ஞாயிற்றுக்கிழமையானால் நான் தவறாமல் பார்ப்பது - ஹிண்டு பத்திரிகையின் 'மேட்ரிமோனியல்’ விளம்பரங்களை. எனக்குக் கல்யாண உத்தேசம் எதுவும் இல்லை. அது 37 வருடங்களுக்கு முன்னேயே நிகழ்ந்து, சண்டை போட சப்ஜெக்ட் தீர்ந்துபோய் நானும் மனைவியும் ஒரு சமநிலைக்கு வந்துவிட்டோம்.
'ஹிண்டு’வின் இந்தத் திருமணப் பக்கங்கள் நம் சமூகத்தின் உண்மையான குறிகாட்டி. இந்த நாட்டில் குறிப்பாகத் தென் நாட்டில் அத்தனை சாதிகளும் பத்திரமாக இருக்கின்றன என்பதற்கு அத்தாட்சி.
உ-ம்: ஆர்சி வன்னியர், தெலுகு புராட்டெஸ்டன்ட், கிறிஸ்டியன் நாடார், ரோமன் கத்தோலிக், கள்ளர் - முக்குலத்தோர், தமிழ் முஸ்லிம், சன்னி உருது, பலிஜா நாயுடு, கேரளைட் விஸ்வகர்மா, பாலக்காடு ஈழவா, தெலுகு யாதவா, வன்னியகுல ஷத்ரியா, வடமா பரத்வாஜா, வடகலை நைத்ரியகாசியபம்!
'ஆயிரம் உண்டிங்கு சாதி - இது ஞாயிறுதோறும் தவறாத சேதி’ என்று பாரதி இப்போது பாடியிருப்பார்.
இதை நான் தனிப்பட்ட விமர்சனம் செய்வதைவிட, இதில் பொதிந்துள்ள சமூகவியல் செய்திகள்தாம் எனக்கு முக்கியமாகப்படுகின்றன.
1. சாதி இல்லை என்கிற கொள்கை வீட்டுக்கு வெளியே மற்றவர்களுக்கு.
2. தங்கள் குடும்பத்துக்கு வரும்போது மட்டும் சாதி பாராட்டுகிறார்கள். இதற்குப் பல யதார்த்தமான காரணங்கள் இருக்கலாம். உணவுப்பழக்கங்கள், மொழி, பெறப்போகும் பிள்ளைகள் குழப்பம் இல்லாமல் வளர்வது.
3. பிராமணர்கள் மட்டுமின்றி அனைத்து வர்க்கத்தினரும் சாதி பாராட்டுகிறார்கள் - கல்யாணம் என்று வரும்போது.
4. 'கிரீன்கார்டு ஹோல்டர்’ என்கிற புதிய சாதி உருவாகிக்கொண்டிருக்கிறது.
வேலைவாய்ப்பு, மெடிக்கல் அட்மிஷன் - இவற்றுக்கும் சாதி தேவைப்படுவது வேறு விஷயம்.
இவற்றை மீறித்தான் கலப்புத் திருமணங்கள் நிகழ்கின்றன. அதுவும் வேறு விஷயம். அதன் பின்னும் சாதிகள் பத்திரமாக இருப்பதுதான் செய்தி.
உதாரணம்: Mother brahmin, father vanniyar, 26-poorattathy, multinational company, five figure salary, seeks graduate girl brahmin or pure vegetarian..
இந்த விளம்பரத்தில் ஒரு நாவலுக்குரிய சமாசாரமே இருக்கிறது.
29.3.99
'உத்தரகாசியில் இமாலய மலையின் மடியில் நிலநடுக்கம் ஏற்பட்டு பலர் இறந்துபோனார்கள்’ என்ற செய்தி என்னை எப்படிப் பாதித்தது எனில், நான் அந்த ஜோஷிமட் - தேவப்ரயாக் போன்ற இடங்களுக்குப் போயிருந்தபோது, நல்லவேளை பூகம்பம் வராமல் தப்பித்தோம் என்பதுதான் முதல் எண்ணமாக இருந்தது. மரணம் நம்மைப் பாதிக்க, அருகாமை வேண்டும். 'சார், நம்ம ராமசாமி தெரியும் இல்லை... தெனம் அரக்கீர, மொளக்கீர...னு கூவிக்கினே போவானே... லாரி அடிச்சு உயுந்து பூட்டான் சார்’ என்று என் வீட்டு வாட்ச்மேன் சொல்லும்போது உத்தரகாசியில் இறந்த நூறு பேரைவிட அதிகமாக அனுதாபம் ஏற்படுகிறது. மனதில் - அந்த ராமசாமியைக் கொண்டுவந்து, எப்போது கடைசியாகப் பார்த்தோம் என்று யோசித்து, போனால் போகிறது என்று அவனுக்குச் சில நல்ல குணங்கள் சேர்த்து ஓர் இரங்கல் தெரிவிக்கிறோம். 'சண்டையே போட மாட்டான்... குடுக்கற காசை வாங்கிட்டு போயிருவான்யா.’
