Saturday, December 05, 2015

நிவாரணப் பணிகளிலும் அரசியல் ஆதாயம் தேடும் பிழைப்பு தேவைதானா?' - விளாசும் விஜயகாந்த்!

சென்னை: மழைவெள்ள நிவாரணப் பணிகளில் அதிமுகவினர் அரசியல் ஆதாயம் தேட கூடாது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

 இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

" அரசியல் ஆதாயமின்றி பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிமுக அரசு உண்மையாக உதவவேண்டும்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பெய்த கனமழையின் 
கோரதாண்டவத்தால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் கடும் பாதிப்பிற்குள்ளாகி 
வெள்ளக்காடாக மிதக்கின்ற நிலையில்,  தற்போதைய முக்கிய தேவை மழைநீரை வடியச் 
செய்வதும், செய்வதறியாது திகைத்து நிற்கின்ற பொதுமக்களுக்கு குடிநீர், உணவு, உடை 
வழங்கவேண்டியது மிக அவசியமான ஒன்றாகும்.

தேமுதிக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும், தன்னார்வ அமைப்புகளும், தொண்டு நிறுவனங்களும் நிவாரண பணிகளை தங்களால் முடிந்த அளவிற்கு செய்துவருகிறார்கள்.
ஆனால் அவர்களுக்கு முறையான வழிகாட்டுதல் இன்றி, பல்வேறு கெடுபிடிகள் செய்யப்பட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு  உதவிகள் செய்வதற்குகூட வழியில்லாமல் அலைக்கழிக்கப்படுகிறார்கள்.
நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ள அரசியல் கட்சியினரோ, தொண்டு நிறுவனமோ யாரும் தங்களுடைய அடையாளங்களை வெளிப்படுத்தி கொள்ளவில்லை. மனிதாபிமான அடிப்படையில் அனைத்தையும் செய்துவருகிறார்கள்.

ஆனால் வில்லிவாக்கம் சிட்கோ பகுதியில் நான் வெள்ளப்பகுதிகளை பார்வையிட்டு வரும்போது, அதிமுகவை சேர்ந்தவர்கள் கும்பலாக நின்றுகொண்டு சென்னை மாநகராட்சியின் ஜெ.சி.பி. இயந்திரம், டிப்பர் மற்றும் குப்பை அள்ளும் லாரிகளை வைத்துக்கொண்டு, ஜெயலலிதாவின் படத்துடன்கூடிய பேனர், 
அதிமுக கட்சிக்கொடியுடன் அப்பகுதியில் நிவாரண பணிகளை மேற்கொள்வதுபோல் பாவலா 
காட்டிக்கொண்டு, ஊடகங்களை வரவழைத்து காட்சிப்பதிவை செய்துகொண்டிருந்தார்கள். 
அதிமுகவினரின் பாணியில் சொல்லவேண்டும் என்றால் வெள்ள நிவாரண பணியில் அரசியல் 
ஆதாயம் தேடி, சீன் போட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்றுதான் சொல்லவேண்டும். இப்படி 
ஒரு பிழைப்பு தேவைதானா?

தலைமை செயலகத்திலிருந்து தமிழக அரசின் பல்வேறு துறை செயலாளர்கள் இன்று தொலைக்காட்சியில் அதிமுக அரசை காப்பாற்றும் விதமாக பல்வேறு கருத்துக்களை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர். ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பிறகு பல்வேறு அரசு துறையின் செயலாளர்கள், ஒரே சமயத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த மாபெரும் அதிசயம் நிகழ்ந்துள்ளது. சுகாதாரத்துறை செயலாளர் கூறும்போது சென்னை மியாட் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பெற்ற 17 பேர் பல்வேறு காரணங்களால் இறந்துபோனார்கள் என கூறியுள்ளார்.
மின்சாரம் துண்டிக்கப்பட்டு, செயற்கை சுவாசம் செலுத்தமுடியாமல் அனைவரும் இறந்துள்ளார்கள் என அவர்களின் உறவினர்கள்பகிரங்கமாக குற்றம்சாட்டும்போது, “முழு பூசணியை, இலைச்சோற்றில் மறைக்கப்பார்த்து” தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை காப்பாற்றுவதற்காக சுகாரத்துறை செயலாளர் 
இதுபோன்ற தவறான தகவல்களை மக்களுக்கு தெரிவிக்கிறார். பொறுப்புள்ள அதிகாரியான 
அவரே இதுபோன்று கூறலாமா? அவர் மட்டுமல்ல பிற அரசுத்துறை செயலாளர்களும், தமிழக 
முதலமைச்சர் ஜெயலிதாவிற்கு ஜால்ரா அடிக்கும் விதமாகவே பேட்டியளித்தனர்.

இதையெல்லாம் தமிழக மக்கள் நம்புவதற்கு தயாராக இல்லை. இதுநாள் வரையிலும் தமிழக 
முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் அமைச்சர்களை தவிர வேறு யாரும் பத்திரிக்கையாளர்களை சந்தித்து கருத்து கூறியதில்லை. ஆனால் மக்களின் கோபத்திற்கு அதிமுக அரசு ஆளாகியுள்ள இந்த நேரத்தில், அமைச்சர்கள் அருகில் அமர்ந்துகொண்டு துறையின் செயலாளர்களை பேட்டியளிக்க சொல்லியிருக்கிறார்கள் என்றால், அதற்கு காரணம் என்ன? எல்லாவற்றிற்கும் நான், நான் என உரிமை கொண்டாடி பதிலளிக்கும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவும், பிற அமைச்சர்களும், அவர்களே பதில் கூறியிருக்கலாம் அரசு அதிகாரிகளும், அலுவலர்களும் இதைப்பார்த்த பிறகாவது புரிந்துகொள்ளுங்கள்.

பிரச்னை என்று வரும்போது அதிகாரிகள் மீது பழியை சுமத்தும், அதிமுகவின் போக்கை  இதிலிருந்து தெரிந்துகொள்ளலாம். அதிமுகவினர் நிவாரணப்பணி செய்வதுபோன்று  சீன்போடுவதை நிறுத்திவிட்டு, அரசியல் ஆதாயம் தேடாமல், மனிதாபிமானத்தோடு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிட வேண்டும்.
சென்னை மேயரையும், அமைச்சர்களையும், அதிகாரிகளையும் பார்த்து மக்கள் கேட்கும் ஒரே கேள்வி, உங்கள் ஆறுதல் எங்களுக்கு தேவை இல்லை, ஜெயலலிதா அவர்கள் ஹெலிகாப்டரில் இருந்து பார்ப்பதால் எங்கள் பிரச்னை தீர்ந்துவிடாது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக உணவு கொடுங்கள், தேவையான 
உதவிகளை செய்யுங்கள் என்றுதான் பாதிக்கப்பட்ட மக்கள் கேட்கிறார்கள். இதற்கு மாறாக 
நேரடியாக சென்று உதவுவதுபோல், அதிமுகவினர் பேனர்கள் மற்றும் நோட்டீஸ்கள் மூலம் 
விளம்பரப்படுத்துவது, பாதிக்கப்பட்ட மக்களின் வயிற்று எரிச்சலை இன்னும் அதிகமாக்குமே 
தவிர, எந்த விதத்திலும் உதவாது. இதை கருத்தில் கொண்டு அதிமுக அரசு நடவடிக்கை 
எடுக்கவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்." என்று தெரிவித்துள்ளார்.
-விகட்ன்.

நிவாரண பொருட்களை பறித்து ஜெயலலிதா ஸ்டிக்கர்... ஆளுங்கட்சியினரின் அராஜகம்!


னமழையால் பாதிக்கப்பட்ட சென்னை நகரம் வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. மீட்புப்பணிகளில் ராணுவம் உள்ளிட்ட முப்படையினரும் இயங்கி வருகின்றனர். பால், ரொட்டி உள்ளிட்ட உணவு பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு,  தமிழகத் தலைநகர் இத்தகைய இடர்பாட்டினை எதிர்கொண்டுள்ளது.  முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல்விட்ட அரசு,  நிவாரணப்பணிகளை மேற்கொள்வதிலும் சுணக்கம் காட்டியது பொதுமக்களுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்களும், தன்னார்வத் தொண்டர்களும் தங்களால் இயன்ற உதவிகளையும், உணவு பொருட்களையும் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள்,   நிவாரணப்பணிகளில் ஈடுபட்டு வரும் தன்னார்வத் தொண்டர்களிடம் இருந்து உணவு பொருட்களை வாங்கி,  நாங்கள்தான்  விநியோகிப்போம் என்று பல பகுதிகளில் அராஜகத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள். இன்னும் சில இடங்களில் அப்படி அபகரிக்கப்பட்ட உணவு பொருட்களை தாங்கள் வழங்குவதுபோல் இருக்க வேண்டும் என்று, அதற்காக முதல்வரின் படம் போட்ட 'ஸ்டிக்கர்களை உணவு பொட்டலங்கள் உள்ளிட்ட பொருட்கள் மீது ஒட்டி வழங்குதாகவும் செய்திகள் வெளி வருகின்றன.
இன்னும் சில இடங்களில் 'ஸ்டிக்கர்களை' தயார் செய்ய தாமதமானதால், அந்த உணவு பொருட்களை  வழங்காமல் வைத்திருந்து ஸ்டிக்கர்கள் கிடைக்கப்பெற்ற பின் அதனை நிவாரண பொருட்கள் மீது ஒட்டி அரசு சார்பில் வழங்குவதாக கூறப்படுகிறது. இதனால்  நிவாரணப் பொருட்கள் கிடைக்கப் பெறாமல்,  மக்கள் திண்டாடி வருகின்றனர்.
இதுமட்டுமல்லாமல் பல இடங்களில் ஆளுங்கட்டியினர் பாகுபலி திரைப்பட போஸ்டர்போல் முதல்வரின் படத்தை போட்டு பெரிய பெரிய அளவில் ஃப்ளக்ஸ் பேனர்களை வைத்து கொண்டு மலிவான விளம்பரங்களை தேடிக்கொண்டு நிவாரணம் வழங்கி வருவதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது.
மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் பொருட்களை, அதிலும் அடுத்தவர்கள்  கொடுக்கும் பொருட்களை பெற்று வழங்கி, இதிலும் மலிவான அரசியல் ஆதாயம் தேடும் ஆளும் கட்சியினரை பார்த்து பல இடங்களில் மக்கள் கோபத்தில்  குமுற ஆரம்பித்துள்ளனர்.
இதற்கிடையே நிவாரணப்பணிகளில் ஈடுபட்டு வரும் மே 17 இயக்கத்தை சேர்ந்த தொண்டர்களை அ.தி.மு.க.வினர் தொடர்ந்து மிரட்டிவருவதாகவும் புகார் எழுந்துள்ளது.
இந்நிலையில், நிவாரணம் வழங்குவதில் அ.தி.மு.க.வினர் செய்து வரும் அராஜகத்தினை மே 17 இயக்கம் வன்மையாக கண்டித்துள்ளது, இது குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில், ''அ.தி.மு.க.வினரின் அராஜகத்தினை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையென்றால் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்படும். 

