புதுடெல்லி: எனக்கு புது வாழ்க்கை கிடைத்திருக்கிறது என்று பதான்கோட்டில் தீவிரவாதிகளிடம் சிக்கி உயிர் தப்பிய போலீஸ் எஸ்.பி. படபடப்புடன் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலம் பதான்கோட் விமானப்படை தளத்திற்குள் கடந்த சனிக்கிழமை புகுந்த பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது இயக்கத் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலை இந்திய வீரர்கள் வெற்றிகரமாக முறியடித்தனர்.
இந்த தாக்குதல் நடத்துவதற்கு முன், காரில் வந்து கொண்டிருந்த பஞ்சாப் மாநில குர்தாஸ்பூர் நகர எஸ்.பி. சல்விந்தர் சிங், அவருடைய நண்பரும் நகை வியாபாரியுமான ராஜேஷ் சர்மா, சமையல்காரர் மதன்கோபால் ஆகியோரை தீவிரவாதிகள் கடத்தி இருக்கின்றனர். பின்னர் அவர்களை கடுமையாக தாக்கி, வெவ்வேறு இடங்களில் தனித்தனியே கீழே தள்ளிவிட்டு விட்டு காரை மட்டும் எடுத்துச் சென்றிருக்கின்றனர். அதன்பின் தாஜ்பூர் என்ற இடத்தில் அந்த காரை நிறுத்திவிட்டு பதன்கோட் விமானப்படை தளம் நோக்கி சென்ற தீவிரவாதிகள் அங்கு தாக்குதலில் ஈடுபட்டிருக்கின்றனர்.
இந்த சம்பவம் குறித்து எஸ்.பி. சல்விந்தர் சிங் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''தீவிரவாதிகள் அனைவரும் ஏ.கே. 47 ரக எந்திர துப்பாக்கிகளை வைத்திருந்தனர். எனது 3 செல்போன்களில் இரண்டை பறித்துக் கொண்டனர். முதலில் நான் ஒரு போலீஸ் அதிகாரி என்பது அவர்களுக்கு தெரியாது. போலீஸ்காரர் ஒருவர் என்னை செல்போனில் அழைத்தபோதுதான் போலீஸ் அதிகாரி என்பதை அவர்கள் தெரிந்து கொண்டனர்.
கோயிலுக்கு சென்று தனிப்பட்ட முறையில் பிரார்த்தனை செய்துவிட்டு வந்ததால் துப்பாக்கி வைத்துக் கொள்ளவில்லை. அதனால்தான் சாதாரண உடையிலும் இருந்தேன். எங்களை பிடித்த தீவிரவாதிகள் அனைவரும் கைகளை மேலே உயர்த்தும்படி சொன்னார்கள். ஒரு தீவிரவாதி மண்டியிட்டு நில்லுங்கள் என்றான். எங்களை நீங்கள் பார்த்தால் உடனடியாக சுட்டுக் கொல்வோம் என்றும் மிரட்டியவர்கள், எங்கள் 3 பேரின் கண்களையும் துணியால் கட்டியதுடன், எங்கள் கைகளையும் மடக்கி பின்புறமாக கட்டினர்.
அந்த தீவிரவாதிகள் அனைவரும் உருது, பஞ்சாபி, இந்தி கலந்து பேசினர். அவர்கள் என்னை கொல்வதற்கு திட்டமிட்டு இருந்தனர். ஆனால், அவர்கள் வருவதற்குள் எனது கட்டுகளை அவிழ்த்துக் கொண்டு அந்த இடத்தில் இருந்து தப்பித்துவிட்டேன். தீவிரவாதிகள் கடத்திய சம்பவம் குறித்து உடனடியாக மேலிடத்துக்கு தெரிவித்தேன். அதன்பின்னரே டி.ஜி.பி, கூடுதல் டி.ஜி.பி. மற்றும் மூத்த போலீஸ் அதிகாரிகள் பதான்கோட் விரைந்தனர்.
நான் உண்மையை மட்டுமே சொல்கிறேன். எனக்கு புதிய வாழ்க்கை கிடைத்து இருக்கிறது. என்ன நடந்தது என்பது எனக்குத்தான் தெரியும். நான் எப்படி உயிருடன் வந்தேன் என்பதையும் அறிவேன்" என்றார்.
இந்நிலையில், குர்தாஸ்பூர் நகர எஸ்.பி. சல்விந்தர் சிங்க்கும், தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கும் இடையே தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அதனால், அவரிடம் இது குறித்து விசாரணை நடத்தப்படும். அப்படி அவர் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்தால் அவரை கைது செய்து விசாரணை நடத்தவும் திட்டமிடப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
நன்றி - விகடன்
0 comments:
Post a Comment