*
அன்புக்குரிய கேரள முதல்வர் அச்சுதானந்தன் அவர்களுக்கு,
கேரளம் சுவீகரித்துக்கொண்டிருக்கும் தமிழ் சாகித்யக்காரனான சாரு நிவேதிதா எழுதுகிறேன். மிகவும் reclusive-ஆன இயல்பு கொண்ட நான் மே இரண்டாவது வாரம் வெளிச்சிக்காலா, செங்கரா, பிளாச்சிமடா, ஆதிரப்பிள்ளி போன்ற இடங்களுக்குச் சென்று, அங்கே தங்கள் வாழ்வுரிமைக்காகப் போராடிக் கொண்டிருக்கும் மக்களை நேரில் சந்தித்துவிட்டு வந்தேன்.
நான் எழுதிக்கொண்டிருக்கும் பட்டறையை விட்டு வெளியே வருவது எனக்கு அத்தனையன்றும் உவப்பானதல்ல. ஆனால், மக்களால் உங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள முதல் மந்திரி வேலையை ஒழுங்காகச் செய்யாமல் நீங்கள் பணக்காரத் தொழிலதிபர்களுக்கு சாமரம் வீசிக்கொண்டிருப்பதாகத் தெரிவதால், ஒரு சாகித்யக்காரனாகிய நான் என்னுடைய பட்டறையை விட்டு வெளியே வந்து நீங்கள் செய்ய வேண்டிய வேலையைச் செய்ய வேண்டியதாகியது.
அதாவது, பல மாதங்களாக சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மக்களை நேரில் சந்தித்தேன். அவர்களின் பிரச்சினையைக் கேட்டறிந்தேன். அவர்களோடு உரையாடினேன். இப்போது அவர்களிடமிருந்து கொண்டுவந்த செய்தியை உங்களுக்கு இந்தப் பத்திரிகையின் வாயிலாகத் தெரிவிக்க வேண்டிய பொறுப்பில் இருக்கிறேன்.
சாலக்குடி நதி கேரளத்தின் ஐந்தாவது பெரிய நதி; மேற்குத் தொடர்ச்சி மலையின் மிக அடர்த்தியான வனங்களினூடே ஓடும் இந்நதியைச் சுற்றியுள்ள பகுதிகளை எண்ணிறந்த வன மிருகங்கள் தங்கள் உறைவிடமாகக் கொண்டுள்ளன; நூற்றுக்கும் மேற்பட்ட மீன் வகைகள் வசிக்கும் இந்திய நதிகளில் சாலக்குடி நதியும் ஒன்று (அப்படிப்பட்ட நதிகள் இமய மலையின் பள்ளத்தாக்குகளிலேயே உண்டு; அதற்கு அடுத்தபடியாகக் கேரளம்தான்).
இந்த விபரங்கள் உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும். அதே போல், ஏலம், காப்பி, தேயிலைத் தோட்டங்களுக்காகச் சோலையார், கரப்பாரா போன்ற நதிப்படுகைகளின் வனங்கள் 19ஆம் நூற்றாண்டிலிருந்தே அழிக்கப்பட்டுவிட்டன. பரம்பிக்குளம் சமவெளியின் பசுமைக்காடுகள் 20ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் தேக்கு மர உற்பத்திக்காக அழிக்கப்பட்டன. ஆங்கிலேயர்கள் தொடங்கி வைத்த அந்தக் காரியத்தை இன்றும் நாம் தொடர்ந்து கொண்டிருக்கிறோம்.
சாலக்குடி நதியிலும், பரம்பிக்குளம், சோலையார், துணக்கடவு, பெருவாரிப்பள்ளம் என்ற அதன் உபநதிகளிலும் நதிநீர் மின்சாரத்துக்காக ஏற்கனவே கட்டப்பட்ட ஆறு அணைகளால் அந்த உபநதிகள் அனைத்தும் வற்றிப் போய்விட்டன. சாலக்குடியின் புழையோரக் காடுகளில் வசிக்கும் காடர் என்ற பூர்வகுடியினம் இன்று எண்ணிக்கையில் வெறும் 1500ஆகச் சுருங்கிவிட்டது. உலகிலேயே காடர் இனத்தினர் வசிப்பது இந்தக் காடுகளில்தான். இந்திய அரசு புலிகளின் எண்ணிக்கை குறைந்து வருவது பற்றிக் கவலைப்படுகிறது.