நிவாரணப் பொருட்களை விநியோகம் செய்து கொண்டிருந்த மே 17 இயக்கத் தோழர்களிடத்திலும் அ.தி.மு.க.வினர் நெருக்கடியை கொடுத்தனர். தங்களிடம் நிவாரணப் பொருட்களை ஒப்படைக்கும்படியும், இப்பகுதி எங்களுடையது, எங்களிடம் நிவாரணப் பொருட்களை ஒப்படைத்துவிட்டுச் செல்லுங்கள் என்று மிரட்டினர். அந்த  மக்களிடம் கடந்த 15 நாட்களாக தொடர்ந்து மே 17 தோழர்கள் நிவாரணப்பணி செய்கின்ற காரணத்தினால் அப்பகுதி மக்களே அ,தி.மு.க.வினருக்கு எதிர்ப்பினை தெரிவித்து தோழர்களுக்கு பாதுகாப்பளித்தனர்.

வெளியூரில் இருந்து நிவாரணம் ஏற்றி வரும் வாகனங்களை அ.தி.மு.க.வினர் தடுத்து நிறுத்தி நிவாரணப் பொருட்கள் மீது,  ஆளும் கட்சி சின்னத்தை பதிப்பதும் பின்னர்,  அவர்களே எடுத்துச் சென்று நிவாரணப் பொருட்களை விநியோகம் செய்ய எடுத்து செல்வதாகவும், பல தோழர்கள் தொடர்பு கொண்டு தெரிவிக்கிறார்கள்.
இதேபோல் ஒரு தனியார் நிறுவனத்தினரால் எடுத்து வரப்பட்ட 5 லாரிகளை இவ்வாறு தடுத்த  காரணத்தினால் அந்த வாகனங்கள் சேலத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டிருக்கின்றன.இதேபோல இஸ்லாமிய இயக்கத் தோழர்களின் வாகனத்திலும் அ.தி.மு.க.வின் கொடியும், ஜெயலலிதாவின் படமும் வலுக்கட்டாயமாக ஒட்டப்பட்டிருக்கிறது. 40 ஆண்டுகளாக அதிகாரத்தில் இருந்த அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகளின் செயலற்ற, பொறுப்பற்ற தன்மையால் சென்னை நகரம் சீரழிக்கப்பட்டு இன்று சந்திக்கும் பேரிடருக்கு அடித்தளமிட்டிருக்கிறார்கள்.

தமிழகத்தின் இந்த நெருக்கடியான நேரத்தில் கூட  மக்கள் பணிக்கு இடையூறாக இருக்கும் அ.தி.மு.க.வினரை கண்டிக்க அனைத்து ஜனநாயக இயக்கத் தோழர்களுக்கும் அறைகூவல் விடுக்கிறோம்" என்று கூறப்பட்டு உள்ளது

அதோடு மே17 இயக்கம், உதவி தேவைப்பட்டாலோ, பங்களிப்பு செய்ய விரும்பினாலோ 9444146806, 9884072010, 9962670409 எண்களை தொடர்பு கொள்ளலாம் என்றும், முகநூலிலும் செய்தி அனுப்பலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

0 comments: