Showing posts with label அமீர் vs சென்சார் போர்டு. Show all posts
Showing posts with label அமீர் vs சென்சார் போர்டு. Show all posts

Tuesday, March 26, 2013

அமீர் vs சென்சார் போர்டு - குற்றம் நடந்தது என்ன?

திருந்துங்கள் அமீர்... அப்புறம் திருத்தலாம்!

கோடம்பாக்கத்தின் லேட்டஸ்ட் ஹாட் டாபிக் இயக்குநர் அமீர் தணிக்கைத் துறை மீது பாய்ந்ததுதான்."திரைப்படங்களுக்கு சான்றிதழ் வழங்குவதில் சென்சார் போர்டு தற்போது அறிவிக்கப்பட்டாத மாபியா கும்பல் போல செயல்பட்டு வருகிறது. "யு' சான்றிதழ் வழங்க வேண்டுமென்றால், அதற்குத் தனியாக கட்டணம், "யு/ஏ' அல்லது "யு'சான்றிதழ் வழங்கவேண்டுமென்றால் அதற்கு தனியாக கட்டணம் என தரம் பிரித்து பணம் பறிக்கும் செயலில் இறங்கியுள்ளது.ஆதிபகவன்' படத்துக்கு "ஏ' சான்றுக்கு பதில் "யு/ஏ' அல்லது "யு' சான்று தர என்னிடம் பணம் கேட்டு தரகர்களை அனுப்பினார்கள்.


நான் பணம் தரத் தயாராக இல்லை. அதனால் இழுத்தடித்து என் படத்துக்கு "ஏ' சான்றிதழ் கொடுத்தார்கள். தணிக்கை துறையில் உள்ளவர்கள், ஆட்சேபணைக்குரிய காட்சி என தரம் பிரிப்பது பணத்தின் அடிப்படையில்தான். இப்படத்தை தணிக்கை செய்வதற்காக நான் கடந்த மாதம் 5ஆம் தேதியே சென்சார் போர்டிடம் படத்தைக் கொடுத்துவிட்டேன். அவர்கள் 12ஆம் தேதிதான் படத்தைப் பார்த்தார்கள். பார்த்துவிட்டு, அப்போதே 40 காட்சிகளை வெட்டவேண்டும், சில இடங்களில் வசனங்களை நீக்க வேண்டும் என்று சொன்னார்கள்.

ஏன் என்று கேட்டதற்கு கெட்ட வார்த்தைகள் இருக்கிறது. பாடல் காட்சியில் மதுபாட்டில்கள் இருக்கின்றன. எனவே இதை நாங்கள் அனுமதிக்கமாட்டோம். "ஏ' சான்றுதான் கொடுப்போம் என்றார்கள். ஆனால், காட்சிகளை வெட்டிவிட்டு, வசன உச்சரிப்பை நீக்கிய பிறகும் ஏன் "ஏ' சான்றிதழ் கொடுக்கிறீர்கள் என்று கேட்டால், காட்சிகளை நீக்கினாலும், வசனங்களை நீக்கினாலும் "ஏ' சான்றுதான் கொடுப்போம் என்று சொன்னார்கள். மும்பையில் தணிக்கை செய்திருந்தால், படத்தில் உள்ள காட்சிகளை நீக்க வேண்டியது இருந்திருக்காது.

 மேலும், வசனங்களை நீக்க வேண்டிய அவசியமும் இருந்திருக்காது. ஆனால், இங்கே இப்பொழுது சூழ்நிலை சரியில்லை. எனவே, காட்சிகளை நீக்கினாலும், வசனங்களை நீக்கினாலும், "ஏ' சான்றுதான் கொடுக்கமுடியும் என்றனர். இப்போதுதான் "விஸ்வரூபம்' படம் பிரச்னையிலிருந்து மீண்டு வெளியாகியிருக்கிறது. அதனால், இந்த பிரச்னையை பெரிதாக்க வேண்டாம் என்று விட்டுவிட்டேன். மலேசியாவிலும் இப்படத்தைத் தடுக்க சென்சார் முயற்சி செய்தது. இப்படத்தை திட்டமிட்டு தடுக்க, சென்சார் போர்ட்டுக்கு ஏன் இத்தனை அக்கறை என்று புரியவில்லை. சென்சார் போர்டு திட்டமிட்டு செய்கிறதா? இதற்குப் பின்னால் ஏதாவது மர்மம் இருக்கிறதா?


நான் இயக்குநர் சங்கத்தின் செயலாளராக இருந்திருக்கிறேன். தற்போது சினிமா தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவராக இருக்கிறேன். அப்படியிருந்தும் இந்த பிரச்னையை பெரிதாக்க விரும்பாமல், விட்டுவிட்டேன். படம் வெளியாகி பல நாள்கள் ஆகிவிட்டது. தமிழ்நாடு முழுவதும் எல்லோரும் பார்த்திருக்கிறார்கள். இதில் "ஏ' சான்று தரும் அளவுக்கு என்ன இருக்கிறது? முத்தக்காட்சி இருக்கிறதா? ஆடை அவிழ்ப்பு காட்சி இருக்கிறதா? கட்டிப்பிடித்து உருளுவதுபோல் காட்சி இருக்கிறதா? யாராவது யாரையாவது கற்பழிக்கிறார்களா?


