ஒரு பக்கம் விஜய் நடிக்கும் புதிய படத்துக்கு இசை, மறுபக்கம் ‘திரிஷா இல்லன்னா நயன்தாரா’, ‘பென்சில்’, ‘கெட்ட பயடா இந்த கார்த்தி’, ‘பாட்ஷா என்கிற ஆண்டனி’ படங்களில் நாயகன் அவதாரம் என்று பரபரப்பாக இருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். தமிழ் சினிமாவில் ‘துறு துறு’ இசை நாயகனான அவரை சந்தித்தோம்.
'த்ரிஷா இல்லன்னா நயன்தாரா' இளைஞர்களை கவர வேண்டும் என்ற எண்ணத்தை கொண்டே உருவாகி இருக்கு போலேயே..
ஒவ்வொரு காலக்கட்டத்தில் ஒரு காதல் படம் வரும். 'குஷி', 'சிவா மனசுல சக்தி' அதே மாதிரி 'த்ரிஷா இல்லனா நயன்தாரா' இன்றைய இளைஞர்களின் வாழ்க்கை முறையை சொல்ற படமாக இருக்கும். இயக்குநர் செல்வராகவன், எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராஜேஷ் இவங்க மூவரும் சேர்ந்து ஒரு படம் பண்ணினால் எப்படியிருக்கும் அதே மாதிரி இருக்கும். +2, கல்லூரி அப்புறம் என்ன நடக்கிறது என்று மூன்று கட்டங்களாக இப்படம் நகரும்.
நான் பழகுவதற்கு இரண்டு விதங்கள் இருக்கிறது. ஒன்று ரொம்ப அமைதியாக இருப்பேன், இன்னொரு புறம் என்னுடைய நெருங்கிய நண்பர்கள் மத்தியில் ரொம்ப ஜாலியாக இருப்பேன். ஜாலியான ஜி.வியை நீங்கள் 'த்ரிஷா இல்லன்னா நயன்தாரா' படத்தில் பார்க்கலாம். இந்த படத்தைப் பார்த்தவுடன் 'கெட்ட பையன் இந்த ஜி.வி' என்று கூறுவார்கள்.
முதல் படமான 'டார்லிங்' ஹிட், இப்போது நாயகனாக தொடர் படங்கள். நடிகனாக ஆவோம் என்று எதிர்பார்த்தீர்களா?
நான் இசையமைப்பாளராக ஆவேன் என்று கூடத் தான் நினைத்துப் பார்க்கவில்லை. +1 படிக்கும் போது, படிப்பை விடாதே.. உருப்பட மாட்ட என்றார்கள். இல்லை நான் பண்ணுவேன் என்று 18 வயதில் இசையமைத்தேன். அதே போல தான் நடிகராகப் போகிறேன் என்றவுடன் இயக்குநர் வெற்றிமாறன், எங்கப்பா அனைவருமே வேண்டாம் என்றார்கள். இல்லை நான் பண்ணுவேன் என்று கூறி தான் நடிகனானேன். ஏதாவது ஒரு ரிஸ்க் எடுத்தால் மட்டுமே, வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு போக முடியும். +1 இன்னும் நான் முடிக்கவில்லை.ஆனால் சவுண்ட் என்ஜினிரியங்கில் டிப்ளமோ முடித்திருக்கிறேன்.
இப்போது 'த்ரிஷா இல்லனா நயன்தாரா' படத்தைத் தொடர்ந்து 'கெட்ட பயடா இந்த கார்த்தி', 'பாட்ஷா என்கிற ஆண்டனி' ஆகிய படங்களில் நடிக்க இருக்கிறேன். அதனைத் தொடர்ந்து 'டார்லிங்' இயக்குநர் சாம் ஆண்டன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறேன்.
உங்களை நாயகனாக்க வேண்டும் என்று முதலில் அழைத்து யார்?
முதலில் நாயகனாக்க அழைத்தது ஏ.ஆர்.முருகதாஸ் சார் தான். 'தாண்டவம்' படத்தில் என்னுடைய இசை போஸ்டர்களைப் பார்த்து அவருடைய தயாரிப்பு நிறுவனத்தில் முழுக்க இசை சம்பந்தப்பட்ட படத்தில் நடிக்க என்னை அழைத்தார். அப்படத்தின் செய்திகள் எல்லாம் வெளியாகின. அப்படத்தின் செய்திகளைப் பார்த்து வந்த வாய்ப்பு தான் 'பென்சில்'. அப்படத்தின் படப்பிடிப்புக்கு இடையே 'த்ரிஷா இல்லன்னா நயன்தாரா' படத்திற்கு இயக்குநர் ஆதிக் தாடி வளர்க்கச் சொன்னார். தாடி வளரும் போது தான் உடற்பயிற்சிக் கூடத்தில் ஞானவேல் ராஜா பார்த்து 'டார்லிங்' படத்தில் ஒப்பந்தமாகி முதலில் வெளியானது. அல்லு அர்ஜுன், ஞானவேல் ராஜா இருவருமே என்னை நாயகனாக அறிமுகப்படுத்தி, இந்தாண்டின் முதல் ஹிட் படம் ஜி.வி. படமான 'டார்லிங்' தான் என்று கூற வைத்தார்கள். 'நீ நடிகன் மாதிரி இருக்கிறாய்' என்று வசந்தபாலன் சார் கூறினாரே தவிர நடிக்க எல்லாம் அழைக்கவில்லை.
