வேர்கள்
வலம்புரி ஜான்
வி.ஐ.பி.சாய்ஸ்
அண்ணன் பெயர் ஆல்பர்ட். 18 வயது மூத்தவன். ஆங்கிலப்
பேராசிரியராக இருந்த ஆல்பர்ட், புத்தக வெறியன். மணிக்கணக்காகப் புத்தகம்
வாசித்து அவனுக்குக் கழுத்து சுளுக்கிக் கொள்ளும். எண்ணெய் போட்டுச்
சுளுக்கெடுத்துவிடுவார் எங்கள் அம்மா. அடுத்த நிமிடமே மறுபடியும் புத்த
கத்தைக் கையில் எடுத்துக்கொண்டு விடுவான்.
அவன்தான் என்னைப் படிக்கவைத்தவன். அதற்காகத் தன்
திருமணத் தைக்கூடத் தள்ளிவைத்தவன். அண்ணனைப் பார்த்து எனக்கும்
புத்தகங்களின் மேல் காதல் வந்தது. அவன் படித்து விட்டுக் கீழே வைக்கும்
'பவான்ஸ் ஜர்னல்’ என்கிற ஆங்கிலப் பத்திரிகை யில் துவங்கியது என்னுடைய
வாசிப்பு.
நான் படித்த செயின்ட் சேவியர் பள்ளியில் வேறு
யாருக்கும் கிடைக்காத ஒரு வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. வெள்ளிக்கிழமை
இரவுகளில் பாதிரிமார்கள் பேச மாட்டார்கள். என்னைக் கூப்பிட்டு நல்ல நல்ல
புத்தகங்களை உரக்க வாசிக்கச் சொல்வார்கள். இதற்கு 'ஞானவாசகம்’ என்று பெயர்.
நாமக்கல் கவிஞரின் 'என் கதை’, சாமிக்கண்ணுப்பிள்ளை என்பவரின் வாழ்க்கை
வரலாறு என்று அடடா... எத்தனை எத்தனை புத்தகங்கள். இன்னும் எனக்கு
மறக்கவில்லை.
இப்போது
தமிழில் வெளியாகும் புத்தகங்களில் ஐந்து சதவிகிதம்தான் தரமான புத்தகங்கள்.
அவற்றைத் தேடிக் கண்டுபிடித்த பிறகு, ஒவ்வொரு புத்தகத்தையும் சலிக்கா மல்
பலமுறை வாசிப்பேன்.
எனக்குள் ஏற்கெனவே தோன்றிய ஒரு கருத்தைப் புதிதாகப்
படிக்கிற புத்தகங்களில் சந்திக்கும்போது, அதீதக் கிளர்ச்சி ஒன்று ஏற்படும்.
அந்தக் கிளர்ச்சி மேலும் பல கருத்துகள் என்னுள் உருவாகத் தூண்டுகோலாக
அமையும். நான் அடிக்கடி ஒரு கருத்தைச் சொல்வது உண்டு. திரௌபதி யைக் காக்க
கண்ணன் வந்ததுபோல இப்போது கடவுள் எங்கேயும் வருவதுஇல்லையே.
.. இதற்குக்
காரணம், நாம் கடவுளை முழுவதுமாக நம்பாததுதான் என்று சொல்வேன். பின்னாளில்
நான் படித்த சுஃபி புத்தகம் ஒன்றில் 'அல்லாவைத் தொழு. ஒட்டகத்தைக்
கட்டிப்போடு’ என்கிற பழமொழி தவறு. அல்லாவை முழுமையாக நம்பினால், அவர் உன்
ஒட்டகத்தைக் காப்பாற்றுவார்’ என்று எழுதியிருந்தது.
தவிர, புத்தகம் வாசிப்பது என்பதை வேறுவிதமாகவும்
சொல்லலாம். ஒரு மகத்தான மனிதனின் அனுபவங்கள்... ஏன், அவரது வாழ்க்கையே
நம்முடன் சேருகிறது. படிப்புதான் சரியான ஒரு மனிதனை உருவாக்குகிறது.
பேச்சு
புத்தகங்களை உரக்க வாசிப்பது நல்லது. கண், வாய், காது
என்று அநேகப் பொறிகள் ஒரே காரியத்தில் ஈடுபடுகிறபோது கவனம் அபாரமாகக்
குவிகிறது. உரக்க வாசிக்கும் பழக்கம்தான் என்னை ஒரு பேச்சாளனாகவும்
ஆக்கியது.
அண்ணா, கலைஞர் ஆகியோரின் பேச்சுக்கள் எனக்குப்
பிடிக்கும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகப் பேசுவார்கள். ஆனாலும், நான்
அவர்களைப் பின்பற்றிப் பேச மாட்டேன். பல நல்ல பேச்சாளர்களின் சிறப்பான
அம்சங்களை எல்லாம் சேர்த்துக்கொண்டு என்னுடைய பேச்சுப் பாணியை
அமைத்துக்கொண்டேன்.
எனக்கு எப்போதுமே மிமிக்ரி பிடிக்காது. பூனை, பூனை போல
இருக்க வேண்டும். புலி போலவும் இருக்கக் கூடாது, எலி போலவும் இருக்கக்
கூடாது என்பது என் சித்தாந்தம். சென்னைக்கு வந்த புதிதில் நான் பேசுவதற்கு
நிறைய வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தவர் சர்வோதய சங்கத்தில் இருந்த
ராதாகிருஷ்ணன்.
மாணவர் தி.மு.க-வில் நான் சேர்ந்த பிறகு பேசியதுதான்
திருப்புமுனையாக அமைந்த மேடைப் பேச்சு. நான் பேசியதைக் கலைஞர் மிகவும்
பாராட்டிப் பேசினார். அது உற்சாகத் தைக் கொடுத்தாலும் எனக்கென்று சில
கணக்கு களையும் நான் வைத்திருந்தேன். பிறர் பாராட்டி னால், அதை நான் நம்ப
மாட்டேன். எனக்கே பிடித்தால்தான் ஆயிற்று. பேச்சை நான் எளிதாக
எடுத்துக்கொள்ள மாட்டேன். 'இது கேட்பவர்களை மாற்றாவிட்டாலும் குறைந்த
பட்சம் என்னையாவது மாற்றும்’ என்பது என் நம்பிக்கை.
எழுத்து
எந்தவொரு நல்ல புத்தகமும் எனக்கு வேர் தான் என்று
சொல்வேன். 'தென்றல்’ என்கிற தி.மு.க. பத்திரிகையில் ஏ.கே.வில்வம் எழுதிய
கட்டுரைகளும் 'காஞ்சி’ பத்திரிகையில் அண்ணா எழுதிய விஷயங்களும் என்னை
மயக்கின. சி.பி.சிற்றரசு, நாலணா விலையில் சாக்ரடீஸ், டெமாஸ்தனீஸ் என்கிற
தலைப்பில் எல்லாம் புத்தகம் போடுவார். அட, உலக விஷயமெல்லாம் எழுதுகிறாரே
என்று வியப்பு ஏற்படும். பிறகு, நானே புத்தகம் எழுத ஆரம்பித்தது ஒரு
வேடிக்கையான விஷயம்.
தென்னொலி, தினமலர், மறவன்மடல் போன்ற பத்திரிகைகளில்
எழுதிய நான் முரசொலியிலும் தொடர்ந்து எழுத ஆரம்பித்தேன். அப்போது அங்கு
இருந்த ஒரு நபர் ஏனோ என் கட்டுரைகள் பிரசுரமாவதைக்
தடுத்துக்கொண்டிருந்தார். முரசொலி மாறன் ஊரில் இல்லாதபோது 'இந்தக் கட்டுரை
மாறன் பார்வைக்கு’ என்றும், மாறனின் தம்பி செல்வம் இல்லையென்று தெரிந்தால்,
'செல்வம் பார்க்க’ என்றும் குறிப்பு எழுதிக் கட்டுரையைக் கிடப்பில்
போட்டுவிடுவார்.
அப்போதுதான் விறுவிறுவென்று மூன்று புத்தகங்கள் எழுதி
அவற்றை வெளியிடுமாறு கலைஞரைக் கேட்டுக்கொண்டேன். 'புத்தகத்தைப் படிக்கும்
அவர் எப்படியும் பாராட்டித்தான் பேசப்போகிறார், பிறகு மற்றவர்கள் என்னை
ஏற்றுக்கொண்டுதானே ஆக வேண்டும்’ என்பது என் எண்ணம்!
கலைஞர் முரசொலியில் என்னை ஆதரித்த அளவு கவியரசு
கண்ணதாசனும் ஆதரித்தார். நான் எழுதிய ஒரு கவிதையைப் படித்துவிட்டு,
கண்ணதாசன் 'ஓஹோ’வென்று பாராட்டினார்.
'நவநவமாக அள்ளி
நற்றமிழ்ச் சொற்கள்தம்மை
இவர்தரும் அழகு நாட்டில்
எல்லோர்க்கும் வருவதில்லை.
வலம்புரி ஜானுக்கு இந்த
வற்றாத மொழியைத் தந்து
நலம்புரிந்தாளே அந்த
நற்றமிழ் அன்னை வாழ்க’
நற்றமிழ்ச் சொற்கள்தம்மை
இவர்தரும் அழகு நாட்டில்
எல்லோர்க்கும் வருவதில்லை.
வலம்புரி ஜானுக்கு இந்த
வற்றாத மொழியைத் தந்து
நலம்புரிந்தாளே அந்த
நற்றமிழ் அன்னை வாழ்க’
என்று கண்ணதாசன் எழுதியது என் வேர்களுக்கு உரமாக இருந்தது.
தாகூர், பாரதி
சின்ன வயதில் ரவீந்திரநாத் தாகூரின் கீதாஞ்சலியை
மனப்பாடமே செய்திருக்கிறேன். வி.ஆர்.எம். செட்டியாரின் மொழிபெயர்ப்பைக்
கையிலேயே தூக்கிக்கொண்டு அலைவேன். 'படிக்கும்போதெல்லாம் நெருப்புல
குமிஞ்சான் அள்ளிப்போட்டது மாதிரி இருக்கு’ என்று நண்பர்களிடம் சொல்வேன்.
குமிஞ்சான் என்றால் சாம்பிராணி. தாகூரைப் படிக்கும்போதெல்லாம் சாம்பிராணி
போட்டது போன்ற இனம் தெரியாத உணர்வு என் மனதைச் சூழும்.
ஆனால்,
நான் வளர வளர... தாகூர் குள்ளமாகிவிட்டார். ஒன்பது வயதில் என்னைப்
பிடித்துவிட்ட பாரதியோ இன்னும் ஆதர்ச புருஷனாகவே தொடர்கிறான். அவனுடைய
ஒவ்வொரு கவிதையையும் படிக்கப் படிக்க அவன் மீதிருக்கும் மதிப்பு
உயர்ந்துகொண்டே போகிறது. எந்த எல்லைக்கும் சென்று நான் பாரதிக்கு வணக்கம்
செய்வேன்.
'தமிழ்நாட்டில் பாரதியிலிருந்துதான் மனிதன் தொடங்குகிறான்’
என்றுகூடச் சொல்லியிருக்கிறேன்.
உண்மையான ஒரு மனிதனாக வாழ்ந்தவன் பாரதி. பிராமணர்
அல்லாத ஐந்தாறு பேருக்குப் பூணூல் போட்டிருக்கிறான். அதில் ஒருவர்
நாகலிங்கம். மாரியம்மன் கோயிலில் பூசை செய்யும் அவரை முதல் நாள் 'பண்டாரம்’
என்றும் அடுத்த நாள் 'பூசாரி’ என்றும் மூன்றாம் நாள் 'குருக்களே’ என்றும்
அழைத்துப் பெருமைப்படுத்திய துணிச்சல்காரன் பாரதி.
இந்த இடத்தில் என் நண்பர் சொன்ன தகவல் ஒன்றைக்
குறிப்பிடலாம் என்று நினைக்கிறேன். கடலூர் சப்-ஜெயிலில் இருக்கும் பழைய
ஆவணம் ஒன்றைப் பார்த்திருக்கிறார் நண்பர். அதில் 'கைதியின் பெயர்,
சுப்பிரமணிய ஐயர். கைதியின் தகப்பனார் பெயர், சின்னசாமி ஐயர். கைதியின்
தொழில்: லோஃபர்’ என்று இருந்திருக்கிறது.
'தொழில் என்ன?’ என்று கேட்டதற்கு பாரதி என்ன பதில்
சொன்னானோ... சிப்பந்திக்கு என்ன புரிந்ததோ... 'லோஃபர்’ என்று
பதிவுசெய்துவிட்டான். எப்பேர்ப்பட்ட கவிஞனுக்கு எப்படிப்பட்ட ஒரு பட்டம்!
நான் பாரதியைப் போல் ஆக விரும்புகிறேன். அப்படி ஆக
முடியாமல்கூடப் போகலாம். ஆனால், அப்படி ஆக விரும்புவதில்தான் வாழ்க்கை
இருக்கிறது என்று நினைக்கிறேன்!''
- ரமேஷ் வைத்யா
படங்கள்: பாட்ஷா