Showing posts with label அதிதி -‘காக்டெயில்’ பரதன் பேட்டி. Show all posts
Showing posts with label அதிதி -‘காக்டெயில்’ பரதன் பேட்டி. Show all posts

Thursday, June 26, 2014

அதிதி - மலையாளத்தில் வெளிவந்த ‘காக்டெயில்’ ரீமேக்கர் பரதன் பேட்டி @ த இந்து

‘சினிமாவில் கதையை விட திரைக்கதைதான் முக்கியம்’ - இயக்குனர் பரதன் பேட்டி

மலையாளத்தில் வெளிவந்த ‘காக்டெயில்’ திரைப்படத்தை ‘அதிதி’ என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்து இயக்கியுள்ளார், பரதன். ‘தில்’, ‘தூள்’, ‘கில்லி’, ‘மதுர’, ‘ஒஸ்தி’. ‘வீரம்’ ஆகிய படங்களுக்கு வசனம் எழுதிய பரதன், விஜய் நடித்த ‘அழகிய தமிழ் மகன்’ படம் வழியே இயக்குநராக கோலிவுட்டில் கால் பதித்தவர். தன் யூனிட்டுடன் ‘அதிதி’ படத்தின் ரிலீஸ் வேலைகளில் இருந்த பரதனை சந்தித்தோம். 



உங்கள் படத்தின் தலைப்பு வித்தியாசமாக இருக்கிறதே?


 
எதிர்பாராத விருந்தாளி. அதுதான் ‘அதிதி’க்கு பொருள். கதையில் எதிர்பாராத திருப்பங்களை ஒரு விருந்தாளி உண்டாக்குகிறார். அவரால் ஏற்படும் திடீர் திருப்பம். அடுத்தடுத்து பரபரப்பு, மனதை விட்டு நீங்காத கிளைமேக்ஸ். இதுதான் இந்த திரைக்கதையின் போக்கு. 


சமீப காலமாக மலையாளத்தில் இருந்து ரீமேக் செய்யப்பட்ட படங்கள் இங்கே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லையே? 



ஒரு படத்தை ரீமேக் செய்யும்போது அதை அப்படியே ரீமேக் செய்யக்கூடாது. அந்தப்படம் இண்டஸ்ட்ரியில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்த இயக்குநரின் முந்தைய படம் என்ன, அந்த ஹீரோவின் முந்தைய படம் என்ன, படம் ஓடிய காரணம், காலகட்டம் என்று எல்லாவற்றையும் ஆராய வேண்டும். ‘காக்டெயில்’மலையாளப் படத்தின் திரைக்கதை வேகம் மலையாளத்தில் 60 கிலோமீட்டர் என்றால், நாங்கள் அதன் திரைக்கதையை 80 கிலோமீட்டர் வேகத்துக்கு மாற்றி அமைத்துள்ளோம். சினிமாவில் கதையை விட திரைக்கதைதான் முக்கியம். அந்த யுக்தியை சரியாக தொட்டோம் என்றால் எந்த காலகட்டத்திலும் பேர் வாங்கலாம். 



இயக்குநராக அவதாரம் எடுத்த பின் மீண்டும் ‘வீரம்’ படத்திற்கு வசனம் எழுதப் போனது ஏன்?


 
இயக்கம்தான் என் வேலை. அதற்காகத்தான் நான் சினிமாவுக்கு வந்தேன். ‘தில்’ படத்தில் தரணி சாரோடு பயணித்தபோது கதை விவாதத்தில் வசனம் பற்றி இடையிடையே பேசுவேன். உதாரணத்துக்கு அந்தப்படத்தில் ‘அறிவுடைநம்பி’ என்ற கேரக்டரை பார்க்க வீட்டுக்குப்போகும் போது ‘அறிவு’ இல்லையா என்றால் அங்கே அவரோட பேரும் அடங்கும். அவருக்கு அறிவு இல்லையா என்கிற பொருளும் வரும். இப்படி டிஸ்கஷனில் பேசும் வசனத்தை தாண்டி வேறெதுவும் பெரிதாக படத்தில் அமையாது. 



அது தொடர்ந்து வரவேற்பை பெற தரணி சார் படங்களின் வசன பொறுப்பை கவனித்தேன். ‘அழகிய தமிழ் மகன்’ படத்தினை அடுத்து மூன்று, நான்கு கதைகளை தேர்வு செய்து இயக்கத்தயாராகிக் கொண்டிருந்தேன் அந்த நேரத்தில் ‘வீரம்’ பட வாய்ப்பு வந்தது. அஜித் நடிக்கிறார் என்பதால் அந்த படத்தை ஒப்புக்கொண்டேன். திரைக்கதை, வசனத்தில் ரொம்பவே நல்ல ரிசல்ட் கொடுத்த படம் அது. 



‘அழகிய தமிழ் மகன்’ படத்திற்கு பிறகு ஏன் இந்த இடைவெளி?


 
சினிமாவில் வேலை இல்லாத நாட்கள் எல்லாம் சும்மா இருக்கிறோம் என்று பொருள் இல்லை. அடுத்த படத்திற்கான சிந்தனையிலேயே இருந்தேன். ‘காக்டெயில்’ படத்தை பார்த்த நாளில் எனக்கு இரவு முழுக்க தூக்கமே வரவில்லை. கையில் இருந்த கதைகளை இயக்குவதற்கு முன் இப்படத்தை ரீமேக் செய்யலாம் என்று நினைத்தேன். ஆனால் இப்படத்தை ஏற்கெனவே ஒரு தயாரிப்பாளர் வாங்கியிருந்தார். அவரைச் சந்தித்துப் பேசினேன். என் இயக்கத்தில் அந்த நிறுவனமே இந்தப்படத்தை தயாரிக்க முன்வந்தது. இதில் முக்கிய வேடத்தில் தயாரிப்பாளரின் மகன் நிகேஷ் ராமை நடிக்க வைத்துள்ளேன். இப்படித்தான் சினிமாவில் சில சமயம் எதிர்பாராத விஷயங்களும் அரங்கேறும். 



அடுத்து?

 
 
நான் எப்போதுமே அடுத்தடுத்த ஓட்டத்துக்கு கொஞ்சம் அவகாசம் எடுத்துக்கொள்வேன். அடுத்த வேலைக்காக பெரிய நிறுவனங்களோடு பேசிக்கொண்டிருக்கிறேன். ஜூலையில் தொடங்கத் திட்டமிட்டுள்ளேன். ‘காக்டெயில்’ படத்திற்கு இணையாக என்னோட சொந்தக் கற்பனை கதைகள் ரெடியாக உள்ளன. சமீபத்தில் ‘திரிஷ்யம்’ பார்த்தேன். அது என்னை ரொம்பவே பாதித்தது. ரீமேக் கொடுத்தாலும் அப்படி ஒரு சிறந்த படத்தைத்தான் கொடுப்பேன். 


நன்றி - த  இந்து