திருச்சி சிறையில் காந்திய சிந்தனை வாசித்துக் கொண்டிருந்த டாக்டர் ராமதாஸ் மீது மேலும் இரண்டு வழக்குகளை தேடிப் பிடித்து பாய்ச்சி இருக்கிறது போலீஸ். இதில் ஒரு வழக்கில் ஆஜர்படுத்துவதற்காக இன்று ராமதாஸை திருக்கழுங்குன்றம் அழைத்துச் செல்வதாக இருந்தது போலீஸ். விஷயத்தை கேள்விப்பட்ட பா.ம.க. வினர் கொதித்து எழுந்து விட்டார்கள். திருச்சி சிறைக்குள் ராமதாஸுடன் இருக்கும் வன்னியச் சொந்தங்கள், இன்று காலையிலிருந்து சிறை வளாகத்தில் உள்ள மரங்களில் ஏறி நின்று அறப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஐயா மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் பெறக் கோரி அவர்களில் சிலர் உண்ணாவிரதமும் இருக்கிறார்களாம்.
சிறைக்கு வெளியே ராமதாஸ் கைதை கண்டித்து மாம்பழ கட்சியினர் ஆங்காங்கே பொதுச் சொத்துக்களை சூறையாடிக் கொண்டிருக்கிறார்கள். பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தினால் பத்தாண்டுகள் சிறை தண்டனை என பயமுறுத்தி இறுக்கிறார் கடலூர் கலெக்டர். இதற்கெல்லாம் யார் பயந்தது? இதனால் வடமாவட்டங்கள் அமைதியை தொலைத்துவிட்டு நிற்கின்றன. வன்னியர்கள் மத்தியில் மீண்டும் சாதிய உணர்வை தட்டி எழுப்பு வதற்காக பா.ம.க வினர் நடத்தும் இந்த வன்முறை போராட்டங்களை பொதுவான மற்ற சமூகத்தினர் ஆத்திரத்துடனும் ஆதங்கத்துடனும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
விழுப்புரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு போட்டிருக்கிறது போலீஸ். காலையில் கைது செய்து மாலையில் வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள் என்று தான் ராமதாஸ் உள்ளிட்டவர்கள் நினைத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், எதையும் அதிரடியாய் செய்து பழகிப் போன ஜெயலலிதா, ராமதாஸை சிறைக்கு அனுப்ப சிக்னல் கொடுத்து விட்டார். இந்த நிலையில், இன்று காலையில் அன்பு மணி ராமதாஸையும் கொத்தாக அள்ளிக் கொண்டு போய்விட்டது போலீஸ். இதை ராமதாஸும் மற்றவர்களும் சற்றும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அதனால் தான் இந்தச் செய்தியைக் கேட்டதுமே ரத்த அழுத்தம் அதிகமாகிப் போய் மயங்கி சரிந்திருக்கிறார் ராமதாஸ். இதை யெல்லாம் பார்க்கும் போது 17 வருடங்களுக்கு முந்தைய சரித்திரம் மீண்டும் திரும்புவது போலத்தான் தெரிகிறது.
இதற்கு முன்பு 1995 ல் பொடா சட்டத்தை வாபஸ் பெறக் கோரி போராட்டம் நடத்தியதற்காக கைதானார் ராமதாஸ். அப்போதும் ஜெயலலிதா தான் முதலமைச்சர். அந்த நேரத்தில் ராமதாஸின் உடல்நிலை ரொம்பவே பாதிக்கப்பட்டது. கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் சிறைக்கே சென்று ராமதாஸின் உடல் நலம் விசாரித்தார்கள். கணவரின் உடல்நிலையை பார்த்து கண்ணீர் விட்ட ராமதாஸின் மனைவி சரஸ்வதி ராமதாஸ், 'என் வயிற்றெரிச்சல் முதலமைச்சரை சும்மா விடாது" என்று சாபமெல்லாம் விட்டார்.
இந்நிலையில், 17 வருடங்கள் கழித்து மீண்டும் ஜெயலலிதா புண்ணியத்தில் சிறைக்கு போயிருக்கிறார் ராமதாஸ். கடந்த முறையை போல உள்ளேயே வைத்து விளையாட்டுக் காட்டிவிடுவார்கள் என்ற பயமோ என்னவோ, ஐயாவுக்கு ஜாமீன் கேட்டு பா.ம.க. காரர்கள் விழுப்புரம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருக்கிறார்கள். ஒரு வழக்கில் அவருக்கு ஜாமீன் கிடைத்தாலும் இன்னொரு வழக்கில் அவரை உள்ளே வைக்க தீர்மானித்துவிட்ட தமிழக அரசு, பவர் ஸ்டாருக்கு நிகராக வழக்குகளை தேடிப் பிடித்துப் புகுத்திக் கொண்டிருக்கிறது. இதைக் கண்டித்து, சரஸ்வதி ராமதாஸிடம் இருந்து சாப அறிக்கை எதூம் வெளியானதாக இதுவரை தகவல் இல்லை. 'தம்பி விஜயகாந்த் கட்சியை அழிக்கப் பார்க்கிறார் ஜெயலலிதா" என்று வலியப் போய் குரல் கொடுத்த கருணாநிதியும் இந்த விஷயத்தில் இதுவரை வாய் திறக்காமல் மௌன விரதம் இருக்கிறார்
இந்த வேளையில், 17 ஆண்டுகளுக்கு முந்தைய ராமதாஸ் கைது நிகழ்வுகள் குறித்து ஜூனியர் விகடன் மற்றும் ஆனந்த விகடனில் வந்த செய்திகளின் சுவையான ஃபிளாஷ் பேக்கை இங்கே தருகிறோம்..
