காலம் காலமாக ஒரு பெண் பாதிக்கப்படும்போது பெண் எப்படி நடந்து கொள்ள வேண்டும் ? எந்த மாதிரி ஆடைகளை உடுத்திக்கொள்ள வேண்டும் ? எந்த நேரத்தில் வெளியே போக வேண்டும் ? எப்போது வெளியே போகக்கூடாது என பெண்களுக்குத்தான் அறிவுரை சொல்லப்படுகிறதே தவிர ஆண்களுக்கு யாரும் அறிவுரையோ எச்சரிக்கையோ தருவது இல்லை .
ஒரு பெண் பாலியல் வன் கொடுமைக்கு ஆளாகும்போது அந்த விஷயம் வெளியே தெரிந்தால் அந்தக்கொடுமையை செய்த ஆணுக்கு எந்தவிதமான அவமானம் நேரும், அவனது குடும்பம் எப்படி பாதிக்கப்படும் ? அவனுக்கு ஏற்படும் மன உளைச்சல்கள் எப்படி இருக்கும் ? என்னும் விதமாக எப்போது திரைப்படங்கள் உருவாகிறதோ அப்போதுதான் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் செய்ய ஆண்கள் அச்சப்படுவார்கள்
நாயகி ஒரு ஷாப்பிங் காம்ப்ளெக்சில் சூப்பர்வைசராக பணி புரிகிறாள் . அங்கே சேல்ஸ் கேர்ளாக பணி புரியும் பெண்ணின் காதலனுடன் அவளுக்கு பிரேக்கப் ஆகிறது. முதலில் காதலித்தவள் பின் அவனது கேரக்டர் சரி இல்லாததால் காதல் வாழ்வை முறிவுக்குக்கொண்டு வர தீர்மானிக்கிறாள். ஆனால் காதலன் அவளை விடுவதில்லை . தொடர்ந்து வந்து டார்ச்சர் செய்கிறான். நாயகி அந்தப்பணிப்பெண்ணை டார்ச்சர் செய்யும் அவளது காதலனை எச்சரித்து அனுப்புகிறாள் . இதனால் காதலன் நாயகி மேல் கோபமாக இருக்கிறான்
இன்னொரு சம்பவம், அந்த காம்ப்ளெக்சில் பணி புரியும் ஒரு ஆண் தன் நண்பன் உதவியுடன் ஒரு உடையை திட்டம் போட்டு திருடுகிறான், அதைக்கண்டு பிடித்து அவனை பணியில் இருந்து நீக்குகிறார் நாயகி . இந்த ஒரு முறை மன்னித்து விட்டு விடுங்கள் என அவன் கெஞ்சியும் நாயகி மனம் இரங்கவில்லை . இதனால் அவனும் அவனது நண்பனும் நாயகி மீது கோபமாக இருக்கிறார்கள்
தான் பணி புரியும் இடத்தில் ஒருவரின் திருமண நிகழ்ச்சிக்காக கொடைக்கானல் செல்கிறார் நாயகி . அங்கே அடையாளம் தெரியாத 3 நபர்களால் பாலியல் வன் கொடுமைக்கு ஆளாகிறார்.அந்தகொடுமைக்கு அவரை ஆளாக்கியவர்கள் யார்? மேலே சொன்ன சம்பவங்களில் புதிதாய் முளைத்த அந்த எதிரிகளா? வேறு நபர்களா? இதற்குப்பின் நாயகியின் வாழ்வில் நடந்த திடுக்கிடும் சம்பவங்கள் என்ன? இதுதான் திரைக்கதை
நாயகியாக ஆண்ட்ரியா. மனதில் தங்கி விடும் அருமையான நடிப்பு . பணி புரியும் இடத்தில் கம்பீரமாக நடந்து கொள்வது , பாதிக்கப்பட்ட பின் அவரது உடல் மொழியில் மாற்றம் , அவமானப்படுத்தப்படும்போது அவரது உள்ளக்குமுறல்கள் எல்லாவற்றையும் சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார்
போலீஸ் சப் இன்ஸ்பெக்டராக அழகம்பெருமாள் மாறுபட்ட நடிப்பை வழங்கி உள்ளார் , போலீஸ் ஏட்டய்யாவாக வரும் இளவரசு மிரட்டி இருக்கிறார்
போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் அந்தப்பெண் புதிய முகம் போல தெரிகிறது . வித்தியாசமான நடிப்பு
நாயகியின் காதலனாக ஆதவ் கண்ணதாசன் பொறுமையான நடிப்பை வழங்கியுள்ளார்
ஆர் கெய்சர் ஆனந்த் முதல் 30 நிமிடங்கள் கதைக்கு உள்ளே போக நேரம் எடுத்துக்கொண்டு அதற்குப்பின் காவல் நிலையத்துக்கு நாயகி ;புகார் கொடுக்கப்போகும் நிமிடத்தில் இருந்து திரைக்கதையில் வீரியம் பற்றிக்கொள்கிறது/ சினிமாத்தனம் இல்லாத யதார்த்தமான நிகழ்வுகள் கண் முன் நடக்க பார்வையாளர்களின் இதயத்துடிப்பை எகிற வைக்கும் நிகழ்வுகள் கச்சிதமாக சொல்லப்பட்டிருக்கிறது
வெற்றி மாறன் தான் இந்தப்படத்தை தயாரித்து இருக்கிறார் . சந்தோஷ் நாராயணன் இசையில் ஒரு பாடல் மனதில் தங்குகிறது. பின்னணி இசையில் போதுமான பதட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறார்.
