Monday, February 01, 2016

எம்.ஜி.ஆர் ஆட்சியில் சலசலக்க வைத்த ராபின் மெயின் வழக்கு

எம்.ஜி.ஆர். உடன் ஜெயலலிதா | தி இந்து புகைப்பட ஆவண காப்பகம்.
எம்.ஜி.ஆர். உடன் ஜெயலலிதா | தி இந்து புகைப்பட ஆவண காப்பகம்.
ராபின் மெயின் மோசடி வழக்கு. இது, அரசியல் பெரும்புள்ளி ஒருவரும் சம்பந்தப்பட்ட வழக்கு. பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் 32 காலங்களுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை (ஜனவரி 29) தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 32 ஆண்டுகளுக்குப் பின் தீர்ப்பு என்ற இக்காரணத்தை தவிர வேறு சில காரணங்களுக்காகவும் இந்த வழக்கை சற்று பின்னோக்கிப் பார்க்கலாம்.
அவ்வாறு சற்றே காலச்சக்கரத்தை பின்னோக்கிச் செலுத்தினால், எம்.ஜி.ஆர். தலைமையிலான அப்போதைய ஆட்சியில் ராபின் மெயின் வழக்கு ஏற்படுத்திய சலசலப்பும், அதிமுகவில் ஜெயலலிதா, காளிமுத்து உள்ளிட்ட பலரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளும் தெரியவரும்.
1985 அக்டோபர் மாதம். அப்போதுதான் ராபின் மெயின் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்படுகிறார். அவர் மீதான கைது நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தியது. காரணம், அவர் அன்றைய வேளாண் அமைச்சர் காளிமுத்துவின் நண்பர்.
நண்பர் மீதான கைது நடவடிக்கையையும், அந்த வழக்கில் தன் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளையும் சற்றும் எதிர்பாராத காளிமுத்து, ஜெயலலிதா மீது விமர்சனங்களை குவித்தார்.
அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக ஜெயலலிதாவை எம்ஜிஆர் மீண்டும் நியமித்ததற்கு கட்சியில் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் காளிமுத்து தெரிவித்த எதிர்ப்பே மிகக் கடுமையானது. ஜெயலலிதாவை ஏன் கொள்கை பரப்புச் செயலராக நியமித்தீர்கள் என எம்.ஜி.ஆரிடம் நேரடியாக கேள்வி எழுப்பினார்.
தமிழகத்தில் திராவிட கட்சியின் அதிகாரத்தை முடிவு கட்ட ஜெயலலிதா சதித் திட்டம் தீட்டி வருவதாகவும் எம்.ஜி.ஆரிடம் கூறினார்.
ராபின் மெயின் வழக்கில் வேண்டுமென்றே தன் மீது குற்றம் சுமத்தப்பட்டிருப்பதாகவும் கூறினார். சிபிஐ தன் மீது அவ்வாறாக குற்றம் சுமத்த ஜெயலலிதாவே முழுமுதற் காரணமாக இருந்தார் எனவும் கூறினார்.
மேலும் ராபின் மெயின் வழக்கு தொடர்பாக தனது உதவியாளர் மாணிக்கத்திடம் விசாரணை மேற்கொண்ட சிபிஐ அதிகாரி ஒருவர், மூன்று மாதங்களில் தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்ற இந்திரா காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாகவும், ஜெயலலிதாவை தமிழக முதல்வராக்கவும் முடிவெடுத்துள்ளதாகவும் தெரிவித்ததாக கூறினார்.
காளிமுத்து - ஜெயலலிதா காரசார வாக்குவாதம்
இந்தக் குற்றசாட்டுகளையெல்லாம் திட்டமிட்டு மறுத்த ஜெயலலிதா, கற்பனை அடிப்படையில் காளிமுத்து குற்றச்சாட்டுகளை அடுக்குகிறார் என்றார். இல்லை, நான் அவரது (ஜெயலலிதாவின்) அரசியல் எதிர்காலத்துக்கு சவாலாக இருப்பேன் என்பதற்காகவே என் மீது போலி குற்றச்சாட்டுகளை ஜெயலலிதா சுமத்துகிறார் என்ற பதில் வாதத்தை முன்வைத்தார் காளிமுத்து. இந்த வார்த்தைப் போர் ஓயவில்லை, "யாரோ ஒருவர் செய்த குற்றத்துக்கு நான் பலிகடா ஆக முடியாது" என்றார் ஜெயலலிதா. இவ்வாறாக பதிலுக்கு பதில் தொடர்ந்து கொண்டே இருந்தது.
எம்.ஜி.ஆர். வைத்த முற்றுப்புள்ளி:
தொடரும் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் 1985 அக்டோபர் 28-ம் தேதி எம்.ஜி.ஆர். முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். அவரைத் தொடர்ந்து அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா கடிதங்களை தாக்கல் செய்தனர். இந்த அதிரடி அறிவிப்பால், சலசலப்புகள் சற்று ஒய்ந்தன.
அந்த வேளையில்தான், சிபிஐ தனக்கு எதிராக ராபின் மெயினிடம் வாக்குமூலம் பெற சிபிஐ முயற்சிப்பதாக எம்.ஜி.ஆரிடம் முறையிட்டார் காளிமுத்து. இதனையடுத்து எம்.ஜி.ஆரும், சட்ட அமைச்சர் பொன்னையனும் காவல்நிலைய லாக்-அப் நிலவரம் அறிவதாக கூறி அதிரடி சோதனைகளை மேற்கொண்டனர். எழும்பூர் காவல் நிலையத்துக்குச் சென்றனர். அங்குதான் ராபின் மெயின் அடைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படியே சலசலப்பும், பரஸ்பர குற்றச்சாட்டுகளும் அவ்வப்போதும் எழுந்தும், மறைந்தும் இரண்டு ஆண்டுகள் உருண்டோடின.
1987-ல் எம்.ஜி.ஆர். மறைந்தார். அவருக்குப் பின் அதிமுகவில் பிளவு ஏற்பட்டது. அதுவரை ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்துவந்த காளிமுத்து, ஜெயலலிதா தரப்பில் ஐக்கியமானார். பின்னர் அவர் அதிமுக பொதுச் செயலாளர் ஆக்கப்பட்டார். தொடர்ந்து நடைபெற்ற மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி.ஆனார். ஆனால், எல்லாம் அப்படியே சுமுகமாக செல்லவில்லை. திடீரென காளிமுத்து திமுகவுக்கு திரும்பினார். அங்கும் அவர் வெகு காலம் நீடிக்கவில்லை. மீண்டும் அதிமுகவுக்கே வந்தார்.
2001-ல் காளிமுத்துவை சட்டப்பேரவை சபாநாயகராக ஆக்கினார் ஜெயலலிதா. 4 ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் 2005-ல் ராபின் மெயின் வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு காளிமுத்துவுக்கு உச்ச நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. அப்போது, காளிமுத்து பதவி விலக வேண்டும் என வலுவான எதிர்ப்புக் குரல் உருவானது. ஆனால், சபாநாயகர் பதவியை காளிமுத்து ராஜினாமா செய்யத் தேவையில்லை என ஜெயலலிதா திட்டவட்டமாக தெரிவித்தார். வழக்கில் தனக்கு ஏற்பட்ட நெருக்கடிகள் காரணமாக காளிமுத்து மாரடைப்பில் இறந்தார்.
ராபின் மெயின் வழக்கில் குற்ற வாளிகளாக சேர்க்கப்பட்டிருந்த காளிமுத்து உட்பட 16 பேர் வழக்கு நடத்து கொண்டிருக்கும்போதே இறந்துவிட்டனர்.
ஆனால், ராபின் மெயின் வழக்கு அதிமுகவில் ஏற்படுத்திய சர்ச்சைகளையும் சமரசங்களையும் யாரும் மறக்க முடியாது


ராபின் மெயின் வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட ஐவரில் ஒருவர் | படம்: சிறப்பு ஏற்பாடு.
ராபின் மெயின் வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட ஐவரில் ஒருவர் | படம்: சிறப்பு ஏற்பாடு.
தமிழகத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட முன்னாள் அமைச்சர் காளிமுத்து மற்றும் அவரது நண்பர் ராபின் மெயின் உள்ளிட்ட 32 பேர் மீதான மோசடி வழக்கின் விசா ரணை முடிந்து 32 ஆண்டுகளுக் குப் பிறகு நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. 5 பேருக்கு சிறை தண் டனையும், அபராதமும் விதித்து சி.பி.ஐ பொருளாதார குற்றப்பிரிவு நீதிபதி உத்தரவிட்டார்.
1982-ம் ஆண்டில் தமிழக வேளாண்மைத் துறை அமைச்சராக இருந்தவர் காளிமுத்து (பின்னர் இவர் தமிழக சட்டப்பேரவை சபா நாயகராகவும் இருந்தார்). 1982-83-ம் ஆண்டுகளில் அரசுடைமை யாக்கப்பட்ட வங்கிகளில் வேளாண்மை துறை நிதியை முதலீடு செய்வதாகவும், அதற்கு கைமாறாக அவர் பரிந்துரைக்கும் நபர்களுக்கு வங்கிகள் கடன் வழங்க வேண்டுமென ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டதாக புகார் கூறப்பட்டது.
காளிமுத்துவின் சிபாரிசின் பேரில் அவரது நண்பர்கள் ராபின் மெயின், சூரியக் குமார், சாகுல் அமீது, சோமசுந்தரம், பசில் சாம் உள்ளிட்ட சிலர் ஒன்றரை லட்சம் ரூபாயிலிருந்து 3 லட்சம் ரூபாய் வரை லாரி மற்றும் டிராக்டர்கள் வாங்குவதற்கு வங்கிகளில் கடன் பெற்றுள்ளனர். கடன் பெறுவதற் காக போலி ஆவணங்கள் தயாரித்து வங்கிகளில் சமர்ப்பித்துள்ளனர். இதன் மூலம் 15 லாரி மற்றும் டிராக் டர்கள் வாங்குவதற்கு கடன் பெற்ற தாக குற்றச்சாட்டு எழுந்தது. கடன் பெற்றவர்கள் சிலர் வங்கிகளில் பெற்ற கடனுக்கு உரிய தவணை தொகையை செலுத்தவில்லை. வாகனங்கள் குறித்து வங்கிகள் தரப்பில் விசாரித்தபோது வங்கி களில் சமர்ப்பித்த ஆவணங் களில் உள்ள பதிவு எண் களில் உள்ள வாறு வாகனங்கள் எதுவும் இல்லை என்பது தெரியவந்தது.
இதையடுத்து, வங்கிகள் சார்பில் சி.பி.ஐ போலீஸாரிடம் புகார் செய்தனர்.
சி.பி.ஐ 1984-ல் வழக்கு பதிவு செய்தது. முன்னாள் அமைச்சர் காளிமுத்து, அவரது உதவியாளர் மாணிக்கம், சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த ராபின் மெயின், சூரியக் குமார், சாகுல் அமீது, பேசில் சாமுவேல், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் 6 பேர், வாகன மதிப்பீட்டாளர்கள் 4 பேர் உள்ளிட்ட 32 பேர் இந்த வழக் கில் குற்றவாளிகளாக சேர்க்கப் பட்டிருந்தனர். இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் மோசடி உள்ளிட்ட 5 பிரிவுகளிலும், இந்திய ஊழல் தடுப் புச் சட்டத்தின் கீழ் ஒரு பிரிவிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
1984-ல் சி.பி.ஐ பொருளாதார குற்றப்பிரிவினரால் தொடரப்பட்ட இந்த வழக்கில் 1987-ல் குற்றப்பத்தி ரிகை தாக்கல் செய்யப்பட்டது. 96 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். 32 ஆண்டுகளுக்குப் பின்னர் நேற்று இந்த வழக்கின் விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் குற்ற வாளிகளாக சேர்க்கப்பட்டிருந்த காளிமுத்து உட்பட 16 பேர் வழக்கு நடத்து கொண்டிருக்கும்போதே இறந்துவிட்டனர். அதனால் தற் போது உயிருடன் உள்ள 16 பேர் மீது வழக்கு நடைபெற்று வந்தது. நேற்று இவ்வழக்கில் 5 பேரை குற்றவாளிகள் என அறிவித்தும் 11 பேரை விடுதலை செய்தும் சென்னை சி.பி.ஐ. பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றம் நீதிபதி கே.வெங்கடசாமி தீர்ப்பு வழங்கினார்.
சி.பி.ஐ தரப்பில் வழக் கறிஞர்கள் கீதா ராமசேஷன், எம்.வி.தினகர் ஆகியோர் ஆஜ ராகினர்.
ராபின் மெயின் - 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை. ஒரு கோடியே 8 லட்ச ரூபாய் அபராதம்.
சூரியக் குமார்- 4 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை. 29 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதம்.
சோமசுந்தரம்- 4 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை. 20 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் அபராதம்.
சாகுல் அமீது- 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை. 4 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் அபராதம்.
பசில் சாம்- 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை. 3 லட்சம் ரூபாய் அபராதம்.
அபராதத் தொகை ஒரு கோடியே 65 லட்சத்து 500 ரூபாயில் 52 லட்சம் ரூபாயை வாகனக் கடன் வழங்கிய வங்கிகளுக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து, குற்றவாளிகள் 5 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.


நன்றி - த இந்து

0 comments: