சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 24ம் தேதி ஐ.டி நிறுவன ஊழியர் சுவாதி படுகொலை செய்யப்பட்டார். பட்டப்பகலில் நடந்த இந்த கொலை கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. நீதிமன்றம் தலையீட்டு கொலையாளியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று போலீஸாருக்கு நெருக்கடியை கொடுத்தது. தனிப்படையினர் கொலையாளியை தேடி வந்தனர்.
கொலையாளி குறித்து போலீஸாருக்கு கிடைத்த ஒரே துருப்புச் சீட்டு சி.சி.டி.வியின் பதிவான அந்த உருவம் தான். ஆனாலும் அதிலும் கொலையாளியின் முகம் சரியாக தெரியவில்லை. இந்த வழக்கை முதலில் எழும்பூர் ரயில்வே போலீஸார் விசாரித்து பிறகு நுங்கம்பாக்கம் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது. கொலையாளியை கண்டுபிடிப்பதில் காலதாமதம் ஏற்பட்டதால் போலீஸார் கடும் விமர்சனத்துக்குள்ளாகினர். ஒருக்கட்டத்தில் சென்னை போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரன் நேரடியாகவே விசாரணையில் களமிறங்கினார்.
காட்டி கொடுத்த சிக்னல்
சுவாதி பணியாற்றிய பெங்களூர், மைசூர், செங்கல்பட்டு பரனூர் பகுதிகளிலும் கொலையாளியின் படத்தை காட்டி போலீஸார் விசாரித்தனர். மேலும், சுவாதியின் நண்பர்கள், உறவினர்கள், கொலையை நேரில் பார்த்தவர்கள் என பட்டியல் போட்டு போலீஸார் விசாரித்தனர். அப்போது இன்னும் கூடுதல் தகவலாக கொலையாளி டூவிலரில் செல்லும் காட்சி அங்குள்ள சி.சி.டி.வி ஒன்றில் பதிவாகி இருந்ததை போலீஸார் பார்த்தனர். இதனால் கொலையாளி சூளைமேடு பகுதியில்தான் பதுங்கி இருக்க வேண்டும் என்ற சந்தேகம் போலீஸாருக்கு வலுத்தது. அதன்படி சுவாதியின் வீட்டை சுற்றியுள்ள பகுதிகளில் கொலையாளியின் படத்தை காண்பித்து போலீஸார் விசாரித்தனர். அந்த பகுதியில் உள்ள மேன்சன்களிலும் விசாரணை நடத்தப்பட்டது.
ரத்தக் கறையுடன் சட்டை சிக்கியது
சுவாதியின் வீட்டின் அருகில் உள்ள ஒரு மேன்சனின் காவலாளி, படத்தில் உள்ள நபர், இந்த மேன்சனில் தங்கி இருந்ததாகவும், ஒரு வாரம் காலம் அவரது அறை பூட்டியே இருப்பதாகவும் போலீஸாரிடம் தெரிவித்தார். அடுத்து அந்த அறையை உடைத்த போலீஸார் அதில் ஏதாவது தடயங்கள் உள்ளதா என்று சோதனை செய்தனர். அப்போது, அறையில் கொலை நடந்த போது அணிந்திருந்த சட்டை ரத்தகறையுடன் இருப்பதை போலீஸார் கண்டுப்பிடித்துள்ளனர். அடுத்து அறையில் தேடிய போது, டைரி ஒன்று கிடைத்தது. அதில் நெல்லை மாவட்டம், செங்கோட்டை, மீனாட்சிபுரம் என்ற முகவரி இருந்தது. அதன்அடிப்படையில் உடனடியாக தனிப்படை போலீஸார், செங்கோட்டைக்கு புறப்பட்டது.
மேற்கண்ட அந்த முகவரி கண்டுப்பிடித்து வீட்டில் உள்ளவர்களிடம் போலீஸார் விசாரித்தனர். அந்த சமயத்தில் வீட்டிற்குள் இருந்த ராம்குமார் என்ற இன்ஜினீயர், அறையை பூட்டிக் கொண்டு பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ராம்குமார் அழைத்து செல்லப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்டது. . தனியார் மருத்துவமனையிலிருந்து நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராம்குமாருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவரது உயிருக்கு ஆபத்து இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து ராம்குமாரை காவல்துறையினர் கைது செய்தனர்.
ஒரு தலைக்காதல்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ராம்குமாரிடம் போலீஸார் விசாரித்தனர். அப்போது சுவாதியை தான் காதலித்ததும் ஆனால் அந்த காதலை சுவாதி ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் போலீஸாரிடம் ராம்குமார் தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்து சுவாதியை கொலை செய்ததாகவும் போலீஸாரிடம் ராம்குமார் தெரிவித்துள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
சுவாதிக்கும், ராம்குமாருக்கு எப்படி அறிமுகம் ஏற்பட்டது என்று போலீஸார் விசாரணை நடத்தியதில் புதிய தகவல் கிடைத்துள்ளது. நெல்லை மாவட்டம், ஆலங்குளத்தில் உள்ள பொறியியல் கல்லூரியில் ராம்குமார் படித்துள்ளார். படித்து விட்டு வேலை தேடி கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு சென்னை வந்த ராம்குமார், சூளைமேட்டில் உள்ள மேன்சன் ஒன்றில் மாதம் 2 ஆயிரம் வாடகையில் தங்கியுள்ளார். அப்போது தினமும் சுவாதி காலையில் வீட்டிலிருந்து மேன்சனை கடந்து நுங்கம்பாக்கம் செல்வதை ராம்குமார் பார்த்ததில், அவரை ஒருதலையாக காதலிக்க ஆரம்பித்துள்ளார். அந்த காதலை சுவாதியிடம் சொல்ல ராம்குமார் பல முறை முயன்றுள்ளார். ஆனால் அந்த முயற்சி தோல்வியடைந்துள்ளது.
சுவாதிக்கும் ராம்குமாருக்கும் என்ன சம்பந்தம்?
சுவாதி கொலை செய்யப்படுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு சுவாதியை பின்தொடர்ந்து சென்ற ராம்குமார், தன்னுடைய காதலை நுங்கம்பாக்கம் ரயில் நிலைய பிளாட்பாரத்தில் வைத்து சுவாதியிடம் சொல்லியுள்ளார். அப்போது சுவாதி, ராம்குமாரின் காதலை நிராகரித்துள்ளார். அதைத் தாங்கிக் கொள்ள முடியாத ராம்குமார், சுவாதியின் கன்னத்தில் பளார் என்று அறைந்துள்ளார். ஆனால் அப்போது கூட எந்த வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் சுவாதி செங்கல்பட்டு செல்லும் ரயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சென்று விட்டார். இதன்பிறகும் ராம்குமார், சுவாதியை பின்தொடர்ந்து தினமும் சென்றுள்ளார். இதை சுவாதி தன்னுடைய நெருங்கிய தோழியிடம் சொல்லியுள்ளார். அப்போது அவர்கள் போலீஸிடம் தகவலை சொல்லிவிடலாம் என்று சொன்ன போது அதை பெரிதாக சுவாதி எடுத்துக் கொள்ளவில்லை. அதுவே அவரது உயிரை காவு வாங்கி இருக்கிறது. சுவாதி முன்எச்சரிக்கையாக செயல்பட்டு இருந்தால் இந்த கொலை சம்பவமே நடந்திருக்க வாய்ப்பில்லை. கொலை நடந்த போது சுவாதியின் வாயிலேயே குறி வைத்து அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. அதை பார்த்த போலீஸார் இந்த சம்பவம் ஒரு தலைக் காதல் என்றே சந்தேகித்துள்ளனர். அந்த சந்தேகம் இப்போது நிரூபணமாகி உள்ளது.
யார் இந்த ராம்குமார்?
ராம்குமார், நெல்லை மாவட்டம், ஆலங்குளத்தில் உள்ள பொறியியல் கல்லூரியில் படித்த போது யாரிடமும் பேசாமல் அமைதியாகவே இருப்பாராம். அவரது குடும்பம் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தது. விடுமுறை நாட்களில் வீடுகளில் உள்ள ஆடுகளை காட்டுப்பகுதியில் மேய்ப்பார். போலீஸார் கைது செய்வதற்கு முன்பு கூட அவர் ஆடு மேய்த்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ராம்குமாரை கஷ்டப்பட்டு படிக்க வைத்துள்ளது அவரது குடும்பம். மேலும், ராம்குமார் மூலம் குடும்பம் முன்னேறும் என்று எதிர்பார்த்த அவரது பெற்றோருக்கு இந்த சம்பவம் பெரும் இடியாக விழுந்தது. இப்போது ராம்குமாரின் ஒட்டுமொத்த குடும்பமும் போலீஸாரின் விசாரணை வளையத்துக்குள் இருக்கிறது.
சுவாதியின் செல்போன் எங்கே?
சுவாதியின் செல்போன் எங்கே என்ற விவரத்தை மட்டும் போலீஸார் தெரிவிக்கவில்லை. அந்த செல்போன் குறித்தும், ராம்குமார், சுவாதியின் பழக்கம் குறித்தும் போலீஸார் எந்த தகவலும் தெரிவிக்காமல் அமைதி காக்கின்றனர். சுவாதி தன்னுடைய தோழியிடம் ராம்குமாரை ஒரு கட்டடத் தொழிலாளி என்று குறிப்பிட்டுள்ளார். ராம்குமாரும், சுவாதியும் ஏற்கனவே பேசி இருக்கிறார்களா என்ற கேள்விக்கும் பதில் இல்லை.
எஸ்.மகேஷ்
நன்றி - விகடன்
0 comments:
Post a Comment