26.3.95
29.3.95
20.12.98
thanx - vikatan
latest flash news
மதுரை : தமிழகம் முழுவதுமுள்ள காவல் நிலையங்களில் பெண்டிங்கில் இருக்கும் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் மீதான பழைய வழக்குகளை தோண்டி எடுக்க சொல்லி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதால் காவல்துறையினர் சுறுசுறுப்பாகியுள்ளனர்.
இந்த அடிப்படையில், சில வருடங்களுக்கு முன்பு, பாபா படத்தை ரஜினிகாந்த் வெளியிட இருந்தபோது, அவருக்கும் பா.ம.க.வினருக்கும் பிரச்சனை ஏற்ப்பட்டு, படத்தை ரீலிஸ் செய்வதில் தடங்கல் ஏற்ப்பட்டது. ஆங்காங்கு திரையரங்குகளை பா.ம.க.வினர் மிரட்ட ஆரம்பித்தனர்.
அந்த நேரத்தில் ஒரு விழாவில் கலந்து கொள்ள டாக்டர் ராமதாஸ் மதுரை வந்திருந்தபோது, ரஜினி ரசிகர்கள் அவருக்கு கறுப்புக்கொடி காட்ட சென்றனர். பதிலுக்கு ராமதாஸுடன் வந்திருந்த பாமகவினர் ரஜினி ரசிகர்களையும் பத்திரிக்கையாளர்களையும் கடுமையாக தாக்கினார்கள். இது சம்பந்தமாக அப்போது வழக்கு போடப்பட்டது.
காலமாற்றம், அரசியல் மாற்றத்திற்கு பிறகு அந்த வழக்கு கண்டுகொள்ளப்படவில்லை. தற்போது தமிழக அரசின் அதிரடி நடவடிக்கைக்கு ஆளாகி திருச்சி சிறையில் அடைபட்டிருக்கும் ராமதாஸ், ஜாமீனில் வெளியில் வந்து விடாதபடி, தொடர்ச்சியான வழக்குகளை அவர் மீது போடுவதற்கு அரசு முடிவு செய்துள்ளது.
அந்த வகையில் மதுரையில் போடப்பட்ட பாபா படம் சம்பந்தப்பட்ட பழைய வழக்கில், டாக்டர் ராமதாஸை கைது செய்ய, காவல்துறையினர் ரெடியாகி வருவதாக காக்கி வட்டாரம் கூறுகிறது.
அன்புமணி ராமதாஸ் திடீர் கைது: ஜெயலலிதா மீது சாடல் (படங்கள்)
சென்னை: முன்னாள் மத்திய அமைச்சரும், பா.ம.க. இளைஞர் அணித் தலைவருமான அன்புமணி ராமதாஸ் இன்று காலை திடீரென கைது செய்யப்பட்டார்.
கடந்த 2012ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி, குரு ஆகியோர் ஜாதி கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக ஏற்கனவே வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்தநிலையில், இன்று காலை 6 மணிக்கு உதவி ஆணையர் ராஜேந்திரன் தலைமையில் 20க்கும் மேற்பட்ட போலீசார் அன்புமணி வீட்டுக்குச் சென்று கைது செய்தனர். மேலும், கட்சி நிர்வாகிகள் ஜெயசீலன், பிரகாஷ், இளங்கோவன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
பின்னர், திருக்கழுக்குன்றம் முன்சீப் நீதிமன்ற நீதிபதி சிவா முன்னிலையில் இன்று காலை 9.50 மணிக்கு அன்புமணி உள்பட 4 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதையடுத்து, அவர்களை வரும் 16ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி சிவா உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து அன்புமணி உள்பட 4 பேரும் சென்னை புழல் மத்திய சிறையில்அடைக்கப்பட்டனர்.
அன்புமணி மீது தடை மீறி கூடுதல் (143), வன்முறை தூண்டும் வகையில் பேசுதல் (188)1ஏ மற்றும் 147 ஆகிய பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கைதுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி, தன் மீதான கைது நடவடிக்கை ஜெயலலிதா அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என்றார்.
தமிழ்நாட்டில் நடந்த கலவரத்துக்கு பா.ம.க. தொண்டர்கள் காரணம் இல்லை என்று கூறிய அன்புமணி, தொண்டர்கள் அறவழியில் போராட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது என்றும் அன்புமணி கூறினார்.
படங்கள்: ஜெயவேல்
thanx - vikatan