ஆனால் ஒரு பூர்வகுடி இனம் இந்தப் பூமியில் தாங்கள் வாழ்ந்த சுவடே இல்லாமல் அழிந்து போவது பற்றி உங்களுக்கு ஏதும் அக்கறையில்லை. 144 கி.மீ. நீளமே உள்ள இந்தச் சிறிய நதியில் தொடர்ந்து அணைகளைக் கட்டிக் கொண்டிருந்த காரணத்தினாலேயே வனங்களிலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட காடர்கள் இன்று முற்றாக அழிந்து போகும் (extinct) நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டனர். அப்படியானால் இதுவும் ஒருவகையான இனப்படுகொலை தானே?
சாலக்குடி நதியை ஒட்டியிருக்கும் 25 பஞ்சாயத்துகளிலும், 2 நகரசபைகளிலும் வாழும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தங்களது குடிநீர், விவசாயம் போன்றவற்றுக்காக இந்த நதியையே நம்பியிருக்கின்றனர். இவர்களைத் தவிர, இந்நதியை நம்பி வாழும் தமிழ் நாட்டு விவசாயிகளும் அநேகம் பேர் உண்டு.
இந்த நிலையில்தான் உங்கள் அரசு மின்சார உற்பத்திக்காக சாலக்குடி நதியில் ஏழாவது அணையைக் கட்ட முன்வந்துள்ளது. இதனால் என்ன ஆகும் என்றால், சாலக்குடியின் புழையோரக் காடுகளும், அக்காடுகளில் வசிக்கும் காடர், முதுவன் போன்ற பூர்வ குடிகளும், நான்கு வகையான மலமொழக்கி (தமிழில் இது இருவாட்சி என்று அழைக்கப்படுகிறது) பறவையினங்களும், புலி, யானை போன்ற விலங்குகளும், 104 வகை மீன் இனங்களும் அழிந்து போகும். காரணம், சாலக்குடி நதியும் தனது உபநதிகளைப் போலவே அழிந்து போகும். சாலக்குடி மட்டும் அல்ல; கேரளத்து நதிகள் அனைத்துமே அரபிக் கடலில் கலப்பதை நிறுத்திவிட்டன.
கேரள அரசும், அதிகார வர்க்கமும் அந்நதிகளைக் கடலில் கலக்க விடாமல் இடையிலேயே கொன்றுவிடுகின்றன. ஒரே ஒரு மானைக் கொன்றதற்கே ஒரு நடிகருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது என்றால், இப்படி நதிகளையும், நதியோர வனங்களையும், அதில் வாழும் சகல ஜீவராசிகளையும் அழித்துப் போடும் உங்களுக்கு என்ன தண்டனை?
சாலக்குடியில் வாழச்சால் மற்றும் ஆதிரப்பிள்ளி நீர்வீழ்ச்சிகளின் அருகே அமர்ந்து, கடந்த பிப்ரவரி 25ஆம் தேதியிலிருந்து சத்தியாகிரகம் செய்து வருகிறார்கள் சாலக்குடி புழா ஸம்ரக்ஷண ஸமிதியினர். அவர்களை ஆதிரப்பிள்ளியில் சந்தித்து உரையாடி விட்டு, வனப்பாதையின் வழியே கீழே இறங்கி வந்து சாலக்குடியில் சாம்பவா இன மக்களின் மாநில மாநாட்டில் கலந்து கொண்டேன். அவர்களுடையது மற்றொரு சோகக் கதை. மூங்கில், நாணல் இரண்டையும் கொண்டு பாய், முறம், கூடை போன்றவற்றைமுடைந்து, அதன் மூலம் கிடைக்கும் குறைந்தபட்ச வருமானத்தைக் கொண்டு வாழ்ந்துகொண்டிருந்த அவர்களின் நிலைமை இன்று கற்பனை செய்ய இயலாதபடி அவலமாகிக் கிடக்கிறது.
வனத்தை அடிப்படையாகக் கொண்ட மற்றொரு பெரும் தொழில் தேக்கு. அதில் ஈடுபடுபவர்கள் தனவந்தர்கள். ஆனால் அதைத் தவிர்த்து மூங்கில், நாணல் போன்றவற்றை எடுத்து, அதிலிருந்து அன்றாட வாழ்வுக்குத் தேவையான பொருட்களைத் தயாரிக்கும் சிறு தொழிலில் ஈடுபடுபவர்களான சாம்பவா இன தலித் மக்களின் வாழ்வு இன்று கேள்விக்குறி ஆகியிருக்கிறது. காரணங்கள் பல. ஒன்று, நவீன வாழ்வில் செயற்கைப் பொருட்களின் மீதான ஆர்வம்.
உதாரணமாக, மூங்கில், நாணல் போன்றவற்றின் இடத்தை இன்று பிளாஸ்டிக் பிடித்துக் கொண்டுள்ளது. இது குறித்து சிறிய அளவில் விளம்பரம் செய்தாலே போதும், சாம்பவர்களின் வாழ்க்கை நிலை மேம்பாடு அடையும்; தமிழ்நாடு முழுவதற்குமான கூடைத் தேவையைப் பூர்த்தி செய்யவே ஒரு கேரளம் போதாது. இந்தத் துறையில் உள்ள மற்றொரு பிரச்சினை, தமிழ்நாட்டிலிருந்து கொண்டு வரப்படும் கூலிகள். பிழைப்புக்கு எந்தவித ஆதாரமும் இல்லாத இவர்களிடம் இந்தத் துறையில் இருக்கும் இடைத் தரகர்கள் முன் பணமாகக் கடன் கொடுத்து, அந்தக் கடனை அடைக்க இவர்களை மிகக் குறைந்த கூலிக்கு இந்த மூங்கில், நாணல் தொழிலில் அமர்த்துகிறார்கள். இந்தத் தமிழர்கள் மீது குற்றமில்லை. இடைத் தரகர்களே ஒழிக்கப்பட வேண்டும்.
அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டிய மிக முக்கியமான துறை இது. ஏனென்றால், 1930களில் பிரிட்டிஷ் அரசாங்கம் தனது ராணுவத்துக்கு இந்த சாம்பவர்கள் தயாரித்துக் கொடுத்த பாய்களைத்தான் கூடாரங்களாகப் பயன்படுத்திக் கொண்டது. இப்போதும் நீங்கள் இந்திய ராணுவத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி பிளாஸ்டிக், தார்ப்பாலின் போன்றவற்றுக்குப் பதிலாக பிரிட்டிஷ் ராணுவம் பயன்படுத்தியதைப் போல் இந்த மூங்கில், நாணல் பாய்களைப் பயன்படுத்தச் செய்தால் சாம்பவர் என்ற இந்த தலித் இனம் மட்டுமல்ல, கேரளத்துக்கே அது மிகப் பெரும் பயனையளிப்பதாக இருக்கும்.
சாம்பவர் மாநாட்டில் கலந்து கொண்ட பிறகு இரவு முழுவதும் மாறி மாறி பஸ் பிடித்து (மேலே சாலக்குடியிலிருந்து கீழே இருக்கும் பத்தனம்திட்டா மாவட்டத்துக்கு வர வேண்டும்; அதிலும் கோடைக்காலம் பாருங்கள், கூட்டம் அதிகம் . . .) செங்கரா வந்து சேர்ந்தேன். குளிப்பதற்கு மட்டும் ஒரு மணி நேர இடைவெளி கிடைத்தது. செங்கரா வந்தால் அங்கேயும் பழைய கதைதான். கடந்த பத்து மாதங்களாக செங்கராவின் ஆதிவாசிகளும், தலித் மக்களும் தாங்கள் நூற்றாண்டுகளாக வாழ்ந்து வந்த நிலத்திலிருந்து விரட்டியடிக்கப்படுவதை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். 'இந்த நிலமும், மலைகளும் எங்களுடையவை' என்கிறது ஹாரிஸன் கம்பெனி. குத்தகைப் பத்திரமும் அவர்களிடம் இருக்கிறது.
முதலமைச்சர் அவர்களே! உங்களை நினைத்தால் எனக்கு இந்த இந்தியாவை கிழக்கிந்தியக் கம்பெனிக்காரர்களிடம் குத்தகைக்கு விட்ட குறுநில மன்னர்களின் நினைவுதான் வருகிறது. பத்து மாதங்களாக ஆயிரக்கணக்கான ஆதிவாசிகள் இந்த மலைப் பிரதேசத்தில் அமர்ந்து போராடிக்கொண்டிருக்கும்போது இவர்களின் கோரிக்கையைச் செவி மடுக்காமல் உங்களுக்கு வேறு என்ன வேலை? யாரோ ஒரு பணக்காரர் மும்பையில் 4000 கோடி ரூபாய்க்கு ஒரு வீடு கட்டிக்கொண்டிருக்கிறார் என்று கேள்விப்பட்டேன். அவரைப் போன்ற பணக்காரர்களின் வீடுகளைச் சுத்தம் செய்யும் பணியாளாகப் போய் விட்டீர்களா நீங்கள்?
4000 கோடி ரூபாய் வீட்டைச் சுத்தம் செய்ய ஒரு முதலமைச்சர் போன்ற கனவான்தான் தேவை என்று நினைத்து அந்தப் பணக்காரர்கள் உங்கள் கையில் ஒரு தங்கத்தால் ஆன விளக்குமாற்றைக் கொடுத்திருக்கலாம். 4000 கோடி வீடு என்பதால் அதற்கான பணியாள் கூலியும் உங்களுக்கு அதிகமாகவே கிடைக்கலாம்; ஆனால், 'அந்த' வேலைக்காக மக்கள் உங்களை முதல் மந்திரியாகத் தேர்ந்தெடுக்கவில்லையே?
அது சரி, ஜனங்களுக்கு வேண்டி ராஷ்ட்ரமா? அல்லது, ராஷ்ட்ரத்தினு வேண்டி ஜனங்களா? எப்போதோ ஒரு பணக்காரர் இந்த நிலத்தை ஹாரிஸன் நிறுவனத்திடம் குத்தகையாகக் கொடுத்திருக்கிறார். அந்தப் பணக்காரருக்கும் இந்தச் செங்கரா நிலத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. ஏனென்றால், இங்கே நூற்றாண்டுகளாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் இந்த ஆதிவாசிகள்தான். அதுவும் தவிர, ஹாரிஸன் கம்பெனியின் குத்தகை உரிமையும் 1996இலேயே முடிவடைந்துவிட்டது.
ஆனால் முன்பு ஹாரிஸன் & க்ராஸ்ஃபீல்ட் என்று இருந்த திருநாமத்தை இப்போது ஹாரிஸன் மலையாளம் என்று மாற்றிக் கொண்டு இந்த நிலத்தைக் கொள்ளையடிக்க வந்திருக்கிறது அந்தக் கம்பெனி. நூற்றாண்டுகளாக இங்கே வாழ்ந்து கொண்டிருக்கும் ஆதிவாசிகளிடமிருந்து இந்த நிலத்தையும், வனங்களையும், மலைகளையும் ஒரு வெளி நாட்டுக் கம்பெனி பிடுங்கிக்கொண்டு அந்த ஆதிவாசிகளை இங்கிருந்து விரட்டுவதை நியாய உணர்வுள்ள யாரும் ஒப்புக்கொள்ள முடியுமா?
ஆனால் அப்படிப்பட்ட கம்பெனிக்கு உங்களுடைய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவாக இருந்து வருகிறது. அதனால்தான் நான் செங்கரா ஆதிவாசிகளிடம் உரையாற்றிய போது உங்களுடைய போராட்டம் ஒரு சுதந்திரப் போராட்டம்' என்று வர்ணித்தேன். செங்கரா ஆதிவாசிகள் புத்தரையும், அய்யன் காளியையும், அம்பேத்கரையும் கடவுளாக வழிபட்டு, அந்த பலத்தில்தான் இப்படி 10 மாதங்களாக ஒரே இடத்தில் அமர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். எங்களை இந்தக் காடுகளிலிருந்து விரட்டினால் நாங்கள் தற்கொலை செய்து கொள்வோம் என்று சொல்லி ரப்பர் மரங்களின் மீது ஏறி நின்றுகொண்டதும், தங்களை எரியூட்டிக் கொள்வோம் என்று சொல்லி மண்ணெண்ணெயும் மெழுகுவர்த்தியுமாக ஆயிரக்கணக்கான பேர் முன் வந்து போராடியதும் உங்களுக்குத் தெரியாதா?
4000 கோடிக்கு வீடு கட்டும் பணக்காரர்களின் புரோக்கராகிவிட்ட நீங்கள் உங்களுக்குக் கிடைக்கும் கொஞ்சம் ஓய்வு நேரத்தில் இங்கே செங்கராவுக்கு வந்து இந்த ஆதிவாசிகளின் உரிமைக் குரலைக் கேட்க முடியாதா? அப்படிச் செய்வதை விட்டுவிட்டு, உங்களுடைய போலீஸை விட்டு இந்த ஆதிவாசிகளின் போராட்டத்தைத் தலைமையேற்று நடத்துபவர்களைத் தீவிரவாதிகள் என்று கைது செய்கிறீர்கள் . . . உங்களுடைய வங்காளத் தோழர்கள் நந்தி கிராமத்தில் செய்ததையே நீங்கள் கேரளத்தில் நடத்திக் காட்டுகிறீர்கள்.
செங்கராவிலிருந்து கிளம்பி பாலக்காடு மாவட்டம் பிளாச்சிமடைக்கு வந்து சேர்ந்தேன். அங்கே பார்த்தால் கொக்கோ கோலா கம்பெனி. கோலா தயாரிப்பதற்காக அந்தக் கம்பெனி அங்கேயுள்ள நிலத்தடி நீர் முழுவதையும் உறிஞ்சியெடுத்துவிட்டதால் சுற்றுப்புறக் கிராமங்களில் வசிக்கும் மக்களுக்குக் குடிநீர் கிடைக்கவில்லை. அது மட்டுமல்லாமல், கோலா தயாரிப்பினால் வெளியேறும் ரசாயனக் கழிவினால் (sludge) அந்தப் பகுதி நிலமே விஷமாகிறது. ஏனென்றால், கோலா தயாரிப்பின் போது வெளியேற்றப்படும் கழிவில் காட்மியம் (Cadmium), க்ரோமியம், பாஸ்பரஸ், ஸிங்க், அலுமினியம் என்ற ரசாயனக் கலவைகள் உள்ளன என்று Greenpeace நிறுவனத்தின் ஆராய்ச்சி கூறுகிறது.
இது பற்றி பி.பி.சி. போன்ற செய்தி நிறுவனங்களிலும் செய்தி வந்து கேரளத்தின் 'புகழ்' பரவிக்கொண்டிருக்கிறது. ஆனால், இந்த ரசாயனக் கலவை நிலத்துக்கு உரம் என்று பொய் கூறித் திரிகிறது கொக்கோ கோலா நிறுவனம். நீங்களோ எதிர்க்கட்சியாக இருக்கும் போது கோலாவை எதிர்க்கிறீர்கள். ஆட்சிக்கு வந்தால் கோலாவை ஆதரிக்கிறீர்கள். இதில் அடங்கியிருக்கும் மர்மம் என்ன என்று மக்களிடம் கொஞ்சம் விளக்குவீர்களா?
கடந்த ஆறு ஆண்டுகளாக பிளாச்சிமடை மக்கள் கொக்கோ கோலா நிறுவனத்தின் எதிரே பந்தல் போட்டு அமர்ந்து தொடர் உண்ணாவிரதம் இருந்து கொண்டிருக்கிறார்கள். இந்தப் பகுதி மக்கள் அனைவரும் தமிழர்கள். அவர்களிடம் உங்கள் முதலமைச்சர் யார் என்று கேட்டேன். தெரியவில்லை. அவ்வளவு அப்பாவி மக்கள். கூலித் தொழிலாளிகள். மிக வறிய நிலையில் வாழ்பவர்கள். ஆனால் கோலாவினால் தங்கள் நிலம் விஷமாகிவிட்டது என்பதையும், கோலாவினால் தங்களுக்குக் குடிப்பதற்குக்கூடத் தண்ணீர் இல்லாமல் போய்விட்டது என்பதையும் புரிந்து வைத்திருக்கிறார்கள். யாரும் போய் அவர்களுக்கு இதைச் சொல்லிக் கொடுக்கவில்லை.
கோலா கம்பெனியால் அவர்களின் நிலம் விஷமானதையும், குடிநீர் பறி போனதையும் யாரும் போய்ச் சொல்லிக் கொடுக்க வேண்டுமா என்ன? அது அவர்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும் வாழ்வாதாரப் பிரச்சினை. ஒரு பெண்மணி என்னிடம் சொன்னார்: "பல மாதங்களாக, பல ஆண்டுகளாக இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கிறோம்; நகரங்களிலிருந்து வரும் உங்களைப் போன்றவர்கள் எங்களுக்குப் புடவையும் ஜாக்கெட்டும் கொண்டுவந்து கொடுங்கள்; சுனாமி வந்தபோது அப்படிக் கொடுத்தீர்களாமே? அது போல . . ." புரிகிறதா முதலமைச்சர் அவர்களே; இந்த மக்கள் எவ்வளவு கொடுமையான நிலையில் இந்தப் போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கிறார்கள் என்று?
மேதா பட்கர் வந்து இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துவிட்டுச் சென்றிருக்கிறார். இப்போது தமிழ் நாட்டிலிருந்து நான். கேரள எழுத்தாளர்கள் அரசாங்க விருது வாங்குவது எப்படி என்பதை யோசிப்பதிலும், தொலைக்காட்சி சீரியல்களில் நடிப்பதிலும் ரொம்ப பிஸியாக இருக்கிறார்கள் போலிருக்கிறது. அவர்களை விட்டுவிடுவோம் . . .
பிளாச்சிமடையிலிருந்து கிளம்பி கொல்லம் மாவட்டம் வெளிச்சிக்காலா வந்தேன். அங்கேயும் அதே பிரச்சினை. அந்த மண்ணில் கிடைக்கும் ரசாயனத்துக்காக சுரங்கம் தோண்டி அந்த மக்களுக்கு இப்போது குடிநீர் பறிபோய்விட்டது. சற்றே வசதியான நிலையில் வாழும் அந்த முஸ்லீம் மக்கள் இப்போது ரோட்டுக்கு வந்து போராடிக்கொண்டிருக்கிறார்கள். இந்தப் போராட்டம் 10.5.2005இலிருந்து தொடங்கி இன்று வரை நடந்துகொண்டிருக்கிறது.
என்னுடன் முத்தங்கா போராளியான சி.கே. ஜானுவும் பேசினார். நானும் ஜானுவும் என்ன பேசினோம் என்று உங்களுடைய போலீஸார் இந்நேரம் உங்களுக்குத் தெரிவித்து இருப்பார்கள். அங்கே நான் ஒரே ஒரு விஷயத்தைத்தான் சொன்னேன். கடவுளின் தேசம் என்று உலகம் பூராவிலும் உள்ள மக்கள் ப்ரஸீலைச் சொல்லவில்லை. கேரளத்தைத்தான் சொல்கிறார்கள். அப்படிப்பட்ட கேரளத்தை, இந்தக் கடவுளின் தேசத்தை சைத்தான்களின் தேசமாக மாற்றப் பார்க்கிறார் கேரள முதலமைச்சர் என்று என்னுடைய பேச்சில் குறிப்பிட்டேன்.
கேயாஸ் தியரி என்பது பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? புகழ் பெற்ற ஜுராஸிக் பார்க் படம்கூட அந்தத் தியரியின் அடிப்படையில் எடுக்கப்பட்டது தான். அந்தத் தியரியின்படி ஆப்பிரிக்கக் காடு ஒன்றில் இருக்கும் வண்ணத்துப்பூச்சி தன் றெக்கையை அளவுக்கு அதிகமாகப் படபடத்தால் கேரளத்துக் கடலின் கொந்தளிப்பு அதிகமாக இருக்கும். அப்படி அதிகமாகும் போது அந்தப் பேரலைகளுக்கு அச்சுதானந்தன் யார், சாரு நிவேதிதா யார் என்று வித்தியாசம் தெரியாது. எனவே நிலத்தையும், நீரையும், காற்றையும், கடலையும் மாசு படுத்தாதீர்கள். விழித்துக் கொள்ளுங்கள் இப்போதாவது . .
.
அன்புடன்,
சாரு நிவேதிதா
எதிர்காலத்தை மாற்ற விரும்பவில்லை. இந்த உலகின் கடந்த காலமும் நமக்குச் சொந்தமில்லை. நாம் இங்கிருப்பதை அரசாங்கம் விரும்பவில்லை. நமது தொழிலைத் தொடர அதிக லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது. கால எந்திரம் மிக நுணுக்கமாக கையாள வேண்டிய விஷயமாகும். நமக்குத் தெரியாமலே ஒரு விலங்கை, ஒரு பறவையை, ஒரு மீனை . . . ஏன் ஒரு மலரை நாம் கொன்றுவிடுவதற்கான வாய்ப்பு உள்ளது. இதன்மூலம் வளர்ந்து வரும் ஓர் உயிரினத்தின் வம்சாவளியை அழித்து விடுவதற்கான வாய்ப்பும் உள்ளது'
'எனக்குப் புரியவில்லை' என்றான் எக்கல்ஸ்.
'இதோ பார், தவறுதலாக ஒரு எலியைக் கொன்று விடுகிறோம் என்று வைத்துக்கொள். அப்படியென்றால் அந்த ஒரு எலியின் எதிர்கால சந்ததிகள் அனைத்தையும் நாம் அழித்துவிட்டதாகத்தானே அர்த்தம்.'
'ஆமாம்.'
'அந்த ஒரு எலியின் எதிர்கால சந்ததியினரின் எதிர்கால சந்ததியினர் அனைவரும் அழிந்து போவர். உன்னுடைய ஒரு தவறால் முதலில் ஒரு எலி, பின்னர் ஒரு டஜன், பிறகு ஆயிரம், ஒரு மில்லியன், ஒரு பில்லியன் எலிகள் அழியும் வாய்ப்பு உள்ளது.'
'எலிகள் செத்தால் என்ன?' என்றான் எக்கல்ஸ்.
'எலிகள் செத்தால் என்னவா? எலிகளை நம்பியிருக்கும் நரிகளின் கதி என்ன? 10 எலிகள் இறந்தால் அதை நம்பியிருக்கும் ஒரு நரியின் பிழைப்பு என்னாவது? 10 நரிகள் இறந்தால் ஒரு சிங்கம் பசியால் வாடாதா? ஒரு சிங்கத்தை நம்பியிருக்கும் புழுப் பூச்சிகள், கழுகுகள், கோடிக்கணக்கான உயிரினங்கள் அழிந்து போகாதா? 59 மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு வேட்டைக்குப் புறப்படும் குகை மனிதனை பற்றி நினைத்துப் பார். உன்னுடைய சிறு தவறால் இந்தப் பகுதியில் எந்த விலங்கும் இருக்காது.
குகை மனிதனுக்கு உணவு கிடைக்காது. அவன் இறந்தால் என்னவென்று அலட்சியமாக இருந்துவிட முடியாது. அவனிடமிருந்துதான் எதிர்கால தேசமே தோன்றவுள்ளது. அவனிடமிருந்து 10 பிள்ளைகள் தோன்றுவர். அவர்களிடமிருந்து 100 பிள்ளைகள் தோன்றுவர். ஒரு சமுதாயமே உருவாகும். இந்த ஒரு மனிதனை அழிப்பது ஓர் இனத்தையே, ஒரு வரலாற்றையே அழிப்பதற்கு சமம். இவனைக் கொல்வது ஆதாமின் பேரப் பிள்ளைகளில் ஒருவனைக் கொல்வதற்கு சமமாகும்.
ஒரு எலியைக் கொல்வதன் மூலம் இந்த பூமியையும் அதன் எதிர்காலத்தையும் அசைத்துப் பார்க்கும் ஒரு பூகம்பத்தையே நீ தொடங்கி வைக்கிறாய். ஒரு குகைமனிதனின் இறப்பின் மூலம் கோடிக்கணக்கான அவனது சந்ததிகள் கருவிலே கொலகொல்லப்படுகிறார்கள். ரோமப் பேரரசு தோன்றாமல் போகலாம். ஐரோப்பா ஒரு இருண்ட காடாகவே நிலைத்திருக்கும். ஆசியக் கண்டம் மட்டுமே நாகரீகமடைந்திருக்கும். ஒரு எலியின் மீது நீ வைக்கும் சிறு காலடி, பிரமிடுகளை நசுக்கிவிடும். ஒரு எலியின் மீது நீ வைக்கும் காலடி கிராண்ட் கேன்ய்ன் போல் கால ஓட்டத்தில் அழியாத மாபெரும் வடுவாக நிலைத்து விடும். குயின் எலிசபெத் எப்போதும் பிறந்திருக்க மாட்டார். டெலாவர் நதியை வாஷிங்டன் கடந்திருக்காது; அமெரிக்கா தோன்றியிருக்காது. எனவே எச்சரிக்கையாயிரு. பாதையோடு ஒட்டி நில; விலகி விடாதே.
ரே பிராட்பரியின் 'எ சவுண்ட் ஆப் தண்டர்' சிறுகதையின் ஒரு பகுதி.
நன்றி - உயிரோசை
நன்றி - உயிரோசை