அப்பாவிற்கும் ,மகனுக்குமான பாசத்தையும், அப்பாவின் வளர்ப்புப் பற்றியும் பேசும் தமிழ் சினிமாக்கள் மிகவும் குறைவு . ஒரு குழந்தை தன் வாழ்க்கையில் செய்யும் விஷயங்கள், தேர்ந்தெடுக்கும் வாழ்க்கை முறை எல்லாம், அப்பா குழந்தைக்கு தரும் சுதந்திரத்தைப் பொறுத்து இருக்கிறது என்பதை அழுத்தமாகச் சொல்லியிருக்கிற திரைப்படம்தான் சமுத்திரக்கனியின் 'அப்பா'.
வாழ்க்கை கல்விமுறை தான் சிறந்தது என நினைக்கும் சமுத்திரக்கனி , தான் நினைத்ததை தான் தன் மகன் செய்ய வேண்டும் என தீர்க்கமாக முடிவெடுக்கும் தம்பி ராமையா, எந்தப் பிரச்னைக்கும் செல்லாமல் தயங்கி நிற்கும் நமோ நாராயணன் என மூன்று அப்பாக்கள், அவர்களின் செயல்பாடுகளும், இந்த சமூகமும், அவர்களின் குழந்தைகளின் வாழ்வியலை எந்த அளவு தீர்மானிக்கிறது என்பதை அழகியலோடு உணர்வுப் பூர்வமாகக் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கிறது 'அப்பா'.
இரண்டாம் வகுப்பு படிக்கும் சிறுவனுக்கு தெர்மோகோலில் தாஜ்மகால் செய்ய வேண்டும் என project தருகிறது பள்ளி. வகுப்பில் இருக்கும் அனைவரும், ஒரு கடையில் சென்று தாஜ்மகாலை வாங்கி வந்து சமர்ப்பிக்க, சமுத்திரக்கனியும், அவரின் மகனும், இரவு முழுக்க கண்விழித்து, ஒரு தாஜ்மகாலை செய்து, வகுப்பில் வைக்கிறார்கள். சமுத்திரக்கனியின் மகன் அவமானப்படுத்தப்படுகிறான்.
இதனால் அவர், இந்தத் தனியார் பள்ளிக் கல்விமுறை வேண்டாமென முடிவெடுத்து அரசுப்பள்ளியில் சேர்க்கிறார். அதனால் அதிர்ச்சியான சமுத்திரக்கனியின் மனைவி,' இந்த சமூகம் தன்னைப்பற்றி என்ன நினைக்கும்' என்று கருதி அவரது விருப்பத்தை , மகன் மேல் திணிக்க முயற்சித்து தோற்றும் போகிறார்.
சமுத்திரக்கனியின் மகனாக 'பெரிய காக்காமுட்டை' விக்னேஷ் , தம்பி ராமைய்யாவின் மகனாக வரும் ராகவ், 'உயர்ந்துட்ட' நசத், தோழியாக வரும் கேப்ரியல்லா, என குழந்தை நட்சத்திரங்கள் படம் முழுக்க அதகளப்படுத்தி இருக்கிறார்கள்.
மார்க், பணம், புகழ், சோசியல் ஸ்டேட்டஸ் என 'ஸ்டீரியோடைப்' தந்தையாக வருகிறார் தம்பி ராமையா. கணவன் - மனைவி தேர்வுகளில் கூட தீமை- நன்மை விளையாட்டை புகுத்தியிருக்கிறார் சமுத்திரக்கனி. அதுமட்டுமின்றி பாடல் ஆசிரியர்கள் யுகபாரதி, பா.விஜய், நடிகர் சசிகுமார் என நட்புக்காக சில கதாபாத்திரங்கள்.
“சில ஆண்டுகளுக்கு முன், கல்லூரியில் குறைவான மதிப்பெண்கள் பெற்றதால் தற்கொலை செய்துகொண்டார் மாணவி தைரியலட்சுமி. தைரியலட்சுமி என பெயர் வைத்து இருப்பவர் தற்கொலை செய்து கொள்ளும் நிலையில் தான் கல்வி இருக்கிறதென” சசிகுமார் பேசி இருப்பது டாப்ஷாட்.
க்ளைமேக்ஸ் காட்சிகளில் மட்டும் இளையராஜாவின் பின்னணி இசை படத்தோடு நம்மை இணைய வைக்கிறது. மற்றபடி பின்னணி இசையோ, பாடல்களோ பட எண்ணிக்கையை கூட்டும் மற்றுமொரு விஷயமாகவே இருக்கிறது.
"மருத்துவமனை போனா உசுர அறுத்து, பாதி ஆக்கிடுவாணுகம்மா" என படத்தின் ஆரம்பத்தில் இருந்து,
"உங்க குப்பைகளை எல்லாம் பிள்ளைக மேல திணிக்காதீங்க”,
" உனக்கு ஒரு விஷயம் என்கிட்ட சொல்ல முடியும்னு நினைச்சா, அத செய். சொல்ல முடியாதுன்னா நினைச்சா அத செய்யாத " - என படம் நெடுக சமுத்திரக்கனி ஸ்பெஷல் வசனங்கள் படத்திற்கு பிளஸ்.
நாடோடிகள், போராளி, நிமிர்ந்து நில் போன்ற படங்களும் சமூகக் கருத்து சார்ந்த படங்கள் தான் என்றாலும், அதில் இருக்கும் சில கமர்ஷியல் சமரசங்கள் கூட இதில் இல்லை. இயக்குநர் - தயாரிப்பாளர் சமுத்திரக்கனிக்கு சபாஷ்!
படம் பார்த்துவிட்டு வெளியே வரும் போது, "நம் அப்பா இதில் என்ன வகை?" என மகனையும், தன் மகன் என்ன வகை என்று அப்பாவையும் யோசிக்க வைக்கிறது 'அப்பா'. இந்த வகையில், பார்வையாளனை அக்கறையான கரிசனத்துடன் கரம் பிடித்து அழைத்துச் சென்ற ‘அப்பா’ நம் மனதில் நிறைகிறார்!
நன்றி - விகடன்
நன்றி - விகடன்
0 comments:
Post a Comment