Showing posts with label அனுபவம் அஜித் காதல் ஷாலினி பேட்டி. Show all posts
Showing posts with label அனுபவம் அஜித் காதல் ஷாலினி பேட்டி. Show all posts

Sunday, June 10, 2012

அஜித் -ஷாலினி காதல் மலர்ந்த சம்பவம் - அஜித் பொக்கிஷ பேட்டி @ விகடன்

'ஸ்டார்ட் காமிரா... ஆக்ஷன்...’


 'ஏய்...’ என்ற அலறலோடு அஜீத் கத்தியைக் காற்றில் வீச, எதிரே இருந்த ஷாலினியின் வலது கையில் ரத்தக் கோடு. 'கட்... கட்...’ பதறிப்போனது மொத்த யூனிட்டும்.


திட்டமிட்ட காட்சி அதுதான். ஆனால், நிஜமாகவே ஷாலினி யின் கையைக் கத்தி பதம்பார்த்துவிட்டது எதிர்பாராத திருப்பம். ரத்தம் பார்த்த அஜீத் படபடப்பாகிவிட்டார் தாம்தூம் என்று ஆர்ப்பாட்டம் செய்து, அடுத்த சில நிமிடங்களில், படப்பிடிப்புத் தளத்துக்கு ஒரு ஆஸ்பத்திரியையே கொண்டுவந்துவிட்டார்.


வலியால் கத்தித் தீர்க்க வேண்டிய ஷாலினி, 'நோ பிராப்ளம்’ என்பதுபோல அமைதியாக இருந்தார்.

''ஷாலினியின் அந்த நிதானம், என்னை ஆழமாகப் பாதித்துவிட்டது. 'ஒரு பெண்ணால் இத்தனை அமைதியாகப் பிரச்னையை எதிர்கொள்ள முடியுமா?’ என்று ஆச்சர்யமாக இருந்தது!''- இப்போது சொல்கிறார் அஜீத்.


''அடுத்தவருக்குச் சிறு துன்பம் என்றால் இவ்வளவு அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டுமா? தான் யார், தன்னுடைய நிலை என்ன... என்பதை எல்லாம் விட்டுவிட்டு, முகத்தில் பதற்றமும் மனதில் அக்கறையுமாக ஒருவரால் அல்லாட முடியுமா என்று வியப்பாக இருந்தது!'' என்று சொல்லும் ஷாலினியின் இதழ் ஓரத்தில் வெட்க இழை!


எதிர் எதிர் துருவங்கள் ஈர்க்கப்படுவது இயல்பு தானே... ஷாலினிக்கும் அஜீத்துக்கும் காதல் அரும்பியது அந்தத் தருணத்தில்தான்!
''அஜீத்தும் ஷாலினியும் சந்தித்துக்கொண்டதே அந்தத் தினத்தில்தான். அஜீத்தான் ஹீரோ, ஷாலினிதான் ஹீரோயின் என்பதில் உறுதியாக இருந்த நான், கஷ்டப்பட்டு ஷாலினியைச் சம்மதிக்கவைத்து அழைத்து வந்தேன். அஜீத் தனியாக வும் ஷாலினி தனியாகவும் நடித்து முடித்த நிலை யில், அடுத்த ஷெட்யூலில் காம்பினேஷன். முதல் சந்திப்பிலேயே ரத்தம். ஷாலினியின் அப்பா, 'இது நல்ல சகுனம்தான்’ என்றார். எல்லாம் நல்லவித மாகவே முடிந்திருக்கிறது!'' என்றார் 'அமர்க்களம்’ படத்தின் டைரக்டர் சரண்.


''ஷாலுவை (ஷாலினியைத்தான் இப்படிச் செல்லமாகக் குறிப்பிடுகிறார்) பார்த்தால் ஆச்சர் யம்தான் மிஞ்சுகிறது. '20 வயதில் ஒரு பெண்ணுக் குள் இத்தனை தீர்க்கமான சிந்தனையா...’ என்று பல நேரங்களில் பிரமித்துப்போயிருக்கிறேன்...'' என்கிறார் அஜீத்.


''இதற்கு முன் நான் சந்தித்த பெண்களிடம் காண முடியாத தீர்க்கம் இந்தப் பெண்ணின் பார்வைக்குள்ளும் செயலுக்குள்ளும் ஒளிந்து இருப்பதாக எனக்குத் தோன்றியது. சட்டென்று எனக்குள் ஒரு மின்னல்... 'என் தேடல் இதை நோக்கித்தானோ...’ நேராக ஷாலினியிடம் போய், 'நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்க ஆசைப் படறேன்’ என்று சொன்னேன். என்ன பதில் வருமோ என்ற பதற்றம் எனக்கு!'' பேசுவதை நிறுத்தித் தலையைக் கோதிவிட்டபடி, பின்னால் சாய்ந்துகொண்டார் அஜீத்.


''அஜீத் என்னிடம் வந்து இப்படிக் கேட்டபோது எனக்குள் பெரிய அதிர்ச்சி எல்லாம் எழவில்லை. சொல்லப்போனால், என் மனமே மெள்ள அஜீத் பக்கம் சாயத் தொடங்கிவிட்டதாகத்தான் உணர்ந்தேன். ஆனால், நான் அப்பா பொண்ணு. அதனால், 'எனக்கு ஓ.கே... அப்பாவிடம் பேசி விடுங்கள்’ என்று சொல்லிவிட்டேன். அப்பாவிடம் அஜீத் பேசும் முன்பே நான் பேசிவிட்டேன். இந்த விஷயத்தில் எல்லோருக்கும் சந்தோஷம்!'' என்றார் ஷாலினி.


''எல்லோருக்கும் சந்தோஷம். சரி... ஆனால், ஒரு டைரக்டர் என்ற முறையில் எனக்குப் பெரிய வருத்தம். 'ஷாலினிங்கிற நடிகையை இழந்துட்டோமே’ன்னு. மற்றபடி, நான் அடம்பிடிச்சு சினிமாவில் இவர்களை ஜோடி சேர்த்தது வாழ்க்கையிலும் ஜோடி சேருவதற்குத்தான் என்று நினைக்கும்போது சந்தோஷமாக இருக்கிறது'' என்றார் சரண்!


ஆக, இனிமேல் ஷாலினி சினிமாவில் நடிக்கப்போவது இல்லை!


''என் ஆசை அதுதான்... நான் ஒரு காட்டாறு மாதிரி யான மனிதன். எதையோ தேடி அருவியாக விழுந்து, பாறைகளில் மோதி, தேவை இல்லாமல் பல விஷயங்களைச் சுமந்துகொண்டு இருக்கிறேன். இப்போதான் எனக்கான கடலைத் தேடிக் கண்டுபிடித்துச் சங்கமம் ஆகிறேன். இந்தக் கடல் என்னைக் கட்டுப்படுத்தவும், சாந்தப்படுத்தவும் உறுதுணையாக இருக்க ஆசைப்படுகிறேன்!'' என்றார் அஜீத்.


''நடிப்பது என்பது பணத் தேவைக்காகவோ, அதீதப் புகழுக்காகவோ இல்லை. என் சந்தோஷத்துக்காக... இப்போது அடுத்த பொறுப்பு கிடைத்திருக்கிறது. அங்கே மாறிவிட்டேன்''- மெலிதான புன்னகையோடு சொல்கிறார் ஷாலினி.


''ஷாலுவைவிட எனக்குத்தான் பொறுப்பு அதிகம். ஷாலுவைத் தமிழ்நாட்டில் உள்ள குடும்பங்கள் தங்கள் வீட்டுப் பெண்ணாக மதிக்கின்றன. அவர்கள் எல்லோரும் எனக்கும் ஷாலுவுக்கும் நல்வாழ்த்துக்களை அனுப்பி இருக்கிறார்கள். இப்போது நான் தமிழ்நாட்டின் மருமகன்'' என்றார் அஜீத்.


''இப்போது எதிர்காலம் பற்றித்தான் அதிகம் பேசிக் கொள்கிறோம். அஜீத்தின் திட்டங்களைச் சொன்னால் பல பெண்களுக்கு என் மேல் பொறாமை வரும்'' என்று பெரிய பீடிகை போட்டார் ஷாலினி.


''ஒரு நேரத்தில் ஒரு படம்... 15 நாள் சினிமாவுக்கு... 15 நாள் குடும்பத்துக்கு. இந்தத் தொடையில் ஒன்று, அந்தத் தொடையில் ஒன்று... வலது தோளில் ஒன்று, இடது தோளில் ஒன்று... தலையில் ஒன்று... கழுத்தைக் கட்டிக் கொண்டு முன்பக்கம் ஒன்று, பின்பக்கம் ஒன்று... இப்படி நிறையக் குழந்தைகள். என் ஓய்வு நேரங்கள் எல்லாம் என் ஸ்வீட் ஹார்ட்டுக்கும் ஜூனியர் அஜீத், ஷாலினிகளுக்கும்தான்.


 நல்ல தகப்பனாக... நல்ல ஆசிரியனாக... உண்மையான சேவகனாக, நிறைவான வாழ்க்கை வாழ ஆசைப்படுகிறேன். அவர்களுக்கு என்று வாழ்க்கையின் எல்லாக் கதவுகளையும் திறந்துவைக்கப் போகிறேன்!'' - நெகிழ்ச்சி ததும்புகிறது அஜீத் குரலில்.


ஏற்றுக்கொண்ட பொறுப்புகளை முடிக்கும் வேகத்தில் இருக்கிறார் ஷாலினி. எல்லாம் முடிந்து இரண்டு குடும்பங் களும் கலந்து பேசி திருமணத்துக்காக ஒரு நல்ல நாளை முடிவு செய்யப்போகிறார்கள். அதுவரையில் இருவர் கை களிலும் இருக்கும் செல்போன்கள் மாறி மாறி ஒலித்துக் கொண்டே இருக்கும்... அவர்களின் சந்தோஷ எதிரொலியாக!

நன்றி - விகடன்