‘துணிவே துணை’ படத்தில் அபர்ணா நடிக்கும் ‘ஆகாயத்தில் தொட்டில் கட்டும்’ என்ற பாடல் மிகவும் வித்தியாசமாக அமைந்தது. அந்தப் படத்தில் நடன அமைப்பாளர் புலியூர் சரோஜாவின் உதவியாளராக கலா பணியாற்றினார். மிகவும் சுறுசுறுப்பு. நடிகர், நடிகைகளுக்கு நடனம் சொல்லிக்கொடுப்பதில் அவ்வளவு ஆர்வம் காட்டுவார். அவர் தான் இன்றைக்கு உலகப் புகழ் பெற்ற ‘மானாட மயிலாட’நிகழ்ச்சியை நடத்தி வருபவர் என்பது எங்களுக்குப் பெருமை.
திரையுலக முன்னோடி இயக்குநர் கே.சுப்ரமணியம் அவர்களின் வழித் தோன்றல் ரகுராம் மாஸ்டர், அவர் மனைவி கிரிஜா, அவருடைய தங்கைகள் கலா, பிருந்தா ஆகியோரும் நடனக் கலைக்காக சேவை செய்தவர்கள், செய்கிறவர்கள். அந்தக் கலை குடும்பத்தை மனமாறப் பாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன்.
இன்று சின்னத்திரையில் குணச்சித்திர நடிகராக அசத்தி வரும் அழகு, நான் இயக்கிய ‘துணிவே துணை’ படத்தில் அறிமுகமானவர். அப்போது அவரை சண்டைக் காட்சிகளில் பங்குபெற வைத்தோம். சிறந்த சண்டை வீரராக பல படங்களில் பங்கு பெற்றார். உள்ளுக்குள் இருந்த திறமை ஒரு நாள் வெளியே வந்தே தீரும் என்று சொல்வதைப் போல இன்றைக்கு சின்னத்திரையில் குணச்சித்திர வேடங்களில் சிறப்பாக நடித்துவருகிறார். அதற்குக் காரணம் முயற்சி திருவினையாக்கும் என்பதே. நடிக்க வருகிறவர்கள் சின்ன வேஷம், பேரிய வேஷம் என்று பார்க்காமல் கிடைத்த வேடத்தில் திறமையைக் காட்டி முன்னேற வேண்டும். துணை நடிகராக இருந்த எம்.ஜி.ஆர் அவர்கள் பின்னாளில் உலகம் புகழும் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் ஆகவில்லையா?
- அழகு
‘துணிவே துணை’ படத்தில் அசோகன் காமெடி கலந்த வில்லன் கதாபாத்திரத் தில் நடித்தார். கிளைமாக்ஸ் காட்சியில் அசோகனையும், வில்லன்களையும் ஹெலிகாப்டர் துரத்துகிற மாதிரி காட்சி. அப்போது அசோகன், ‘ஹெலிகாப்டர் கீழே வரும்போது எனக்கு கைக்கு எட்டும் தூரத்தில்தான் வருகிறது. நான் பிடித்து விடட்டுமா? என்றார். ‘ஐயையோ… அப்படியெல்லாம் செய்துவிடாதீர்கள். ஹெலிகாப்டர் கவிழ்ந்துவிடும்’ என்று நான் கத்தினேன். ஹெலிகாப்டரை, கார் மீது இடிக்க வைத்து ரிஸ்க்காக பல ஷாட்களை எடுத்து ஒருவித த்ரில்லோடு படமாக்கினோம்.
அந்தப் படம் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. மஞ்சப் பையுடன் வந்த துளசிராம் தயாரிப்பாளர் ஆனார். அடுத்தப் படத்தையும் தயாரிக்க முன் வந்தார். நாங்களும் ஒப்புக்கொண்டோம். அப்போது துளசிராம் தயாரிப்பாளர் என்ற கிரீடத்தை தலையில் வைத்துக்கொண்டு, சில நிபந்தனைகள் போட்டுக்கொள்ளலாம் என்றார். ‘முதல் படம் எப்படி எடுத்தோமோ, அப்படியே எடுப்போம். நிபந்தனைகள் என்றால் எங்களை விட்டுவிடுங்கள்’ என்று நங்கள் ஒதுங்கிக்கொண்டோம். சினிமா என்பது கடல். ஒரு படத்திலேயே எல்லாவற்றையும் கற்றுக்கொண்டுவிட முடியுமா?
நடிகர்கள் முத்துராமன், ஜெய்சங்கர் இருவரும் நட்பு அடிப்படையில் எங்கள் படங்களில் எப்போதும் நடிக்கத் தயாராகவே இருந்தார்கள். தயாரிப்பாளர் யார்? கதை என்ன என்று கேட்கவே மாட் டார்கள். அட்வான்ஸ் என்பது பணமாக இல்லை, வாய் வார்த்தையில் மட்டும் தான். அவர்களது டைரியை எடுத்து, ‘10 நாட்கள் எஸ்பி.எம் படம்’ என்று தேதி குறித்து வைத்துவிட்டு வந்துவிடுவேன். நான் குறிப்பிட்ட தேதிகளை யாருக்கும் ஒதுக்க மாட்டார்கள். அவர்கள் இருவரும் இப்படி ஒரு புரிதலோடு இருந்தது எங்களுக்குப் பெரிய பலமாக இருந்தது. இதெல்லாம் வியாபார நோக்கம் எதுவும் இல்லாமல் ஒருவருக்கொருவர் இருக்கும் நட்பு அடிப்படையில் செய்தது.
