இந்தியத் திரையுலகம் கொண்டாடும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இன்று (ஜன.6) பிறந்தநாள். ஆஸ்கர் விருதை வென்ற மேடையில் கூட "எல்லா புகழும் இறைவனுக்கே" என்று தமிழில் பேசி நம்மை வியப்பில் ஆழ்த்தியவர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஒரு ஆல்பம் வெளிவருகிறது என்றால், இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைக்கும் என்பதில் ஐயமில்லை. ஏ.ஆர்.ரஹ்மானைக் கண்டு வியக்க அவரது இசை மட்டுமல்ல... தனிப்பட்ட சிறப்பு அம்சங்களும் நிறைந்துள்ளன.
* பொது நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும்போது எந்த ரசிகர் ஆட்டோகிராப் கேட்டாலும் நின்று போட்டு விட்டுதான் கிளம்புவார். அதற்கு எவ்வளவு நேரமானாலும் பொறுத்திருக்க தயங்கமாட்டார். ஆனால், அவர் மசூதியில் தொழுகை செய்துவிட்டு வரும் போது, யார் கையெழுத்து கேட்டாலும் "இங்கு இறைவன்தான் பெரியவர். அவரை மிஞ்சிய ஆள் நானில்லை. இங்கு வைத்து என்னிடம் கையெழுத்து கேட்காதீர்கள்" என்று கூறிவிட்டு கிளம்பிவிடுவார்.
* தொடர்ச்சியாக பல்வேறு படங்களுக்கு இசையமைத்து வரும்போது, ஒரே நேரத்தில் பல்வேறு பாடல்கள் கொடுக்க வேண்டியது இருக்கும். அந்த சமயத்தில் தனியாக அவருடைய ஸ்டுடியோவில் போய் உட்கார்ந்து கொண்டு நிறைய பாடல் மாதிரிகளைத் தயார் செய்வார். அதனை தனது உதவியாளர்களிடம் கொடுத்துவிடுவார். "3, 5 மாதிரிகளை இந்த இயக்குநருக்கும் 7, 9 மாதிரிகளை இந்த இயக்குநருக்கும் அனுப்பிவிடுங்கள்" என்று சரியாக இயக்குநர் எந்த மாதிரியான பாடல்களை விரும்புவார்கள் என்று தேர்ந்தெடுத்து அனுப்பி ஒப்புதல் வாங்குவது தான் ரஹ்மான் ஸ்டைல்.
* பாடல்கள் இசையமைப்பைத் தாண்டி அவருக்கு நடிப்பதில் ஆர்வமே கிடையாது. அந்த அளவுக்கு பயங்கர கூச்ச சுபாவம் கொண்டவர். 'ஜெய் ஹோ' பாடலை தயார் செய்தவுடன் இந்தியாவே கொண்டாடியது. ஆனால், அதை படமாக்கப்பட்ட கஷ்டம் இயக்குநர் பரத் பாலாவுக்கு மட்டுமே தெரியுமாம். கேமரா முன்னால் நடிப்பதற்கு மிகவும் கூச்சப்பட்டு இருக்கிறார். முழு படப்பிடிப்பும் முடிந்து முழுமையாக தயாரானவுடன் ஏ.ஆர்.ரஹ்மானிடம் கொடுத்திருக்கிறார் பரத் பாலா. உடனே அப்பாடலை திரையிட எல்லாம் தயார் செய்துவிட்டு தன் அம்மாவை அழைத்து வந்து, "இந்த மாதிரி ஒரு பாடலை தயார் செய்திருக்கிறேன் அம்மா. நீங்கள் பாருங்கள்" என்று கூறிவிட்டு அந்த இடத்தில் இருந்து சிரித்துக் கொண்டே நகர்ந்துவிட்டார்.
* ரஹ்மான் உடன் பணிபுரிபவர்களுக்கு மட்டுமே தெரியும் அவர் வேகமாக கார் ஓட்டக் கூடியவர் என்று. அவர் கார் ஒட்டும்போது அவருடன் உட்கார்ந்து போக அவருடன் பணிபுரிபவர்கள் பயப்படுவார்கள். அந்தளவுக்கு படுவேகமாக கார் ஓட்டக் கூடியவர். ஆனால், சாலை விதிகளை கச்சிதமாகக் கடைபிடிப்பவர்.
* எவ்வளவு பெரிய மதிப்புடைய கார்கள் வைத்திருந்தாலும், பழைய அம்பாசிடர் காரை மட்டும் மிகவும் ரசித்து ஓட்டுவார் ஏ.ஆர்.ரஹ்மான்.
* ரஹ்மான் மிக அருமையாக மிமிக்ரி செய்வார். அதிலும் வைரமுத்து போல மிமிக்ரி செய்வது அவருக்கு விருப்பமான ஒன்று.
* பெரும்பாலும் இரவு நேரங்களில் தான் இசையமைப்பார். வீட்டில் இருந்து இரவு நேர பாடல் ஒலிப்பதிவுக்கு கிளம்பும்போது, குழந்தைகள் தூங்கியவுடன்தான் கிளம்புவார். அந்த அளவுக்கு குழந்தைகள் மீது அளவு கடந்த பாசம் உடையவர். மேலும், இவருடைய மகன் அமீனுக்கும், இவருக்கும் ஒரே தேதியில் பிறந்த நாள். (ஹேப்பி பேர்த் டே அமீன்!!)
* இயக்குநர் ஷங்கர் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவரும் 'இந்தியன்' படத்துக்கு பணியாற்றி வந்த நேரம். அந்த மெட்டுகள் அனைத்தையும் ஒரு ஹார்டு டிஸ்கில் போட்டுக் கொண்டு ஆஸ்திரேலியா பயணமானார். அப்போது விமான நிலையத்தில் தெரியாமல் ஹார்ட் டிஸ்கை ஸ்கேன் செய்யக் கொடுத்துவிட்டார். விமான நிலையத்தில் உள்ள ஸ்கேனிங்கில் ஹார்ட் டிஸ்கை ஸ்கேன் செய்துவிட்டால், அதில் உள்ளவை அனைத்துமே அழிந்துவிடும். வேலை அவசரத்தில் கொடுத்ததால், சுமார் 25 மெட்டுகள் அழிந்துவிட்டன. அப்போது சென்னை திரும்பியவுடன் இயக்குநர் ஷங்கர், பாடல்கள் வேண்டும் என கேட்கவே, ஹார்ட் டிஸ்க்கை போட்டுப் பார்த்தால் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பெரும் அதிர்ச்சி. ஆனால், அவர் சோகத்தில் எல்லாம் உட்கார்ந்துவிடவில்லை. உடனடியாக எந்த மாதிரி எல்லாம் மெட்டுகள் பண்ணினோம் என்று யோசித்து ஒரே நாளில் 'இந்தியன்' பாடல்களை முடித்து கொடுத்துவிட்டார் ஏ.ஆர்.ரஹ்மான்.
* உலக அளவில் எவ்வளவு பெரிய இயக்குநராக இருந்தாலும், இவருடைய பாடல் ஒலிப்பதிவு கூடத்துக்குள் அனுமதியே கிடையாது.
* எவ்வளவு முக்கியமான வேலைகள் இருந்தாலும் தினமும் ஐந்து முறை தொழுகை செய்வதில் அவர் தவறுவதில்லை. இந்தியாவில் முக்கியமான தர்காக்கள் எந்த சந்துக்குள் இருந்தாலும் சென்று பார்த்து தொழுதுவிட்டு வருவது ரஹ்மான் வழக்கம்.
tha hindhu
0 comments:
Post a Comment