இந்தப்படம் 18+க்கான சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டிருந்தாலும் கண்ணியக்குறைவான காட்சிகள் எதுவும் இல்லை . கதையின் கரு, காட்சியின் தீவிரம் இவற்றுக்காகத்தான் ஏ சான்றிதழ் , மற்றபடி இது பெண்களுக்கான , சிறுமிகளுக்கான விழிப்புணர்வுப்படம்தான்
நச் டயலாக்ஸ்
1 ஆண்கள் என்றாலே அதிகாரம் தான், அதுவும் அதிகாரத்தில் ஆண்கள் இருந்தால்?
2 மானம் என்பது நாம போட்டிருக்கும் உடையில் இல்லை ,நாம் வாழும் வாழ்க்கையில் இருக்கிறது .
3 நம்ம ஊர்ப்பெண்கள் துப்பாக்கி முனையில் நிற்க வைத்தால் கூட நெஞ்சை நிமிர்த்திட்டு எதிர்த்து நிற்பாங்க , ஆனா துணியை அவுத்துட்டா ஒடுங்கி பயந்து ஓடிடுவாங்க
போன்ற வசனங்கள் அருமை .
பாதிக்கப்பட்ட பெண்கள் தன்னை கொடுமைக்கு ஆளாக்கிய ஆண்களை சட்டத்தின் பிடியில் சிக்க வைக்க எவ்வளவு சிரமங்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது என்பதை தத்ரூபமாக சொல்லும் படம்
இது சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது
சபாஷ் டைரக்டர்
1 காவல் துறை உங்கள் நண்பன் , விசாரணை , யுத்த காண்டம் போன்ற படங்களுக்குப்பின் பெரும்பாலான காட்சிகள் காவல் நிலையத்துலயே நடப்பது போல் திரைக்கதை கொண்ட படம் இது . ரசிக்கும்படி அந்த போர்சன் இருக்கிறது
2 போலீசால் பொதுமக்கள் ஏராளமாக பாதிக்கப்பட்டு இருப்பதால் அவர்களை வில்லன்களாக காட்டுவது மக்கள் ஆதரவைப்பெறும்
3 குணச்சித்திர நடிப்பை இதற்கு முன் வழங்கிய முக்கிய நடிகர்களை வில்லன்கள் ஆக்கியதும் அருமை . இதற்கு முன் நூறாவது நாள் படத்தில் மோகன் வில்லனாக நடித்தது கவனம் கொள்ள வைத்தது
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 பொதுவா பெண்கள் தனியே வெளியே செல்வது ஆபத்து . சமீபத்தில் இரு எதிரிகளை சம்பாதித்த நாயகி அவர்கள் தன்னைப்பின் தொடர்ந்து கொடைக்கானல் வருவது தெரிந்தும் தனிமையில் ஊர் சுற்றிப்பார்க்கக்கிளம்புவது எப்படி ?
2 குற்றவாளிகள் மூவர் ஒருவர் பைக்கிலும் இருவர் ஜீப்பிலும் வந்திருக்கிறார்கள், ஆனால் நாயகி ஸ்டேட்மெண்ட்டில் மூவருமே ஹெல்மெட் அணிந்து இருந்ததால் முகம் அடையாளம் தெரியலை என்பது நெருடுது
3 ஒரு பெண்ணோட மனசு இன்னொரு பெண்ணுக்குத்தான் தெரியும் என்பது உண்மைன்னா போலீஸ் பெண் இன்ஸ்பெக்டர் போலீஸ் ஸ்டேஷனில் நாயகியைப்பார்த்ததுமே தன் வீட்டுக்கு அழைத்துச்சென்றிருக்க வேண்டும் . எந்த நம்பிக்கையில் இரவில் தனிமையில் அவரை விட்டுச்செல்கிறார் ?
4 ரேப் செய்யப்பட்டு 24 மணி நேரத்துக்குள் டாக்டர் சிகிச்சை அளித்தால்தான் குற்றவாளி சம்பந்தமாக தடயங்கள் கிடைக்கும் , இன்ஸ்பெக்டர் அதை கருத்தில் கொண்டு ஜீப்பில் அவரை கொண்டு போய் ஜி ஹெச்சில் விட்டிருக்க வேண்டும் ஏன் அதை செய்யலை ?
5 பாதிக்கப்பட்ட பெண் தங்களைப்பற்றிய தடயங்கள் தகவல்கள் கசிய விட்டால் ஆபத்து என்பதை உ ணர்ந்த குற்றவாளிகள் நாயகியை கொலை செய்யாமல் போவதும் ஆச்சரியமே
6 க்ளைமாக்சில் குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை கிடைத்தது அவர்கள் பட்ட அவமானம் என்ன? அவர்கள் குடும்பம் சந்தித்த பிரச்சனைகள் போன்றவற்றை விலாவாரியாக காட்ட வேண்டும், அப்போதான் தப்பு செய்பவர்களுக்கு ஒரு பயம் இருக்கும்
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - கமர்ஷியல் அம்சங்கள் எதையும் வலியத்திணிக்காமல், யதார்த்தமான ஒரு கதை பெண்களுக்காக படைத்திருக்கும் இயக்குநர் பாராட்டப்பட வேண்டியவர் , ஆனந்த விகடன் மார்க் 43 ரேட்டிங் 2.75 / 5
Anel Meley Pani Thuli | |
---|---|
Directed by | R. Kaiser Anand |
Written by | R. Kaiser Anand |
Produced by | Vetrimaaran |
Starring | Andrea Jeremiah Aadhav Kannadasan |
Cinematography | Velraj |
Edited by | Raja Mohammad |
Music by | Santhosh Narayanan |
Production company | |
Distributed by | SonyLIV |
Release date | 18 November 2022 |
Country | India |
Language | Tamil |
0 comments:
Post a Comment