கடந்த ஐந்து ஆண்டு கால ஆட்சியில், ஈட்டி முனையாகப் பாய்ந்து வந்த பல கேள்விகளுக்கு, முதல்வர் கருணாநிதி பதில் சொல்ல முடியாமல் பரிதவித்து நின்றதற்குப் பல காரணங்கள்! அதற்கான வேரைத் தேடினால், திசை மாறிப்போன ஒரு பரிதாபப் பயணத்தின் கதைதான் கிடைக்கும்!
தி.மு.கழகத்துக்கு அறிஞர் அண்ணா தொடக்க விழா கண்டபோது, அவரைச் சுற்றி மெத்தப் படித்தவர்களுக்குப் பஞ்சம் இல்லை. இருப்பினும், கால ஓட்டத்தில் 'செயல் வீரர்’ என்று அண்ணாவால் அடையாளம் காட்டப்பட்டார் கருணாநிதி. பேச்சும் எழுத்துமே மூச்சாகக் கழகம் வளர்ந்தபோது, அதோடு சேர்த்து ஓய்ச்சல் இன்றி ஊர் ஊராகப் போய் நேரடியாகத் தொண்டர்களைப் பார்த்து தட்டிக் கொடுப்பதிலும் கூடுதல் நேரம் செலவிட்டார் கருணாநிதி.
ஐம்பெரும் தலைவர்களாக இருந்தவர்களைத் தாண்டி, அண்ணாவுக்கு அடுத்து தலைமை நாற்காலியைத் தனதாக்கிட கருணாநிதிக்குப் பக்கத் துணையாக நின்ற மூன்று தகுதிகள் - நிர்வாகத் திறமை, விரைந்து முடிவெடுக்கும் ஆற்றல்... இதோடு, சொல்லில் அஞ்சாமை!
ஐந்து முறை முதல்வர், பத்தாம் முறை தி.மு.க. தலைவர் என்று அரிய பெருமையுடன் திசை விலகாது தொடர்ந்த கருணாநிதியின் பொது வாழ்க்கைப் பயணம், கடந்த ஐந்து ஆண்டுகளில் நம்ப முடியாத அளவுக்கு அலை பாய்ந்தது.
'கழகம் ஒன்றும் சங்கர மடம் அல்ல!' என்று வார்த்தைக்கு வார்த்தை சொல்லும் அவர், ஒட்டுமொத்தக் கட்சியையும் தன் குடும்பச் சொத்தாக மாற்றிக் காட்டியது இந்த ஐந்து ஆண்டுக் காலத்தில்தான்!
மதுரையில், ஒரு கும்பல் பத்திரிகை அலுவலகத்தைத் தீயில் பொசுக்கி, மூன்று அப்பாவி உயிர்களைச் சாம்பலாக்கியபோது, அந்த அராஜகக் கும்பலை இரும்புக்கரம்கொண்டு ஒடுக்க வேண்டியவர், 'சர்வே வேண்டாம் என்றேன். சொன்னால் கேட்டால்தானே?' என்று வன்முறைக்கு சப்பைக்கட்டு கட்டிய விபரீதம் நிகழ்ந்தது.
a
இலைமறை காயாக அதுவரை தென்பட்ட அவருடைய குடும்பப் பாசம், அந்தக் கணத்தில் இருந்துதான் அச்சமூட்டும் வகையில் சலங்கை கட்டி ஆடத் தொடங்கியது!
காவிரிக்கும், முல்லைப் பெரியாறுக்கும், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்துக்கும் டெல்லிக்குப் போகாத கருணாநிதி... தன்னுடைய மகன், மகள், பேரனுக்குப் பதவிகள் வாங்குவதற்காக ஒரு வார காலம் தலைநகரில் முகாமிட்டுத் தடாலடிப் பேரம் பேசியபோது... இந்திய அளவில் எழுந்த எந்த விமர்சனங்களும் அவர் காதில் விழவில்லை.
நினைத்ததைச் சாதித்துக்கொண்டு திரும்பியபோது, குற்ற உணர்வுக்குப் பதிலாக, வெற்றிக் களிப்பே அவர் முகத்தில் தாண்டவம் ஆடியது!
.
ஈழத் தமிழர்கள் ஈசல் கூட்டம்போல் நசுக்கிக் கொல்லப்பட்டபோது, அவர் காட்டிய மௌனமோ, 'வீழ்வது தமிழனாக இருப்பினும்... வாழ்வது நாமாக இருக்கட்டும்!' என்று சொல்லாமல் சொல்லும்படி அமைந்தது. மேடைகளில் மட்டும் இன்றி... அச்சிலும், தொலைக்காட்சியிலும், இணைய தளங்களிலும், குறுஞ்செய்திகளிலும் இந்த அளவுக்குக் கடுமையாக ஒரு தலைவர் எங்காவது விமர்சனத்துக்கு ஆளாகி இருப்பாரா?
