'காக்காமுட்டை' மணிகண்டன் கதை, திரைக்கதை, வசனத்தில் உருவான படம், 'மதயானைக்கூட்டம்' படத்துக்குப் பிறகு கதிர் நடிக்கும் படம் என்ற இந்த காரணங்கள் போதாதா 'கிருமி ' படத்தைப் பார்க்க.
107 நிமிடங்கள் மட்டுமே ஓடும் 'கிருமி' படம் தமிழ் சினிமாவின் நல்வரவா? பார்க்கலாம்.
'கிருமி' கதை: வேலையில்லாமல் திரியும் கதிர், சார்லி உதவியுடன் போலீஸூக்கு எடுபிடியாக வேலை செய்கிறார். ஒரு கட்டத்தில் இன்ஃபார்மராக மாறுகிறார். அதற்குப் பிறகு நடக்கும் சம்பவங்கள் கதிரின் வாழ்க்கையைப் புரட்டிப் போடுகின்றன. அந்த சம்பவங்கள் என்னென்ன? கதிர் என்ன ஆகிறார்?முன்னுக்கு வந்தாரா? என்பது மீதிக் கதை.
வழக்கமான போலீஸ் கதையில், பழக்கப்பட்ட ஏரியாவைத் தொடாமல் பழக்கமில்லாத, அதிகம் தொடாத கதைக் களத்தைத் தேர்ந்தெடுத்து அதில் உள்ள அரசியலை ஆழமாக பேசிய விதத்தில் அறிமுக இயக்குநர் அனுசரண் கவனம் ஈர்க்கிறார்.
மதயானைக்கூட்டத்தில் அளவாக நடித்த கதிருக்கு 'கிருமி' படம் ஒரு நல்ல நடிகன் என்ற அடையாளத்தைத் தந்திருக்கிறது. அதிகம் யோசிக்காமல், உடனே முன்னுக்கு வர வேண்டும். பின் விளைவுகள் குறித்து இப்போதே சிந்திக்கக்கூடாது என்ற இளைஞனின் கதாபாத்திரத்துக்கு கதிர் பக்காவாகப் பொருந்துகிறார். அடிவாங்கி அழுவதும், பழிவாங்கும் தருணத்துக்காகக் காத்திருப்பதும், சின்ன சின்ன விஷயங்களுக்கே கெத்து காட்டுவதும் என கதாபாத்திரத்தை தூக்கி நிறுத்துகிறார்.
படத்தின் ஹீரோ கதிர் தான் என்றாலும், மையமாக இருப்பது சார்லிதான். தன் வேலையைப் பற்றி தானாக சொல்லாதது, எதற்கும் அலட்டிக்கொள்ளாமல் இருப்பது, துடுக் வெடுக் என இருக்கும் கதிருக்கு அதட்டி, ஆலோசனை சொல்வது என்று குணச்சித்ர நடிப்பை அள்ளி வழங்கியிருக்கிறார். பழக்கமான, பாசமான நபராக சார்லி மனதில் நிறைகிறார்.
கதிரின் நண்பனாக வரும் யோகி பாபு கிடைத்த கேப்பில் எல்லாம் ஸ்கோர் செய்கிறார். 'எனக்கு ஒரு பொண்ணு கிடைச்சா பூ மாதிரி பார்த்துப்பேன். எவன் கொடுக்கிறான்' என்று யோகி பாபு கொடுக்கும் கவுன்டர்களுக்கும், இன்ஸ்பெக்டரைப் பார்த்து போட்டோவில் போஸ் கொடுத்தே வணக்கம் சொல்லும் ரியாக்ஷன்களுக்கும் வெடித்துச் சிரிக்கிறது தியேட்டர்.
குற்ற உணர்ச்சி, வன்மம் என எதையும் காட்டிக்கொள்ளாமல் துரோகம் செய்யும் கதாபாத்திரத்தில் டேவிட் கம்பீரம் காட்டுகிறார்.
ரேஷ்மி மேனன், மாரிமுத்து, தென்னவன் ஆகியோர் பொருத்தமான தேர்வு.
'அஞ்சு எருமை மாட்டை கொடுத்து மேய்ச்சிட்டு வரச்சொன்னா, நாலு தொலைஞ்சுட்டுன்னு சொல்லிட்டு, அந்த ஒண்ணையும் வித்து திங்கிறவங்கதானய்யா நீங்க?' என்று இரண்டு இன்ஸ்பெக்டர்களிடமும் சொல்லும் இடத்தில் மணிகண்டன் - அனுசரண் வசனத்துக்கு குலுங்கி அடங்குகிறது தியேட்டர்.
அருள் வின்சென்ட்டின் ஒளிப்பதிவும், கேவின் இசையும் பின்னணியும் படத்துக்கு மிகப்பெரிய பலம்.
இயக்குநரே எடிட்டர் என்பதால் படத்தில் அலுப்பை, சலிப்பைத் தருகிற எந்த காட்சியும் வைக்காமல் நச்சென்று கிரிஸ்ப்பாகக் கொடுத்திருக்கிறார்.
கதை, திரைக்கதை, வசனத்தில் அனுசரணுடன், 'காக்கா முட்டை' மணிகண்டனும் இணைந்து பணியாற்றி இருப்பது படத்துக்கான வேகத்தைக் கூட்டியிருக்கிறது.
இயல்பாகவே நம்மைக் கடந்து போகும் சாதாரண இளைஞன் கதாபாத்திரத்தை ஹீரோவாகக் காட்டிய இயக்குநர், எந்த சமரசமும் இல்லாமல் வைத்திருக்கும் கிளைமாக்ஸ் மிக மிக பொருத்தமானது.
மொத்தத்தில் 'கிருமி' ரசிகர்களிடம் பரவ வேண்டிய படம்
thanx-thehindu