ஒவ்வொரு முறை மரணத்தைச் சந்திக்கும்போதும் அந்த ஆசாமி போய்விட்டான். நாம இன்னும் உயிருடன் இருக்கிறோம் என்கிற ஆறுதல்தான் அடித்தளத்தில் இயங்குகிறது.
பொய்கையாரின்,
பெயரும் கருங்கடலே நோக்கும் ஆறு, ஒண்பூ
உயரும் கதிரவனே நோக்கும் - உயிரும்
தருமனையே நோக்கும் - ஒண் தாமரையாள் கேள்வன்
ஒருவனையே நோக்கும் உணர்வு
என்ற வெண்பாவில் போல நதி கடலையே நோக்கிச் செல்லும். மலர் சூரியனையே நோக்கும். அதுபோல் உயிர், மரணத்தையே நோக்கும். உணர்வு அல்லது ஞானம் பகவானை இயல்பாக அறியும் என்று உயிரையும் உணர்வையும் பிரித்துவிட்டால், மரண பயம் போச்சு!
30.3.99
மூன்று சுவாரஸ்யமான கிரிக்கெட் மேட்ச்கள்.
தென் ஆப்பிரிக்காவும் நியூஸிலாந்தும் ஆடிய ஆட்டத்தில் கேர்ஸ்டன் கடைசிப் பந்தில் நாலு ரன் எடுக்க வேண்டியிருந்தது. சிக்ஸர் அடித்து முடித்தார்.
லாரா தனியாக ஆஸ்திரேலியாவை எதிர்த்து, டெஸ்ட் மேட்ச்சில் சதம் அடித்து வென்றார்.
ஜடேஜா கேப்டனாக இருந்து சதம் அடித்து இலங்கையை வென்றது நிறைவாக இருந்தது.
ஆனால், உலகக் கோப்பை இந்தியாவுக்குக் கிடைக்குமா என்பது சந்தேகம்தான். இன்றைய தேதிக்கு மிகச் சிறப்பாக ஆடும் இரண்டு அணிகள் பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்காதான்.
பாகிஸ்தானின் ஷோயப் அக்தர்தான் உலகத்திலேயே அதிவேகப் பந்து வீச்சாளர் என்கிறார்கள். வாஸிம் அக்ரம் நல்ல 'வடிவத்தில்’ இருக்கிறார். உலகக் கோப்பையில் நாம் இருக்கும் பகுதியில் எல்லாப் பெரிய டீம்களும் இருக்கின்றன.
பொறுத்திருப்போம். ஓர் இந்தியன், தமிழ்நாடன் என்ற முறையில் சடகோபன் ரமேஷ், ராபின்சிங், டிராவிட் நன்றாக ஆட வேண்டும். டெண்டுல்கர் 18 ரன்னைத் தாண்ட வேண்டும். (அதன் பின் 90-ல்தான் கவனம் இழப்பார்.)
சிக்ஸர் அடிக்கக்கூடிய ஷார்ட் பிட்ச் பந்துகளை கும்ப்ளே திடீர் திடீரென்று போடக் கூடாது. கல்கத்தா ஈடன் கார்டன் போன்ற புல்வெளி பிட்ச்சில் இவர்கள் கோகோ கோலா, பெப்சி விளம்பரத்துக்குப் போகாமல் நன்றாகப் பழக வேண்டும் என்று நான்கூட, அரங்கனை வேண்டிக்கொண்டிருக்கிறேன்.
