திரைக்கதை மன்னன் கே பாக்யராஜ் மாதிரி ஜனரஞ்சகப்படங்களை இயக்கி மக்கள் மனதில் நின்றவர்கள் பலர் ,பாலுமகேந்திரா ,மகேந்திரன் மாதிரி கலை அம்சம் பொருந்திய விருதுக்குரிய படங்களை இயக்கி கவித்துவமான படங்களை தருகின்ற இயக்குனர்கள் சிலர் . வெகுஜன ரசனை + கலை அம்சம் என இரு வெற்றிக்குதிரைகளில் ஒரே சமயத்தில் பவனி வருபவர்கள் அரிதிலும் அரிதாக வெகு சிலரே! அப்படி ஒரு அபூர்வமான இயக்குனர்தான் மாரி செல்வராஜ்
பரியேறும் பெருமாள் (2018) ஒரு மிகப்பெரும் அதிர்வை தமிழ் சினிமாவில் ஏற்படுத்தியது . கர்ணன் (2021) , மாமன்னன் (2023) ஆகிய அடுத்தடுத்த அவரது படங்கள் அவரை வெற்றிப்பட இயக்குனராக தக்கவைத்தன. இப்போது வெளியாகி இருக்கும் வாழை அவரது முந்தைய மூன்று படங்களை விட தரத்தில் , கவித்துவத்தில் ஒரு படி மேலே உயர்ந்து நிற்கிறது
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன் எட்டாம் வகுப்புப்படிக்கும் ஒரு பள்ளி மாணவன் .அம்மா,அக்கா என அவனது குடும்பம் மிக சிறியது . வாழை தோப்பில் அறுவடை நடக்கும்போது அவற்றை சுமந்து லாரியில் ஏற்றும் கூலித்தொழிலாளிகள் அவர்கள் பள்ளி விடுமுறை நாட்களான சனி , ஞாயிறு , மற்றும் பரீட்சை முடிந்த விடுமுறை நாட்களில் நாயகனும் அதே கூலித்தொழிலை செய்து வருவதுண்டு . அம்மாவின் வற்புறுத்தலுக்கு இணங்க வேண்டா வெறுப்பாகத்தான் அந்த வேலையை செய்கிறான் . அவனுக்கு பள்ளி செல்வதில் தான் இஷ்டம் .காரணம் அவன் வகுப்பில் படிப்பில் முதல் ,மாணவன் . அதை விட முக்கியக்காரணம் நாயகனுக்கு பள்ளி டீச்சர் ஒருவர் மேல் இனம் புரியாத கிரஷ்
வாழைத்தார் சுமந்து வர ஒரு தாருக்கு ரூ 1 தான் கூலி .அது மிகக்குறைவு எனவும் இரு மடங்காக அதாவது ஒருதாருக்கு ரூ 2 சுமை கூலி வேண்டும் என போராட்டம் நடத்துகிறார்கள் அதில் வெற்றியும் பெறுகிறார்கள் . இந்தப்போராட்டத்துக்கு தலைமை தாங்கிய கம்யூனிச சித்தாந்த இளைஞனுக்கும் , நாயகனின் அக்காவுக்கும் ஒரு காதல் . நாயகனுக்கும் , டீச்சர் மேல் இனம் புரியாத அன்பு
படத்தின் முதல் பாதி முழுக்க கமர்ஷியலாக , ஜனரஞ்சகமாக பயணிக்கிறது . கடைசி 20 நிமிடங்கள் மட்டும் உருக்கம் . உண்மையில் நடந்த சம்பவம் அது
நாயகன் ஆக 13 வயது சிறுவனாக பொன்வேல் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் . அல்லது அவரை இயக்குனர் பிரமாதமாக வேலை வாங்கி இருக்கிறார்
நாயகனின் அக்காவாக திவ்யா துரைசாமி கச்சிதமாக நடித்திருக்கிறார் . காதலனுடன் ஒரு வார்த்தை கூட பேசாத , விழிகளால் மட்டுமே சந்தித்துக்கொள்ளும் கண்ணியக்காதல் வெளிப்படுத்திய விதம் அழகு . அவரது காதலன் ஆக கலையரசன் கச்சிதம் . பாந்தமாந நடிப்பு
நாயகன் மையல் கொள்ளும் பூங்கொடி டீச்சர் ஆக நிகிலா விமல் அட்டகாசமான நடிப்பு , அடக்கமான அழகு . நாயகனின் அம்மாவாக ஜானகி உணர்ச்சிப்பிழம்பாக நடித்திருக்கிறார் . புரோக்கர் ஆக வரும் பத்மன் , வியாபாரியாக வரும் சதிஷ் குமார் ஆகிய இருவரும் வில்லன் ரோலை சரியாகக்கையாண்டிருக்கிறார்கள்
ஒளிப்பதிவு தேனீ ஈஸ்வர் . அழகான கிராமத்தை 2 மணி நேரம் உலா வந்ததைப்போன்ற ஒரு திருப்தி அவரது படப்பிடிபில் .சந்தோஷ் நாராயணன் இசையில் நான்கு பாடல்கள் .அனைத்தும் அருமை . பின்னணி இசையிலும் முத்திரை பதித்திருக்கிறார் . சூர்யா பரந்தாமன் எடிட்டிங்கில் 2 மணி நேரம் படம் ஓடுகிறது
சபாஷ் டைரக்டர்
1 நாயகன் டீச்சரின் கர்ச்சீப்பை எடுத்து வைத்துக்கொண்டு அதை தன அக்காவின் கர்ச்சீப் என சொல்வதும் அதை நிருபிக்க சாட்சியாய் நண்பனை துணைக்கு அழைப்பதும் அந்த க்ளாஸ் ரூம் காட்சி கவிதை
2 நாயகன் தான் செய்த தப்புக்கு அம்மாவிடம் மன்னிப்புக்கேட்கும் உருக்கமான காட்சியை இண்டர்வல் பிளாக் சீன் ஆக வடிவமைத்த விதம்
3 நாயகன் , நண்பன் இருவரையும் ரஜினி ரசிகன் , கமல் ரசிகன் என காட்டி தொடுக்கப்படும் வசனங்கள்
4 டீச்சர் ஒரு டெய்லர் என்பது தெரிந்ததும் நாயகனின் நண்பன் நாயகனின் சட்டையை பிளேடால் கிழித்து டீச்சர் வீ ட்டுக்குப்போக ஐடியா கொடுக்கும் இடம் கலக்கல் ரகம்
5 நாயகன் டீச்சருக்கு மருதாணி இலைகள் தருவது , மயிலிறகு தருவது எல்லாம் கவிதை காட்சிகள் . நாஸ்டாலஜி மொமெண்ட்
6 உண்மை சம்பவம் என சொல்லப்படும் கடைசி 20 நிமிட காட்சிகள் உருக்கம்
ரசித்த வசனங்கள்
1 நம்ம உரிமையை கேட்கும்போது அதை பிச்சைனு பேச எங்கே கத்துக்கிட்டே?
2 ஏழைப்பட்டவங்ககிட்டே மீசையை முறுக்கறதும் , கீழ்மைப்பட்டவங்க கிட்டே வரலாறு பேசுறதும் வீரம் இல்லை .எவன் ஒருத்தன் நான் தான் ராஜா நான் தான் மந்திரினு பேசறானோ அவனை அடிச்சு வீழ்த்துவதுதான் வீரம்
3 ஒரு நல்ல முதலாளி நல்ல வேலைக்காரனை இழந்துடக்கூடாதில்லை? வரச்சொல்லு , பேசிக்கலாம்
4 நான் எல்லாம் கமல் ரசிகன் நடிப்பு சொல்லிக்கொடுக்கணுமா? எத்தனை அவார்டு நடிப்பை அள்ளி வீசி இருக்கோம் ?
5 நம்ம ஊர்ல ரஜினி படம் தான் ஓடுது , எங்கே கமல் படம் ஓடுது ?
6 யாரை நம்பினாலும் இந்த சாமியை மட்டும் நம்பக்கூடாது , எத்தனை முறை வேண்டி இருப்பேன் ? கண்டுக்கவே இல்லையே?
7 நான் இல்லாத ஊருல என் மகன் வாழணும்னா அவனுக்கு உழைக்கத்தெரியனும், இல்லைன்னா இந்த ஊரு அவனை அடிச்சு சாப்பிட்டுடும்
8 டீச்சர் , இன்னைக்கு நீங்க ரொம்பா அழகா இருக்கீங்க
அப்போ இதுக்கு முன்னால நான் அழகா இல்லையா? என்னடா சொல்றே?
அதில்லை .அப்போ என் அம்மா மாதிரி இருந்தீங்க , இப்போ அக்கா மாதிரி இருக்கீங்க
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 பூங்கொடி என்ற முதல் வரியில் தொடங்கும் பாடல் கேட்கிறான் நாயகன் . அதற்கு நண்பன் கூறும் பாடலில் முதல் வார்த்தையாய் பூங்கொடி வரவில்லை . இயக்குனர் மிஸ் செய்த பாடல் பூ மழை பொழியுது படத்தில் வரும் ஏய் பூங்கொடி ..பாட்டை உபயோகித்திருக்கலாம், . ஆனால் கதை நடக்கும் கால கட்டம் பழையது என்பதால் விட்டிருக்கலாம்
2 நம்ம ஸ்கூலில் ரொம்ப நாட்களுக்குப்பின் ஆண்டு விழா வருதுன்னு ஒரு டயலாக் வருது , ஆண்டு விழா என்பது வருடம் ஒரு முறை தானே வரும் ? அல்லது நீண்ட இடைவெளிக்குப்பின் அல்லது பல ஆண்டுகளுக்குப்பின் என்பதுதானே சரி ?
3 நாயகனின் அம்மா கடனை அடைக்க மாட்டை விற்கும்போது நாயகன் கதறுவதாக ஒரு சீன் . அந்த சீன் ஆடியன்ஸின் மனதைத்தைக்க இதற்கு முன்பே ஒரு காட்சியில் நாயகனுக்கும், மாட்டுக்கும் ஆன பாண்டிங் பற்றிக்காட்டி இருக்க வேண்டும்
4 புரோக்கரிடம் வாங்கிய கடனுக்காக நாயகனின் அம்மா மாட்டை விற்பது போல் ஒரு காட்சி., அடுத்த காட்சியிலேயே உடல் நிலை சரி இல்லாத அம்மா தனக்குப்பதிலாக வேலைக்குப்போக மகனை அனுப்புகிறாள் . போக மறுக்கும் மகனிடம் அக்கா சொல்கிறாள் . அம்மா புரோக்கரிடம் வாங்கிய கடனுக்கு ஒண்ணா கடனை அடைக்கணும் . அல்லது அவளுக்கு மாற்றாக மகன் வேலைக்குப் போகணும் . அப்போ மாட்டை விற்ற காசு என்ன ஆச்சு ?
5 ஒவ்வொரு முறை வேலைக்குப்போகும்போதும் பழைய சோறு டிபன் பாக்சில போடுவது போல பல காட்சிகள் வருது . சுடு சோறு ஒரு டைம் கூட இல்லை , அது எதனால் . ? அவ்ளோ சோறு மிச்சம் ஆகும் அளவு முன் தினமே வடிக்கணுமா? அடுத்த நாள் சுடு சோறாக வடிக்கலாமே?
6 நாயகன் காலையில் சாப்பிடவில்லை .அம்மா காலை , மதியம் இருவேளைகளுக்கும் இரண்டு தூக்கு போசி களில் அவனுக்கு சோறு கொடுத்து விடுகிறாள் லாரியில் ஏறிய அவன் பிறகு போகாமல் ஸ்கூலுக்குப்போகிறான் . அப்போது அக்கா அவனிடம் அவனது இரு தூக்குப்போசிகளையும் கொடுக்க வேண்டாமா? வெறும் கையுடன் போகிறான்
7 நாயகன் படிப்பது மாணவர்களுக்கான பள்ளி . அதன் ஆண்டு விழாவில் ஆட சோலோ ஹீரோ சாங்க் தானே செலக்ட் பண்ணனும் ? பஞசு மி ட்டாய் சேலை கட்டி பாட்டு டூயட் சாங் .மேட்ச் ஆகாதே? டீச்சர் ஆடிக்காட்டும் டான்ஸ் ஸ்டெப்ஸ் கூட பெண் ஆடுவது போல தான் இருக்கு
8 மிக வறுமையில் வாடும் நாயகனின் வீட்டில் மண் பானைகள் தானே இருக்கணும் ? ஆர்ட் டைரக்டர் அல்லது புரொடக்சன் டிசைன் கவனக்குறைவால் புத்தம் புதிய எவர் சில்வர் அண்டாக்கள் 3 , ஒரு எவர்சில்வர் குடம் , அடுக்கி வைக்கப்பட்டிருக்கு .ஒரு சீனில் நாயகனை அடிக்க அம்மா புத்தம்புதிய பிளாஸ்டிக் குடத்தை எடுக்கிறாள்
9 ஒரு பணக்காரன் அல்லது மிடில் கிளாஸ் ஆள் சாப்பாட்டை கோபத்தில் / துக்கத்தில் வீசலாம் , ஆனால் ஏழைக்குடும்பத்தில் உணவு அன்ன லட்சுமி . எறிய மாட்டார்கள் .க்ளைமாக்சில் அம்மா சாப்பாட்டு தட்டத்தை எறிவது,சோற்றை இறைப்பது செயற்கை
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் -கிளீன் யு
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - அழகி , ஆட்டோ கிராப் மாதிரி மனதில் நீண்ட நாட்களுக்கு தங்கி இருக்கும் கவிதையான படம் . க்ளைமாக்ஸ் மட்டும் பருத்தி வீரன் போல தாக்கத்தை உண்டு பண்ணும் . கனத்த மனதுடன் வெளி வர வேண்டி இருக்கும் . எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் = 50 . குமுதம் = நன்று . அட்ரா சக்க ரேட்டிங்க் 4 / 5
வாழை Vaazhai | |
---|---|
சுவரொட்டி | |
இயக்கம் | மாரி செல்வராஜ் |
தயாரிப்பு | சாஜித் சிவானந்தன் திவ்யாமாரி செல்வராஜ் மாரி செல்வராஜ் திலீப் சுப்பராயன் |
கதை | மாரி செல்வராஜ் |
இசை | சந்தோஷ் நாராயணன் |
நடிப்பு | பொன்வேல் எம் இராகுல். ஆர் கலையரசன் நிகிலா விமல் |
ஒளிப்பதிவு | தேனி ஈஸ்வர் |
படத்தொகுப்பு | சூரியா பிராத்தமன் |
கலையகம் | ஹாட் ஸ்டார் நவ்வி புகைப்பட நிறுவனம் திலீப் சுப்பராயன் |
விநியோகம் | ரெட் ஜெயன்ட் மூவீசு |
வெளியீடு | 23 ஆகத்து 2024 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
0 comments:
Post a Comment