ஜெ.சரவணன்
தமிழகமே மழை வெள்ளத்தில் தத்தளித்துக்கொண்டிருக்கிறது. பெரும்பாலான மக்கள் தங்கள் வீடுகளையும் உடைமைகளையும் இழந்து பெரும் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் நிலையில் சிறு, குறு தொழில் முனைவோர்களும் பெரும் நஷ்டத்துக்கு உள்ளாகியுள்ளனர். கருவிகளும் இயந்திரங்களும் பாதிக்கப்பட்டு, மின்சாரம் துண்டிக்கப்பட்டு, பொருட்கள் வீணாகி தங்கள் வாழ்வாதாரத்தையே இழந்து நிற்கின்றனர். இந்த இழப்புகளைச் சமாளிக்க அவர்கள் என்ன செய்திருக்க வேண்டும், இனி என்ன செய்ய வேண்டும் என்று பாரத் ரீ இன்ஷூரன்ஸ் புரோகர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர் டி.எல்.அருணாச்சலம் விளக்கமாக எடுத்துச் சொன்னார்.
“இப்படிப்பட்ட பேய் மழையை யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. விபத்துகள், இயற்கை பேரிழப்புகள் அனைத்தும் இப்படி எதிர்பாராமல் நடப்பவைதான். எஸ்எம்இக்களுக்கு எப்போதுமே நிதிப் பிரச்னை உண்டு. அப்படி இருக்கும்போது இதுபோன்ற எதிர்பாராத இழப்புகள் அவர்களை மிகவும் வேதனைக்குள்ளாக்கிவிடும். ஆனால், அவர்கள் முன்னேற்பாடாக முறையான இன்ஷூரன்ஸ் பாலிசி ஒன்றை எடுத்து வைத்திருந்தால், எளிதில் இத்தகைய நஷ்டங்களைச் சமாளிக்க முடியும்.
ஏன் இன்ஷூரன்ஸ் அவசியம்?
ஒரு எஸ்எம்இ என்பவர் தனது தொழிலை நம்பித்தான் இருக்கிறார் என்பதால் எதிர்பாராத இழப்புகளைச் சமாளிக்க இன்ஷூரன்ஸ் மிகவும் அவசியம். இன்றைய சூழலில் தமிழகத்தில் பெய்துள்ள பேய் மழைக்கு பெரும்பாலான எஸ்எம்இக்கள் பெரும் நஷ்டத்தில் உள்ளனர். எஸ்எம்இக்களின் தொழிற்சாலைக் கட்டடம், இயந்திரங்கள், மூலப்பொருள்கள் மற்றும் தயாரித்தபின் விற்பனைக்காக காத்திருக்கும் பொருள்கள் ஆகியவை அனைத்தும் சேதமடைந்துள்ளது. சில இடங்களில் ஷார்ட் சர்க்யூட் பிரச்னைகளால் தீ விபத்து, மற்றும் இயந்திரப் பழுது போன்றவையும் நடந்திருக்க வாய்ப்புள்ளது. இவையனைத்துமே பெரும் நஷ்டத்தை ஏற்படுத்துபவை.
எஸ்எம்இகள் முன்கூட்டியே இன்ஷூரன்ஸ் எடுத்திருக்கும்பட்சத்தில், இவற்றை எளிதில் சமாளிக்க முடியும். இன்ஷூரன்ஸ் எடுக்காதவர்கள் இந்த நிலையிலாவது இன்ஷூரன்ஸ் எடுப்பதன் அவசியத்தை உணரவேண்டும். ஏனெனில் அரசு தரப்பிலிருந்து தனியார் தொழில் நிறுவனங்களுக்கு எந்தவித இழப்பீடும் கிடைக்காது. பல அரசு நிறுவனங்களே தங்களுடைய நஷ்டத்தை ஈடு செய்ய இன்ஷூரன்ஸ் நிறுவனங்களையே நம்பியுள்ளன.
எனவே, இன்ஷூரன்ஸ் என்பது நம் தொழிலைக் காப்பாற்றுவது என்பதால், இதற்கான பிரீமியத்தை ஒரு செலவாகக் கருதாமல், அதனைப் பாதுகாப்புக்கான முதலீடாகக் கருதும் மனநிலைக்கு முதலில் எஸ்எம்இகள் வரவேண்டும். மேலும், 2006-க்குமுன் இருந்த பிரீமியத்தில் தற்போது ஏறக்குறைய 90% வீழ்ச்சி கண்டுள்ளது. இந்த பிரிமீயத்தை இனி எல்லோரும் எளிதில் கட்டலாம்.
இனி எஸ்எம்இகளுக்கான இன்ஷூரன்ஸ் களையும் அவற்றின் க்ளெய்ம் வழிமுறைகளைப் பற்றியும் பார்க்கலாம்.
1. தொழில்களுக்கான இன்ஷூரன்ஸ்!
ஒரு எஸ்எம்இ, தான் செய்யும் தொழிலுக்கு தேவையான சரியான காப்பீட்டைப் பெற வேண்டியது அவசியம். பிரீமியம் குறைவாக இருக்குமே என்று தவறான தொழிலைச் சொல்லி இன்ஷூரன்ஸ் எடுத்தால், நஷ்டம் ஏற்படும்போது அதற்குரிய க்ளெய்ம் கிடைக்காமல் போக வாய்ப்புள்ளது. எனவே, சரியான பிரிவின் கீழ் சரியான தொழிலைக் குறிப்பிட்டு அதற்கேற்ப இன்ஷூரன்ஸ் எடுக்க வேண்டும்.
2. தீ மற்றும் சிறப்பு அபாய காப்பீடு!
இவை இந்தியா முழுவதும் தரப்படும் இன்ஷூரன்ஸ் ஆகும். இதில் 15-க்கும் மேலான இழப்பீடுகள் கவர் செய்யப்படும். ஆனால், அந்த நஷ்டக் கணக்கை உறுதி செய்யும் அனைத்து ஆவணங்களும் சரியாக இருக்க வேண்டும். எனவே, எந்த மாதிரியான அபாயங்களுக்கு இழப்பீடு கிடைக்கும் என்பதை நன்கு புரிந்துகொண்டு அதற்கேற்ப ஆவணங்களைத் தயார் செய்து க்ளெய்ம் எடுப்பது அவசியம். குறிப்பாக, இயந்திரங்கள், மூலப் பொருள்கள், விற்பனைக்கு தயாராக உள்ள பொருள்கள் ஆகியவை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டால் அதற்கான இழப்பை இதன் மூலம் பெற முடியும்.
3. சொத்துக்களுக்கு இன்ஷூரன்ஸ்!
சொத்துக்கள் என்பவை உற்பத்தி இயந்திரங்கள், தொழிற்சாலைக் கட்டடம் ஆகியவைதான். இவற்றின் மீது இன்ஷூரன்ஸ் எடுக்கும்போது எஸ்எம்இகள் ரீஇன்ஸ்டேட்மென்ட் (Reinstatement) அதாவது, மதிப்பைக் கணக்கிட்டு அதற்குரிய பிரீமியத்தைச் செலுத்தவேண்டும்.
உதாரணமாக, 10 கோடி ரூபாய் மதிப்புள்ள ஓர் இயந்திரத்துக்கு பிரீமியத்தைக் குறைப்பதற்காக 5 கோடி ரூபாய்க்கு பாலிசி எடுத்தால், பாதிப்பு ஏற்படும்போது அதற்கான இழப்பீடும் குறைவாகவே கிடைக்கும். எனவே, சொத்துக்களின் ரீஇன்ஸ்டேட்மென்ட் மதிப்புக்கான பிரீமியத்தைச் செலுத்தினால், பாதிப்புக்கான இழப்பீட்டையும் சரியான மதிப்பில் க்ளெய்ம் செய்துகொள்ள முடியும். எப்போது என்ன நடக்குமென்றே தெரியாத சூழலில் எதையும் நாமாக தீர்மானித்துக் கொள்ளாமல் சரியான முறையில் மற்றும் உண்மையான தகவல்களுடன் சரியான இன்ஷூரன்ஸ் பாலிசிகளை எடுத்துக்கொள்வது நல்லது.
4. பேக்கேஜ் இன்ஷூரன்ஸ் பாலிசிகள்!
எஸ்எம்இக்களுக்காக இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் பலவிதமான பேக்கேஜ் பாலிசிகளை அறிமுகப்படுத்தி உள்ளன. தீ மற்றும் சிறப்பு அபாய இன்ஷூரன்ஸ், பர்க்ளரி மற்றும் திருட்டு மீதான இன்ஷூரன்ஸ், இயந்திரம் செயலிழத்தலுக்கான இன்ஷூரன்ஸ், எலெக்ட்ரானிக் கருவிகளுக்கான இன்ஷூரன்ஸ், பொதுமக்கள் உயிரிழப்பு மற்றும் சேதாரத்துக்கான இன்ஷூரன்ஸ், மரைன் - கார்கோ டிரான்ஸிட் இன்ஷூரன்ஸ், சுற்றுச்சூழல் மாசு இன்ஷூரன்ஸ் எனப் பல பாலிசிகள் உள்ளன. இந்த பாலிசிகளை சற்று விரிவாக பார்ப்போம்.
பர்க்ளரி மற்றும் திருட்டு மீதான இன்ஷூரன்ஸ்:
இதில் அலுவலகத்தில் திருட்டு நடந்தாலோ, மூடியிருக்கும் கதவை உடைத்துப் பொருளை திருடினாலோ ஏற்படும் இழப்புகளுக்கு இந்த இன்ஷூரன்ஸ் பாலிசி மூலம் க்ளெய்ம் செய்துகொள்ள முடியும். ஆனால், வெளியில் இருந்து யாரோ ஒருவர் திருடினால்தான் இதன் மூலம் இழப்பீடு கிடைக்கும். நிறுவனத்தில் வேலை பார்ப்பவரே திருடினால் அதற்கு பர்க்ளரி இன்ஷூரன்ஸ் பாலிசி மூலம் இழப்பீடு கிடைக்காது.
இயந்திரம் செயலிழத்தலுக்கான இன்ஷூரன்ஸ்:
மழை, வெள்ளம் சூழ்நிலைகள் எப்போதும் வரும் என்று தெரியாது. எனவே, எப்போதும் முன்கூட்டியே இதுபோன்ற எதிர்பாராத சம்பவங்கள் நேரலாம் என்ற அனுமானத்தில் இன்ஷூரன்ஸ் எடுத்து வைத்துக்கொள்வது நல்லது. அதன் மூலம் நஷ்டம் ஏற்படும்போது க்ளெய்ம் செய்து எளிதில் சமாளித்துக்கொள்ள முடியும். இயந்திரங்கள் பெரும்பாலும் விலை அதிகமானவை யாகவே இருக்கின்றன. ஆகையால், அவற்றைக் காப்பீடு செய்வதைத் தவறினால், பெரும் நஷ்டத்தைச் சந்திக்க வேண்டி வரலாம்.
எலெக்ட்ரானிக் கருவிகளுக்கான இன்ஷுரன்ஸ்:
பெரும்பாலான தொழில்கள் கணினி மயமாக்கப் பட்டிருப்பதால், எலெக்ட்ரானிக் கருவிகள் பெருமளவில் பயன்பாட்டில் உள்ளன. உதாரணத்துக்கு, பிஎல்சி (PLC) சர்க்யூட், சிஎன்சி மெஷின் (CNC) போன்றவை. இதுபோன்ற எலெக்ட்ரானிக் பொருட்கள், பெரும் மழைக்காலங்களில் தண்ணீர் புகுந்து, அதனால் சேதமடைய அதிக வாய்ப்புள்ளது. அவற்றுக்கு இந்த இன்ஷூரன்ஸ் மூலம் க்ளெய்ம் பெற்றுக் கொள்ள முடியும்.
பொதுமக்கள் உயிரிழப்பு மற்றும் சேதாரத்துக்கான இன்ஷூரன்ஸ்:
மழையில் நம் கட்டடத்தின் அருகில் உள்ள வீட்டின் மீதோ அல்லது நிறுவனத்தின் மீதோ விழுந்து அதன் மூலம் ஏற்படும் உயிரிழப்புகள், விபத்துகள் மற்றும் பொருட்சேதங்களுக்கு நாம்தான் பொறுப்பாவோம். இதுபோன்ற சூழ்நிலைகளைச் சமாளிக்கவே பொதுமக்கள் உயிரிழப்பு மற்றும் சேதாரத்துக்கான இன்ஷூரன்ஸ் அவசியமாகிறது. மேலும், எஸ்எம்இகள் தங்கள் நிறுவனத்தின் ரசாயனப் பொருட்கள் மற்றும் கழிவுநீர் போன்ற காரணங்களால் சுற்றியுள்ள மக்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், சுற்றுச்சூழல் மாசு இன்ஷூரன்ஸ் மூலம், சட்டப்படி அவர்களுக்குத் தரவேண்டிய இழப்பீட்டை க்ளெய்ம் செய்து தர முடியும்.
மேலும், ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு பொருட்களை எடுத்துச் செல்லும்போது மழை, வெள்ளத்தினால் சேதமடைந்தாலும் திருடு போனாலும், அதற்கான இழப்பீட்டை மரைன் - கார்கோ டிரான்ஸிட் இன்ஷூரன்ஸ் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.
லாபத்தில் நஷ்டத்துக்கான இன்ஷூரன்ஸ்!
எஸ்எம்இக்கள் தங்கள் லாபத்தில் ஏற்படும் நஷ்டத்துக்கான இழப்பீட்டை பெற ஒரு இன்ஷூரன்ஸ் பாலிசி (Loss of Profit) இருக்கிறது. தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள சேதாரத்தினால் அடுத்துவரும் சில மாதங்களுக்கு உற்பத்தியும் தொழிலும் முடங்கும் நிலை ஏற்பட்டிருக்கும். ஏனெனில் நிறுவனத்துக்குள் தேங்கியுள்ள நீர் வெளியேறவே சில நாட்கள் ஆகும். இயந்திரங்கள் பழுதுபார்த்து சரிசெய்வதற்கு சில காலம் ஆகும். கட்டடங்களின் சேதாரங்களைச் சரிசெய்ய காலமெடுக்கும். மூலப்பொருட்களை மீண்டும் தருவிக்க மேலும் சில நாட்களோ, வாரங்களோ ஆகலாம்.
இப்படி தொழில் முடங்கிப் போவதால் ஏற்படும் லாப இழப்புக்கு எஸ்எம்இக்கள் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பதன் மூலம் ஈடுகட்ட முடியும் என்பது பல எஸ்எம்இகளுக்கு தெரியாமலே இருக்கிறது. தடைபட்ட தொழிலை மீண்டும் தொடர எவ்வளவு மாதங்கள் (indemnity period) ஆகும் என்பதை தோராயமாகக் கணித்து, அதற்கேற்ப இந்த இன்ஷூரன்ஸ் முன்கூட்டியே எடுத்துக்கொள்ள வேண்டும். 3 மாதங்கள், 6 மாதங்கள் அல்லது 9 மாதங்கள் என அதற்கேற்ப பிரீமியமும் இருக்கும். இந்த இன்ஷூரன்ஸை எடுத்துக்கொள்வதன் மூலம் அடுத்த சில மாதங்களுக்கு நம் வாழ்வாதாரத்தையும் பார்த்துக்கொண்டு தொழிலையும் பாதுகாத்துக் கொள்ளலாம்.
எஸ்எம்இகள் செய்ய வேண்டியதும் செய்யக்கூடாததும்!
1. தொழில்முனைவோர்கள் இன்ஷூரன்ஸ் விஷயத்தில் அக்கறையோடு இருக்க வேண்டும். ஏனெனில் எப்போது என்ன நடக்கும், எவ்வளவு நஷ்டம் ஏற்படும் என்று யாருக்கும் தெரியாது. நமக்கெல்லாம் அப்படி ஒன்றும் ஆகிவிடாது என்று இருக்காமல், முன்னேற்பாடாக இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொள்ள வேண்டும். தொழில் ரீதியாக வங்கிக் கடன் இருந்தால், சில சமயம் வங்கிகளே தொழில்முனைவோர்கள் சார்பாக இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்திருக்க வாய்ப்புண்டு. அந்தச் சமயங்களில் நீங்கள் வங்கியிடமிருந்து பாலிசி பிரதியை வாங்கி சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
2. என்ன தொழில், எந்தப் பொருள் தயாரிக்கப்படுகிறது, இயந்திரங்கள் மற்றும் கட்டங்களின் மதிப்பு என்ன போன்றவற்றை சரியாகக் குறிப்பிட்டு, அதற்கேற்ப இன்ஷூரன்ஸ் எடுக்க வேண்டும். பிரீமியத் தொகையைக் குறைப்பதற்காக இதில் ஏதேனும் விவரங்கள் தவறாக இருந்தால் இழப்பீடு குறையவோ, மறுக்கப்படவோ வாய்ப்புள்ளது.
3. பாதிப்பு ஏற்பட்டதும் முதலில் இ-மெயில் மூலம் பாலிசி எண்ணைக் குறிப்பிட்டு இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கு தெரிவிக்க வேண்டும். அவர்கள் சர்வேயரை அனுப்புவார்கள். அவரிடம் தெளிவாக அனைத்தையும் எடுத்து சொல்ல வேண்டும். ஆவணங்களைச் சரியாக சமர்ப்பிக்க வேண்டும். சர்வேயர் வருவதற்கு தாமதமாக வாய்ப்புள்ளதாலும், அவர் வருவதற்குள் தண்ணீர் வடிந்துவிடலாம் என்பதால், நீங்களே பாதிப்புகளை புகைப்படமும் வீடியோவும் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் சரியான தொகைக்கு க்ளெய்ம் செய்ய முடியும்.
4. இன்ஷூரன்ஸ் இருக்கிறதே, எல்லாவற்றையும் க்ளெய்ம் செய்து வாங்கிவிடலாம் என்றும் இருக்கக் கூடாது. முடிந்தவரையிலும் நஷ்டத்தைக் குறைக்கும் நடவடிக்கைகளை தொழில்முனைவோர்கள் எடுக்க வேண்டும். தண்ணீர் தேங்கியிருக்கும் சமயத்தில் இயந்திரங்களையோ, எலெக்ட்ரானிக் பொருட்களையோ இயக்காமல் இருக்க வேண்டும். (இதுபற்றி வழிகாட்டும் புத்தகத்தில் தெளிவாக இவை குறிப்பிடப்பட்டிருக்கும்.) இல்லாவிட்டால், க்ளெய்ம் செய்யும்போது சர்வேயர், ஏன் நீங்கள் தண்ணீர்பட்ட இயந்திரத்தை இயக்கினீர்கள் என்று கேட்டு, க்ளெய்மை நிராகரிக்க வாய்ப்புண்டு.
5. இன்ஷூரன்ஸ் க்ளெய்ம் செய்வதற்கு தேவையான ஆவணங்களை முறையாக வைத்துக் கொள்ள வேண்டும். அவை இழப்பு ஏற்பட்ட விதத்தையும், அவற்றின் மதிப்பையும் (value), அளவையும் (Quantum) உறுதிப்படுத்தும் வகையில் இருக்க வேண்டும். நிறுவனத்தில் வைத்திருக்கும் ஸ்டாக்குகளின் அறிக்கைகள், இயந்திரங்களின் இன்வாய்ஸ், சொத்துக்களின் மதிப்பு போன்றவை. இந்த முதல்நிலை ஆவணங்கள் தவறும்பட்சத்தில் இரண்டாம் நிலை ஆவணங்களை நாம் ஏற்பாடு செய்யலாம். அந்தத் தொழிலுக்கு செலுத்தப்பட்ட மின் கட்டண ரசீது, சப்ளையரிடமிருந்து இன்வாய்ஸின் நகலை வாங்குவது, வங்கிகளிடம் கொடுத்த பொருள் இருப்பு விவர அறிக்கை போன்றவை.
இவற்றை முறையாக கடைபிடிப்பதன் மூலம் எஸ்எம்இக்கள் மழை, வெள்ளம், புயல் சூறாவளி மற்றும் தீ விபத்து போன்றவற்றினால் ஏற்படும் இழப்புகளிலிருந்து தங்களையும் தங்களுடைய தொழிலையும் காப்பாற்றிக்கொள்ள முடியும்.
படங்கள்: சு.குமரேசன், ஆ.முத்துகுமார்.
-விகடன்
0 comments:
Post a Comment