Monday, December 07, 2015

மஞ்சள் பத்திரிகை‘இந்து நேசன்'லட்சுமிகாந்தன் கொலை வழக்கு-பட்டுக்கோட்டை பிரபாகர்

தமிழ் சினிமாவில் இந்த நடிகர் அடைந்த வெற்றியையும், புயும் அப்போது உலகமே திரும்பிப் பார்த்தது. இவரின் உடையும், சிகை அலங்0காரமும் இளைஞர்களால் காப்பியடிக்கப்பட்டது. பெண்கள் இவர் அழகிலும், குரலிலும் கிறங்கிப் போனார்கள். ஒன் பது படங்களிலேயே புகழின் உச்சத்தைத் தொட்டவர்.


அவர்தான் எம்.கே.தியாகராஜ பாகவதர். 1934-ல் 60 பாடல்களைக் கொண்ட இவர் நடித்த முதல் திரைப்படம் பவளக் கொடி. இவருக்கு வழங்கப்பட்ட சம்பளம் 1,000 ரூபாய். படம் சூப்பர் ஹிட்.


இனிமையான குரலால் லட்சக்கணக்கான ரசிகர்களை ஈர்த்த, இவர் கர்னாடக சங்கீதத்துடன் தமிழிசைப் பாடல்களும் பாடியவர். இவர் நடித்த ‘ஹரிதாஸ்’ பட சாதனையை தமிழ் சினிமா வரலாற்றில் வேறு எந்தப் படமும் செய்யவில்லை. 1944, 1945, 1946 வருடங்களில் மூன்று தீபாவளிகளைக் கண்டு வசூலை அள்ளிய படம் அது.


பாகவதர் நடித்த ‘சிந்தாமணி’ படத்தை வெளியிட்டதன் மூலம் சம்பாதித்த பணத்தில் ஒரு தியேட்டரே கட்டி, அதற்கு சிந்தாமணி என்றே பெயரும் வைத்தார் ஒரு திரையரங்க அதிபர்.


இந்தப் புகழ்மிக்க மனிதரின் வாழ்வில் நிகழ்ந்தது ஒரு திருப்புமுனைச் சம்பவம். ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார் பாகவதர். அவர் கைது செய்யப்பட்டதை ரேடியோவில் கேட்டறிந்த ரசிகர்கள் கொந்தளித்தார்கள். காவல்துறையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். பெண்கள் கதறி அழுதார்கள்.


இந்தக் கொந்தளிப்பு அடங்குவதற்குள், ‘கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனும் அதே கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார்’ என்கிற பூகம்பச் செய்தி வந்தது.



அந்த பிரபலங்கள் ஏன் கைது செய்யப்பட்டார்கள்?


பாகவதரும், கலைவாணரும் லட்சுமி காந்தன் கொலை வழக்குத் தொடர்பாக கைதுசெய்யப்பட்டிருந்தனர். அந்த லட்சுமிகாந்தன், வில்லங்கமான ஆசாமி. பத்திர மோசடியில் கைது செய்யப்பட்டு கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டபோது தப்பிச் சென்றவர். பிறகு மீண்டும் கைது செய்யப்பட்டு அந்தமான் சிறைக்கு அனுப்பப்பட்டவர்.


தண்டனை காலம் முடிந்து வெளியே வந்த லட்சுமிகாந்தன், ‘சினிமா தூது' என்கிற பெயரில் பத்திரிகை ஆரம்பித்து, அதில் பிரபல நட்சத்திரங்களின் அந்தரங்க வாழ்க்கையைப் பற்றி கொச்சையாக எழுதி வந்தார். பரபரப்பாக விற்ற அந்தப் பத்திரிகையில் லட்சுமிகாந்தன் தங்களைப் பற்றியும் எழுதிவிடுவாரோ என்று திரையுலகப் பிரபலங்கள் பயந்தார்கள். சிலர் அவருக்குப் பணமும் கொடுத்து வந்தார்கள்.


பாகவதரும் கலைவாணரும் அந்த மஞ்சள் பத்திரிகையைத் தடை செய்ய வேண்டும் என்று கவர்னரிடம் மனு கொடுத்தனர். ‘சினிமா தூது’ தடை செய்யப்பட்டது. அதன் பிறகு லட்சுமிகாந்தன் ‘இந்து நேசன்' என்கிற வேறு ஒரு பத்திரிகையில் அதே போலவே எழுதி வர, அந்தப் பத்திரிகையும் பிரபலமானது.


பாகவதர் மற்றும் கலைவாணர் மீது ஆத்திரத்தில் இருந்த லட்சுமிகாந்தன் இந்துநேசனில் அவர்களைப் பற்றி அவதூறாக எழுதித் தள்ளினார்.


இந்நிலையில்தான் 1944-ல் நவம்பர் 8-ம் தேதி யாரோ இரண்டு பேரால் லட்சுமிகாந்தன் கத்தியால் குத்தப்பட்டார். ரத்தம் சொட்டும் அந்நிலையிலும், தன் வக்கீல் நண்பரின் உதவியுடன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த பிறகுதான் மருத்துவமனைக்குச் சென்றார்.
லட்சுமிகாந்தன் முதலில் காவல் துறையில் சொன்ன வார்த்தைகள் “அவன் என்னைக் கத்தியால் குத்தி விட்டான்' என்பதே. அவருடைய புகாரிலும் பாகவதர், கலைவாணர் பெயர்கள் இல்லை. மறுநாள் அவர் இறந்து போனதும் கொலை முயற்சி வழக்கு, கொலை வழக்காக மாறியது.


