நிவாரணக் கொள்ளையர்கள் பற்றி செய்தி கசியத் துவங்கிய நாளிலிருந்து எழுத வேண்டும் என நினைத்தது, இப்போதுதான் நேரம் வாய்த்தது. 2004 சுனாமி என்னுடைய வாழ்க்கையில் ஒரு மிகப் பெரிய திருப்புமுனையாக ஆன ஒரு நிகழ்வு. சென்னையில் சினிமா எடுக்கும் முயற்சியில் இருந்த என்னை வேரோடு பிடுங்கி நாகப்பட்டினத்தில் விதைத்த ஒரு பெரும் பேரிடர்.
வெறும் தன்னார்வலர்களாக உடல்களை எடுத்து எரியூட்டவும் குழந்தைகளோடு படங்கள் வரையவும் பாட்டுப் பாடவும் எனச் சில நாட்களுக்காகத்தான் நாகப்பட்டினம் சென்றேன். ஆனால் அங்கே தொடர்ந்து ஒரு மாதமேனும் வேலை பார்க்க வேண்டும் என எங்களைத் தூண்டியது இப்படிப்பட்ட ஒரு நிவாரணக் கொள்ளைச் சம்பவம்தான்.
பெங்களுரில் இருந்து வந்த நிவாரணப் பொருட்களை (அப்போதும் நிறைய நிவாரணப் பொருட்களை அவர்கள் அனுப்பியிருந்தார்கள்) எடுத்துக்கொண்டு நாங்கள் சீர்காழியை நோக்கிச் சென்றுகொண்டிருந்தோம். பல இடங்களில் மக்கள் எங்களை மறித்தனர். சாரதி வேகமாக ஓட்டிக் கடந்தார். காரைக்கால் கோட்டுச்சேரியில் காய்ந்த பயிர்களை அடி மண்ணோடு முளைப்பாறிபோலக் கையில் தூக்கி வைத்துக்கொண்டு பலர் சாலை மறியலில் ஈடுபட்டிருந்தனர். அதையும் தாண்டிச் செல்லும்போது ஒரு கிராமத்தில் எங்கள் பொருட்களைக் கைப்பற்றிவிட்டார்கள். அரிசி, பருப்பு மற்றும் மளிகைப் பொருட்களைப் பறித்துக்கொண்டனர். மிக்க கோபமும் ஆத்திரமும் வந்தது. ஆனாலும் ஏன் அவர்கள் அப்படிச் செய்தார்கள் எனத் தெரிந்துகொள்ள வேண்டும் என அக்கிராமத்திற்குச் சென்றோம்.
அது ஒரு தலித் கிராமம். மிக நைந்த குடிசைகளும் அடுப் பெரியாத வாசல்களுமாய் இருந்தது. ஏன் பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரணத்தைப் பிடுங்குகிறீர்கள் என மிக ஆவேசமாய்க் கேட்டபோது, நாங்கள் சாப்பிட்டு நான்கு நாட்கள் ஆகிவிட்டதெனக் கூறினார்கள். ஒரு இளம் பெண் என்னைக் கையைப் பிடித்து இழுத்துச் சென்று வீட்டிற்குள் காண்பித்து, “அலுமினியம் தட்டைக்கூட வித்து பிள்ளைக்கு பால் வாங்கிட்டேன், இன்னும் என்ன செய்ய?” என எந்த ஆவேசமும் இல்லாத அடிக்குரலில் கேட்டாள். உண்மையில் அந்த வீட்டிற்குள் பண மதிப்புள்ள எந்த பொருளும் எனக்குத் தட்டுப்படவில்லை. செருப்பால் அடித்த மாதிரி எனக்கு ஒரு கிறுக்கம் ஏற்பட்டது.
அவர்கள் கிராமத்தில் சுனாமி நீர், குடியிருப்புப் பகுதிக்குள் வரவில்லை. ஆனால் அவ்வூரில் அறுவடைக்கு விளைந்து நின்ற பயிரை எல்லாம் அழித்துவிட்டது. அந்த மக்கள் நிலமற்ற விவசாயத் தொழிலாளிகள். அவர்களின் மூன்று மாத உழைப்பிற்கான ஊதியமும் கிட்டத்தட்ட ஓராண்டில் அவர்களுக்கு நிச்சயமாகக் கிடைக்கக்கூடிய வருமானமும் அறுவடை முடிந்து கிடைக்கும் நெல்தான். அது சுனாமி நீரில் உதிர்ந்து போய்விட்டது.
நிவாரணம் வழங்குபவர்கள் கண்களில் அவர்கள் பாதிப்படையாதவர்கள். உயிரிழந்தால் பணம்; படகு போனால் வேறு படகு; பயிர் அழிந்தால் நில உரிமையாளருக்கு இழப்பீடு; ஆனால் உழைப்பை மட்டும் உடைமையாகக் கொண்டவருக்கு? பசியும் பட்டினியும்தான் கிடைத்திருந்தது. சுனாமி போன்ற, தானே புயல் போன்ற, இப்போது வந்திருக்கும் புயல், வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர்கள் யாரையும் தேர்ந்தெடுத்துப் பாதிப்பதில்லை. ஆனால் சமூகத் தளத்தில் கீழ்மட்டத்தில் இருப்பவர்களான தலித்துகள், பழங்குடிகள், திருநங்கைகள், தனித்து வாழும் பெண்கள், முதியவர்கள் ஆகியோரை அது மிக மோசமான பாதிப்புக்குள்ளாக்குகிறது. பேரிடருக்கு முன்பே மோசமாக இருக்கும் அவர்களது நிலை இத்தகைய பாதிப்புகளால் மிக மிக நலிவுற்று அபாயமானதொரு விளிம்பிற்கு அவர்களைத் தள்ளுகிறது.
வீடு நல்லாத்தானே இருக்கு? இங்க சுனாமியா வந்திச்சி? தேவையானவர்களுக்கு நிவாரணம் கிடைப்பதுதானே நியாயம் என்ற வக்கணையான வியாக்கியானங்கள் எல்லாம் ஒரு சமமற்ற சமூக அமைப்பில் மிக ஏழ்மையில் ஒடுக்கப்படுபவர்கள் மீதே பிரயோகிக்கப்படும்போது அவை கேவலமான ஒடுக்கும் சிந்தனையின் வெளிப்பாடுகளாகின்றன.
நிவாரணத்தைத் திருடுபவர்கள் எல்லோரும் நான் சந்தித்த மக்களைப் போன்றவர்களாக இல்லாமல் இருக்கலாம். நிவாரணம் பெறும் ஏழை மக்களில் சிலர் மோசமானவர்களாகக்கூட இருக்கலாம். என்னுடைய பத்தாண்டு நாகை அனுபவத்தில் நிவாரணம் அளித்தவர்கள், மீள்கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டவர்கள் செய்த மோசடிகளும் ஏற்படுத்திய தீங்குகளும் ஒரு புத்தகம் எழுதும் அளவுக்கு இருக்கின்றன. அவற்றைக் கொண்டு, இன்று ஓடி ஓடி நிவாரணமும் மீட்பும் செய்யும் இளைஞர்களையும் குழந்தைகளையும் பிறரையும் எடைபோட முடியாது.
இயற்கைப் பேரிடர் நம்மை மீறிய ஒன்று. இந்த நாட்டில் வறுமையும் சாதி இழிவும்கூட அப்படித்தான். நினைத்தால்கூட அவ்வளவு எளிதாக அதனிடமிருந்து தப்பித்துவிட முடியாது. எனவே உதவும் உள்ளம் கொள்பவரெல்லாம் நல்லவரே எனினும், நிவாரணம் என்பது மக்களின் உரிமை; நம்மிடம் பணமும் பணம் திரட்டும் ஆற்றலும் அதை நல்ல காரியத்திற்குச் செலுத்தும் மனமும் பிறரின் துயரில் பங்கெடுக்கும் பெருந்தன்மையும் இருந்தாலும் வழங்குவதின் அதிகாரத்தை நாம் இயந்திரத்தனமாகக் கையிலெடுத்தால் அது நாம் செய்யும் பணியை விழலுக்கு இரைத்துவிடும். ஏற்கனமே பலவீனமாக இருக்கும் மக்களை நமது மேட்டிமைப் பார்வைகளால் நாம் அவமானப்படுத்தும்போது பேரிடரையும் மீறிய ஒரு தீங்கை இழைத்துவிடுகிறோம்.
இதன் நோக்கம் உதவி செய்பவர்களைக் குற்றம் காண்பது அல்ல. நானும் நிவாரணப் பணியில் ஈடுபட்டிருக்கிறேன், சுனாமியிலும் இப்போதும். ஆனால் நிவாரணம் பிச்சையல்ல; அது அவர்களது உரிமை நாம்தான் வலியச் சென்று அதைச் செய்ய முனைந்திருக்கிறோம். பாதிக்கப்பட்ட மக்கள் நம்மை அழைக்கவில்லை. அவர்களைப் பிச்சைக்காரர்களாகவும் திருடர்களாகவும் சித்தரித்து நாம் மட்டும் தேவதைகளாகவும் தேவதூதர்களாகவும் உணருவோமானால் நாம் நிவாரணப் பணி மட்டுமல்ல எந்த சமூகப் பணிக்குமே தகுதியற்றவர்களாகத்தான் இருப்போம்.
தொடர்புக்கு: [email protected]
=
0 comments:
Post a Comment