ஒன்றுமே இல்லையே...பணம் கொடுத்து சான்று வாங்க வேண்டிய அவசியம் எனக்குக் கிடையாது. இப்படிப் பணம் கொடுத்து சான்று வாங்கினால், யாரும் படமெடுக்க முடியாது. சென்சார் போர்டு இதற்கு விளக்கம் அளித்தே தீரவேண்டும். நான் சொன்ன கருத்துக்கு மறுப்பிருந்தால் தணிக்கை வாரியம் என்மீது நேரடியாக வழக்கு தொடுக்கட்டும்' இதுதான் இயக்குநர் அமீர் சென்சார் போர்ட் பற்றி பேசிய பேச்சு. இதனைத் தொடர்ந்து, மத்திய தணிக்கை குழு உறுப்பினர்களை இயக்குநர் அமீர் மிரட்டுவதாகவும், அவதூராக பேசி வருவதாகவும் மத்திய தணிக்கை குழு உறுப்பினர் அமிர்தராஜா போலீஸில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.


 அமிர்தராஜா கூறுவது, கடந்த 5ம் தேதி, "ஆதிபகவன்' திரைப்படத்தை அமீர் தணிக்கை செய்வதற்கு சமர்ப்பித்தாகவும், தணிக்கை செய்தபோது அதில் அதிகமாக ஆபாச காட்சிகள் இருந்ததால் படத்துக்கு "ஏ' சான்றிதழ் வழங்க முடிவெடுத்ததாகவும், அமீர் அதற்கு "அந்த காட்சிகள் இருந்தால்தான் எனது திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடும் என்றும், "யு' சான்றிதழ் தர உங்களுக்கு எவ்வளவு பணம் வேண்டும் என்றாலும் நான் தரத் தயார்' என்றும் பேசினாராம். அவரைக் கண்டித்து உறுப்பினர்கள் பணம் வாங்க மறுத்து படத்துக்கு "ஏ' சான்றிதழ் வழங்கினார்களாம்


.அதன் பின்னர்தான், இயக்குநர் அமீர் மத்திய திரைப்பட தணிக்கை குழு உறுப்பினர்களை கேவலமாக திட்டியும் மிரட்டியும் வந்தாராம். தற்போது திரைப்பட தணிக்கை குழு ஒரு மாஃபியா கும்பல் போல் செயல்படுகிறது என்பது போன்ற தவறான செய்தியை அறிக்கையாக தெரிவித்துள்ளார்.இதனால் மத்திய தணிக்கை குழுவின் நற்பெயரையும் புகழையும் களங்கப்படுத்தி என்னை போன்ற மத்திய தணிக்கை குழு உறுப்பினர்களுக்கு தீராத மன உளைச்சலையும், வேதனையையும் ஏற்படுத்தியதோடு, அவரிடமிருந்து எங்களுக்கு மிரட்டலும் வந்துள்ளதால் தகுந்த நடவடிக்கையும், எங்களுக்குப் பாதுகாப்பும் அளிக்க வேண்டும்' என்று அந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளார் அமிர்தராஜா.இவை இருதரப்பிலும் நடந்த சம்பவங்கள்.


 இனி விஷயத்துக்கு வருவோம்.உலக அளவில் படம் எடுத்தவர்களை விடுங்கள், இந்திய அளவில் "செம்மீன்' படம் எடுத்த இயக்குநரோ, "பதேர் பாஞ்சாலி' எடுத்த இயக்குநரோகூட "தணிக்கை துறை எங்களை வஞ்சித்துவிட்டது' என்று குற்றச்சாட்டு சொன்னதில்லை. வெட்டு, குத்து, கொலை, ரத்தம், கூட்டுக் கற்பழிப்பு இவற்றோடு, போக்கிரிகளை நாயகனாக்கி உலவ விட்ட இயக்குநர் அமீர்தான் இப்படி பேட்டியளிக்கிறார்.


இவருடைய "பருத்திவீரன்' இறுதிக் காட்சிகளை வீட்டில் குடும்பத்துடன் உட்கார்ந்து பார்க்க முடியாது. கேட்டால் உலகப்படம் உங்களுக்குப் புரியாது என்பார். மனிதர்களைக் கெட்டவர்களாகவும், காட்டு மிராண்டிகளாகவும் காட்டிய "பருத்திவீரன்' படமும் சரி, கெட்ட மனிதர்களை நாயகர்களாக்கிய "ஆதி பகவன்' படமும் சரி உலகப்படம் ஒன்றுமில்லை. அப்படிப்பட்ட படங்களை எடுத்த ஒருவர், தணிக்கை துறையைக் குற்றச்சாட்டுக்குள்ளாக்குவதும், மாபிஃயா கும்பல் என்று கூறுவதும் எந்த விதத்தில் நியாயம்?தணிக்கைத் துறை சரியாக இல்லாமல் இருக்கலாம்; ஆனால் அதைத் திருத்துவது இவர் வேலையா என்ன? "ஆம் நான் திரைத்துறையில் இருக்கிறேன். நானே நேரடியாக பாதிக்கப்பட்டேன்.


