அமிதாப் பச்சனின் 69 -வது பிறந்தநாள். நேரில் வாழ்த்துச்
சொல்லப் புறப்பட்டுக்கொண்டிருந்தேன். ஒவ்வொரு முறையும் அவருக்குப்
பிடித்தமான ஏதோ ஒன்றை அவர் மனைவியிடம் கேட்டுத் தெரிந்துகொண்டு அதை
வாங்கிப் பரிசளிப்பது வழக்கம். அந்தமுறை ஜெயா பச்சனும் வெளிநாட்டில்
இருந்தார்.
அமிதாப் பூக்களை மிகவும் நேசிப்பார். ஆனால் அந்த நேரம் அதை வாங்குவது
கடினமான சூழலாக இருந்தது. விலை உயர்ந்த ஒயின் வாங்கலாம் என்று யோசனை
எழுந்தது. அவருக்கு மது அருந்தும் பழக்கம் இல்லை. நான் இருந்த இடத்தில்
இருந்து அவரைச் சென்று அடைய எப்படியும் இரண்டு மணி நேரப் பயணம்
தேவைப்பட்டது.
காரில் யோசித்துக்கொண்டே புறப்பட்டேன். அவரை வாழ்த்தும்போது காரில்
அமர்ந்து யோசித்த அந்த ஐடியாவைக் கூறினேன். அதுதான் ‘ஷமிதாப்’. நான் அன்று
அவருக்குக் கொடுத்த பிறந்தநாள் பரிசும் இந்தக் கதைதான்’ - முகத்தில்
வெளிச்சம் பரவப் பேச ஆரம்பித்தார் பால்கி.
‘பா’ படத்துக்குப் பிறகு ஏன் இவ்வளவு இடைவெளி?
படம் மட்டும் இயக்கினால் போதும் என்றால் எத்தனை படங்கள் வேண்டுமானாலும்
இயக்கிக்கொண்டே போகலாம். நல்ல படம், அதுவே வித்தியாசமான படம் என்ற
பார்வையோடு சினிமாவை அணுகும்போது அதற்காகச் சில காலம் தேவைப்படுகிறது.
அமிதாப், இளையராஜா, பி.சி.ஸ்ரீராம் இவர்களைக் கடந்து நீங்கள் யோசிப்பதே இல்லையே ஏன்?
இவர்களைவிடச் சிறந்தவர்கள் யார் இருக்கிறார்கள் காட்டுங்கள். நான் அவர்களுடன் இணைந்து படம் பண்ணத் தயாராக இருக்கிறேன்.
தனுஷ் வாய் பேசாதவர், அவருக்குப் பின்னணிக் குரல் கொடுப்பவர் அமிதாப்
பச்சன் என்றும், ஒரு கட்டத்தில் இருவருக்குமிடையே உருவாகும் தொழில்
போட்டிதான் படத்தின் கதை என்றும் கூறப்படுகிறதே?
இல்லை. நானே கதையைச் சொல்லிவிட்டால் பிறகு படத்தில் என்ன இருக்கப்போகிறது.
இரண்டு நபர்களுக்கிடையே உள்ள ஈகோதான் திரைக்கதை. மற்றொருவரது உதவி இல்லாமல்
தனி நபராக யாரும் எந்த ஒரு வெற்றியையும் அடைய முடியாது என்கிற கருவை
அடிப்படையாக வைத்துக் கதை நகரும்.
இது மூன்று ஹீரோக்கள் படம். அமிதாப், தனுஷ், அக்ஷரா இவர்கள்தான் அந்த மூன்று ஹீரோக்கள்.
‘ஷமிதாப்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகும் அக்ஷரா ஹாசனுக்கு என்ன கதாபாத்திரம்?
அக்ஷராவைத் திரைப்பட நிகழ்ச்சியொன்றில் முதன்முதலாகப் பார்த்தேன். இந்தக்
கதையை எழுதும்போதே அவரை நினைத்துதான் எழுதி முடித்தேன். ஒரு பக்கம் கமல்,
மற்றொரு பக்கம் சரிகா, இரண்டு திரை மேதைகளின் மகள். அவரது நடிப்பு பற்றி
வேறு என்ன சொல்ல?
இந்தக் கதைக்குள் எப்படி தனுஷை இழுத்தீர்கள்?
தனுஷ் மாதிரி நடிகர் கிடைத்தது நம் அதிர்ஷ்டம்தான். பாலிவுட்டில் ரன்வீர்
மாதிரி இங்கே தனுஷ். அவரது பங்களிப்பு படத்துக்குப் பெரிய பலம். படத்தில்
ஒருவர் பெரிய வயதில் பெரிய ஆள், இன்னொருவர் சிறிய வயதில் பெரிய ஆள். அந்த
இருவரும்தான் அமிதாப்பும் -தனுஷும்.
‘பிகே’ மாதிரியான பாலிவுட் சினிமாக்கள் கவனிக்க வைக்கிறதே?
நூறு கோடியில் படம் எடுத்து அதில் 300, 400 கோடிகள் வரை சம்பாதிக்க
வேண்டும் என்று திட்டமிடும் இயக்குநர் நான் அல்ல. எந்த ஒரு
காரணத்துக்காகவும் தயாரிப்பாளர் நஷ்டம் அடையக் கூடாது என்பதில் தெளிவாக
இருப்பேன். சொன்ன பட்ஜெட்டுக்குள் படத்தை எடுத்துக் கொடுப்பதும் ஓர்
இயக்குநரின் முக்கியமான பணி இல்லையா? இதுதான் என் பாணி.
இளையராஜாவை இலகுவாக அணுகித் தொடர் வெற்றி கண்டு வருகிறீர்களே?
மரியாதையையும், தொழிலையும் எப்போதும் ஒன்றாக ஆக்கிவிடக் கூடாது. எனக்கு
இப்படித்தான் வேண்டும் என்று அவரிடம் சண்டை போடுவேன். அவரும் சண்டை
பிடிப்பார். எனக்கும், அவருக்கும் படத்தில் தேவையான விஷயங்களைப் பரிமாறிக்
கொள்வதில் எந்தத் தடையும் இல்லாமல் பார்த்துக்கொள்வோம். எப்போதும் அவரது
பாடல்களைப் போலவே, இந்தப் படத்தில் அவரது பின்னணி இசையும் சிறப்பாக
வந்திருக்கிறது. அவர்தான் ராஜா.
தமிழிலும் படத்தைக் கொண்டு வந்திருக்கலாமே?
எனக்கு ஒரு படத்தை மொழிமாற்றம் செய்வது பிடிக்காது. நல்ல கதை தோன்றினால்
நேரடியாகத் தமிழிலேயே ஒரு படத்தை இயக்கிவிட்டுப் போகலாம் என்று நினைப்பவன்,
நான். அடுத்துகூட அப்படி நடக்கலாம்.
இயக்குநர் பால்கி
நன்றி - த இந்து