Thursday, December 17, 2015

காற்றை விலை கொடுத்து வாங்கும் இன்றைய சீனா... நாளைய இந்தியா?

காற்று மாசால் திணறி வரும் சீன நகரங்களில் சுத்தமான ஆக்ஸிஜன் விற்பனைதான் இப்போது சக்கைப் போடு போடுகிறது. கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சுத்தமான காற்று  சுமார் 100 யென்,  அதாவது இந்திய மதிப்பில் 850 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
சீனத் தலைநகர் பெய்ஜிங், ஷாங்காய் போன்ற நகரங்கள் சுற்றுச்சூழல் பாதிப்பு காரணமாக கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. இதனால் சுவாசம் தொடர்பான பல்வேறு நோய்கள்  தாக்கும் அபாயத்தில் சீனர்கள் உள்ளனர். எங்காவது சென்று சுத்தமாக காற்றை சுவாசிக்க முடியுமா? என்பதே  சீனர்களின் தற்போதைய ஏக்கம். ஆனால் பணி நெருக்கடி காரணமாக அவர்களால் சுற்றுலா செல்வது போன்ற சிறு சிறு விஷயங்களையும் கூட மேற்கொள்ள முடியாத நிலையும் இருக்கிறது.
கடந்த 12-ம் தேதி சீனாவின் பொருளாதாரத் தலைநகரான ஷாங்காய் சிட்டி சென்டர் பகுதியின் புகைப்படம் ஒன்றை சீன செய்தி நிறுவனமான' ஜின்குவா ' வெளியிட்டிருந்தது. அந்த புகைப்படத்தில், நகரமே தெரியாத அளவுக்கு காற்று மாசடைந்துள்ளதாகவும் 'ஜின்குவா ' குறிப்பிட்டிருந்தது. அந்த அளவுக்கு சீன நகரங்கள் காற்று மாசால் திணறி வருகின்றன. சீனர்களின் தேவையை தெரிந்து கொண்ட கனடா நிறுவனம் ஒன்று தற்போது 'உயிர் காற்று ' என்ற பெயரில் சீனாவில் காற்று விற்பனையை தொடங்கியுள்ளது.
கனடாவின் எட்மன்டன் நகரில் கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட 'விடலிட்டி ஏர்' என்ற இந்த நிறுவனம்,  அந்த நாட்டில் உள்ள ராக்கி மலைப் பகுதியில் காற்று அடைக்கப்பட்டதாக கூறி,  சீனாவில் காற்று புட்டிகள்  விற்பனையைத் தொடங்கியுள்ளது.
தங்களது சுத்தமான காற்று விற்பனை குறித்து விடலிட்டி நிறுவனத்தை தோற்றுவித்தவர்களில் ஒருவரான மோசஸ் லாம் கூறுகையில், '' முதலில் சீனாவுக்கு 500 புட்டிகள்  அனுப்பினோம். இவை அனைத்தும் 4 நாட்களில் விற்று தீர்ந்து விட்டன. இப்போது மேலும் 4 ஆயிரம் புட்டிகள்   அனுப்பியிருக்கிறோம். ராக்கி மலைப் பகுதியில் உள்ள பான்ஃப் தேசிய பூங்காவில் பிடிக்கப்பட்ட இந்த சுத்தமான காற்று 7.7 லிட்டர் அடங்கிய ஒரு புட்டி 100  யுவானுக்கு  (இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ஆயிரம் ரூபாய்  ) விற்கிறோம்''  என்றார். இது சீனாவில் விற்கப்படும் ஒரு பாட்டில் மினரல் தண்ணீர் பாட்டிலை விட 50  மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
சீனாவில் மட்டும் 'விர்டிலிட்டி ஏர்' நிறுவனம் சுத்தமான காற்றை விற்கவில்லை. வடஅமெரிக்கா மற்றும்  இந்தியாவுக்கும் அனுப்புகிறது. சில பணக்கார இந்தியர்கள் இந்த பாட்டில்களை வாங்கி பயன்படுத்துவதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவை பொறுத்த வரை தலைநகர் டெல்லியில் காற்றில் அதிகளவு மாசு கலந்துள்ளதாகத் தெரிகிறது. உலகில் சுற்றுச்சூழல் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நகரங்களில் டெல்லி முதலிடத்தில் இருப்பதாக ஐ.நா உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.
காற்று மாசு காரணமாக ஏற்படும் பல்வேறு நோய்கள் காரணமாக டெல்லியில் மட்டும் ஆண்டுக்கு 30 ஆயிரம் பேர் இறப்பதாக மத்திய சுற்றுச்சூழல் அறிவியல் அமைப்பும் கூறியுள்ளது.  இந்தியாவை பொறுத்தவரை காற்று மாசு, அதிக மக்களை கொல்லும் வரிசையில் 5-வது இடத்தை பிடித்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. 

தற்போதுதான் இந்தியாவில் காற்றில் ஏற்படும் மாசுவை குறைப்பதற்கு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.  முதல்கட்டமாக டெல்லியில் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் 2000 சி.சி. திறன் கொண்ட டீசல் கார்களுக்கு 3 மாதங்கள் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.  டெல்லியில் மட்டுமல்லாமல் இந்தியாவில் பல்வேறு மெட்ரோ நகரங்களில் இது போன்று சுற்றுச்சூழல் மாசடைவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும்.  இல்லையென்றால் நாமும் சீனாவை போல இயற்கை தந்த காற்றை விலை கொடுத்து வாங்க வேண்டியது இருக்கும்.

-விகடன்

0 comments: