Sunday, December 13, 2015

பீப்' பாடல்: சிம்பு, அனிருத் தங்கள் வக்கீல் மூலம் பதில்!

'பீப்' சாங் தொடர்பாக சிலம்பரசன் மற்றும் அனிருத் ஆகியோர் சார்பில் அவரது வழக்கறிஞர் சி.ராஜசேகரன் விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நடிகர் சிம்புவின் குரலில், அனிருத் இசையமைத்ததாகச் சொல்லி இணையதளத்தில் 'பீப்' சாங் ஒன்று வேகமாக பரவி வருகிறது. பாடலின் ஆரம்ப கட்ட வார்த்தைகள் அச்சில் ஏற்ற முடியாத அளவுக்கு மிக மோசமான வார்த்தைகளுடன் துவங்குகிறது. பீப் ஒலி கொண்டு அந்த வார்த்தைகளை மறைக்க முயன்றிருந்தாலும், வார்த்தைகள் என்ன என்பதை எளிதில் புரிந்து கொள்ளும் அளவில்தான் பாடல் உள்ளது. இணையத்தில் பெரும் எதிர்மறை விமர்சனங்களை இந்த பாடல் சந்தித்து வரும் நிலையில், இதை எழுதி பாடியதாக சிம்புவும், இசையமைத்ததாக அனிருத்தையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர் இணைய வாசிகள்.
 

இந்நிலையில், நடிகர் சிம்பு, அனிருத் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி ஜனநாயக மாதர் சங்கத்தினர் கோவை மாவட்ட செயலாளர் ராதிகா மற்றும் நிர்வாகிகள் கோவை காவல்துறையில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில், சமூக வலைதளங்களில் ஆபாசமான கருத்துக்களை பகிர்ந்தது பெண்களை இழிவுபடுத்தி பாடல் இயற்றியது, ஆபாசமாக பாடியது உள்ளிட்ட புகார்களின் அடிப்படையில் நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிருத் மீது ஜாமீனில் வெளிவரமுடியாத 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கோவை மாநகர காவல்துறை ஆணையர் அமல்ராஜ் நேற்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், 'பீப்' சாங் தொடர்பாக சிலம்பரசன் மற்றும் அனிருத் ஆகியோர் சார்பில் ஆஜராகியிருக்கும் வழக்கறிஞர் சி.ராஜசேகரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், வாட்ஸ் அப், யூடியூப் எனப் பல்வேறு வடிகால்களின் வாயிலாக இணையத்தில் தற்போது பரவலாக உலவி வரும் ’பீப்' சாங் என்ற  பாடலின் வரிகள் அதிகாரப்பூர்வமான பாடல் வரிகள் அல்ல. மேலும் இவ்வரிகள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருப்பதாகத் தெரிவதை அறிந்து எனது கட்சிக்காரர்கள் சிலம்பரசன் மற்றும் அனிருத் ஆகியோர் அதிர்ந்து போயுள்ளனர்.

எனது கட்சிக்காரர்களின் மீது மக்கள் வைத்திருக்கும் மதிப்பையும், நற்பெயரையும் தகர்க்க வேண்டும் என்ற தீயநோக்கோடும், தவறான எண்ணத்தோடும் சில விஷமிகள் இந்தப் பாடலை இணையத்தில் கசிய விட்டிருக்கிறார்கள் என்பது என் கட்சிக்காரர்களின் வலுவான அபிப்பிராயம் ஆகும். இது குறித்து, இணையத்தில் உலவி வரும் இந்தப் பாடல் பதிவேற்றப்பட்ட மூலத்தையும் அதன் அதிகாரத்தையும் ஆராய்ந்து, கண்டறிந்து, சட்டப்படி அதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு, என் கட்சிக்காரர்கள் என்னிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும், நடிகர் சிலம்பரசன் ஒரு இசைப்பிரியர் ஆவார். அவர் பல்வேறு பாடல்களைத் தன் சொந்தப் பயன்பாட்டிற்காக ஒலிப்பதிவு செய்துள்ளார். இவையாவும், அதிகாரப்பூர்வமற்ற, திருத்தப்படாத முதல்படிவ நிலையிலேயே உள்ளன. இவை நூறு விழுக்காடு அவரது தனிப்பட்டச் சொத்தாகும். அவரது தனிப்பட்டச் சொத்துகளிலோ, அந்தரங்கத்திலோ தலையிடுவதற்கு எவருக்கும் உரிமை இல்லை. மேலும் அவ்வாறு செய்வது சட்டப்படி, தண்டிக்கப்பட வேண்டிய குற்றமாகும்" என்று தெரிவித்துள்ளார்.

-ச.அருண் (மாணவ பத்திரிகையாளர்)

-விகடன்

0 comments: