இன்று உலக புகையிலை எதிர்ப்பு தினம். World No Tobacco Day pic.twitter.com/tnrEHI4I
இன்று புகையிலை எதிர்ப்பு நாள், அது சம்பந்தமான கட்டுரை ஒன்று போடுங்க என ட்விட்டர் நண்பர் டாக்டர் ராஜ்மோகன் சார் கேட்டுக்கொண்டதால் அது பற்றி ஒரு கட்டுரை தேடிக்கொண்டிருந்தேன்.. .. சிகரெட் அலர்ட்!
- எரிந்துகொண்டு இருக்கும் சிகரெட்டைக் கூர்ந்து பார்க்கும்போது எல்லாம் இந்தக் கவிதை நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடிவது இல்லை!
'சும்மா ஒரு கிக்... ஒரு த்ரில்’ என்றுதான் ஆரம்பிக்கும். ஒரு கட்டத்தில், 'மாப்ள தம் அடிக்காம இருக்க முடியலைடா...’ என அடிமையாகிற அளவுக்குப் பற்றிப் படர்ந்துவிடும். தெரிந்தே நுரையீரலுக்குத் தினமும் கொள்ளி வைக்கும் கொடிய புகைப் பழக்கத்தில் இருந்து எப்படி விடுபடுவது?
''புகையிலையில் கலந்துள்ள நிகோடினின் அபாயம் மட்டும்தான் வெளியே தெரியும். ஆனால் வெடி உப்பு, கார்பன் மோனாக்சைடு, அமோனியா ஆர்செனிக், மீத்தேன், பிரஸ்லிக் அமிலம், ஃபார்மிக் அமிலம், கிரிஸால், பைரால், ரூபிடின், மெதிலின் பர்பரோல், பைக்கோலின், பார்வோலின், ஒட்டிடைப், சல்புரேடட் ஹைட்ரஜன், சப்பரிடேட், லூனைன், விரிடைன், மைதிலைமின், பார்மால் டிரையுட், பார்பிக் ஆல்டிஹைட், மரிஜூவானா, அக்ரோலின், மார்ங்காஸ், கொரிடீன் போன்ற 4,000 விதமான அமிலங்கள் சிகரெட் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகின்றன.
விஷ வாயுக் கூண்டுக்குள் உங்களை நீங்களே தள்ளுவது எவ்வளவு பெரிய துயரம்'' என அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கிறார் டாக்டர் ஆல்வின் விஜய்.
'புண்பட்ட மனதைப் புகைவிட்டுத் தேற்றுகிறோம்’ எனச் சொல்பவரா நீங்கள்? ஒரு நிமிடம்... டாய்லெட்டுகளில் பயன்படுத்தும் அம்மோனியா ஆசிட் என்கிற ஃபினாயில், நெயில் பாலிஷ் ரிமூவர், இறந்த உடல்களைப் பதப்படுத்தும் ஃபார்மலின் போன்ற அமிலங்களின் கலவையும் சிகரெட்டில் இருக்கின்றன. இத்தகைய நச்சுக்களைக்கொண்டுதான் உங்களின் மனதைத் தேற்றப்போகிறீர்களா?
''சுவாசக் குழாயில் சளி ஏற்பட்டு 'லொக், லொக்’ என்று அடிக்கடி இருமல் படாத பாடுபடுத்தும். குடல் புண், வாய்ப் புண், தொண்டை எரிச்சல், நாக்கு சுவை உணர்வை இழத்தல், கண் பார்வை மங்குதல், தோல் சுருக்கம், கை கால் நடுக்கம், புற்றுநோய், நுரையீரலில் சளி கோத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாத 'சி.ஓ.பி.டி.’ என்கிற நாள்பட்ட நுரையீரல் சுவாசக் குழாய் சுருக்கம் வரை இது கொண்டுபோகும்.
ரத்தத்தில் பிராண வாயுவின் அளவைக் குறைப்பதால், ரத்தத்தில் பித்தம் அதிகரித்து இரும்புச் சத்து குறைந்துவிடும். இதனால், ரத்தத்தில் உள்ள தேவையற்ற கொழுப்பு ரத்த நாளங்களில் ஒட்டிக்கொண்டு ரத்த ஓட்டத்தைப் பாதிக்கும். இதன் விளைவாக அதிக ரத்த அழுத்தம் ஏற்பட்டு, இதய நோய் உருவாகி மாரடைப்பு உண்டாகும். காச நோய்க்கு எவ்வளவு சிறப்பாக சிகிச்சை அளித்தாலும் புகையிலைப் பழக்கம் உள்ள நோயாளிகளில் 70 சதவிகிதத்தினரின் இறப்பைத் தவிர்க்க முடிவது இல்லை.
மேலும், ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படவும் புகையிலை ஒரு காரணம். மூளைப் பாதிப்பு, கல்லீரல் பாதிப்பு என உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை புகையிலையால் ஏற்படும் பாதிப்புகள் பயங்கரமானவை'' என்கிறார் டாக்டர் ஆல்வின் விஜய்.
பணத்தையும் கரைத்து, உயிரையும் குடிக்கும் புகையிலையை எப்படிக் கைவிடுவது என்பதற்கு சில யோசனைகளை முன்வைக்கிறார் அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையத்தின் புகையிலைத் தடுப்புப் பிரிவின் துறைத் தலைவராக இருக்கும் டாக்டர் விதுபாலா.
''ஆல்கஹாலைவிட, கஞ்சாவைவிட நிகோடினுக்கு மனிதனை அடிமைப்படுத்தும் தன்மை அதிகம். இதனால் புகையிலையைக் கொஞ்சம் கொஞ்சமாக விட்டுவிடுகிறேன் என்பது நடக்காத காரியம். அதனால், ஒரு நிமிடத்திற்குள் ஆரம்பித்த புகைப் பழக்கத்தை ஒரே நொடியில் விட்டுவிட முடிவு செய்ய வேண்டும். முதலில் புகையிலைப் பழக்கத்தினை நிறுத்த ஒரு தேதியினை முடிவுசெய்யுங்கள்.
மனதை இறுக்கத்தில் இருந்து தளர்த்தும் யோகா, நடைப்பயிற்சி, தியானம், நடனம் போன்றவற்றைத் தினமும் தவறாமல் செய்யுங்கள். புகையிலையால் புண்பட்ட உங்களை, அந்தப் பழக்கத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியே கொண்டுவர இவை உங்களுக்குக் கை கொடுக்கும்.
புகையிலையால் உங்கள் பொருளாதாரத்துக்கும் உங்களைச் சுற்றி இருப்பவர்களுக்கும் எத்தகைய பாதிப்புகளை நீங்கள் உருவாக்குகிறீர்கள் என்பதைச் சிந்தித்துப்பாருங்கள்.
புகையிலையை நிறுத்த ஆரம்பித்த முதல் ஏழு நாட்கள் கோபம், எரிச்சல் தோன்றலாம். மாரடைப்பு, புற்றுநோயைவிட... கோபமும் எரிச்சலும் சமாளிக்க முடியாத பிரச்னை இல்லை. இந்த மாதிரியான நேரங்களில் ஒரு டம்ளர் தண்ணீர் அருந்துவது, உடற்பயிற்சி செய்வது புகைப் பழக்க எண்ணத்தைக் குறைக்க உதவும்.
எப்போது எல்லாம் புகையிலை, பான் போன்றவை உங்களின் நினைவுக்கு வருகிறதோ... அப்போது எல்லாம் உட்கார்ந்த நிலையில் உங்களின் மூச்சினை நன்றாக இழுத்துவிட முயற்சி செய்யுங்கள். ஏலக்காய் அல்லது கிராம்பினை வாயில் போட்டு மெல்லுங்கள். இந்த வாசனைக்கு சிகரெட் குடிக்கும் எண்ணத்தைக் கட்டுப்படுத்தும் தன்மை அதிகம்.
சிகரெட்டை விட்டவர்கள் கேரட், வெள்ளரிக்காய் அதிகம் சாப்பிடுங்கள். புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் இருந்தால்கூட, இதில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட் அதை தடுக்கும். சிகரெட்டைவிட சிகிச்சை முறையும் உள்ளது. படிப்படியாக இந்தப் பழக்கத்தில் இருந்து வெளியே கொண்டுவருவோம்'' என்கிறார் விதுபாலா.
மே 31-ம் தேதி புகையிலை எதிர்ப்பு நாள். சிகரெட் பழக்கத்தில் இருந்து நீங்கள் விடுபட அல்லது உங்களுக்கு நெருக்கமானவரை விடுவிக்க... இன்னும் ஒரு வாய்ப்பு!
நன்றி - டாக்டர் விகடன்
டிஸ்கி - புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த திருப்பூர் பதிவர் சொல்லரசன் ஜேம்ஸ் இன்று காலை மாரடைப்பால் இயற்கை எய்தினார்.
அவருக்கு அஞ்சலிகள் அவரது குடும்பத்துக்கு ஆழந்த இரங்கல்கள்.அவரது பிளாக் லிங்க் - http://sollarasan.blogspot.in/