குத்துச்சண்டையில் யாரையும் எதிர்த்து நிற்கும் துணிச்சல் கொண்ட உக்கிரமான வீரனால் வணிகச் சூழலின் சூழ்ச்சிகளை எதிர்த்து வெல்ல முடிகிறதா என்பதே ‘பூலோகம்’.
வட சென்னையில் ஒரு காலத்தில் இடியாப்ப நாயக்கர் பரம்பரை, சார்பட்டா பரம்பரை என்று பல குத்துச்சண்டை குழுக்கள் இருந்தன. அத்தகைய இரண்டு ‘பரம்பரை’களுக்குள் இருக்கும் ஜென்மப் பகையின் தற்கால அத்தியாயம்தான் படத்தின் கரு.
எதிர் பரம்பரை வீரரிடம் தோற்ற அவமானத்தால் தூக்கு மாட்டிக்கொண்டு இறந்துபோகிறார் ஜெயம் ரவியின் அப்பா. அந்த பரம்பரையின் இன்றைய வாரிசை வென்று பழிதீர்க்கத் துடிக்கிறார் ரவி. அதற்காக வெறித்தனமாகப் பயிற்சி செய்கிறார். எதிராளி ஆறுமுகமும் (ராஜேஷ்) இரண்டில் ஒன்று பார்த்துவிடும் முடிவோடு தயாராகிறார்.
பகைமையின் இந்த வெறியைப் பணமாக மாற்ற விளையாட்டு தொலைக்காட்சி சேனல் உரிமையாளர் பிரகாஷ் ராஜ் திட்டமிடுகிறார். அவர் நடத்தும் பெரிய அளவிலான போட்டியில், ரவியின் அடி தாங்காமல் கோமாவில் படுத்துவிடுகிறார் ராஜேஷ். இதனால், ரவிக்கு வெறி மறைந்து குற்ற உணர்வு தலைதூக்குகிறது. குத்துச்சண்டையே வேண்டாம் என ஒதுங்கி சாமியார்போல வாழ்கிறார்.
ரவியின் குத்துச்சண்டை வெறியை வைத்து பல திட்டங்கள் போட்டிருந்த பிரகாஷ் ராஜ், அவரை மீண்டும் சண்டையில் இறக்க முடிவு செய்கிறார். பிரகாஷ் ராஜின் சதி வலையில் விழும் ரவி, அவரது சதிகளை புரிந்துகொண்டு, அதே விளையாட்டில் அவரை தோற்கடிக்க முடிவுசெய்கிறார். தன்னைவிட பல மடங்கு பலம் பொருந்திய அமெரிக்க குத்துச்சண்டை வீரரோடு இதற்காக மோதவேண்டி இருக்கிறது. அந்த போட்டியையும் பிரகாஷ் ராஜின் வியூகங்களையும் ரவி எப்படி எதிர்கொள்கிறார் என்பது ‘பூலோகம்’ கதை.
குத்துச்சண்டையின் ஆக்ரோஷத்தையும் வட சென்னையின் பண்பாட்டுக் கூறுகளையும் துல்லியமாக பதிவுசெய்துள்ளார் இயக்குநர் என்.கல்யாண கிருஷ்ணன். சண்டைக்குத் தயாராகும் காட்சிகள், சண்டைக்கு முன்பு அம்மன் கோயிலில் ரவி மேற்கொள்ளும் சடங்கு, சாவின்போது பாடப்படும் கானா பாடல் காட்சி, சாமியாராக வாழும் ரவியை மீண்டும் சண்டையில் இறக்குவது ஆகியவை நன்றாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. வழக்கமான நாயக அடையாளங்கள் அதிகம் இல்லாமல் ஆத்திரமும் வேகமும் கொண்ட சராசரி மனிதராக ரவியைச் சித்தரித்துள்ளது பாராட்டுக்குரியது. எதையும் பணமாக்கத் துடிக்கும் வணிக மோசடியையும் ஊடகங்களின் விரும்பத்தகாத போக்கையும் கதையில் பொருத்தியிருக்கிறார்.
சண்டைகளைக் காட்சிப்படுத்திய விதம் ஆர்வ மூட்டக்கூடியதாக இருக்கிறது. மிகவும் அபாயகரமான ஜார்ஜோடு நடக்கும் குத்துச்சண்டையைவிட, போட்டிக்கான ஒப்பந்தம் போட்டுக்கொள்ளும் காட்சியில் ரவி - பிரகாஷ் ராஜ் இடையே நடக்கும் சொல் யுத்தம் விறுவிறுப்பு.
எல்லாம் சரிதான், சிக்கலான வணிக மோசடிகளை ரவி எப்படித் தெரிந்துகொண்டார் என்பது சொல்லப்படவே இல்லை. ஒப்பந்தம் போடும் காட்சி, கிளைமாக்ஸ் சண்டைக்குப் பிறகு ரவி பேசும் அரசியல் ஆகியவை வசனகர்த்தா எஸ்.பி.ஜனநாதனின் குரலாகவே ஒலிக்கிறது.
அமெரிக்க குத்துச்சண்டை வீரரை பெண் வேடத்தில் அலையவிடுவது, ரவியின் திருமணத்துக்கு அவர் வந்து சவால் விடுவது போன்ற காட்சிகள் படத்தின் வேகத்தைக் குறைக்கின்றன. அமெரிக்க குத்துச்சண்டை வீரரை அழைத்துவந்து மோதவிடுவது, வெவ்வேறு எடைப் பிரிவில் இருப்பவர்கள் பரஸ்பரம் மோதுவது போன்ற காட்சிகள் படத்தின் நம்பகத்தன்மையைக் குறைக்கின்றன.
பழிவாங்கும் வெறியோடு கூடிய குத்துச்சண்டை வீரரின் கதாபாத்திரத்தை நன்றாகவே கையாண்டிருக்கிறார் ஜெயம் ரவி. அவரது உடல்மொழி, முகபாவனைகள் பாத்திரத்தின் தேவைக்கேற்ப உள்ளன. வசன உச்சரிப்பில் அவர் இன்னும் மெனக்கெட வேண்டும். படம் முழுவதும் வரும் த்ரிஷாவுக்கு சொல்லிக்கொள்ளும்படி எந்த வேலையும் இல்லை. எல்லோரையும் தனது வணிக விளையாட்டின் பகடைக்காய்களாக மாற்றும் வில்லன் வேடத்தில் பிரகாஷ் ராஜ் கச்சிதம். பயிற்சியாளர்களாக வரும் பொன்வண்ணன், ஷண்முகராஜா மனதில் நிற்கிறார்கள்
. நாதன் ஜோன்ஸின் தோற்றம் பிரமிக்கவைத்தாலும், நடிப்பு ஏமாற்றம் அளிக்கிறது.
தன் சீடர் இயக்கியுள்ள படத்துக்கு எஸ்.பி.ஜன நாதன் வசனம் எழுதியிருக்கிறார். வழக்கம்போல, படத்துக்கு அது பெரிய பலம். வசனங்களில் தெறிக்கும் அரசியல், கூர்மையும் காரமும் கொண்டுள்ளது. படத்தின் முதல் பாதியில் படத் தொகுப்பு நேர்த்தியாக இல்லை. நம்பகத்தன்மை விஷயத்தில் கவனம் செலுத்தியிருந்தால் வணிக அரசியலைப் பேசும் நேர்த்தியான பொழுதுபோக்குப் படமாக அமைந்திருக்கும்.
the hindu
0 comments:
Post a Comment