்வாறு மாறுபட்டவர்' என்று ராம்னியை நோக்கி ஒரு பெண்
கேள்வி எழுப்பினார்.
உடனே சந்தோஷமாக 'நான் ரொம்ப நல்லவன். என்
திட்டங்கள் வேறு, சின்ன தொழில்களுக்கு முன்னுரிமை கொடுப்பவன்' என்று
ஏகப்பட்ட பில்டப்களை கொடுத்தார் ராம்னி.
அடுத்து வந்த ஒபாமாவோ, 'ஒரு
வகையில் புஷ் ரொம்ப நல்லவர். இவரைப் போல் ஏழைகளின் மருத்துவக் காப்பீட்டில்
கை வைக்கவில்லை. சட்டத்திற்கு புறம்பாக குடியேறியவர்களை வெளியேற்றாமல்,
குடியேற்ற சட்டத்தை சீரமைக்க முனைந்தார். முதியவர்களின் காப்பீடு
திட்ட்த்தை வவுச்சர் திட்டமாக்கவில்லை' என்றார்.
புஷ்ஷை விட ராம்னி மோசமானவர் என்று சொல்லாமல் சொல்லி விட்டார் ஒபாமா.
பெண்கள் ஓட்டு யாருக்கு
பெண்களுக்கு
சம ஊதியம் என்ற கொள்கையில் சட்டம் நிறைவேற்றியுள்ள ஒபாமா, கருத்தடை,
தேர்ந்தெடுத்த குழந்தை பிறப்பு என முக்கிய பிரச்சனைகளும் மருத்துவக்
காப்பீடு திட்டங்களில் இடம் பெறவேண்டும், வேலைக்கு செல்லும் பெண்களுக்கு
மட்டுமல்ல, இது குடும்பத்திற்கே முக்கியமான விஷயம் என்றார்.
ஆனால் ராம்னியோ, நிறுவன முதலாளிகள்தான் இதை முடிவு செய்ய வேண்டும் என்றார்.
ஆண்களும்
பெண்களும் சம உரிமை மட்டுமல்ல, பெண்களுக்கே உரிய மருத்துவ
பிரச்சனைகளுக்கும் முதலிடம் கொடுப்பது தான் தனது நிலை என்று
தெளிவுபடுத்தினார் ஒபாமா.
சந்தடி சாக்கில், கணவன் இல்லாமல்
குழந்தைகளுடன் தனியாக வசிக்கும் அம்மாக்களால் தான் பிள்ளைகள்
குற்றவாளிகளாகின்றனர் என்ற ரீதியில் புதிய வெடியை இன்று ராம்னி கொளுத்திப்
போட்டுள்ளார். இதை எதிர்த்து ஏற்கனவே இன்டெர்நெட்டில் பெண்கள் அமைப்பு
எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பெண்கள் பெருமளவு ஒபாமாவை ஆதரித்து
வரும் சூழலில், எந்த கட்சியையும் சாராத பெண்கள் வாக்குகள் இந்த
விவாதத்துக்குப் பிறகு ஒபாமாவுக்கே என்று விமர்சகர்கள் கருத்து
தெரிவித்துள்ளனர்.
தவிர குடியேற்ற சட்ட திருத்தத்தில் ராம்னியின்
இரட்டை நிலையை அம்பலப்படுத்தியிருந்தார் ஒபாமா. இதன் மூலம் ஹிஸ்பானிக்
சமூகத்தினரின் ஆதரவும் பெருமளவில், கிட்ட்த்தட்ட முழுமையாக ஒபாமாவுக்கு
திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது.
நாட்டிற்கு தலைமை ஏற்கும் தகுதி யாருக்கு உண்டு
லிபியாவில்
அமெரிக்க தூதரகம் தாக்கப்பட்ட போது, துக்க வீட்டில் அரசியல் பேசிய
ராம்னியை, இந்த முறை ஒபாமா ஒரு பிடி பிடித்தார். நாட்டின் மீது தாக்குதல்
நடந்து கொண்டிருக்கிறது. என்ன ஏதென்று முழுமையான தகவல்கள் கிடைக்காத
நிலையில் அரசியல் பேசும் இவர் எப்படி நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்க
முடியும்.. அதற்கான தகுதி அவருக்கு இல்லையே...
இறந்தது நான் அனுப்பிய
எனது ஊழியர்கள். நண்பர்கள். அவர்களை இழந்த எனக்கு அதன் வலி முழுமையாக
தெரியும். அமெரிக்கர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை தேடிச்சென்று பழி
தீர்ப்போம். அதிபர் என்ற முறையிலும் கமாண்டர் இன் சீஃப் என்ற முறையில்
உறுதியாக இதை தெரிவித்துக் கொள்கிறேன், என்று மிகவும் அழுத்தமாக கூறினார்.
தனது
தலைமையில் நாட்டின் பொருளாதாரம் பெரு வளர்ச்சி அடைவதோடு மட்டுமல்லாமல்,
அடுத்த நூற்றாண்டு வரை அமெரிக்கா உலகின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும்
சக்தியாக விளங்கும். அதற்கான திட்டங்களை தொடர்ந்து நிறைவேற்று அடுத்த
நான்கு ஆண்டுகளுக்கு வாய்ப்பு தாருங்கள் என்ற கோரிக்கையுடன் ஒபாமாவின்
வாதம் நிறைவு பெற்றது.
ராம்னி எந்த பாயிண்ட் சொன்னாலும், உடனடியாக
புள்ளி விவரத்தோடு மறுத்த ஒபாமா, அத்துடன் உண்மையான நிலவரத்தையும்
எடுத்துச் சொன்னார். ராம்னி சொன்ன தவறான தகவலகளை உடனுக்குடன் மறுத்த ஒபாமா
ஒரு கட்டத்தில் ' உங்கள் பொய்யை எவ்வளவு நேரம்தான் பொறுமையாக கேட்டுக்
கொண்டிருப்பது' என்று சற்று காட்டமாகக் கேட்டபோது, பதில் சொல்ல முடியாமல்
திணறினார் ராம்னி.
இன்றைய விவாத்த்தில் ஒபாமா வெற்றி பெற்றார் என
பெரும்பாலான ஊடகங்கள் கருத்துக் கணிப்பு வெளியிட்டுள்ளன. இந்த அதிரடி
போட்டி விவாதத்தின் மூலம் தனது கட்சியினருக்கு உற்சாகம் மட்டுமல்ல, இதுவரை
முடிவு செய்யாதவர்களையும் தன் பக்கம் திருப்பியுள்ளார் ஒபாமா.
நன்றி - தட்ஸ் தமிழ்
-ஒன்இந்தியா.தமிழ் எக்ஸ்க்ளூசிவ்