நாயகனாகி விட்டீர்கள், தற்போது கிடைத்திருக்கும் இடத்தை தக்க வைத்து கொள்ள வேண்டும் என்ற பயம் இருக்கிறதா?
கண்டிப்பாக அந்த பயம் இருக்கிறது. விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், தொலைக்காட்சி நிறுவனங்கள் உள்ளிட்டவர்கள் என்னை வைத்து படம் பண்ணலாம் என்று தயாரிப்பாளர்களுக்கு தெரிவித்திருக்கிறார்கள். வியாபாரம் இருக்கிறது என்கிறார்கள். அதை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் தான் அதிகமாக இருக்கிறது. தற்போது 'த்ரிஷா இல்லனா நயன்தாரா' மிகவும் எதிர்பார்ப்பில் இருக்கக்கூடிய ஒரு படம்.
படங்கள் தயாரிப்பதை ஏன் நிறுத்தி விட்டீர்கள்?
ஒரு நடிகராக ஆனவுடனே, நாலு வெளித் தயாரிப்பாளர்களுக்கு படம் பண்ண உறுதியளித்திருக்கிறேன். அனைத்துமே பெரிய நிறுவனங்கள் தான். வெளியே படம் பண்ணும் போது தான் நிறைய பேருக்கு உதவியாக இருக்கும். நானே நடிக்கும் படங்களில், நானே நடித்தால் நன்றாக இருக்காது. நானே நடித்து, நானே சம்பாதிப்பது எனக்கு என்னவோ தப்பாக தோன்றுகிறது. நான் நடிக்காத ஒரு படத்தை அடுத்த வருடம் தயாரிப்பேன். அதை நான் தயாரிப்பு நிறுவனம் தொடங்கியவுடன் முடிவு பண்ணியது, இப்போது இல்லை.
உங்களது இசையமைப்பில் 50வது படமான அட்லீ - விஜய் படத்தைப் பற்றி..
6 பாடல்கள் கண்டிப்பாக இருக்கு, விஜய் சார் ஒரு பாட்டு இல்லை என்றால் இரண்டு பாட்டு கண்டிப்பாக பாடுவார். அப்படத்தின் தலைப்பு எல்லாம் நீங்கள் இயக்குநரிடம் தான் கேட்க வேண்டும். இதுவரை எந்த ஒரு தலைப்பும் இறுதியாகவில்லை. படப்பிடிப்புக்கான எல்லா பாடல்களையும் முடித்துக் கொடுத்துவிட்டேன். இறுதி பாடல் பதிவு ரஷ்யாவில் பண்ண இருக்கிறேன். 2006 செப்டம்பரில் எனது முதல் படமான 'வெயில்' இசை வெளியானது. 2016-ல் எனது 50 படத்தின் இசை வெளியாக இருக்கிறது. அறிமுகமாகி 10 ஆண்டுகள் முடிக்கப் போகிறேன், ஒப்பந்தமானது அனைத்தும் சேர்த்து 58 படங்கள் பண்ணியிருக்கிறேன். 50க்கும் மேற்பட்ட விளம்பரங்கள் பண்ணியிருக்கிறேன், படத்தின் இசையாக தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் செய்திருக்கிறேன்.
விஜய் - அஜித் இருவருடனும் பழகி இருக்கிறீர்கள். இருவருடைய குணாதிசயங்களைப் பற்றிச் சொல்லுங்கள்..
விஜய் சார் 'த்ரிஷா இல்லனா நயன்தாரா' ட்ரெய்லரை பார்த்துவிட்டு சூப்பரா இருக்கு என்றார். அட்லீ படத்தின் பாடல்கள் கேட்டுவிட்டு ரொம்ப சந்தோஷப்பட்டார். எனக்கு ஒரு அண்ணன் மாதிரி தான் விஜய் சார். அதே மாதிரி அஜித் சார் எனக்கு ரொம்ப உத்வேகம் அளிக்க கூடியவர். இருவரிடம் என்ன கற்றுக் கொள்ள வேண்டும் என்றால் கண்டிப்பாக ஊக்கம் மற்றும் நம்பிக்கை தான். இருவருமே அடுத்தவங்களைப் பற்றி பொறாமைப்பட மாட்டார்கள். அவங்க மீது பயங்கர நம்பிக்கை யாக இருப்பார்கள். விஜய் சார் எல்லாம் அனைவருமே ரொம்ப ஒப்பனாக பாராட்டுகிறார். ஒரு சதவீதம் கூட இவர் நம்மோட போட்டி ஆச்சே என்ற நினைப்பது கிடையாது. இருவருடைய நம்பிக்கை தான் எனக்கு ரொம்ப பிடிச்சது.
thanx - the hindu