Thursday, December 10, 2015

சென்னை சீரழிவுக்குக் காரணம் யார் தெரியுமா? - அதிர வைக்கும் உண்மைகள்!

டந்த ஒரு மாதமாக கிடைத்த மழையால், சென்னையே தத்தளித்து தப்பித்துள்ளது. இவ்வளவு உயிரிழப்புகள், பொருட்சேதம் ஆகியவற்றிற்கு இயற்கைதான் ஒட்டுமொத்த பழியேற்று நிற்க வேண்டுமா? அரசு செய்த தவறு என்ன?


டிசம்பர் மாதம் 1-ம் தேதி மாலை 5 மணி அளவில், செம்பரம்பாக்கம் ஏரி, முழு கொள்ளளவை எட்டும் நிலைக்கு சென்றது. அணை நிரம்புவதை தடுக்க, விநாடிக்கு 10,000 கன அடி நீர் உபரியாக அடையாறு ஆற்றுக்கு திறந்து விடப்பட்டது.

“நான் அன்று செம்பரம்பாக்கம் அணையில்தான் இருந்தேன். அன்று பெரியளவில் அணையில் இருந்து நீர் வெளியேற்றப்பட்டது. ஆனால், அது மிகப்பெரிய பேரழிவை கொண்டு வரும் என எதிர்பார்க்கவில்லை. ஆனால், விளைவுகள் பயங்கரமானதாக இருந்தது. அணையில் இருந்து நீர் திறந்து விடப்பட்டதால், என்ன நடந்தது என்பதை நான் மறுநாள்தான் கேள்விப்பட்டேன். பாதிப்புகளை கேட்டு அதிர்ந்து விட்டேன்” என்கிறார் பெயர் வெளியிட விரும்பாத அரசு அதிகாரி ஒருவர்.

நீர் திறந்து விடப்படுவதற்கு ஒரு மணிநேரம் முன்னர், 4 மணிக்கு  அரசிடம் இருந்து  பத்திரிகையாளர்களுக்கு அறிவிப்பு வந்தது. சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் சுந்தரவல்லியிடம் இருந்து, நீர் திறப்பு பற்றி வந்த செய்திதான் அது. 'செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து விநாடிக்கு 5,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில், விநாடிக்கு 7,500 கன அடி நீர் வெளியேற்றப்படலாம் என்பதால், அடையாறு ஆற்றுக்கு அருகில் வசிக்கும் மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்' என்றது அந்த செய்திக்குறிப்பு.


அதே நேரத்தில் அரசின் வருவாய்த்துறையிடம் இருந்து இன்னொரு அறிவிப்பு வந்தது. நீர்வரத்து அதிகம் இருப்பதால், மக்கள் யாரும் அடையாறு, கூவம் நதிகளுக்கு சென்று வேடிக்கை பார்க்க வேண்டாம். சிறுவர்களை ஆறுகளுக்கு அருகில் செல்ல அனுமதிக்காதீர்கள் என்பதுதான் அது. அதோடு, காவல்துறை மற்றும் தீயணைப்பு துறை அதிகாரிகள் இது குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை கொடுக்கும்படி கூறியிருந்தது அந்த அறிவிப்பு.

நீர் திறந்து விடப்பட்டதால், அன்றைய இரவே மழைநீர் வெள்ளமாக மாற ஆரம்பித்தது. அடுத்த நாள், அதாவது டிசம்பர் 2-ம் தேதி, காலையே அடையாறு ஆற்றை சுற்றி சுமார் ஏழு கிலோமீட்டர் சுற்றளவில் இருந்த, பகுதிகள் அனைத்தும் வெள்ளத்தில் மிதக்கத்தொடங்கியது. மதியம், வெள்ள நீர் வீடுகளுக்குள் செல்லத்தொடங்கியது. ஆற்றை நெருங்கிய பகுதிகளில் இருந்த வீடுகளில், வெள்ளநீரின் அளவு 10 அடி வரை உயர்ந்தது. வெள்ளம் வீட்டின் கூரை வரை மூழ்கடிக்க, மக்கள் தெருக்களில் வந்து நிற்க தொடங்கினர்.



பிரச்னை இங்குதான் ஆரம்பிக்கிறது. அரசின் இணையதளத்தில் இருக்கும் அதிகாரப்பூர்வ தகவல்களை எடுத்து கொள்வோம். டிசம்பர் 1-ம் தேதி, செம்பரம்பாக்கம் அணை 86 சதவீதம் நிரம்பியிருந்தது. 3,645 கன அடி மொத்த கொள்ளளவு கொண்ட அணை, 3,141 கன அடி நிரம்பியிருந்தது. அந்தப் பகுதியில் அன்று பதிவான மழை அளவு 17 செ.மீ. அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட நீர் விநாடிக்கு 900 கனஅடி. (
http://www.chennaimetrowater.tn.nic.in/reserve.asp
)

குழப்பம் புரிகிறதா? அரசின் இணையதளம் கூறும் தகவல், 900 கன அடி. அரசு அதிகாரி கூறுவது 10,000 கன அடி. சென்னை மாவட்ட ஆட்சியரின் செய்திக் குறிப்பில் இருப்பது, 5,000 முதல் 7,500 கன அடி. அப்படியெனில், அன்று மாலை செம்பரம்பாக்கம் அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட நீரின் சரியான அளவு என்ன? யாருக்கும் தெரியாது. இது தொடர்பான தகவல்களைப் பெற, அரசின் தலைமை செயலாளர், பொதுப்பணி துறை அதிகாரி, சென்னை மாவட்ட ஆட்சி தலைவர் என பலரிடம் முயற்சித்தும், எந்தப் பதிலும் கிடைக்கவில்லை.



அடுத்து, சென்னையில் வெள்ளம் வந்த டிசம்பர் 2-ம் தேதியின், அணை தொடர்பான தகவல்களை எடுத்துக்கொள்வோம். இதுவும் அரசின் இணையதளத்தில் எடுக்கப்பட்டதே. (
http://www.chennaimetrowater.tn.nic.in/reserve.asp
) அன்றைக்கு செம்பரம்பாக்கம் அணை, 3,396 கன அடி அளவு நிரம்பி 93 சதவீதம் நிரம்பியிருந்தது. அன்றைக்கு பதிவான மழை அளவு 47.5 செ.மீ. ஏரியில் இருந்து வெளியேற்றப்பட்ட, மொத்த நீரின் அளவு 29,000 கன அடி. இதே அளவு நீர்தான் முதல் நாள் இரவும் வெளியேற்றப்பட்டது என்கிறார் அதே அதிகாரி.

“காவல் துறை மூலமாகவும், உள்ளாட்சி நிர்வாகங்கள் மூலமாகவும் நாங்கள் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தோம். தண்ணீர் வெளியேற்றம் குறித்து அறிந்த சில நிமிடங்களிலேயே நாங்கள் அங்கிருக்கும் மக்களை, உள்ளாட்சி நிர்வாக அதிகாரிகள் மூலம், வெளியேறுமாறு கூறினோம்” என்கிறார் காஞ்சிபுரம் மாவட்ட வெள்ள மீட்பு மற்றும் கண்காணிப்பு துறையின் அதிகாரி ராஜாராமன். இவரைத்தவிர வேறு எந்த அரசு அதிகாரிகளிடம் இருந்தும், நமக்கு முறையான பதில் கிடைக்கவில்லை.



இவ்வளவு பெரிய அசம்பாவிதம் ஏற்படப்போவது முன் கூட்டியே தெரிந்தும் கூட, அரசிடம் இருந்து முறையான எச்சரிக்கை அறிவிப்போ, அறிக்கைகளோ இல்லை என்பதுதான் வேதனை. அங்கிருக்கும் மக்களுக்கு இந்த எச்சரிக்கை ஏன் கொடுக்கப்படவில்லை. சில பகுதிகளில் மட்டுமே, காவல் துறையினர் ஒலிப்பெருக்கி மூலம், வெளியேறுமாறு அறிவுறுத்தியுள்ளனர் என்கின்றனர் அப்பகுதி மக்கள். ஆனால், பெரும்பாலான மக்களுக்கு இதை பற்றிய எந்தவொரு தகவலும் தெரியாமல், தங்கள் வீடும், உடைமைகளும் கண் முன்னரே மூழ்குவதை பார்த்து கொண்டிருந்துதான் சோகம். மீட்பு பணிகளை விட, இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளே அரசின் கவனக்குறைவை தோலுரித்து காட்டுகிறது.
 
வெள்ளத்திற்கு காரணம் என்ன?

கையில் இருக்கும் தகவல்களை இன்னும் ஆழமாகப் பார்த்தால் நமக்கு நிறைய  கேள்விகள் எழுகிறது. அரசு இணையதள தகவல்படி பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து டிசம்பர் 1-ம் தேதி, வெளியேற்றப்பட்ட நீரின் அளவு 8,552 கன அடி. அடுத்த நாள் வெளியேறிய நீரின் அளவு 30,200 கன அடி. இது செம்பரம்பாக்கம் அளவை விட அதிகம். டிசம்பர் 3-ம் தேதி, வெளியேற்றப்பட்ட நீரின் அளவு 36,484 கன அடி. அன்று செம்பரம்பாக்கத்தில் வெளியேறிய நீரின் அளவு 11,000 கன அடி.

செம்பரம்பாக்கம் அணையை விட, அதிகமாக பூண்டியில் இருந்து நீர் திறந்து விடப்பட்டும் கூட, ஏன் கூவம் ஆற்றுப்பகுதிகளிலோ, அதனை சுற்றியிருக்கும் பகுதிகளிலோ வெள்ளம் வரவில்லை. அடையாறு மட்டும் வெள்ளத்தில் மிதந்தது?

“மிக அதிகமாக கனமழை பெய்ததும், அதே சமயம் ஏரிகளில் இருந்து வந்த நீரும் ஒன்றாக அடையாற்றை வந்தடைந்ததே வெள்ளப்பெருக்கிற்கு காரணம். அடையாறு ஆற்றின் மொத்த கொள்ளளவு 40,000 கன அடி. ஆனால் அந்த இரண்டு நாட்களில் ஆற்றில் ஓடிய வெள்ளத்தின் அளவு 60,000 கன அடி. செம்பரம்பாக்கத்தை விட, மூன்று மடங்கு இது அதிகம். ஆனால், பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து, அதிகமாக நீர் வெளியேறிய போதும் கூட, கூவம் ஆற்றுப்பகுதிகளில் வெள்ளம் வரவில்லை. காரணம், அந்தப் பகுதியில் மழைப்பொழிவு குறைவாகவே இருந்தது. போரூர், முடிச்சூர், தாம்பரம் பகுதிகளில் இருந்து வந்த நீரும் அடையாற்றிலேயே கலந்தது. இதனால் வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டது. அதே சமயம், கூவம் ஆறு இந்த அளவு பாதிப்பை ஏற்படுத்தவில்லை. கூவம் ஆற்றின் கொள்ளளவு 25,000 கன அடி. ஆனால் நீரின் வரத்து குறைவாக இருந்ததால், பாதிப்பு இல்லை. ஒருவேளை அங்கும் இருந்திருந்தால், அடையார், கீழ்ப்பாக்கம், நுங்கம்பாக்கம், சிந்தாதிரிப்பேட்டை மற்றும் எக்மோர் பகுதிகளும் பாதிக்கப்பட்டிருக்கும்” என்கிறார் மாநில அரசின் அதிகாரி ஒருவர்.

ஆனால், இந்த வெள்ளம் மொத்தமும், அரசின் கவனக்குறைவால் மட்டுமே வந்தது என்கின்றனர் சுற்றுசூழல் ஆர்வலர்கள். “முன்னுக்கு பின் முரணான தகவல்களே, அணைகளின் பராமரிப்பை பற்றி நமக்கு தெளிவாக கூறுகிறது. அணைகளை ஏதோ பக்கெட் தண்ணீர் போல, திடீரென நிரப்பவும், உடனே அதை காலி செய்யவும் அனுமதிக்கிறோம். அப்படிச் செய்யக்கூடாது” எனக் கூறுகிறார் கேர் ஆப் எர்த் அமைப்பின் ஜெயஸ்ரீ வெங்கடேசன்.



அடையாறு ஆற்றில் இருந்து நீரானது கடலில் கலக்கும் பாதையில், நிறைய குப்பைகள், படிமங்கள் என போட்டு அந்த பாதையை தடுத்து விட்டோம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

“எல்லா வகையான ஆக்கிரமிப்புகளும் அடையார் பகுதியில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த வருடம் செப்டம்பர் மாதம் அடையாறு ஆற்றின் அருகே, புது சாலையை உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்காக போட்டது. அப்போது நிறைய கழிவுகள் ஆற்றில்தான் படிந்தன. அவை எல்லாம் ஆற்றின் வழியை தடுத்துவிட்டது” என்கிறார் சுற்றுசூழல் ஆர்வலர் நித்யானந்த் ஜெயராமன்.

 “பூண்டி நீர் வெளியேற்றம் நிச்சயம் சுற்றியுள்ள பகுதிகளை பாதிக்காது. ஏனெனில் அங்கு பாதுகாக்கப்பட்ட சதுப்புநிலப்பகுதியான பழவேற்காடு ஏரி இருக்கிறது. எனவே, அதிகமான உபரி நீரை அது எடுத்துக் கொள்ளும் என்பதால் அங்கு இந்தளவு பாதிப்பு இல்லை. பள்ளிக்கரணை, பழவேற்காடு போன்ற சதுப்பு நிலங்கள் எல்லாம், நீரை உறிஞ்சிக்கொண்டு வெள்ளம் வராமல் பாதுகாக்கும். தற்போது அரசுக்கு எந்தவொரு தீர்வும் கிடையாது. இந்த பகுதிகளை எல்லாம் பாதுகாத்து விட்டு, மற்ற பகுதிகளில் மட்டுமே வளர்ச்சிப்பணிகளை மேற்கொள்ள வேண்டும்” என்கிறார் ஜெயஸ்ரீ வெங்கடேசன்.

அரசு செய்த மற்றொரு தவறு, உபரி நீரை வெளியேற்றுவதை மாலை 6 மணிக்கு தொடங்கியிருந்தால், வெள்ளநீர் இரவு 10 மணிக்கு வீடுகளுக்குள் புகுந்திருக்கும். இதனால் மாலையே பெரும்பாலானோர் வீடுகளை காலி செய்திருப்பர். உயிரிழப்புகளையும் தடுத்திருக்கலாம். ஆனால், நீர் திறக்கப்பட்டதே 10 மணிக்கு என்பதால், வெள்ளம் இரவு 2 மணிக்கு அதிகரித்தது. காலை விடிந்தவுடன் தான் வெள்ளம் சூழ்ந்திருப்பதையே மக்கள் உணர்ந்தனர். தவறை அரசு உணர்ந்ததா என தெரியவில்லை.


வெள்ளத்தை முழுமையாக தடுத்திருக்க முடியுமா எனத் தெரியாது. ஆனால், மக்களை முழுமையாக காப்பாற்றியிருக்கலாம். அரசு செய்த மிகப்பெரிய தவறுக்கு, பலி பீடத்திற்கு ஏற்றப்பட்டவர்கள் ஒன்றும் தெரியாத சென்னை மக்கள்.

ஆக, சென்னை சீரழிவுக்குக் காரணம் தமிழக அரசும் அதன் மெத்தனப் போக்கும்தான் என்று நாம் சொல்லலாம்தானே..! இதை அரசுத் தரப்பில் மறுக்க முடியுமா?

2009-ம் ஆண்டு இத்தாலியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் மொத்தம் 309 மக்கள் இறந்தனர். இதற்காக அந்த நாட்டின் பேரிடர் முன்னறிவிப்பு மையத்தின் விஞ்ஞானிகள் 6 பேரை கைது செய்தது இத்தாலி அரசு. எதற்காக? “தங்களுக்கு வழங்கப்பட்ட, பணியை ஒரு அரசு அதிகாரியாக சரியாக செய்யவில்லை” எனக்கூறி 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.

தற்போது முதலமைச்சரும், அரசு நிர்வாகமும் நிவாரண நிதி திரட்டுவதிலும், நிவாரண உதவிகளை 'அம்மா' படத்துடன் கொண்டு சேர்ப்பதிலும் தீவிரம் காட்டி வருகிறது. இந்த தவறுகளை எல்லாம், அப்படியே நிவாரண உதவிகள் என்னும் முலாம் பூசி, மறைக்கிறது அரசு. வடகிழக்கு பருவமழை இன்னும் முடிந்து விடவில்லை. இந்நிலையில் தவறு செய்தவர்களுக்கான தண்டனை என்ன? அரசு அதிகாரிகளுக்கு தற்காலிக பதவி நீக்கங்களோ, அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் தோல்விகளோ தண்டனையாக இருக்காது.

என்ன செய்யப் போகிறோம் நாம்!? 

- சந்தியா ரவிஷங்கர்

தமிழில்: ஞா. சுதாகர்

நன்றி : thewire.in/விகடன்

0 comments: