Showing posts with label அப்துல் கலாம் மறைவு. Show all posts
Showing posts with label அப்துல் கலாம் மறைவு. Show all posts

Wednesday, July 29, 2015

ஞானச் செல்வமே கலாம் எழுதி வைத்த சொத்து: வைரமுத்து

ஞானச் செல்வம்தான் கலாம் இந்தியாவிற்கு எழுதி வைத்திருக்கும் சொத்து என வைரமுத்து புகழாஞ்சலி
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், "இதயத்தை இறுக்கிப் பிடித்தபடி இந்த இரங்கல் செய்தியை எழுதுகிறேன்.
எங்கள் குடும்பத்தின் மூத்த தலைமகனின் வாழ்வு முடிந்துவிட்டதாய் உடைந்து நிற்கிறேன். இந்தியாவிற்கு வெளியே இந்தியாவின் அறிவடையாளமாய் விளங்கிய ஒரு ஞானப் பெருமகன் நம்மிடையே இனி இல்லை என்பதை நம்பமுடியவில்லை.
இந்தியாவின் கடைக்கோடியில் கடைசிக் குடிமகனாய்ப் பிறந்து இந்தியாவின் முதற்குடிமகனாய் உயர்ந்தது சந்தர்ப்பத்தால் வந்தது அல்ல; சாதனையால் வந்தது.
அணு விஞ்ஞானி அப்துல் கலாம் பெருமுயற்சியால் இந்தியா தன் சொந்த ஏவுகணையைச் செலுத்தியபோது வெள்ளைமாளிகையே அண்ணாந்து பார்த்தது. அவர் அறிவின் துணையால் பொக்ரான் அணுகுண்டு சோதிக்கப்பட்டபோது வல்லரசுகளெல்லாம் மூக்கின்மேல் விரல் வைத்தன. அரசியலுக்கு வெளியே இருந்து அவர் குடியரசுத் தலைவர் ஆனபோது இந்தியாவே எழுந்து நின்று கைதட்டியது. தாய்மொழிவழி கல்வி கற்ற ஒருவர் தாயகத்தையே ஆளமுடியும் என்ற அரிய சாதனையை நிகழ்த்தியவர் அப்துல் கலாம்.
அவர் படிப்பில் ஞானி. பழக்கத்தில் குழந்தை. நாற்பது பல்கலைக் கழகங்களின் டாக்டர் பட்டம் பெற்றும் அதைத் தன் தலையில் சூடிக்கொள்ளாதவர். இந்த நூற்றாண்டில் இளைய சமுதாயத்தின் கனவு நாயகன். இளைஞர்களைக் கனவு காணச் சொன்னவர். தூங்கிக் காண்பதல்லை கனவு; உங்களைத் தூங்க விடாததே கனவு என்று லட்சியத்திற்கு இலக்கணம் எழுதியவர்.
தன் கடைசி நிமிடம் வரை இளைஞர்களுக்குக் கற்றுக் கொடுப்பதிலேயே அவரது காலம் கழிந்திருக்கிறது. சென்ற ஆண்டு என் மணிவிழாவிற்கு வந்து வாழ்த்திய பெருமகனுக்கு ஒரு மாலை அணிவித்தேன். அந்த மாலைகூடத் தனக்குச் சொந்தமாகிவிடக்கூடாது என்று அதை எனக்கே அணிவித்துவிட்ட புனிதர் அவர்.
அவர் பிரம்மச்சாரிதான், ஆனால் இந்தியாவே அவரது குடும்பம். அவர் எந்தச் செல்வத்தையும் சேர்த்து வைக்கவில்லை. அவரது ஞானச் செல்வம்தான் அவர் இந்தியாவிற்கு எழுதி வைத்திருக்கும் சொத்து.
தடம்மாறும் சமூகமும், தடுமாறும் அரசியலும் அப்துல் கலாமின் ஒழுக்க நெறிகளைப் பின்பற்றினால் நாடு நலம்பெறும். அப்துல் கலாம் இந்தியாவிற்கு எழுதிவைத்துப் போகும் மரண வாசகம் இதுவாகத்தான் இருக்கும்.
அப்துல் கலாம் தன் செயல்களால் வாழ்ந்துகொண்டேயிருப்பார். தேசத்தின் நதிகளிலும், மலைகளிலும், மரங்களிலும், மலர்களிலும், மக்கள் மனங்களிலும் அவர் வாழ்ந்து கொண்டேயிருப்பார்.
அய்யா அப்துல்கலாம் அவர்களே உங்கள் புகழை வாழ்நாளெல்லாம் உயர்த்திப்பிடிக்கும் திருக்கூட்டத்தில் ஒருவனாய் நானும் இருப்பேன்.” இவ்வாறு வைரமுத்து கூறியுள்ளார்.


நன்றி - த இந்து

அப்துல் கலாம்-ன் கடைசி நாள்: கலாம் ஆலோசகரின் உணர்வுக் குறிப்புகள் ஸ்ரீஜன் பால் சிங்

அப்துல் கலாமுடன் ஸ்ரீஜன் பால்சிங்| ஃபேஸ்புக் பக்கத்திலிருந்து
அப்துல் கலாமுடன் ஸ்ரீஜன் பால்சிங்| ஃபேஸ்புக் பக்கத்திலிருந்து
அவருடன் நான் கடைசியாகப் பேசி 8 மணி நேரம் மட்டுமே கடந்திருக்கிறது. (இது கலாமின் ஆலோசகர் ஸ்ரீஜன் பால்சிங் அவரது ஃபேஸ்புக்கில் இப்பதிவை பதிந்த போது குறிப்பிடப்பட்டிருந்த நேரம்) தூக்கம் என் கண்களுக்குள் நுழைய மறுத்து இமைகளை விட்டு விலகிச் செல்கிறது. துக்கம் கண்ணீராகக் கரை புரண்டோடுகிறது. அதில் கலாமின் நினைவுகள் கலந்து வழிந்தோடுகின்றன.
அப்துல் கலாமுடன் நான் சேர்ந்திருந்த அந்த கடைசித் தருணமானது 27-ம் தேதி நண்பகல் 12 மணிக்குத் தொடங்கியது. குவாஹாட்டிக்கு விமானத்தில் ஒன்றாக புறப்பட்டோம். டாக்டர் கலாம் 1-ஏ எண் கொண்ட இருக்கையிலும் நான் 1-சி இருக்கையிலும் அமர்ந்திருந்தோம். அவர் அடர் நிறம் கொண்ட ஆடை அணிந்திருந்தார். அவரைப் பார்த்த மாத்திரத்தில் 'நல்ல நிறம்' என அவரது ஆடையைச் சுட்டிக்காட்டிச் சொன்னேன். அப்போது என் மனம் அறிந்திருக்கவில்லை அதுவே அவரை நான் பார்க்கும் கடைசி நிறமென்று.
பருவமழை காலத்தில், விமானத்தில் இரண்டரை மணி நேரம் பயணம் என்பது சற்று எரிச்சலைத் தருவதே. அதுவும் விமானத்தின் சிறு ஜெர்க்குகள் எனக்கு வெறுப்பாக இருந்தது. ஆனால், கலாமுக்கு இதெல்லாம் சர்வ சாதாரணம். எனது வெறுப்புணர்வைப் புரிந்து கொண்ட கலாம், என் அருகில் இருக்கும் கண்ணாடி ஜன்னலுக்கு மேல் இருக்கும் திரையை இழுத்துவிட்டு "இப்போது நீ அச்சமின்றி இருக்கலாம்" என்றார்.
விமானப் பயணம் ஒருவழியாக முடிந்தது. அடுத்ததாக ஐ.ஐ.எம். ஷில்லாங்குக்கு கார் மூலமாக இரண்டரை மணி நேரப் பயணம். விமானப் பயணம், கார் பயணம் என பயணமே 5 மணி நேரத்தை விழுங்கிவிட்டது. ஆனால் அந்த 5 மணி நேரமும் நாங்கள் நிறையப் பேசினோம், ஆலோசித்தோம், விவாதித்தோம். கடந்த ஆறு ஆண்டுகளில் இதுபோன்ற நிறைய தருணம் எனக்கு வாய்த்திருக்கிறது.
இருப்பினும் எனக்கும் கலாமுக்கும் இடையேயான அந்த கடைசி பேச்சுகளில் மூன்று முக்கிய நிகழ்வுகள்/ஆலோசனைகள் எப்போதும் நினைவில் நிற்கும்.
முதலாவது, பஞ்சாபில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதல் கலாமை வெகுவாகவே பாதித்திருந்தது. அப்பாவி உயிர்களின் பலி அவரைத் துயரத்தில் ஆழ்த்தியிருந்தது. அன்றைய தினம் அவர் ஷில்லாங் ஐ.ஐ.எம். அரங்கில் பேசவிருந்த தலைப்பு 'வாழ்வதற்கு உகந்த பூமி'.
பஞ்சாப் சம்பவத்தையும் அவர் பேசவிருந்த தலைப்பினையும் ஒப்பிட்ட கலாம், "மனிதர்களால் ஆன சக்திகள் பல இந்த புவியை வாழ்வதற்கு தகுதியற்றதாக மாற்றி வருகின்றன. வன்முறையும், சுற்றுச்சூழல் மாசும், சற்றும் பொறுப்பற்ற மனித நடவடிக்கைகளும் தொடர்ந்தால் இன்னும் 30 ஆண்டு காலத்தி நாம் இந்த பூமியை விட்டுச் செல்லவேண்டிய நிர்பந்தம் ஏற்படும். இதைத் தடுக்க உங்களைப் போன்றவர்கள் ஏதாவது ஆக்கப்பூர்வமாக செய்ய வேண்டும். எதிர்காலம் உங்கள் கைகளிலேயே இருக்கிறது" என்றார்.
இரண்டாவதாக நாங்கள் பேசிக் கொண்டது தேசிய அரசியல் பற்றியது. நாடாளுமன்றம் முடங்கி வருவது குறித்து கலாம் மிகுந்த வேதனை தெரிவித்தார். "எனது பதவிக் காலத்தில் நான் இரு வேறு அரசுகளைப் பார்த்திருக்கிறேன். அதன் பின்னரும் நிறைய ஆட்சி மாற்றங்களை பார்த்துவிட்டேன். ஆனால், இத்தகைய முடக்கங்கள் மட்டும் மாறவில்லை. இது சரியானது அல்ல. நாடாளுமன்றம் வளர்ச்சிக்கான அரசியலை முன்னெடுத்துச் செல்வதாக இருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்த ஏதாவது ஒரு வழிவகை காண விரும்புகிறேன்" எனக் கூறினார்.
பின்னர் என்னிடம் ஐஐஎம் மாணவர்களிடம் கேட்பதற்காக சில கேள்விகளை தயார் செய்யுமாறு வலியுறுத்தினார். அதை தனது உரை முடிந்தவுடன் மாணவர்களுக்கு வழங்கவிருப்பதாக தெரிவித்தார். நாடாளுமன்றத்தை ஆக்கபூர்வமானதாகவும், துடிப்பு மிக்கதாகவும் மாற்றக்கூடிய வழிமுறைகள் மூன்றினை மாணவர்கள் குறிப்பிட வேண்டும். அதுவே கலாம் மாணவர்களுக்காக தயார் செய்து வைத்திருந்த அந்த கடைசி நேரக் கேள்வி.
சிறிது நேரம் கழித்து என்னிடம் அந்த கேள்வி பற்றி மீண்டும் பேசினார். என்னாலேயே இப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியவில்லை என்றால் மாணவர்களால் எப்படி முடியும் என்றார். அடுத்த ஒரு மணி நேரம் இதைப் பற்றியே எங்கள் பேச்சு இருந்தது. பல்வேறு யோசனைகளை நாங்கள் பகிர்ந்து கொண்டோம். எங்களது அடுத்த படைப்பான 'அட்வான்டேஜ் இந்தியா' என்ற புத்தகத்தில் இது குறித்து சேர்க்கலாம் என முடிவு செய்தோம்.
மூன்றாவது நிகழ்வு மிகவும் நெகிழ்ச்சிகரமானது. அவரது பண்பாட்டுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்றே சொல்லலாம். எங்கள் வாகனத்துக்குப் பாதுகாப்பாக 6 வாகனங்கள் வந்தன. நாங்கள் இரண்டாவது வாகனத்தில் இருந்தோம். எங்கள் காருக்கு முன்னதாகச் சென்ற ஒரு திறந்த ஜிப்ஸி வாகனத்தில் 3 வீரர்கள் இருந்தனர். இருவர் ஜிப்ஸிக்குள் அமர்ந்திருந்தனர். ஒருவர் வாகனத்தில் நின்றபடி பயணித்தார். ஒரு மணி நேர பயணம் ஆகியிருக்கும், "அந்த நபர் ஏன் நின்று கொண்டே வருகிறார்? அவர் சோர்ந்து விடுவார். இது அவருக்கு தண்டனை போல் அல்லவா இருக்கிறது? ஏதாவது செய்யுங்கள். ஒயர்லெஸ் கருவியில் தகவல் அனுப்பி அவரை அமரச் செய்யுங்கள் அல்லது கை அசைத்தாவது அவரை உட்கார சொல்லுங்கள்" எனக் கலாம் என்னிடம் கூறினார்.
அவரிடம் நான் எவ்வளவோ எடுத்துரைத்தேன். பாதுகாப்புக் காரணங்களுக்காக அவரை நிற்கும்படி மேலதிகாரி கூறியிருக்கலாம் என்றேன். ஆனால், கலாம் சமாதானம் அடையவில்லை. ரேடியோ கருவி மூலம் தகவல் அனுப்ப எவ்வளவோ முயன்றோம். ஆனால் அது சரிப்பட்டு வரவில்லை. அடுத்த 1.5 மணி நேரப் பயணத்தின் போது "ஷில்லாங் சென்றதும் அந்த நபருக்கு நான் நன்றி தெரிவிக்க வேண்டும்" என்பதை அவர் என்னிடம் மூன்று முறையாவது நினைவுபடுத்தியிருப்பார். அதேபோல் ஷில்லாங் சென்றதும், அந்த நபரை நான் ஒருவழியாக தேடிப்பிடித்தேன். அவரை கலாமிடம் அழைத்துச் சென்றேன்.
அந்த வீரரிடம் கைகுலுக்கிய கலாம், "சோர்வாக இருக்கிறாயா? ஏதாவது சாப்பிடுகிறாயா" எனக் கேட்டார். "எனக்காக நீ நீண்ட நேரம் நிற்க வேண்டியதாகிவிட்டது. அதற்காக நான் வருந்துகிறேன்" என்றார். கலாமின் பண்பைக் கண்டு வியந்துபோன அந்த வீரர், "சார், உங்களுக்காக நான் 6 மணி நேரம்கூட நிற்பேன்" என்றார்.
அதன்பிறகு நாங்கள் கருத்தரங்கம் நடைபெறவிருந்த இடத்துக்குச் சென்றோம். அவர் எப்போதுமே குறித்து நேரத்துக்குச் செல்ல வேண்டும் என்ற கொள்கையுடவர். மாணவர்களை காக்க வைக்கக் கூடாது என என்னிடம் அவர் அடிக்கடி கூறியிருக்கிறார்.
அங்கே, அவருக்காக ஒலிப்பெருக்கியைச் சரி செய்தேன். கருத்தரங்கு குறித்து சுருக்கமாக குறிப்பு வழங்கினேன். அப்போது அவர் என்னிடம், 'ஃபன்னி கை'- விளையாட்டுப் பையன் நீ!" என்றார். அவருடனான 6 ஆண்டுகளில் குறிப்பிட்ட இந்த வார்த்தைக்குப் பல அர்த்தங்களை நான் புரிந்து கொண்டிருக்கிறேன். ஒழுங்காக வேலை செய்தால், சிறு தவறு செய்திருந்தால், அவர் சொல்வதற்கு செவி சாய்க்க வேண்டுமென நினைத்தால், எனப் பல்வேறு தருணங்களில் கலாம் இந்த வார்த்தையை என்னிடம் பயன்படுத்தியிருக்கிறார். ஆனால், இந்த முறை அவர் கூறியதே கடைசியானது, இறுதியானது.
மேடையில் ஏறி இரண்டு நிமிடங்கள் பேசியிருப்பார். நான் அவருக்குப் பின் அமர்ந்திருந்தேன். 2 நிமிட பேச்சுக்குப் பின்னர் நீண்ட இடைவெளி. நான் அவரைப் பார்த்தேன். அவர் கீழே சரிந்தார். அவரை நாங்கள் தூக்கினோம். மருத்துவர்கள் விரைந்து வந்தனர். என்ன முதலுதவியெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையையும் செய்தனர். என் ஒரு கரத்தில் கலாமின் தலையைத் தாங்கிக் கொண்டிருந்தேன். பாதி மூடிய கண்களில் அவர் என்னைப் பார்த்த அந்த கடைசிப் பார்வையை என்றென்றைக்கும் மறக்க முடியாது.
அவரது கை எனது கையை இறுகப்பற்றியது; அவரது விரல்களை என் விரல்களோடு கோர்த்துக்கொண்டார். அவரது முகத்தில் அமைதி தவழ்ந்தது. அவர் எதுவும் பேசவில்லை. வலியை சிறிதும் காட்டவில்லை. அவரது கண்களில் ஞான ஒளி வீசியது. அடுத்து 5 நிமிடங்களில் நாங்கள் மருத்துவமனையை அடைந்திருந்தோம். ஆனால், அப்போதே ஏவுகணை நாயகன் நம்மைவிட்டு பறந்திருந்தார். அவரது பாதம் தொட்டு வணங்கினேன். எனது மூத்த நண்பருக்கு, எனது குருவுக்கு பிரியாவிடை செலுத்தினேன். உங்கள் நினைவுகள் என்னைவிட்டு நீங்காது. அடுத்த பிறப்பில் சந்திப்போம்.
நினைவலைகளில் இருந்து இன்னும் கொஞ்சம்...
"நீ ஒரு இளைஞன். நீ எதற்காக அடுத்தவர்களால் நினைவுகூரப்பட வேண்டும் என நினைக்கிறாய்?" இக்கேள்வியை கலாம் என்னிடம் அடிக்கடி கேட்டிருக்கிறார். அவரது கவனத்தை ஈர்க்கும் பதிலைத் தேடியலைந்திருக்கிறேன். ஒரு நாள், அவரிடம் இதே கேள்வியை நான் திருப்பிக் கேட்டேன். "நீங்கள் முதலில் சொல்லுங்கள். நீங்கள் எதற்காக நினைவுகூரப்பட விரும்புகிறீர்கள்? குடியரசுத் தலைவர், விஞ்ஞானி, எழுத்தாளர், ஏவுகணை நாயகர், இந்தியா 2020 புத்தகம் அல்லது டார்கெட் 3 பில்லியன்.... இவற்றில் எதற்காக நீங்கள் நினைவுகூரப்பட விரும்புகிறீர்கள்?" என்றேன்.
பல்வேறு பதில்களை நானே அளித்திருந்ததால் அவர் எளிதில் சொல்லிவிடுவார் என எதிர்பார்த்தேன். ஆனால் என்னை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும் விதமாக, "ஆசிரியராக இருந்ததற்காகவே நினைவுகூரப்பட விரும்புவேன்!" என்றார்.
நோவற்ற மரணம் வரம்!
சில வாரங்களுக்கு முன்னதாக நானும் கலாமும் அவரது பழைய நண்பர்கள் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். அப்போது எங்கள் பேச்சு, பிள்ளைகள் தங்கள் பெற்றோரைப் பேணுவது தொடர்பாக விரிந்தது. அப்போது கலாம், "பிள்ளைகள் தங்கள் பெற்றோரின் வயோதிக காலத்தில் அவர்களைப் பாதுகாக்க வேண்டும். ஆனால் பல நேரங்களில் அது நடைபெறாதது வருத்தமளிக்கிறது. அதேபோல் பெரியவர்கள் தங்கள் சொத்துகளை வாரிசுகளுக்குப் பிரித்தளிக்க மரணப்படுகையில் விழும் வரை காத்திருக்கக் கூடாது. அது குடும்பத் தகராறு ஏற்பட வழி செய்யும். அதேபோல் நோவற்ற மரணம் பெரிய வரம். ஒருவர் தன் பணியின்போதே மரித்துப்போவார் எனில் அது வரமே. இறுதி மூச்சு, இழுபறியின்றி பிரிய வேண்டும்" என்றார்.
அவரது வார்த்தைகளை இன்று நான் அசைபோடுகிறேன். அவரது இறுதிப்பயணம் அவர் விருப்பத்துக்கேற்ப கற்பிக்கும்போதே நிகழ்ந்திருக்கிறது. கடைசி நேரத்தில் அவர் படுக்கையில் துவண்டு கிடக்கவில்லை. கம்பீரமாக நின்றுகொண்டு, பணி செய்துகொண்டு, உரையாற்றிக் கொண்டிருந்தார். ஒரு பெருந்தலைவர் நம்மை விட்டு மறைந்துவிட்டார். அவர் சேர்த்து வைத்தது எல்லாம் மக்களின் அன்பு மட்டுமே. இறுதிப் பயணத்திலும் அவர் ஒரு வெற்றியாளரே.
அவருடனான காலை சிற்றுண்டி, இரவு உணவு வேளைப் பொழுதுகள் எல்லாவற்றையும் இழந்துவிட்டேன். அவருடைய எளிமை, ஆர்வம் போன்ற குணங்கள் என்னில் எப்போதும் நினைவலைகளாக வியாபித்திருக்கும். அவர் விட்டுச்சென்ற பாடங்கள் எத்தனையோ. ஆனால், இனி அவரிடம் கற்க முடியாது என்ற வேதனை என்னை அமிழ்த்துக்கொண்டே இருக்கிறது. நீங்கள் எனக்கு கனவுகளைத் தந்தீர்கள். அந்தக் கனவுகள் சாதிக்க முடிந்த சாத்தியமாக இருக்க வேண்டும் என்று கற்றுக் கொடுத்தீர்கள். உங்களை என்றும் மறவேன்.
கலாம் சென்றுவிட்டார் ஆனால் அவரது பணிகள் காலம் கடந்து வாழும்.
உங்களுக்கு நன்றிக் கடன்பட்ட மாணவன்,
ஸ்ரீஜன் பால் சிங் - அப்துல் கலாமின் ஆலோசகர்
*
தமிழில் - பாரதி ஆனந்த்

நன்றி - த இந்து


  • Senthil  
    என் வாழ்நாளில் ஒரு மரம் மட்டுமே நட்டுள்ளேன் இவருக்காக இனி நூறு மரங்களை நடுவேன் அவ்வாற்றை நன்கு பேணி காப்பேன் இது என் லட்சியம். நன்றி நீங்களும் இது போல் செய்யலாமே.
    about 8 hours ago
     (2) ·  (0)
     
    Bala · Arun Up Voted
    • SRSJ RAM  
      மாணவர்களின் நாயகனே உங்களின் பிரிவு தாயை பிரிந்த பிள்ளையை போல துடிதுகொண்டிருகின்றோம்.
      about 9 hours ago
       (0) ·  (0)
       
      • MMu.Aranganathan  
        மாசற்ற மாணிக்கமே! எந்த அரசியல்வாதியின் ,நடிகரின்,அறிஞர்களின் இறப்பும் எங்களை இப்படி அசைத்துப்பார்த்ததில்லை.கண்ணீர் கசிகிறது.ஒவ்வொரு வரிகளைப்படித்தபோதும் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியவில்லை.நீங்கள் வாழ்ந்த மண்ணில்,வாழ்ந்த காலத்தில் நாங்களும் வாழ்ந்தோம் என்பதே எங்களுக்கு அழியாப்பெருமை.
        Points
        640
        about 9 hours ago
         (0) ·  (0)
         
        • MManickam  
          மக்கள் ஜனாதிபதி ,மக்களின் ஜனாதிபதி ,மக்காளுக்கான ஜனாதிபதி ,இனி எங்கு காண்போம் ,கடைசிவரை எதிர்கால சந்ததிகளின் நலனுக்காக உழைத்த ஓய்வறிய பகலவன் ,இன்று ஓய்வாகி விட்டது .
          Points
          3025
          about 9 hours ago
           (0) ·  (0)
           
          • SSamar  
            மிக அருமையான எழுத்து,கல் எழுத்து
            about 9 hours ago
             (0) ·  (0)
             
            • SKS Kalyanasundaram  
              எவ்வளவு பெரிய பண்பாளர்? இந்த யுகத்தில் அவதரித்த மாமனிதர். நமக்குத்தான் அவரை மற்றொரு முறை ஜனாதிபதியாக வைத்து அழகு பார்க்க கொடுப்பினை இல்லை
              Points
              2130
              about 9 hours ago
               (0) ·  (0)
               
              • CCiceronatesan  
                அன்னார் வாழ்ந்த வாழ்க்கை அன்னார் ஆற்றிய கடமை அன்னார் மரணம் அத்தனையும் சரித்திரம்.பின்னாளில் அத்தனையும் மாணவர்களுக்கு பாடமாகவும் ஆராய்ச்சிக்கான பொருளாகவும் மாறும்
                about 10 hours ago
                 (0) ·  (0)
                 
                • Nnandini  
                  நான் காந்தியை பார்த்ததில்லை. ஆனால் இவரை காந்தியை விட மேலாக பார்கிறேன் .
                  about 10 hours ago
                   (0) ·  (0)
                   
                  • Nnathan  
                    பெறும்பாலும் கவிதைகள் பொய்களாளே புனையப்படும்.ஆனால் இவர் கவிதை இவரையே குறிக்கிறது. நேர்மையாய் துணிவாய் உண்மையாய் உழைக்கும் கரங்கள் அழகிய கரங்கள். ஆம் அதுதான் கலாமின் கரங்கள்.
                    about 10 hours ago
                     (0) ·  (0)
                     
                    • Ssugumar  
                      வலி இல்லா மரணத்தால் எல்லார் மனதிலும் வலி உண்டாகி விட்டார்
                      Points
                      3650
                      about 10 hours ago
                       (0) ·  (0)
                       
                      • Rayees Ahamed  
                        கண்ணீர் சிந்த துளிகள் இல்லை தலைவா... துயில் கொள்! நீ அயராது உழைத்தது போதும், துயில் கொள்! இனி இந்த இளைய சமுதாயம் தூக்கிசெல்லும் - உன் கனவுகளை!!
                        Points
                        535
                        about 10 hours ago
                         (0) ·  (0)
                         
                        • SHSajjath Hussain  
                          அன்று கனவு கண்டேன் தெரிந்தது நீங்கள் காட்டிய எதிர் காலம். இன்று கனவு காண்கிறேன் எப்படி இருக்குமோ நீங்கள் இல்லா எதிர் காலம்.
                          about 10 hours ago
                           (0) ·  (0)
                           
                          • GKg k  
                            ஸ்ரீஜன் பால்சிங் மிகவு'ம் கொடுத்து வைத்தவர். அவருடைய கலாமின் நினைவுகளுக்கு மிகவும் நன்றி. மனதை நெகிழ வைத்த கட்டுரை.
                            Points
                            560
                            about 10 hours ago
                             (0) ·  (0)
                             
                            • Panneerselvam Chandrasekar  
                              மாமனிதரின் கொள்கையை இன்றைய அரசியல்வாதிகள் பின்பற்றவேண்டும்,இவைதான் அவருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி,,,
                              about 10 hours ago
                               (0) ·  (0)
                               
                              • PRpugazhendhi Rehman  
                                Sir, In Tamil Nadu many & many leaders born & gone, but i have never seen a leader like you. Let God shower his full blessing to you and give a high position in heaven.
                                Points
                                120
                                about 10 hours ago
                                 (0) ·  (0)
                                 
                                • Rrajendiren  
                                  கட்டுரையை வாசிக்கும் போதே கண்களில் நீர் கோர்க்கிறது . இந்தியாவின் இன்னொரு மகாத்மா ! ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்.
                                  about 10 hours ago
                                   (0) ·  (0)
                                   
                                  • முகம்மது jinnah -- 
                                    மெய் சிலிர்க்க வைக்கும் வரிகள் .சிறப்பான கட்டுரை மரணம் பெரிய வரம். ஒருவர் தன் பணியின்போதே மரித்துப்போவார் எனில் அது வரமே. இறுதி மூச்சு, இழுபறியின்றி பிரிய வேண்டும்" என்றார். முத்தாய்பான வரிகள் .இறைவன் அவருக்கு கிடைத்த அருள் அவர் நினைத்த படியே நிகழ்ந்து விட்டது அவரது இறுதிப்பயணம் அவர் விருப்பத்துக்கேற்ப கற்பிக்கும்போதே நிகழ்ந்திருக்கிறது. "கடைசி நேரத்தில் அவர் படுக்கையில் துவண்டு கிடக்கவில்லை. கம்பீரமாக நின்றுகொண்டு, பணி செய்துகொண்டு, உரையாற்றிக் கொண்டிருந்தார். ஒரு பெருந்தலைவர் நம்மை விட்டு மறைந்துவிட்டார். "அவர் சேர்த்து வைத்தது எல்லாம் மக்களின் அன்பு மட்டுமே. இறுதிப் பயணத்திலும் அவர் ஒரு வெற்றியாளரே.
                                    Points
                                    350
                                    about 10 hours ago
                                     (0) ·  (0)
                                     
                                    • Llatha  
                                      Srijan balsingh u r great u spend the days with the greatest & simple person follow the ways that sir has thought you
                                      about 11 hours ago
                                       (0) ·  (0)
                                       
                                      • வெ.புருஷோத்தமன்  
                                        நினைவலைகள் நெஞ்சை நெகிழ வைக்கிறது. இந்தியாவின் ஆன்மா அமைதி பெற இறையருள் துணை நிற்குமாக ! அவரது கனவை இந்திய இளைஞர்களே நனவாக்க உழைப்போம்.
                                        Points
                                        300
                                        about 11 hours ago
                                         (0) ·  (0)
                                         
                                        • Abdul Rahim  
                                          மனிதனாக வாழ்வதே சிறப்பு .. மதம் , சாதி சொல்லி அழியும் கூட்டத்துக்கும் , சினிமா பைதிங்களுக்கும் இது புரிய வேண்டும். கலாம் போட்டோ அனைவரு வீட்டிலும் மாடுங்கள். சமத்துவம் , சகிப்பு தன்மை , நாட்டு பற்று இவற்றை நமது குழந்தைகளுக்கு இவர் முகம் சொல்லும்.
                                          Points
                                          190
                                          about 11 hours ago
                                           (0) ·  (0)
                                           
                                          • JJayaram  
                                            எப்பேர்பட்ட மனிதனை இழந்து விட்டோம் நாம். இனியொரு கலாம் பிறக்க எதனை ஆண்டுகள் நாம் தவம் இருக்க வேண்டுமோ?
                                            Points
                                            640
                                            about 11 hours ago
                                             (0) ·  (0)
                                             
                                            • MMani  
                                              At ur last minute u was thing about our people, parliament issue, punjab tragedy, and etc.every indian debt to respect you sir and hereafter every Mp's might cooperate run parliament.
                                              about 11 hours ago
                                               (0) ·  (0)
                                               
                                              • Sshankar  
                                                இந்த பகிர்வை போல இன்னொரு நெகிழ்வு இனி இல்லை. இருக்கபோவதும் இல்லை. ஹிந்துவுக்கு நன்றி.
                                                Points
                                                2460
                                                about 11 hours ago
                                                 (0) ·  (0)
                                                 
                                                • MMani  
                                                  Mr.bal singh I know how much u felt ,in this above passag broke my heart when I write this crying myself we ever like kalam sir......always ur shelter
                                                  about 11 hours ago
                                                   (0) ·  (0)
                                                   
                                                  • SSAK  
                                                    உணர்வுபூர்வமான & மிக சிறந்த கட்டுரை. மொழி பெயர்ப்பு மிக சிறப்பு.
                                                    Points
                                                    3780
                                                    about 11 hours ago
                                                     (0) ·  (0)
                                                     
                                                    • MMSR  
                                                      படிக்கும்போது மெய் சிலிரிக்கிறது
                                                      about 11 hours ago
                                                       (0) ·  (0)
                                                       
                                                      • Iinsight  
                                                        அருமையான நினைவஞ்சலி ..கலாம் அவர்களின் ஆன்மா அன்றே இறைவனை அடைந்திருக்கும்..
                                                        Points
                                                        11810
                                                        about 11 hours ago
                                                         (0) ·  (0)
                                                         
                                                        • Ssaravanan  
                                                          ஒருவர், தான் மிகவும் விரும்பும் செயல் ஆற்றும்போது உயிர் துறப்பது வரம். அந்த வரம் கலாமை தேடி வந்துள்ளது. 84 என்பது கலாமுக்கு குறைவான வயதாகவே நான் நினைக்கிறேன். காலனை யார் தடுப்பது. என் வாழ் நாளில் பார்த்த கர்மவீரர்-மகாத்மா-குழந்தைகளில் அன்பு மாமா-தாத்தா எல்லாம் கலாம் தான்
                                                          Points
                                                          10480
                                                          about 11 hours ago
                                                           (0) ·  (0)
                                                           
                                                          • NNageshwaran  
                                                            காலங்கள் கடந்து வாழ்வார்
                                                            about 12 hours ago
                                                             (0) ·  (0)
                                                             
                                                            • SASRIPATHI AMARNAATH  
                                                              எனக்கும் இது போல மரணம் வருமா? வலி இல்லா மரணம் ஒரு வர பிரசாதம். அவர் வலி இல்லாமல் மறைந்துவிட்டார் .ஆனால் நம் அனைவருக்கும் மிகப்பெரிய வலி வந்துவிட்டது .
                                                              about 12 hours ago
                                                               (0) ·  (0)
                                                               
                                                              • HH.Balasubramanian  
                                                                திரு அப்துல் கலாம் அவர்களின் ஆசிரியர் பணி விருப்பமும். மனித நேய வுணர்வும் நாட்டின் தற்போது நடைபெற்றுவரும் சூழ்நிலை கருத்தும் மிகவும் அதிசயக்க உணர்வுகள் ஆகும் . இவர் மாமேதை என்பதில் சந்தேஹமே இல்லை. Va
                                                                Points
                                                                170
                                                                about 12 hours ago
                                                                 (0) ·  (0)
                                                                 
                                                                • Sasi Masilan  
                                                                  Not able to control the tears
                                                                  about 12 hours ago
                                                                   (1) ·  (0)
                                                                   
                                                                  swaminathan Up Voted
                                                                  • SSsheikhussain s  
                                                                    என்ன சொல்ல இதயம் கனக்கிறது ,அவரது எண்ணங்களும் ,செயல்களும் அவரை இரண்டாவது காமராஜர் என்று சொல்ல தோன்றுகிறது .கலாம் சார் நீங்கள் மீண்டும் பிறந்து வந்து எங்களை நல்வழி படுத்துவீர்களா,வாருங்கள் கலாம் சார் உங்களுக்காக ஏங்குகிறோம் ,
                                                                    Points
                                                                    220
                                                                    about 12 hours ago
                                                                     (0) ·  (0)
                                                                     
                                                                    • RRaj  
                                                                      ஐயா ஒரு தேசமே உங்கள் பாதம் பணிகிறது ! 120 கோடி மக்கள் இந்தியா வல்லரசாக உங்கள் கனவை நனவாக்க பாடுபடுவதே உங்கள் பிள்ளைகளாகிய எங்கள் கடமை !!!
                                                                      Points
                                                                      900
                                                                      about 12 hours ago
                                                                       (0) ·  (0)
                                                                       
                                                                      • Ggoip  
                                                                        காமராஜர் பிறகு கலாம் இருவருமே உண்மையான மக்கள் தொண்டர்கள்.இந்த இரு செல்வங்களும் இப்போது தமிழ் நாட்டில் இல்லை.இனி இவர்கள் போல் வருவதும் இல்லை.
                                                                        about 12 hours ago
                                                                         (1) ·  (0)
                                                                         
                                                                        victor Up Voted
                                                                        • SSasi  
                                                                          அருமையான மனிதர்! கடவுளை நம்பியதில்லை... கடவுள் இருந்திருந்தால் இப்படி இருந்திருக்கலாம்! நினைவுகளை அழிப்பதர்கில்லை! என்றும் வாழும்!
                                                                          about 12 hours ago
                                                                           (0) ·  (0)
                                                                           
                                                                          • Aanitha  
                                                                            மனிதருள் மாணிக்கமாய் திகழ்ந்தவர்.அவரது பணிகளை நாம் தொடர்வதே அவருக்கு செய்யும் மரியாதை.
                                                                            Points
                                                                            3390
                                                                            about 12 hours ago
                                                                             (0) ·  (0)
                                                                             
                                                                            • Ssambath  
                                                                              மனம் வலிக்கிறது ! இனி இப்படி ஒரு மனிதரை பார்க்கப்போவதில்லை. சுயநலம் இல்லாத மனிதர் ! அரசியலுக்கு லாயக்கு இல்லாதவர் (அரசியலின் பித்தலாட்டங்கள் தெரியாததால்). கடவுள் கலாம் அவர்களின் ஆன்மாவை சாந்தி அடைய செய்யட்டும் !
                                                                              about 12 hours ago
                                                                               (0) ·  (0)
                                                                               
                                                                              • KHKannan Hyderabad  
                                                                                கலாம் உயர்ந்த மனிதன். தனது கடமையை செய்யும் பாதுகாப்பு காவலரை பற்றி இந்த அளவுக்கு கவலைப்படும் அன்பு மனம் யாருக்கும் வராது. அவரது புகழ் என்றும் நிலைக்கும்.
                                                                                Points
                                                                                430
                                                                                about 13 hours ago
                                                                                 (4) ·  (0)
                                                                                 
                                                                                ksv, · SENTHIL · anitha · navin Up Voted
                                                                                • Indirajith Shanmugham  
                                                                                  Ivar manidhar illai , Siddhar , Karma Yogi, Mahaan. ...
                                                                                  about 13 hours ago
                                                                                   (1) ·  (0)
                                                                                   
                                                                                  navin Up Voted
                                                                                  • Cchimbu  
                                                                                    Great!!!
                                                                                    about 13 hours ago
                                                                                     (0) ·  (0)
                                                                                     
                                                                                    • GGOKILA  
                                                                                      மக்களின் கனவு நாயகனுக்கு நம் புகழஞ்சலி!
                                                                                      about 13 hours ago
                                                                                       (1) ·  (0)
                                                                                       
                                                                                      SENTHIL Up Voted
                                                                                      • PP.Muruganantham  
                                                                                        அவர் வழி நடந்து இந்தியாவை 2020 இல் வல்லரசுவாக மாற்றுவோம்
                                                                                        about 13 hours ago
                                                                                         (0) ·  (0)
                                                                                         
                                                                                        • Mmadhan  
                                                                                          இப்படியுமா ஒரு மனுஷன் இருக்க முடியும் ??. அவர் கொள்கைகளை நிறைவேற்றி இந்தியயாவையும் பெருமை படுத்துவோம் . #RIP Dr Kalam