ஒரு கிரிக்கெட் பிரேமி என்ற ரீதியில் தென் ஆப்பிரிக்காதான் சிறந்த அணி என மதிப்பிடுகிறேன். அடுத்து பாகிஸ்தான். இங்கிலாந்துக்கு 'நம்மாத்து’ சான்ஸ் இருக்கிறது. ஆனால், உலகக் கோப்பையை தென் ஆப்பிரிக்கா பெறுமா என்பது நிச்சயம் இல்லை. ஒரு நாள் கிரிக்கெட். அந்த நாள் யார் நன்றாக ஆடுகிறார்களோ, அவர்கள் அற்பமான பங்களாதேஷ் அணியாக இருந்தாலும், வெல்லலாம். இந்தியா 83-ல் அப்படித்தானே வந்தது. ஆகவே, ஜிம்பாப்வே கோப்பையை எம்பிப் பிடித்தாலும் ஆச்சரியம் இல்லை. உலகக் கோப்பையை இந்தியா வென்றால், திருப்பதிக்கு யாரையாவது அழைத்துப் போய் மொட்டை அடித்துவைப்பதாக வேண்டிக்கொண்டிருக்கிறேன்.
31.3.99
ஒரு தந்தை, ரூபாய் 5,000-க்கு தன் மூன்று வயதுப் பெண் குழந்தையை விற்றார். வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த இந்தத் தந்தை, போதைப்பொருள் பழக்கத்துக்கு உள்ளானவர். அதனால் தன் பெண் குழந்தையை ஒரு பெண் மூலம் அமிஞ்சிக்கரை ஏஜென்சிக்கு விற்றுவிட்டாராம்.
குழந்தையின் தாய், 3,500 ரூபாய் திருப்பிக் கொடுத்து பாக்கியைக் கூடியவிரைவில் தருகிறேன் என்று சொல்லி, குழந்தையை மீட்டார். 1,500 ரூபாய், போதைப்பொருள் வாங்கச் செலவாகிவிட்டதாம். போலீஸார் தந்தையைக் கைதுசெய்தபோது அவரிடம் மனைவியின் தங்க நகை சில இருந்தனவாம். இந்தச் செய்தியின் பரிதாபம் நம்மை உலுக்குகிறது.
எனக்குக் கீழ்க்காணும் சந்தேகங்கள்: எதற்காகப் பணத்தைத் திருப்பித் தர வேண்டும்? அந்த அமிஞ்சிக்கரை ஏஜென்ட்டை என்ன செய்தார்கள்?
'இங்கு வீட்டுமனை, தேக்குமரம், பழைய ஜன்னல்கள், பழைய பேப்பர், பால் பாக்கெட், போதைமருந்துக்கு அடிமையானவர்களின் குழந்தைகள் விற்கவும் வாங்கவும் படும். பெண் குழந்தைகள் கொண்டுவருபவர்களுக்கு ஒரு குபேர யந்திரம் இலவசம்’ என்று போர்டை மாட்டச் சொன்னார்களா? தெரிய வேண்டும். அடுத்து, அந்த அமிஞ்சிக்கரை ஏஜென்ட் என்ன வியாபாரம் செய்வதாக உத்தேசித்திருக்கிறாரோ?
1.4.99
16 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ரத்தினக் கற்களை விழுங்கிக் கடத்தல்! கொழும்பில் இருந்து வந்த தமிழகத்தைச் சேர்ந்த அகமது மொய்தீன் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டார். கடத்தப்பட்ட ரத்தினக்கற்களின் எடை 475 கிராம். 27 ஆணுறைகளில் பொட்டலம் கட்டி அவற்றை அவர் விழுங்கியுள்ளார். விமான நிலையத்தில் இறங்கிய காயல்பட்டினத்தைச் சேர்ந்த மொய்தீன் மீது சந்தேகம் ஏற்பட்டது. எக்ஸ்ரே பரிசோதனையில் ரத்தினக் கற்கள் வயிற்றில் உள்ளது தெரிய வந்தது.
மொய்தீன் தன் பெயரை நூர் முகமது ஜமால் என்று பாஸ்போர்ட்டில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விநோதமான சம்பவத்தில் எனக்குச் சில ஆதாரச் சந்தேகங்கள்.
1. எக்ஸ்ரே பரிசோதனைக்குப் பின் எப்படி அந்தக் கற்கள் நீக்கப்பட்டன?
2. ஆணுறைகள் வாங்கும்போது கடைக்காரர், அவரிடம் என்ன வினவியிருப்பார்?
''இருபத்தேழுங்களா?''
''ஆமாங்க...''
''ஒருத்தருக்கா...?''
''ஆமாங்க!''
''கை குடுங்க... என்னால ரெண்டு சமாளிக்க முடியலை.''
3. பெயரை மாற்றிக்கொண்டவர் - மாற்றுப்பெயரையும் முஸ்லிம் பெயராகவே ஏன் வைத்துக்கொண்டார்? சடகோப ராமானுஜாச்சாரி என்று வைத்திருந்தால் ஒருவேளை சந்தேகம் வந்திருக்காதோ!
மொய்தீன் அல்லது நூர் முகமது ஜமால்பாய் இந்தியாவுக்கு வைரம் கடத்தச் சில சுலபமான வழிகள் இருக்கின்றனவே... கடைப்பிடிக்கவில்லையா? ஒரு சிறிய பெட்டியில் எடுத்து வந்திருக்கலாமே? எதற்கு விழுங்க வேண்டும்?
உதாரணம்:
அதிகாரி: பெட்டில என்னங்க?
மொய்தீன்: வைரக்கற்கள்ங்க...
அதிகாரி: என்ன மதிப்பு?
மொய்தீன்: 16 லட்சங்க.
அதிகாரி: இதெல்லாம் அனுமதி இல்லைங்க... ஸ்மக்ளிங்!
மொ: கொஞ்சம் பாத்துக்கங்க... காயல்பட்டினத்துல பெரிய குடும்பங்க.
அதி: 15 பர்சென்ட் வெட்டிட்டு எடுத்துக்கிட்டுப் போ...
மொய்: ஐயா, என் லாபமே 15 பர்சென்ட்-தானுங்களே... ஒரு லட்சம் கொடுத்துடறேங்க... வெலைவாசி என்ன?
அதி: ஏன்யா உனக்கு வெலைவாசின்னா... எனக்கு வெலைவாசி இல்லையா?
இந்த முறையை மொய்தீன் நிச்சயம் முயன்றிருப்பார். லட்சம் பெறாமல் தவிர்த்த சுங்க அதிகாரிக்கு ஒரு சபாஷ்!
2.4.99
டிஷ்நெட் நிறுவனத்தின் அந்த இன்டர்நெட் விளம்பரம் இன்று வெளிவந்துள்ளது.
அதில் 'மின்னம்பலம்’ என்னும் தமிழ் இணையச் செய்தித்தாள், வாரப் பத்திரிகை, இலக்கியக் கருவூலம், மின் வணிகம், மின்மருந்தகம் அவற்றையெல்லாம் தொடங்குவதில் அடியேனின் பங்கு இருக்கிறது.
பத்திரிகைத் துறையின் அடுத்த கட்டம் இது. இதை ஒரு 'மின்’னோடி என்று சொல்லலாம்.
சம்பிரதாயப் பத்திரிகைக்கும் இன்டர்நெட் பத்திரிகைக்கும் முக்கியமான வித்தியாசம் - செய்தியைக் கணிப்பொறி மூலம் உள்ளிடும்போதே அது பிரசுரிக்கப்படுகிறது. பத்திரிகையில் அச்சுப்பிழை இருந்தால் திரும்ப வாங்கித் திருத்த முடியாது. இதில் திருத்தலாம்.
பாட்டுக் கேட்கலாம்... படத்தை இயங்க வைக்கலாம். கவிதைகள் படித்துக் காட்டலாம். கார்ட்டூன் போன்றவற்றுக்கு உயிர் கொடுக்கலாம். உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்கள் பத்திரிகை 'மின்’னேறிய அடுத்த நிமிஷமே பார்க்கலாம். அதாவது இன்டர்நெட் வசதியுள்ளவர்கள் பார்க்கலாம்.
இதற்கான புதிய சொற்பிரயோகங்களை அமைத்திருக்கிறோம். மின் ஏடு, மின் இதழ், மின் வணிகம், மின் சிரிப்பு...
இவை எல்லாவற்றையும்விட எனக்குப் பிடித்தது பேராசிரியர் தெய்வசுந்தரம் தேர்ந்தெடுத்தது - வேலை வாய்ப்புச் செய்திகளுக்கு மின் பணிக் காலம்!
3.4.99
பூமியில் நிகழ்வது எல்லாம் பெருமைப்படும்படியாக இல்லாததால், விண்வெளிக்குச் செல்லலாம்.
இன்சாட் 2E இந்திய செயற்கைக் கோள் ஆப்பிரிக்காவில் 'குரு’வில் இருந்து விண்ணில் ஏவப்படுகிறது. ஹாசன் கட்டுப்பாட்டு நிலையத்தின் தலைவர் டாக்டர் ரங்கராஜன் என்னைப் போல ஸ்ரீரங்கத்திலும் திருச்சி ஜோசப் கல்லூரியிலும் படித்தவர்.
அவருக்கும் அயராமல் உழைக்கும் எம்.சி.எஃப். கேந்திர வல்லுநர்களுக்கும் All the best!
நன்றி - விகடன் - 11.4. 1999