போலீஸாரின் விசாரணையில், லட்சுமிகாந்தன் மீதான முன்பகை காரணமாக வடிவேலு என்பவர் நண்பர்களுடன் சேர்ந்து இந்தக் கொலையைச் செய்ததாக தெரியவந்தது. அவர்கள் கைது செய்யப்பட்டார்கள். அடுத்தக்கட்ட விசாரணையில் லட்சுமிகாந்தனை கொலை செய்யச் சொல்லிப் பணம் கொடுத்ததாக பாகவதர், கலைவாணர் மீது குற்றம் சாட்டியது போலீஸ். அப்ரூவராக மாறிய நித்தியானந்தம் என்பவர் கொடுத்த வாக்குமூலமே போலீஸுக்கு பிரதான ஆதாரமானது.



கைது செய்யப்பட்ட பாகவதரும் கலைவாணரும் போராடித்தான் பெயில் பெறவேண்டியிருந்தது. வழக்கு நடைபெற்றது. குறிப்பிட்ட தினத்தில் தாங்கள் ஊரிலேயே இல்லை என்று வாதிடப்பட்டது. ஆனால், செஷன்ஸ் கோர்ட்டில் ஒன்பது ஜூரிகளை கொண்டு நடந்த வழக்கில் மூன்று பேர் அவர்கள் சதி செய்யவில்லை என்றும்; ஆறு பேர் அவர்கள் சதி செய்ததாகவும் கருத்து சொல்ல, அதன் அடிப்படையில் அவர்கள் குற்றவாளிகள் என்று தீர்ப்பானது.



தீர்ப்பை அறிந்த ரசிகர்கள் அதிர்ந்து போனார்கள். ஆத்திரப்பட்ட ரசிகர்கள் கோர்ட் உள்ளே நுழைந்து கையில் கிடைத்த பொருட்களை அடித்து நொறுக்க, போலீஸ் தடியடி நடத்த வேண்டியிருந்தது.


இருவரும் ஹைகோர்ட்டில் அப்பீல் செய்தார்கள். அங்கும் அவர்களுக்கு வெற்றி கிடைக்கவில்லை. அப்போது இந்தியாவில் உச்சநீதி மன்றம் இல்லாததால் லண்டனில் இருந்த பிரிவியூ கவுன் சிலில் மிகச் சிறந்த வக்கீல்கள் மூலம் வாதிட்டார்கள். ஹைகோர்ட் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்கிற அறிவுரை வழங்கப்பட்டது.



மறுவிசாரணையில் இவர்கள் குற்றவாளிகள் இல்லை என்று தீர்ப்பு வந்தது. இரண்டு வருடங்களுக்கு மேலாக நடந்த இந்த சட்டப் போராட்டத்தில் மனம் நொந்தார் பாகவதர். வழக்கின் செலவுக்காக பல சொத்துக்களை விற்க நேரிட்டது. அவர்களுக்காக வாதாடிய முன்ஷி என்னும் வக்கீலுக்கு ஒரு நாளைக்கு 75 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. பாகவதர் அவர் ஒப்பந்தமாகியிருந்த 9 படங்களுக்காக பெற்ற அட்வான்ஸ் தொகையை திருப்பியளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. தன் சொந்த ஊரான திருச்சிக்குத் திரும்பிய பாகவதர், மனம் வெறுத்து இனி திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என்றார்.



பலரது வற்புறுத்தலால் மீண்டும் சினிமா தயாரித்து நடித்தார். ஆனால், தோல்விகளைத் தழுவினார். தங்கத்தட்டில் சாப்பாடு, பட்டாடை, பத்து விரல்களில் மோதிரம், வெள்ளி ஊஞ்சல், அரண் மனை வீடு, சொந்தமாகக் குதிரை, பல வகை கார்கள் என்று ஆடம்பரமாக வாழ்ந்த பாகவதரின் நிலை மாறியது. நீரிழிவு நோய் ஏற்பட்டு 49-வது வயதில் பாகவதர் காலமானார்.



பாகவதரும் கலைவாணரும் சிறையில் இருந்தபோது சிறை மீட்பு குழு என்கிற பெயரில் ஓர் அமைப்பு திருச்சி யில் உருவாக்கப்பட்டது. அதில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கி.ஆ.பெ.விஸ்வநாதம் போன்றோர் இருந்தார்கள். அவர்கள் பாகவதரையும் கலைவாணரையும் விடுவிக்க வேண்டும் என்று கூட்டங்களில் பேசினார்கள்.



இந்த வழக்கில் இன்று வரை முடிச்சு அவிழாத மர்மக் கேள்விகள் சில:



1. அப்ரூவராக மாறிய நித்தியானந்தம் ஹை கோர்ட்டில் வாக்குமூலம் தந்த போது பல்டியடித்து என்னை அப்படி சொல்லச் சொல்லி போலீஸார் வற்புறுத் தினார்கள் என்று சொன்னபோதும், அவரின் முதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் ஜூரிகள் ஏன் தவறான தீர்மானத்துக்கு வந்தார்கள்?


2. லட்சுமிகாந்தன் தன் புகாரில் இந்த இருவரின் பெயர்களைக் குறிப்பிடவே இல்லை எனும்போது, இந்த வழக்கில் அவர்களை ஏன் காவல்துறை சேர்த்தது? இவர்களின் பிரம்மாண்டமான வளர்ச்சியை சகிக்க முடியாத தொழில் எதிரிகள் செய்த சதியா?


- வழக்குகள் தொடரும்

த்ஹிந்து

எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: [email protected]

0 comments: