பீப்' பாடல்... நடிகர் சிம்பு , இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தது கோவை மாநகர காவல்துறை.
பெண்களை மிக கேவலமாக சித்தரித்து பாடல் இயற்றி உள்ளதாக நடிகர் சிம்பு மற்றும் இசையமைப்பாளர் அனிருத்துக்கு எதிராக கோவையில் காவல்துறையில் புகார் அளித்த மாதர் சங்கத்தினர், சிம்பு - அனிருத் புகைப்படங்களை கிழித்தெறிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சிம்புவின் குரலில், அனிருத் இசையமைத்ததாகச்சொல்லி இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது ஒரு பாடல். பாடலின் ஆரம்ப கட்ட வார்த்தைகள் அச்சில் ஏற்ற முடியாத அளவுக்கு மிக மோசமான வார்த்தைகளுடன் துவங்குகிறது அந்த பாடல். பீப் ஒலி கொண்டு அந்த வார்த்தைகளை மறைக்க முயன்றிருந்தாலும், வார்த்தைகள் என்ன என்பதை எளிதில் புரிந்து கொள்ளும் அளவில்தான் பாடல் உள்ளது. இணையத்தில் பெரும் எதிர்மறை விமர்சனங்களை இந்த பாடல் சந்தித்து வரும் நிலையில், இதை எழுதி பாடியதாக சிம்புவும், இசையமைத்ததாக அனிருத்தையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர் இணைய வாசிகள்.
இந்நிலையில், பெண்களை மிக அவமானப்படுத்தியுள்ள சிம்பு, அனிருத் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை காவல்துறையில் புகார் அளித்துள்ளனர் ஜனநாயக மாதர் சங்கத்தினர்.
சங்கத்தின் கோவை மாவட்ட செயலாளர் ராதிகா மற்றும் நிர்வாகிகள் கோவை மாநகர காவல் ஆணையாளரை சந்தித்து இது தொடர்பாக புகாரினை அளித்தனர்.
இந்நிலையில் சமூக வலை தளங்களில் ஆபாசமான கருத்துக்களை பகிர்ந்தது பெண்களை இழிவுபடுத்தி பாடல் இயற்றியது, ஆபாசமாக பாடியது உள்ளிட்ட புகார்களின் அடிப்படையில் நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிருத் மீது ஜாமீனில் வெளிவரமுடியாத 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கோவை மாநகர காவல்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.
மேலும் சட்ட ஆலோசனைகள் பெற்று வழக்குப்பதியப்பட்டுள்ளதாகவும், முறையாக விசாரணை நடக்கும் என்றும் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் உறுதி அளித்துள்ளார்.
-ச.ஜெ.ரவி
விகடன்
1 comments:
என்ன ஒரு சமூகம் இது? இந்த வக்கிர எண்ணம் கொண்டவர்களின் செயலுக்கு நியாயம் கற்பிக்க ஒரு கூட்டம் கெளம்பியுள்ளதே, அது விளம்பரத்துக்காக எதையும் தூக்கிப் பிடிக்கும் சமூக நிலையை அல்லவா காட்டுகிறது. விரக்தியின் விளிம்பில் இருப்பவர்களின் எண்ண வெளிப்பாடு என்று இதை எடுத்துக் கொள்ளலாமா?
Post a Comment