2018ல் நயன் தாரா நாயகியாக நடிக்க நெல்சன் திலீப் குமார் இயக்கிய கோல மாவு கோகிலா சூப்பர் ஹிட். 2021ல் சிவகார்த்திகேயன் நடித்து வெளி வந்த டாக்டர் படமும் ஹிட். ஆனால் ஹாட்ரிக் ஹிட்டை எதிர் நோக்கி விஜய் நடிப்பில் 2022 ல் வெளி வ்ந்த பீஸ்ட் அட்டர் ஃபிளாப். அதனால் ஒரு வெற்றியைத்தர வேண்டிய கட்டாயத்தில் இயக்குநர் நெல்சன் இருந்தார். 2010ல் சிம்பு வின் நடிப்பில் வேட்டை மன்னன் இவர் இயக்கத்தில் வெளியாக இருந்து பிராஜக்ட் தள்ளிப்போனது
காலா, தர்பார், அண்ணாத்த என்று தொடர் தோல்விகளால் ரஜினி ஒரு மெகா ஹிட் கொடுக்க வேண்டிய நெருக்கடியில் இருந்தார்.. அது போக கமல் நடிப்பில் வெளியாகி இண்டஸ்ட்ரி ஹிட் அடித்த விக்ரம் படத்தின் வசூலை பிரேக் பண்ண வேண்டிய டார்கெட்டும் சூப்பர் ஸ்டாருக்கு மறைமுகமாக இருந்தது
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன் ரிட்டயர் ஆன ஜெயிலர். அவரது மகன் அசிஸ்டெண்ட் கமிஷனர் ஆக பணி புரிகிறார். அவர் இப்போது சிலை கடத்தல் வழக்குகளில் சிக்கி இருக்கும் வில்லனைப்பிடிக்க தீவிர முயற்சியில் இருக்கிறார். இந்த மாதிரி சூழ்நிலையில் நாயகனின் மகன் கடத்தப்படுகிறார், அல்லது காணாமல் போகிறார். ஆளே அவுட் என பலரும் பேசிக்கொள்கிறார்கள் . இதனால் நாயகன் களத்தில் இறங்குகிறார்
அவர் வரிசையாக வில்லனின் ஆட்களைப்போட்டுத்தள்ளிக்கொண்டிருக்கும்போது வில்லனிடம் இருந்து ஒரு ஆஃபர் வருகிற்து. நாயகனின் மகன் உயிருடன் தான் இருக்கிறான். அவனை பத்திரமாக ஒப்படைக்க வில்லன் கேட்கும் அபூர்வமான பொருள் ஒன்றை வில்லனிடம் ஒப்படைக்க வேண்டும். அதன்படி நாயகன் அந்த அபூர்வப்பொருளை ஒப்படைத்து மகனை மீட்டாரா? வில்லனை வீழ்த்தினாரா? என்பது மீதி திரைக்கதை
கதைக்கரு ஒரு சாதாரண , வழக்கமான மாஸ் மசாலாப்படங்களில் வருவது தான். ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு ஹீரோவை தேர்ந்தெடுத்து இதை பேன் இந்தியா படமாக்கி ப்ரமோஷனில் கலக்கி எப்படியோ ஜெயித்து விட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும்
நாயகன் ஆக ரஜினி ஸ்டைலாக நடித்திருக்கிறார். வயோதிகம் காரணமாக லாங் ஷாட் நடையில் அவரிடம் ஒரு தளர்ச்சி தெரிகிறது . ஃபிளாஸ்பேக் காட்சியில் ஜெயிலர் ஆக கலக்கி இருந்தாலும் அது மெயின் கதைக்கு சம்பந்தம் இல்லை . ரஜினி ரசிகர்களுக்காக உருவாக்கப்பட்ட காட்சி அது .க்ளைமாக்ஸ் காட்சியில் சுருட்டு பிடிப்ப்து போல் நடித்தது ஏனோ? பாபா பட பிரச்சனை வந்த போது இனி புகை பிடிக்கும் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்றார்.
