ஆபத்துக்கு அடித்தளம்... அரசின் அலட்சியம்!
எச்சரிக்கைகளை புறந்தள்ளிய தமிழக அரசு
எச்சரிக்கைகளை புறந்தள்ளிய தமிழக அரசு
சென்னையில் மழை உண்டாக்கிய பாதிப்பைவிட, அரசு நிர்வாகத்தின் மெத்தனத்தால் ஏற்பட்ட பாதிப்புகளே அதிகம் என்பது பட்டவர்த்தனமாகத் தெரிந்துவிட்டது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை கடந்த அக்டோபர் 28-ம் தேதி சாதாரணத் தூறலாக ஆரம்பித்தது. அப்போது, கொடநாடு ‘கேம்ப் ஆபீஸில்’ இருந்தார் முதல்வர் ஜெயலலிதா. தூறலாகத் தொடங்கிய பருவமழை, அக்டோபர் இறுதி வரையிலும் வேகமெடுக்கவில்லை. அப்போதே, அடுத்து வரும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை அறிக்கைகள் வெளியாகின. அதை முதலமைச்சர் கண்டுகொள்ளவில்லை. அமைச்சர்களும், அதிகாரிகளும் பெரிதாக எடுத்துக்கொள்ள வில்லை. அதுதான், ஆபத்துக்கு அடித்தளம் அமைத்தது.
அக்டோபர் 28 முதல் நவம்பர் 4 வரை
வானிலை ஆய்வு மையம் சொன்னதுபோல், நவம்பர் மாதம் தொடங்கியதும் அதிக கனமழை பெய்ய ஆரம்பித்தது. அடுத்த நான்கு நாட்களில், சென்னையில் மட்டும் இந்த மழைக்கு 4 பேர் பலியாகி இருந்தனர். சென்னை தெருக்கள் முழுவதும் வெள்ளக்காடானது. இந்த நிலையில், நவம்பர் 4-ம் தேதி, ‘தென்மேற்கு வங்கக்கடலில் புதிய மேலடுக்குச் சுழற்சி ஒன்று உருவாகி உள்ளது. அதனால், வட தமிழகத்தில் கனமழை பெய்யும்’ என மீண்டும் வானிலை மையம் எச்சரித்தது. அப்போதும் அரசாங்கம் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. மழைநீர் வடிகால் வாய்க்கால்கள் சரி செய்யப்படவில்லை. சாக்கடை அடைப்புகள் அகற்றப்படவில்லை. மெத்தன நிலையில் அரசு இருந்தது. அடித்து நொறுக்கிய மழை, சென்னைப் போக்குவரத்தை பல மணி நேரத்துக்கு ஸ்தம்பிக்க வைத்தது.

நவம்பர் 5 முதல் நவம்பர் 12 வரை
நிலைமை கொஞ்சம் தீவிரமடைகிறது என்பதை உணர்ந்த முதல்வர் ஜெயலலிதா, நவம்பர் 8-ம் தேதி, கொட்டும் மழையில் கொடநாட்டில் இருந்து திரும்பினார். நவம்பர் 11-ம் தேதி இரவு, ‘புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகி உள்ளது. அதனால், மிகப்பெரிய அளவில் மழை பெய்யும்’ என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. உடனடியாக 12-ம் தேதி தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளைக்கூட்டி ஆலோசனை நடத்தினார் முதல்வர். உடனே மழைநீர் வடிகால் வாய்க்கால்களைச் சீர் செய்திருக்க வேண்டும். கழிவுநீர் கால்வாய்களில் அடைப்பு எடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இவை எதுவும் நடக்கவில்லை. நவம்பர் 14-ம் தேதி பெய்த மழை சென்னையை அடித்து நொறுக்கியது. மறுநாள் இரவு வரை மழை நீடித்தது. சென்னை மாநகரம், நரகம்போல் காட்சியளித்த நாள் அன்று.
நவம்பர் 15 முதல் 20 வரை
அதன்பிறகு வந்த நாட்களில், 5 தடவைக்கு மேல் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை, தாழ்வு மண்டலம் என்று புதிய எச்சரிக்கை அறிவிப்புகளை வானிலை ஆய்வு மையம் அடுத்தடுத்து வழங்கிக்கொண்டே இருந்தது. அனுபவம் வாய்ந்த பொறியாளர்களும், தன்னார்வலர்களும் நிறைய முன்னெச்சரிக்கை ஆலோசனைகளை அளித்தனர். ஜெயலலிதாவும் நவம்பர் 16-ம் தேதி பார்வையிட்டு, ‘மூன்று மாதங்களில் பெய்ய வேண்டிய மழை, மூன்றே நாட்களில் பெய்தால் என்ன செய்ய முடியும்’ என்று சொன்னார்.
அப்போதே 37 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு வீடுகளை விட்டு வேறு இடங்களில் தங்கி இருந்தனர். புறநகர்ப் பகுதிகளில் பாதி மூழ்கி இருந்தன. அப்போதுகூட, கடற்கரையில் உள்ள படகுகளைத் தாழ்வான பகுதிகளுக்குக் கொண்டு செல்லவோ, அங்கு தேங்கி உள்ள தண்ணீரை அகற்றவோ எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இந்த இடைவெளியில், சென்னையைச் சுற்றி உள்ள பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், வீராணம் ஆகிய ஏரிகளில் தண்ணீர் மட்டம் அதிகரித்துக்கொண்டே போனது. விநாடிக்கு பல ஆயிரம் கன அடி நீர்வரத்து அதிகரித்தது. அவற்றை எப்போது திறக்க வேண்டும் என்று பொதுப்பணித் துறை ஊழியர்களுக்குத் தெரியவில்லை. வட தமிழகம் பாதி அழிந்து இருந்த நிலையில், அரசாங்கம் எடுத்த நடவடிக்கை, 50 மலிவு விலை காய்கறி கடைகளைத் திறந்ததுதான்.

நவம்பர் 20 முதல் 30 வரை
இதுவரை பெய்த மழையைவிட மிகப்பெரிய அளவில் 22-ம் தேதி தொடங்கி 24-ம் தேதி வரை மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. ஆனால், அரசாங்கம் அப்போதும் விழித்துக்கொள்ளவில்லை. அவசர உதவிக்கு அழைக்க ஹெல்ப் லைன் எண்கள்கூட அறிவிக்கப் படவில்லை. வருவாய்த் துறை அதிகாரிகளும், பொதுப்பணித் துறை அதிகாரிகளும் முரண்பட்டு நின்றனர். அதனால், சென்னை கடற்கரை யோரங்களில் வசிக்கும் மீனவர்களிடம் இருந்து படகுகளைப் பெற்று தாழ்வானப் பகுதிகளில் போய் வைக்கவில்லை. இந்த நேரத்தில் காவல் துறையின் வேலை என்ன என்பது பற்றி சரியான திட்டமிடல் இல்லை. இந்த நேரத்தில்தான் நவம்பர் 22-ம் தேதி தொடங்கி 25-ம் தேதி வரை பெருமழை நீடித்தது. நகரில் பாதி சிதைந்தது. சென்னையில் நவம்பர் 23-ம் தேதி 10 மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்து நின்றது.
டிசம்பர் 1 முதல்...
டிசம்பர் 1-ம் தேதி கொட்டித் தீர்த்தது பேய் மழை. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து மொத்தமாகத் திறந்துவிட்டனர். சைதாப்பேட்டை பாலம் மூழ்கியது. சைதாப்பேட்டை முழுவதும் காணாமல் போனது. முடிச்சூர், பல்லாவரம், தாம்பரம், பள்ளிக்கரணை போன்றவை எங்கே இருக்கிறது என்ற தடம்கூட இல்லாமல் போனது. தனியார் மருத்துவமனைகளில் கையிருப்பு இருந்த ஆக்ஸிஜன் தீர்ந்துபோனது. அவற்றை விநியோகிக்க முடியவில்லை. வேறு வழியில்லாமல், ஓரளவு நிலைமையை யூகித்த ஒரு சில அதிகாரிகள் மற்றவர்களின் கட்டளைக்குக் காத்திராமல் களத்தில் இறங்கினார்கள். ஆனால், அவர்களால் ஒட்டுமொத்த அரசு நிர்வாகத்தையும் ஒருங்கிணைத்து வேலை வாங்க முடியவில்லை. தங்கள் மக்களைப் பத்திரமாக மீட்க, அண்டை மாநிலங்கள் இலவசமாகப் பேருந்துகளை இயக்கின. ஆனால், சென்னையில் வசிக்கும் மற்ற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் சென்று சேர போக்குவரத்து வசதி இல்லை. இதைப் பயன்படுத்தி தனியார் பேருந்து நிறுவனங்கள் மூன்று மடங்கு கட்டணம் வசூலித்தன. சென்னையில் இருந்து மதுரைக்கு கட்டணம் 2,500 ரூபாய். அதைத் தட்டிக்கேட்கவோ, முறைப்படுத்தவோ அதிகாரத்தில் இருப்பவர்கள் முன்வரவில்லை. நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு, சென்னைக்குள் மட்டும் பேருந்துகள் இலவசமாக இயக்கப்பட்டன.

இந்த நேரத்தில்தான் பொதுமக்கள், தங்களின் சக மனிதர்களைக் காப்பாற்றும் கடமை தங்களுடையதே என்று களத்தில் இறங்கினார்கள். ‘அம்மா’ குடிநீர் காணாமல்போன நேரத்தில், தன்னார்வலர்கள் குடிநீர் பாட்டில்களை சுமந்து வந்தார்கள். மீனவர்கள் தங்கள் படகுகளை எடுத்துக்கொண்டு தத்தளித்தவர்களை மீட்டனர். தண்ணீருக்குப் பயந்து மொட்டை மாடிகளில் இருந்தவர்களுக்கு தங்கள் வீடுகளில் உணவு சமைத்து எடுத்துப்போனார்கள். சாதி, மதங்களைத் தாண்டி மீட்புப் பணிகளில் தன்னார்வலர்கள் இறங்கினார்கள். ஆனால் முதல்வரோ, டிசம்பர் 3-ம் தேதி ஹெலிகாப்டரில் வந்து வெள்ளத்தைப் பார்வையிட்டதோடு சரி. வெள்ள நிவாரணப் பணிகளை தனி நபர்களும், தன்னார்வலர்களும், அமைப்புகளும் செய்த பிறகு, டிசம்பர் 8-ம் தேதி தலைமைச் செயலகம் வந்திருந்த முதல்வர் வெள்ள நிவாரணத் தொகையை அறிவித்தார். எங்கே பொருட்களைக் கொடுக்க வேண்டும், எங்கே பணம் அனுப்ப வேண்டும் என்று அதன்பிறகுதான் அறிவித்தார்கள்.
இந்த லட்சணத்தில்தான் இருந்தது அரசாங்கத்தின் செயல்பாடு.
- ஜோ.ஸ்டாலின்
விகடன்
0 comments:
Post a Comment