2005-ல் விஜயகாந்த் 'அரசியல் என்ட்ரி’ கொடுத்து தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் என புதிய கட்சியை ஆரம்பித்தபோது, உலகத் தமிழர்கள் அனைவரிடமும் ஒரு பிரமாண்ட எதிர்பார்ப்பு இருந்தது. 'நீண்ட காத்திருப்புக்கு பிறகு தமிழகத்துக்கு ஒரு நல்ல மாற்றம் வந்துவிட்டது' என்று மதுரையில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட விஜயகாந்தின் ரசிகர்கள் உற்சாகமாக குரல் கொடுத்தார்கள்.
திரையில் பார்த்த அதே சிவந்த கண்களோடும் கோபத்தோடும் விஜயகாந்த் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரண்டு பெரிய கட்சிகளையும் வறுத்தெடுத்தார். அவரது தீவிரப் பிரசாரமும் கணிசமான மக்கள் அவர் மீது வைத்த நம்பிக்கையும் சாதகமாக இருக்க... அப்போது நடைபெற்ற தேர்தலில் 8.38% வோட்டுக்களை அவர் குவித்ததோடு தன் கட்சி சார்பாக தனி ஒருவனாக சட்டமன்ற உறுப்பினராகவும் ஜெயித்தார்.
2009 நாடாளுமன்றத் தேர்தலில் அவரது கட்சியினரால் எந்தத் தொகுதியிலும் ஜெயிக்க முடியவில்லை என்றாலும், தே.மு.தி.க. ஒரு கட்சியாக சுமார் 10% வோட்டுகளைப் பெற்றது. கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் மிகப் பெரிய அச்சுறுத்தலாக விஜயகாந்த் உருவெடுத்தார். தேர்தல்களில் தனித்துப் போட்டியிட்டு மாஸ் காட்டி வந்த விஜயகாந்த், 2011 சட்டமன்றத் தேர்தலில் தனது முழு எதிர்ப்பையும் அப்போது ஆளும்கட்சியாக இருந்த தி.மு.கவின் மீது திருப்பினார். அவரோடு கூட்டணி வைத்துக் கொள்ள பலரும் அப்போது ஆவலாக இருந்தாலும், விஜயகாந்த் அ.தி.மு.கவோடு கூட்டணி சேர்ந்து சட்டசபை தேர்தலைச் சந்தித்தார். அந்தத் தேர்தலில் தி.மு.கவை மூன்றாவது இடத்துக்கு தள்ளிய விஜயகாந்தின் தே.மு.தி.க., 29 சீட்டுக்களை வென்று பிரதான எதிர்கட்சி அந்தஸ்த்தைப் பிடித்தது. ஆனால், ஜெயலலிதாவுடனான விஜயகாந்தின் கூட்டணி நீண்டநாள் நீடிக்கவில்லை. அதனால் தனக்கு கைவந்த கலையான, தி.மு.க. - அ.தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளையும் அவர் பழையபடியே தாக்கி, அரசியல் அரங்கில் பரபரப்பு கிளப்பிக் கொண்டிருந்தார்.
ஆனால், 2014 நாடாளுமன்றத் தேர்தல் விஜயகாந்தின் செல்வாக்குக்கு ஒரு செக் வைத்தது. பி.ஜே.பி., பா.ம.க., போன்ற கட்சிகளோடு கூட்டணி வைத்து விஜயகாந்த் மூன்றாவது அணியாகத் தேர்தலில் போட்டியிட்டபோது, எதிர்பார்ப்புகள் எகிறியது. ஆனால், முடிவுகள் விஜயகாந்துக்கு சாதகமாக இல்லை. வெறும் 5% வோட்டுக்களையே அவரது கட்சியால் பெற முடிந்தது. அந்தத் தேர்தலில் தே.மு.தி.க., நான்காவது இடத்துக்கு தள்ளப்பட்டதோடு, அவரது கட்சியால் ஒரே ஒரு இடத்தைக்கூட ஜெயிக்க முடியவில்லை. அத்தேர்தலில் பி.ஜே.பி., விஜயகாந்தின் தே.மு.தி.கவை-விட அதிக வோட்டுக்களை வாங்கி மூன்றாவது இடத்தை பிடித்தது.
(குறிப்பிட்ட வருடத்தை க்ளிக்கினால், அப்போதைய தேர்தலின் புள்ளிவிவரமும், கட்சிகளின் ஏற்ற இறக்கமும் தெரியவரும்!)
.
வைகோவின் ம.தி.மு.க., திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் என நான்கு கட்சிகள் சேர்ந்து அமைத்திருக்கும் மக்கள் நலக் கூட்டியக்கம், விஜயகாந்தை சந்தித்து தங்கள் கூட்டணியில் இணையுமாறு அழைத்த வண்ணமிருக்கின்றன.
’விஜயகாந்த் தங்கள் கூட்டணிக்கு வந்தால் மகிழ்ச்சியே’ என்று தி.மு.க. தலைவர் கருணாநிதியும் வெளிப்படையாகவே அழைப்பு விடுத்திருக்கிறார். இந்த முஸ்தீபுகளைக் கண்டு அரண்டு மிரண்டு, 'விஜயகாந்த் இன்னும் எங்கள் கூட்டணியில்தான் இருக்கிறார்' என்று பி.ஜே.பி. தொடந்து சொல்லிவருகிறது. இப்படி இவர்கள் எல்லாரும் சேர்ந்து விஜயகாந்தை, 'சி.எம். மேக்கர்’ அளவுக்கு நடத்துகிறார்கள். ஆனால், விஜயகாந்த் கட்சியின் வீரியம் அந்தளவுக்கு இல்லை என்பதே அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக இருக்கிறது.
'ம.தி.மு.க. மிக ஆரவாரமாக ஆரம்பிக்கப்பட்டது. ஆனால், ஒவ்வொரு வருடத்திலும் ஒவ்வொரு தேர்தலிலும் அது சரிவையே சந்தித்துக் கொண்டிருக்கிறது. வைகோவைப் போலவே விஜயகாந்தும் சரிவைத்தான் சந்தித்துக் கொண்டிருக்கிறார். கூட்டணி வைக்கும் கட்சிகளை ஜெயிக்க வைக்கக்கூடிய சக்தியோ... அல்லது கூட்டணி வைக்காத கட்சிகளை தோற்கடிக்கக்கூடிய சக்தியோ விஜயகாந்துக்கு இல்லை. கூட்டணி பேரம் பேசும் வலிமையும் பலவீனமாகிக் கொண்டிருக்கிறது' என்கிறார் அப்சர்வர் ஆராய்ச்சி மைய இயக்குநர் என்.சத்தியமூர்த்தி.
மேலும் காங்கிரஸ் கட்சிக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி, கூட்டணிக்காக விடுத்திருக்கும் அழைப்பில், விஜயகாந்துக்கான எச்சரிக்கையும் அடங்கியிருக்கிறது எனக் கருதுகிறார் சத்தியமூர்த்தி. ’நிதர்சனத்தைப் புரிந்து கொண்டு, நிறைவேற்றக்கூடிய கோரிக்கைகளோடு எங்களோடு கூட்டணி அமைக்க வந்தால் சீக்கிரமாக வாருங்கள். இல்லையென்றால் உங்களுக்காக காத்திருக்க முடியாது' என காங்கிரஸுக்கான செய்தி விஜயகாந்துக்குமான சமிக்ஞையும் மறைந்திருக்கிறது என்கிறார் அவர்.
'2011-ல் விஜயகாந்துக்கு கூட்டணி பேரம் பேசக்கூடிய அளவுக்கு வலிமை இருந்தது. இப்போதோ, அவரது வாக்கு வங்கி கணிசமாக குறைந்துவிட்டது. ஆனால், அவரது பலத்தை எல்லாக் கட்சிகளுமே அதிகமாக மதிப்பிடுகிறார்கள். ஆனால், முந்தைய தேர்தலைவிட இந்த தேர்தலில் விஜயகாந்தின் செல்வாக்கு நிச்சயம் உயர வாய்ப்பில்லை. காரணம், சொந்த கட்சிக்காரர்களை பொது இடத்தில் அடிப்பது, கோபத்தில் கொந்தளிப்பது, உணர்ச்சிவசப்பட்டு சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வது என விஜயகாந்தின் பொதுவெளி செயல்பாடுகளும் பொதுவான வாக்காளர்கள் மத்தியில் அவர்மீது நம்பகத்தன்மையைக் குறைக்கலாம். ஒருவேளை தனது மனைவி பிரேமலதாவை முன்நிறுத்தி தேர்தலைச் சந்தித்தால், அந்த வியூகம் நல்ல பலன் கொடுக்கலாம்!’’ என்கிறார் மூத்த பத்திரிக்கையாளரான ஜி.சி.சேகர்.
இந்நிலையில் தி.மு.க. தேர்தல் பல்ஸ் அறிந்து கொள்ள தமிழகம் முழுக்க ஒரு சர்வே நடத்தியிருப்பதாகச் சொல்கிறார்கள். அதன்படி தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி சேர்ந்தால் அதற்கு 30-35 சதவிகித வாக்குகள் கிடைக்கலாம் என்று கணித்திருக்கிறார்களாம். இது தி.மு.க. தரப்புக்கு அதீத உற்சாகமளித்திருக்கிறது. 'இந்த சர்வே முடிவுகள் எங்களுக்கு தெம்பளித்திருக்கிறது. விஜயகாந்தோடு கூட்டணி சேர்ந்தே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் நாங்கள் இல்லை. காரணம் இந்த சர்வேயின்படி விஜயகாந்துக்கு 6% வோட்டுக்கள் இருப்பதால், அவர் எங்கள் கூட்டணிக்கு வந்தால் அவருக்குத்தான் நல்லது. அவரும் சேர்ந்துவிட்டால், சந்தேகமே இல்லாமல் அது வெற்றிக் கூட்டணி. ஆனால், அவர் சேராவிட்டாலும் அதை வெற்றிக்கூட்டணியாக மாற்ற நாங்கள் வியூகம் வகுத்துக் கொள்வோம்!’ என்று விறுவிறுக்கிறார்கள் தி.மு.க. தரப்பில்!
இது தி.மு.கவின் நிலைப்பாடு. மக்கள் நலக் கூட்டணி ஏன் விஜயகாந்தை தங்கள் பக்கம் இழுக்க முட்டி மோத வேண்டும்? ’’காரணம் பிஜேபிக்கு முதலமைச்சராக முன்னிறுத்த ஒரு வேட்பாளர் வேண்டும்’’ என்று சொல்லும் அரசியல் பார்வையாளர் என்.சத்தியமூர்த்தி, ’’அதனால்தான் முதல்வர் வேட்பாளர் குறித்த தன் நிலைப்பாட்டில் இருந்து பி.ஜே.பி.யின் பொதுச் செயலாளர் முரளிதர் ராவ் இப்போது இறங்கி வந்து கருத்து தெரிவித்திருக்கிறார். இன்னொருபுறம் இந்தத் தேர்தலை எதிர்கொள்ள வைகோவுக்கு விஜயகாந்த் தேவைப்படுகிறார். காரணம் அவருக்கு தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளுமே கதவுகளை அடைத்துவிட்டன. எப்படியும் ஆட்சி அமைக்கும் அளவுக்கு வோட்டுக்கள் வாங்கப் போவதில்லை என்பதால், மக்கள் நல இயக்கம் விஜயகாந்தை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்துவதில் அவர்களுக்கு எந்தச் சங்கடமும் இல்லை!’’ என்று முடிக்கிறார் சத்தியமூர்த்தி.
கட்சி துவங்கிய பின் சந்தித்த முதல் சில தேர்தல்களில், வாக்குகளைக் குவித்ததைத் தவிர சொல்லிக் கொள்ளுமளவுக்கு ஆக்கப்பூர்வமாக விஜயகாந்த் எந்த சாதனையும் செய்யவில்லை. ஆனாலும் அவருக்குச் சாதகமாக அரசியல் காற்று இப்போது வீசுகிறது. இந்த சூழ்நிலையில்... கேப்டன் விஜயகாந்த் பிரமாண்ட பனிப் பாறையை நோக்கிச் செல்லும் தன் கப்பலை திசை திருப்பி கரை சேர்ப்பாரா... அல்லது பாறையில் மோதி கவிழவைப்பாரா என்பதை விஜயகாந்தின் வியூகமே தீர்மானிக்கும்!
- Sandhya Ravishankar (@sandhyaravishan)
தமிழில் : பி.ஆரோக்கியவேல்
ஓவியம்: கார்த்திகேயன் மேடி
நன்றி - விகடன்
0 comments:
Post a Comment