அதனால் குற்றம் சாட்டுகிறேன். இதிலென்ன தவறு?' என்று இயக்குநர் அமீர் கேட்கலாம். நியாயம்தான். ஆனால் அதற்கு ஒரு வழிமுறையில்லையா?இப்படி வரைமுறையற்றுப் பேசும் இயக்குநர் என்ன.. "புர்ச்சி' படமா எடுத்துவிட்டார்? இந்திய பிரஜையாக இருந்து, அதன் சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட்டு, திரைப்பட இயக்குநராக இருக்கும் அமீர், இந்திய தணிக்கை துறையைப் பற்றிப் பேசும் போது கொஞ்சமாவது நாகரிகம் காத்திருக்கவேண்டாமா? மாஃபியா கும்பல்களைப் பற்றியே படம் எடுப்பதால், அமீருக்கு பார்க்கிற எல்லோரும் மாஃபியாவாக தெரிகிறார்கள் போலும்? தன்னை மிகப் பெரிய பொறுப்பில் இருப்பதாகக் கூறும் அமீர், வார்த்தையிலும் அதை வடித்தெடுக்க வேண்டாமா?


 மகாபாரதத்தில் ஒரு இடம் வரும். துரியோதனன் கெட்டவன் என்பதால், அவனுக்கு பார்த்தெல்லாம் கெட்டதாகத் தெரிந்தததாம். தர்மன் நல்லவன் என்பதால், அவனுக்கு பார்த்ததெல்லாம் நல்லதாகத் தெரிந்ததாம். "ஆதி பகவன்' படத்தில் சும்மா, சும்மா வெட்டிச் சாய்க்கிறார்கள். சராசரி படம் போல பெண்கள் போதைப் பொருளாக காட்சிப்படுத்தப்படுகிறார்கள். மொள்ளமாறிகளையும் முடிச்சவுக்கிகளையும் நாயகனாக்கியுள்ளார்.


இந்தப் படத்துக்கு "ஏ' கொடுத்தால் என்ன? "ஓ' கொடுத்தால் என்ன?இதில், "ஆதி பகவன் சராசரி படம் என்று சொல்வதை ஏற்றுக்கொள்ளமாட்டேன், இங்கு படைப்பாளிகளுக்கும் பார்வையாளனுக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை. படைப்பாளிகளுக்கும் விமர்சர்களுக்கும் தான் பிரச்னை. ரசிகர்கள் தியேட்டரில் படத்தை ரசித்துப் பார்க்கிறார்கள். ஆனால் விமர்சகர்கள் தவறாகப் பேசுகிறார்கள்' என்று வேறு ஒரு குற்றச்சாட்டையும் கூறியுள்ளார் அமீர். அதுசரி, விமர்சகர்கள் என்ன அமீர் வீட்டு பணியாளர்களா என்ன? அமீர் சொல்படி இனி விமர்சகர்கள் எல்லா படத்தையும் நல்லவிதமாக சொல்லிவிடவேண்டியதுதான். விமர்சகர்களையும் கண்மண் தெரியாமல் ரசிக்கும் ரசிகர்களாக்கிவிட்டால் விட்டால் குப்பை, கூளங்களைக்கூட நாளைக்கு நாயகர்களாக நடிக்க வைக்கலாம் பாருங்கள்?


அமீர் அவர்களே.. நீங்கள் ஒரு சினிமாகாரர். சினிமாவில் தப்புத்தப்பாக அரசியலைக் காட்சிப்படுத்துவதைப் போல, நிஜத்திலும் செய்யாதீர்கள். நீங்கள் தணிக்கைத் துறை பற்றிப் பேசுங்கள்... ஆனால் ஆரோக்யமாக! ஏற்கெனவே இங்கு நடக்கும் அரசியலால் நீங்கள் சார்ந்திருக்கும் சினிமா உலகமே தறிகெட்டுக்கிடக்கிறது. அந்த தறிகெட்டுப்போன உலகத்திலிருந்து நீங்கள் அரசியலுக்குச் செல்ல விரும்புகிறீர்களா? கண்டிப்பாக செல்லுங்கள்....அதற்கு முன் உங்கள் சினிமாவைச் சரிபடுத்துங்கள். அதற்கு முதலில் உங்களைச் சரிபடுத்திக்கொள்ளுங்கள்!
THANX - CINEMA EXPRESS