நாயகனுக்கு ஜோடியாக ரம்யா கிருஷ்ணன். பயந்து பயந்து பதுங்கும் கேரக்டர். படையப்பா லெவலில் ஏதாவது சீன் இருக்கும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றம்
யோகி பாபு முதல் பாதியில் லைட்டாக காமெடி செய்ய முயற்சி செய்து இருக்கிறார். விடிவி கணேஷ் யோகிபாபுவை விட நன்கு ஸ்கோர் செய்கிறார்,
தமனா ஒரே ஒரு பாடல் காட்சியில் மட்டும்.
வில்லன் ஆக வினாயகன் கலக்கி இருக்கிறார், அவரது தெனாவெட்டான உடல் மொழி அபாரம். சிவராஜ் குமார் , மோகன் லால் , ஜாக்கி ஷெராப் எல்லாம் சும்மா ஓரிரு காட்சிகளில் வ்ருகிறார்கள், அவ்வளவ் தான்
ரஜினியின் மகன் ஆக வசந்த் ரவி ஓக்கே ரகம் தான், ஆனால் பிரபலமான இளம் ஹீரோ யாரையாவது நடிக்க வைத்திருக்கலாம்
இசை அனிரூத். பிஜிஎம் தெறிக்கிறது . 2 பாடல்கள் ஹிட் ஆகி இருக்கின்றன .
தேவையற்ற வன்முறைக்காட்சிகள் அதிகம் . விஜய் கார்த்திக் கண்ணனின் ஒளிப்பதிவில் பாஸ் மார்க் வாங்கி இருக்கிறார், ஆர் நிர்மலின் எடிட்டிங்கில் படம் இரண்டே முக்கால் மணி நேரம் ஓடுகிறது
சபாஷ் டைரக்டர் ( நெல்சன்)
1 படத்தின் பிரமோஷனுக்கு பெரிதும் உதவும் விதத்தில் பிரமாதமாகக்கட் செய்யப்பட்டு வெளியான ட்ரெய்லர் உருவக்கிய விதம்
2 பின் பாதியில் தமனாவைக்காதலிக்கும் தெலுங்கு ஹீரோ , டைரக்டர் காமெடி டிராக் எதிர்பாராத இன்ப அதிர்ச்சி
3 பாட்ஷா பட பாணியில் முதல் பாதி திரைக்கதை ரஜினி ரசிகர்களை விசில் போட வைக்கும் காட்சிகள் அமைத்த விதம்
செம ஹிட் சாங்க்ஸ்
1 தலைவரு நிர்ந்தரம்
2 காவாலா
ரசித்த வசனங்கள்
1 இப்படியே உன் கூட இருக்கறவங்களைப்போட்டுத்தள்ளிட்டே இருந்தா கடைசில உன்னைக்காப்பாற்ற யாருமே இருக்க மாட்டாங்க
என்னைக்காப்பாத்திக்க நான் ஒருத்தனே போதும்
2 பூனைனு நினைச்சு புலி வாலைப்பிடிப்பாங்க, நீங்க என்னடா டைனோசர் வாலைப்பிடிச்சு இருக்கீங்க ?
3 பையன் நேர்மையா இல்லைன்னு புகார் பண்ணா பரவால்லை , பையன் நேர்மையா இருக்கான் என்பதையே ஒரு புகாரா சொன்னா எப்படி ?
4 வேலைக்குப்போகும் வரை தான் நமக்கு மரியாதை , படிக்கும்போதும் அது இல்லை , ரிட்டைய்ர் ஆன பின்பும் அது இல்லை
5 பாய் ஃபிரண்ட் மாறிட்டே இருப்பான், ஆனா பெஸ்டி மாறமாட்டான் இல்லை?
6 நான் வைக்கறேன் வெடி , என்னையே பிடிச்சுக்கடி -ங்கற கதையா...
7 இன்னாபா, மல்லிகாவைத்தூக்கிட்டு வருவேனு பார்த்தா மளிகைச்சாமான் தூக்கிட்டு வந்திருக்கே?
8 நான் கோபப்பட்டா எப்படி இருப்பேன்னு பார்க்க ஆசைப்பட்டான், இப்போ நான் கோபமா இருக்கேன், ஆனா அதைப்பார்க்க அவன் இல்லை , பாவம்
9 இந்த முகத்தைப்பார்த்தா பயந்த முகம் மாதிரி தெரியலையெ? எதை வெச்சு இவரு பயந்தார்னு சொல்றீங்க?
அவர்தான் சொன்னாரு
10 பொண்டாட்டி கிட்டே பொய் சொல்லி சொல்லி நரகத்துக்குப்போவோம் போல்
அப்போ மேரேஜே பண்ணி இருந்துருக்கக்கூடாது
11 சொன்னதுக்கு மேலயும் செய்யக்கூடாது , சொன்னதுக்குக்கீழேயும் செய்யக்கூடாது . எப்படி வ்ந்தயோ அப்படியே போ
12 இனிமே நாம உயிரோட இருக்கனும்னா உயிரை எடுக்கும் இடத்தில் நாமதான் இருக்கனும்
13 நேத்து நான் அனுப்பின் ஆட்கள் யாருமே உயிரோட இல்லை
ஓ, அப்போ நீ அனுப்பின ஆட்கள் எல்லாம் அவ்ளோ பலவீனமான ஆட்களா?
இல்லை , நீ கொல்லச்சொன்ன ஆள் அவ்ளோ ஸ்ட்ராங்கான ஆள்
14 வீ ஆர் ஃப்ரம் சிபிஐ
டொனேஷன் ஏதாவது வேணுமா?
15 பிள்ளைங்க கெட்டவங்க ஆகிட்டா பெத்தவங்க வாழ்க்கை நரகம் ஆகிடும்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 ஒரு போலீஸ் ஆஃபீசருக்கு கிரீடத்தில் கேமரா மறைத்து வைக்கப்பட்டிருக்கும் என்பதை யூகிக்க முடியாதா? அப்படியா ஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்து மாட்டிக்கொள்வார்
2 நாயகனின் மருமகளாக வருபவர் கணவர் இறந்ததாக சொல்லப்பட்ட பின் அல்லது அவர் காணாமல் போன பின் சில காட்சிகள் நெற்றியில் குங்குமம் இல்லாமல் வருகிறார். சில காட்சிகள் குங்குமத்துடன் வருகிறார். ஏன் இந்தகுழப்பம் ?
3 நாயகனின் மருமகள் சோகக்காட்சியில் கூட ஃபுல் மேக்கப்பில் இருக்கிறார்
4 அசிஸ்டெண்ட் கமிஷன்ர் காணாமல் போன பதட்டம் அவரது குடும்பத்தில் அவரது அப்பாவைத்தவிர யாருக்கும் பெரிதாக இல்லை . போலீஸ் ஸ்டேஷன் , மீடியா என எந்த இடத்திலும் கவலை இல்லை
5 க்ளைமாக்ஸ் காட்சி தங்கப்பதக்கம், வால்டர் வெற்றிவேல் படங்களை நினைவு படுத்துகிறது.அந்த ட்விஸ்ட் பெரிதாக ஈர்க்கவில்லை
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - 18+ காட்சிகள் இல்லை , ஆனால் வன்முறைக்காட்சிகள் ஓவரோ ஓவர்
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - ரஜினி ரசிகர்கள் கொண்டாடுவார்கள். பொது ரசிகர்களுக்கு இது வழக்கமான ஒரு மசாலாப்படமே . அமேசான் பிரைம்ல காணக்கிடைக்கிறது . ரேட்டிங் 2.75 / 5
0 comments:
Post a Comment