வரலாற்றின் பக்கங்களில் தேடினாலும் விடை கிடைக்காது! அந்த விமர்சனங்களின் வலியைவிட, இலங்கைப் பிரச்னையில் மத்திய அரசுக்கு இணக்கமாகப் போவதால் கிடைக்கும் சுகம் கூடுதலாக இருந்தது. அதுவே, கேள்விகளுக்குப் பதில் தராமல் தடுத்தது!
a
1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் நாட்டுக்கு இழப்பீடு ஏற்படுத்தியதாக மத்திய அமைச்சர் ஆ.ராசாவை நோக்கி நாடே கொந்தளித்தபோது... 'தகத்தகாய கதிரவன்' எனப் பட்டம் சூட்டி கருணாநிதி உச்சி முகர்ந்த காட்சி... குடும்பப் பாசத்தோடு சேர்ந்து 'வேறு' சில நிர்பந்தங்களுக்கும் அவர் கடன்பட்டு இருப்பதாகவே காட்டியது.
முன் ஏர் கொண்ட பலவீனங்களைப் பயன்படுத்திக்கொண்டன பின் ஏர்கள். மாநில மந்திரிகள் பலர் மீதும் இந்த ஆட்சியில் அடுக்கடுக்கான அதிர்ச்சிப் புகார்கள். குடும்பப் பாசத்துக்கும், அதிகார துஷ்பிரயோகத்துக்கும், வாரிசு வளர்ச்சிக்கும், கொண்டாட்டக் குதூகலத்துக்கும் தி.மு.க-வின் மந்திரிகளும் விதிவிலக்கு அல்ல.
விலைவாசி ஏற்றத்தால் தவித்துத் தள்ளாடிய மக்களுக்கு ஆரோக்கியமான நிரந்தரத் தீர்வைப் பெற்றுத் தருவதற்குப் பதிலாக, 'இலவசங்கள் இருக்கையில் எதிர்காலம் பற்றி ஏன் கவலை' என்று மயக்க மருந்து கொடுத்தே தன் கடமையைக் கழித்துக்கொள்ளப் பார்த்தது தி.மு.க. அரசு.
a
'பசித்தவனுக்கு மீன் கொடுப்பதற்குப் பதிலாக, மீன் பிடிக்கக் கற்றுத் தருவோம்' என்ற பொன்மொழி தமிழ்நாட்டில் வீண் மொழியாகிப் போனதுதான் மிச்சம்! 'மீனுக்கு நாங்களே மசாலாவும் தடவி, அதை உங்கள் வீட்டுக்கே தேடி வந்து ஊட்டிவிடுகிறோம்' என்று சொல்லி... அதையே தன் சாதனையாகவும் காட்டிக்கொண்டது ஆளும் அரசு!
விவசாயம் அற்றுப்போய்விட்டது... விவசாயக் கூலிகள் நம்பிக்கை இழந்து நடுவீதிக்கு வந்துவிட்டார்கள் என்ற கதறல்களைக் காதில் போட்டுக்கொள்ளவில்லை. மாறாக, 'வேலை பார்த்தாலும் பார்க்காவிட்டாலும் கூலி உறுதி' என்று வேலை உறுதித் திட்டத்தின் கீழ் கவர்ச்சி காட்டி- மத்திய அரசின் நற்சான்றிதழோடு - கொடுத்தது ஒரு காசு, கணக்கிலே வேறு காசு என்று அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் கூட்டுக் கொள்ளை அடிக்க வாய்ப்பு உண்டாக்கிக் கொடுத்தது இந்த அரசின் தனி 'சாதனை'!
a
உழைத்துதான் பிழைப்பேன் என்று தறி நெசவையும் மற்ற ஆலைகளையும் நம்பி இருந்த தொழிலாளர்களையும் வேலையை விட்டுத் துரத்தியது மாளாத மின்வெட்டு! விவசாயம் துவங்கி, துணி சாயம் வரை இந்த மின்வெட்டால் இருண்டுபோன குடும்பங்கள் எத்தனை எத்தனை!
இல்லாதவர்களுக்கு இலவசங்களைத் தருவதில் தவறில்லை... ஆனால், விலைவாசியை உச்சத்துக்குக் கொண்டுசென்று, உழைப்பவர்களை இலவசத்தால் வெட்டியாக வீட்டுக்குள் முடக்கிவைத்து, தெருவுக்குத் தெரு மதுக் கடைகளை நிரப்பி, உயர்கல்வியைக் கைக்கெட்டாத உயரத்துக்குக் கொண்டுசென்று, எதிர்காலச் சந்ததியையும் சுயமாகச் சிந்திக்க முடியாத மந்த நிலையிலேயே ஆழ்த்தி வைக்கும் தந்திரத்துக்குப் பெயரா மக்கள் நலத் திட்டம்?
'உங்களுக்காகவே ஐந்து முறை முதல்வராக உழைத்தேன். ஆறாம் முறையும் உங்களை வைத்து வண்டியை இழுக்க வாய்ப்பு கொடுங்கள்' என்று பிரசார மேடைகளில் வாக்கு கேட்கிறார் முதல்வர் கருணாநிதி.
வண்டியை இழுக்க இன்னொரு வாய்ப்பு கொடுத்தாலும், அந்தப் பயணம் தனக்கு அல்ல... பாதை போட்டுக் கொடுக்க மட்டுமே தன்னைப் பயன்படுத்திக்கொள்வார் என்பதைத் தமிழக வாக்காளன் மறந்துவிடலாமா?