அடுத்து நாங்கள் எடுத்தப்படம் விஜய பாஸ்கர் தயாரித்த ‘காலங்களில் அவள் வசந்தம்’. முத்துராமன், ஸ்ரீவித்யா, சந்திர கலா, தேங்காய் சீனிவாசன் ஆகியோர் நடித்தனர். ஒரு பெண், தன்னைவிட படிப் பில், அந்தஸ்தில், அழகில் பெரிய இடத்து மாப்பிள்ளைதான் வேண்டும் என்று தட்டிக்கழித்து முதிர்கன்னியாகி விடுவார். அந்தக் கதாபாத்திரத்தில் ஸ்ரீவித்யா நடித்தார். ஸ்ரீவித்யா எந்தக் கதாபாத்திரத்தையும் சிறப்பாக நடிக்கக்கூடிய நல்ல நடிகை. எங்கள் குழுவில் நட்போடு பழகினார்.
என் மனைவி இறந்தபோது எனக்கு ஆறுதல் கூறும்போது அவர் அழுத அழுகைக்கு, நான் ஆறுதல் கூற வேண்டியதாயிற்று. அவர் உடல் நலமில்லாமல் கேரளாவில் இருக்கும்போது அவரை நான் பார்க்க விரும்பினேன். கமல் பார்த்துவிட்டு வந்த தாக செய்தி வந்தது. கமலிடம் போய் நான் பார்க்க வேண்டும் என்று கூறினேன். கமல், ‘வித்யா யாரையுமே பார்க்க விரும்பவில்லை. நீங்கள் போய் பார்த்தால் அவர் வேதனை அதிகமாகுமே தவிர உடல்நலம் குணமாகாது’ என்று கூறினார். சில நாட்களிலேயே அவர் இறந்த செய்தி வந்தது. அவர் வாழ்க்கையில் பட்ட கஷ்டங்கள், துன்பங்கள் எல்லாவற்றையும் அறிந்த எனக்குக் கண் கலங்கியது. அவரை பார்க்கக்கூட முடியவில்லையே என்ற ஏக்கம் இன்றைக்கும் இருக்கிறது.
‘காலங்களில் அவள் வசந்தம்’ படத்தில் ஸ்ரீவித்யாவுக்குத் தங்கையாக சந்திர கலா நடித்தார். அவருக்கும் முத்து ராமனுக்கும் திருமணம் நடக்கும். முதிர் கன்னியான ஸ்ரீவித்யா தன் நிலையை நினைத்து மனநிலை பாதிப்புக்குள்ளாவார். அதைக் கண்ட தங்கை சந்திரகலா தன் அக்கா குணமடைய தன் கணவனையே அவருக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்வார்.
திருமணம் நடந்து முதலிரவு ஏற்பாடு செய்யும் நேரத்தில் மீண்டும் அக்காவுக்கு மனநிலை பாதிக்கப்படும். தந்தை அசோகன் மகள் ஸ்ரீவித்யாவை ஊருக்கு அழைத்துச் செல்வார். தன்னைப் பார்த்து அழும் அசோகனிடம் ஸ்ரீவித்யா, ‘தங்கை தனது கணவரைத்தான் எனக்குக் கணவராக்கியிருக்கிறார் என்பது எனக்குத் தெரிந்துவிட்டது. தங்கையின் வாழ்க்கையைக் கெடுக்க விரும்பாமல்தான் பைத்தியமாக நடித்தேன்’ என்று கூறுவார்.
இளம்பெண்கள் ‘தனக்கு வரும் கணவன் இப்படி இருக்க வேண்டும்? அப்படி இருக்க வேண்டும்’ என்று கனவு கண்டு, வரும் எல்லா மாப்பிள்ளைகளை யும் ஒதுக்கினால் முதிர்கன்னிகளாக ஆக வேண்டியிருக்கும் என்பதை இந்தக்கதையின் மூலம் உணர்த்தினோம். இந்தப் படம் நாங்கள் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை. இந்தக் கதையை எங்களிடம் உரிமை வாங்காமலேயே ஹிந்தியில் எடுத்து அந்தப் படம் வெற்றி பெற்றது. அந்த விஷயமே எங்களுக்குக் காலம் கடந்துதான் தெரிந்தது. அதனால் அவர்களோடு போராட முடியவில்லை. கதையின் உரிமையை வாங்காமல் மற்ற மொழியில் படம் எடுப்பது தவறு. அது படைப்பாளிகளின் உழைப்பை ஏமாற்றுவதாகும். உரியவர்கள் சிந்திக்க வேண்டும்.
அன்று ஏரியில் வீடு கட்டினோம். இன்று வீட்டுக்குள் ஏரி. இது நம் எல்லோருக்கும் ஒரு பாடம். இந்த வெள்ளத்தில் இளைஞர்கள் மழையில் நின்று கொண்டு மக்களுக்கு வழிகாட்டியது, உதவிகள் செய்தது வருங்காலத்தில் அவர்கள் நாட்டை காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கையைத் தந்தது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்த மனிதநேயமுள்ள அனைவரையும் வணங்குவோம். வேற்றுமையில் ஒற்றுமை காண்போம் என்பதற்கு இந்த நிகழ்வுகள் உதாரணம். வடியும் கண் ணீரைத் துடைத்துக்கொண்டு அடுத்த வாரம் நான் தூக்கி வளர்த்த உலக நாயகன் கமல் பற்றி எழுதப் போகிறேன். அது எந்தப் படம்? எந்த சூழலில் அமைந்தது? அடுத்த வாரம் பார்ப்போம்.
இன்னும் படம் பார்ப்போம்...
அ
தஹிந்து
0 comments:
Post a Comment