13வது சென்னை சர்வதேச பட விழாவின் நான்காம் நாள் (9.1.2016) சென்னை உட்லண்ட்ஸ் திரையரங்கத்தில் நடைபெற்றது. இதில் இயக்குநர் வெற்றிமாறன், 'மாயா' பட இயக்குநர் அஸ்வின் உள்ளிட்டோர் கலந்து கொண்டு திரைப்படத் துறை மாணவர்கள், சினிமா ஆர்வலர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர்.
இதில் பேசிய 'மாயா' திரைப்பட இயக்குநர் அஸ்வின், மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
பொறியியல் படித்துவிட்டு இந்தத் துறைக்கு வரக்காரணம் என்ன? எப்படி இந்த முயற்சி வெற்றியடைந்தது?
பொறியியல் படித்து, அது சார்ந்த துறையில் வேலைக்குச் சென்றாலும், அது எனக்கு திருப்தியாக அமையவில்லை. என்னுடைய இலக்கு இதுவல்ல என்று தோன்றியது. இரண்டு வழிகளில் இயக்குநர் ஆகலாம். உலக சினிமாக்கள் பார்த்து, புத்தகங்கள் படித்து, குறும்படங்கள் எடுத்து இயக்குநராகலாம். அடுத்தது இயக்குநர்களிடம் வேலை பார்த்துக் கற்றுக் கொள்ளலாம்.
குறும்படங்கள் எடுத்து, சினிமாவிற்கு வந்திருக்கிறீர்கள். இது எந்த விதத்தில் உங்களுக்கு உதவியாக அமைந்தது?
குறும்படங்கள் எடுப்பதன் மூலம் எழுத்திலிருந்து, படப்பிடிப்புக்குச் செல்லும்போது என்னென்ன தவறுகள் நிகழும் என்பதை தெரிந்துகொள்ள முடியும். குறும்படத்தில் செய்கின்ற தவறுகளை, திரைப்படத்தில் தவிர்க்க முடியும்.
புதுமுக இயக்குநரான உங்களுக்கு, நயன்தாரா மாதிரியான பிரபல நடிகையை வேலை வாங்குவது எப்படி இருந்தது?
கதைக்காக மட்டுமே நயன்தாரா இதில் நடித்தார். சொல்லும்போதே அவருக்குக் கதை பிடித்திருந்தது. முழு எனர்ஜி கொடுத்து நடிப்பது அவரின் வழக்கம். அதற்கேற்றவாறு நாமும் முழுமையான திறனோடு வேலை செய்தாலே போதும்.
இயக்குநர் வெற்றிமாறன் 'காக்கா முட்டை', 'விசாரணை', உலக சினிமா உள்ளிட்ட பல விஷயங்களைக் குறித்துப் பேசினார்.
விசாரணை வெளியீடு எப்போது?
(சிரிக்கிறார்). எனக்கே தெரியவில்லை. விநியோகஸ்தர்தான் முடிவு செய்ய வேண்டும்.
விசாரணை படத்தை எதனால் சென்னை சர்வதேச பட விழாவில் திரையிடவில்லை?
மிகப்பெரிய படங்களுக்கே பெரிய அளவில் விளம்பரம் தேவைப்படுகிறது. எவ்வளவு பெரிய படமாக இருந்தாலும், அதனால் மூன்று வாரங்களுக்கு மேல் ஓட முடிவதில்லை. இப்போது சமூக ஊடகங்களே சிறந்த விளம்பரக் கருவிகளாகச் செயல்படுகின்றன. வெளிநாட்டு விழாக்களுக்கு அனுப்பப்படுவது சிறந்த வியாபாரமாக இருக்கும். இங்கு படத்தை வெளியிட சிறந்த தருணத்துக்காகக் காத்திருக்கிறோம்.
விசாரணை படத்தின் தணிக்கை செய்யப்படாத காட்சிகளை வெளியிடும் திட்டம் இருக்கிறதா?
நிச்சயம் இருக்கிறது. அது குறித்த தகவல்கள் விரைவில் வெளிவரும்.
கலைப்படங்கள் என்றாலே அவை ஓடாது என்ற எண்ணம் இன்னும் இருக்கிறதா?
நீங்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். கலைப்படங்களை உலக சினிமா விழாக்களுக்கு அனுப்புவதும் ஒரு வியாபாரம்தான். 'காக்கா முட்டை' ஹாங்காங்கில் முதல் வாரத்தின் இறுதியில் சுமார் 24,000 டாலர்களை சம்பாதித்துக் கொடுத்திருக்கிறது. 'லன்ச் பாக்ஸ்', 'பிகே' ஆகிய படங்களைக் காட்டிலும் இது அதிகம். சீனாவில் பிரம்மாண்டமான அளவில் வெளியிடப்பட உள்ளது. நல்ல தயாரிப்பாளர்கள் இருந்தால் போதும்.
புத்தக வாசிப்பு, திரைத்துறைக்கு எந்தளவுக்குப் பயன்படும்?
என்னைப்பொருத்த வரையில் நல்ல புத்தகங்களை வாசிப்பது என்றைக்குமே நல்லதுதான். 50 வயதில்தான் நீங்கள் முதல் கதையே எழுதுகிறீர்கள் என்றால், உங்களின் கதையில் வரும் இளமைப் பருவம், உங்களுடையதாகவே இருக்கும். அதைப் பார்த்து இன்றைய இளைஞர்கள் சிரிப்பார்கள். உங்களை நீங்கள் மேம்படுத்திக் கொள்ள, புத்தகங்கள் நிச்சயம் உதவும்.
எல்லாப் பிரச்சனைகளுக்கும், சினிமாவிலேயே தீர்வு இருக்கிறது. நிறைய படங்களைப் பார்த்தால், வாழ்க்கையில் எந்தப் பிரச்சனையும் இருக்காது என்று ஒரு இயக்குநர் சொன்னது நினைவுக்கு வருகிறது.
நம்மூர் படங்களை உலகளாவிய அளவில் அறிமுகப்படுத்துவது எப்படி?
உலக சினிமாவுக்கும், உள்ளூர் சினிமாவுக்கும் உள்ள இடைவெளியைக் குறைக்க வேண்டும். அதற்குத் தடையாக இருக்கும் விஷயங்களை நீக்க வேண்டும். அப்படி நிறைவாக இருக்கிறது என்னால் இரண்டு படங்களைச் சொல்ல முடியும். ஒன்று 'லன்ச் பாக்ஸ்'. மற்றொன்று 'காக்கா முட்டை'.
இப்போது வெளிவரும் படங்கள் குறைவான கால அளவிலேயே இருக்கிறதே?
ஆம், இரண்டு மணி நேரப்படம் என்றால் உங்களால் ஐந்து ஷோக்களை வெளியிட முடியும். அதிக அளவில் பணத்தை ஈட்ட முடியும். இப்போது இருக்கும் ரசிகர்கள் அதிகம் பொறுமை காப்பதில்லை. ஐந்து நிமிடத்துக்கு மேல் அவர்களால் மொபைலைப் பார்க்காமல் இருக்க முடியாது.
அவர்களுக்கேற்றாற்போலத்தானே நாமும் படம் எடுக்க வேண்டும். இரண்டு மணி நேரம் என்னும்போது, சண்டைக்காட்சி, நடனங்களைக் குறைத்து, உணர்வுப்பூர்வமான விஷயங்களில் அதிகக் கவனத்தை செலுத்த முடியும்.
நன்றி - த ஹிந்து
0 comments:
Post a Comment