விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, ஆர்.ஜே.பாலாஜி, பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் 'நானும் ரவுடிதான்'. அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தை தனுஷ் தயாரித்திருக்கிறார். லைக்கா நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. இப்படத்துக்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இப்படம் உருவாக்கத்தில் நிகழ்ந்தவை குறித்து இயக்குநர் விக்னேஷ் சிவம் பகிர்ந்தவை:
* இந்தக் கதையின் நாயகனாக 18 வயது இளைஞன் நடித்தால் மட்டுமே நன்றாக இருக்கும் என தீர்மானித்தேன். பிறகு, சூழல் எல்லாவற்றையும் மாற்றியது.
* முதலில் இந்தக் கதையில் அனிருத் நடிப்பதாகத்தான் இருந்தது. ஆனால், இசையில் மட்டுமே முழு கவனம் செலுத்தலாம் என்று முடிவு செய்ததால் அவர் நடிக்க முன்வரவில்லை.
* கதையின் நாயகி நயன்தாரா என்பது முதலிலேயே முடிவாகிவிட்டது. ஏற்கெனவே இக்கதை விஜய் சேதுபதிக்கு தெரியும் என்பதால் அவரும் 2 புதுமுகங்களை சிபாரிசு செய்தார். அதுவும் சரியாக அமையவில்லை. கெளதம் கார்த்திக்கும் பரிசீலனையில் இருந்தார்.
* தனியார் தொலைக்காட்சி விருது வழங்கு விழாவில் விஜய் சேதுபதி - நயன்தாரா பேசியதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. தனுஷ் சாரும் அந்த நேரத்தில் தயாரிப்பதாக முன்வந்தார். உடனே விஜய் சேதுபதி உள்ளிட்ட அனைவருமே இப்படத்துக்குள் வந்தார்கள்.
* படத்தின் டப்பிங்கிற்காக நயன்தாரா நிறைய கஷ்டப்பட்டார். முதல் முறையாக டப்பிங் பேசுவதால் சரியாக இருக்க வேண்டும் என நிறைய மெனக்கெட்டார். அழுதுகொண்டே பேசும் காட்சிக்கு கிளசிரின் போட்டு அழுதுகொண்டே பேசினார். படத்தில் எப்படி உட்கார்ந்து கொண்டு வசனங்கள் பேசி இருக்கிறாரோ, அதேபோல டப்பிங் தியேட்டரிலும் உட்கார்ந்து கொண்டு பேசினார். அவருடைய அர்ப்பணிப்பு பார்த்து நான் வியந்துவிட்டேன்.
* தனுஷுக்கு இப்படத்தை தயாரிக்கும் முன்பு ஒரு வரிக் கதைதான் சொன்னேன். அதற்கு பிறகு அவர் எதிலுமே தலையிடவில்லை. படம் முழுமையாக முடிந்தவுடன் பார்த்துவிட்டு, மிகவும் பாராட்டினார். ரொம்ப நன்றாக வந்திருக்கிறது, இப்படியிருக்கும் என எதிர்பார்க்கவில்லை என வியந்தார்.
* இதுவரை தான் நடித்து வெளியான படங்கள் எதையுமே நயன்தாரா திரையரங்கிற்கு சென்று பார்த்ததே இல்லையாம். அவர் திரையரங்கிற்கு சென்று பார்த்த முதல் படம் 'நானும் ரவுடிதான்'தானாம்.
தஹிந்து