Showing posts with label 'கடல் மீன்கள்’. Show all posts
Showing posts with label 'கடல் மீன்கள்’. Show all posts

Wednesday, March 13, 2013

ஹரிதாஸ் படம் கொரிய மொழிப் படமான 'மாரத்தான்’ படத்தின் தழுவலா? இயக்குநர் குமரவேலன் பேட்டி

''ஹரி பேசினா எனக்கு சந்தோஷம்!''

க.நாகப்பன், படம்: கே.ராஜசேகரன்

ஒவ்வொரு குழந்தைக்கும் அவங்க அப்பாதான் முதல் ஹீரோனு படத்துல ஒரு வசனம் வரும். அது என் அப்பா ஜி.என்.ரங்கராஜனை மனசுல வெச்சு நான் எழுதின வசனம். 



 'கல்யாணராமன்’, 'கடல் மீன்கள்’, 'மீண்டும் கோகிலா’னு அவர் இயக்கிய 17 படங்களில் ஏழு படங்களுக்கு கமல் சார்தான் ஹீரோ. 'என் மகன் இயக்கிய படம்’னு சொல்லி என் அப்பா பெருமைப்படும் அளவுக்கு ஒரு படம் எடுக்கணும்னு நினைச்சேன். இப்போ 'ஹரிதாஸ்’ பார்த்துட்டு அப்பா பூரிச்சு நிக்கிறார்.



 ஒரு இயக்கு நரா ஜெயிச்சதைவிட, ஒரு மகனா ஜெயிச்சது தான் இன்னும் மனசுக்கு நிறைவா இருக்கு!''- செல்போன் ரிங்டோன்களுக்கு இடையில் சின்ன தாகச் சிரிக்கிறார் ஜி.என்.ஆர்.குமரவேலன். ஆட்டிஸம் பாதித்த குழந்தைகளின் ஆழ்மனதைப் புரியவைத்த 'ஹரிதாஸ்’ படத்தின் இயக்குநர்


.
'' 'நினைத்தாலே இனிக்கும்’, 'யுவன் யுவதி’ படங்களின் இயக்குநரிடம் இருந்து 'ஹரிதாஸ்’ மாதிரி ஒரு படம் எதிர்பார்க்கவே இல்லை...''



'' 'நினைத்தாலே இனிக்கும்’ படம் 'மேக்கிங் தெரிஞ்ச டைரக்டர்’னு பேர் வாங்கிக் கொடுத்தது. அடுத்து, ஒரு காமெடிப் படம் பண்ணலாம்னு 'யுவன் யுவதி’ பண்ணேன். அது எதிர்பார்த்த விளைவு கொடுக்கலை. சினிமாவுக்குள் இருந்தாலும் எனக்கான சினிமா எதுனு குழப்பமா இருந்துச்சு. என்னைப் புதுசா அடையாளப்படுத்திக்கணும்னு தோணுச்சு. 



அப்போ 'ஹரிதாஸ்’ கதைக்கான விதை 'ஹரி’கிட்ட இருந்தே எனக்குக் கிடைச்சது. என் நெருங்கிய உறவினரின் பையன் ஹரி, ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்டு இருந்தான். ஹரியின் மனநிலை இயல்பு நிலையில் இருக்கணும்னு அவனைச் சிறப்புப் பள்ளியில் சேர்க்காமல், ஒரு தனியார் பள்ளியில் சேர்த்தாங்க அவன் பெற்றோர். அங்கே அவனைப் பார்த்துக்க முடியாதுனு டி.சி. கொடுத்து அனுப்பிட்டாங்க. அப்புறம் ஒரு அரசாங்கப் பள்ளியில் அனுமதி கேட்டப்ப, அங்கேயும் தயங்கினாங்க. 'எனக்குச் சில மாசம் அவகாசம் கொடுங்க. நானும் அவன்கூடவே இருந்து பார்த்துக்கிறேன். அவன் சகஜ நிலைமைக்குத் திரும்புற வாய்ப்பைக்கூட மறுத்துடாதீங்க’னு ஹரியின் அம்மா கெஞ்சிக் கேட்டுக்கிட்டாங்க. 



தினமும் வகுப்பில் ஹரி பக்கத்தில் உட்கார்ந்து, பாடத்தைக் கவனிக்கிறது எப்படி, டாய்லெட்ல யூரின் போறது எப்படினு பொறுமையாக் கத்துக்கொடுத்தாங்க. இப்போ ஹரி ரெண்டாவது படிக்கிறான். பள்ளியில் சேர்ந்தப்போ, அவன் கடைசி ரேங்க். இப்போ கூடப் படிக்குற நாற்பது மாணவர்கள்ல ஹரிதான் முதல் ரேங்க். இதுதான் 'ஹரிதாஸ்’ உருவான கதை!''



''ஆனா, கொரிய மொழிப் படமான 'மாரத்தான்’ படத்தின் சாயல் இருக்கே உங்க படத்தில்?''



''ஆட்டிஸம் சம்பந்தமா 'மாரத்தான்’ படமும் சேர்த்து நூறு படங்களாவது வந்திருக்கும். ஒவ்வொரு படத்தின் ஒன் லைனும் ஒண்ணுதான். ஆனா, நான் படமாக்கினது ஒரு உண்மைக் கதை. 'ஹரிதாஸ்’ல க்ளைமாக்ஸ் மட்டும் எப்படி முடிக்கலாம்னு யோசிச்சப்போ, கால்பந்து, கிரிக்கெட், ஓட்டப்பந்தயம்னு பல சாய்ஸ்கள் இருந்தன. அப்போ 'மாரத்தான்’ படத்தின் இன்ஸ்பிரேஷன்ல ஓட்டப்பந்தயத்தை ஃபிக்ஸ் பண்ணினேன்.



 மத்தபடி, அந்தப் படத்தை இமிடேட் பண்ணவோ, அப்பட்டமா தழுவவோ இல்லை. இதுல என் வேலையைவிட ஹரி கேரக்டரின் உணர்வைக் கச்சிதமா உள்வாங்கிட்டு வெளிப்படுத்தின ப்ருத்விராஜ்தாஸ்தான் பெரும் பாராட்டுக்கு உரியவன்!'' என்று குமரவேலன் ப்ருத்வியைப் பார்க்க, அவன் பேசத் தொடங்கினான்.



''நான் கோவை இந்தியன் பப்ளிக் ஸ்கூல்ல செவன்த் படிக்கிறேன். எனக்கு யோகா தெரியும். உடம்பை நெகிழ்வா வெச்சுப் பழகிட்டதால, வெறிச்சுப் பார்க்கிறது, கையைக் கோணலாக்கி, காலைக் குறுக்கி நடக்கிறதுனு சுலபமா செய்ய முடிஞ்சது. ஆட்டிஸம் ஸ்கூல்ல போய்ப் பார்த்தேன். கொஞ்சம் கொஞ்சமா அவங்களைப் புரிஞ்சுக்கிட்டேன். அதுல சில குழந்தைங்க நம்மளைவிடப் புத்திசாலியா இருக்காங்க. 


ஷூட்டிங்ல சில சீன்ல நடிக்க ரொம்பக் கஷ்டமா இருக்கும். அழுதுருவேன். அப்புறம் குமரவேலன் அங்கிள், 'செல்லம்... ராஜா... உன் கையிலதான் என் படமே இருக்குடா’னு கொஞ்சிக் கேட்பார். 'சரி... எனக்கு சிக்கன் தந்தூரி மட்டும் வாங்கிக் கொடுத்துடுங்க’னு சொல்லிட்டு நடிச்சுக்கொடுத் துடுவேன். ஆனா, கையை உதறி உதறியே மூணு மாசம் பழகிட்டேனா, இப்பவும் என் கை உதறலைக் கட்டுப்படுத்த முடியலை. ஹரி இன்னும் எனக்குள்ள அப்படியே இருக்கான். க்ளைமாக்ஸ்ல நான் 'அப்பா’னு ஒரு வார்த்தை பேசுவேன். ஆனா, நிஜ ஹரி இதுவரை ஒரு வார்த்தைகூடப் பேசினது இல்லை. அவன் பேசினா, எனக்கு இன்னும் சந்தோஷமா இருக்கும்!''



ப்ருத்வியின் புன்னகை அவ்வளவு அழகாக இருக்கிறது!


நன்றி - விகடன்