Friday, December 25, 2015

பசங்க 2-ஹைக்கூ'

'பசங்க', 'மெரினா' படங்களை இயக்கிய பாண்டிராஜ் 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' படத்துக்குப் பிறகு யு டர்ன் அடித்து மீண்டும் குழந்தைகளை மையமாக வைத்து ஒரு படம் இயக்கியுள்ளார் என்றால் எதிர்பார்ப்புக்கு பஞ்சம் இருக்குமா?
படத்தைத் தயாரித்ததோடு, நடிப்பிலும் தன் பங்களிப்பு செய்த சூர்யா, சின்ன இடைவெளிக்குப் பிறகு அமலாபாலின் நல்வரவு என்ற இந்த காரணங்களே கதாபாத்திரம் படம் பார்க்கத் தூண்டியது.
'பசங்க 2' எப்படி?
நிஷேஷ், தேஜஸ்வினி என்ற இரு சுட்டிகளும் துறுதுறு சுறுசுறுவென்று ஜாலியாக பிடித்ததை மட்டும் செய்கிறார்கள். இவர்களை சமாளிக்க முடியாமல் பள்ளிக்கூடங்கள் திண்டாடுகின்றன. இவர்களின் பெற்றோர் அடிக்கடி ஸ்கூல் மாற்றியே கடுப்பாகிறார்கள். அதற்குப் பிறகு வேறு வழியில்லாமல் ஒரு முடிவை எடுக்கிறார்கள்? அது என்ன முடிவு? அந்த குழந்தைகள் என்ன ஆகிறார்கள்? என்பது மீதிக் கதை.
குழந்தைகள் உலகையும், அவர்களின் எண்ணங்களையும், கனவுகளையும், நடத்தைகளையும் நெருக்கமும் உருக்கமுமாக காட்டியதற்காக இயக்குநர் பாண்டிராஜைப் பாராட்டலாம்.
கவினாக நடித்த நிஷேஷ், நயனாவாக நடித்த வைஷ்ணவி ஆகிய இருவரும் புதுமுகங்கள். ஆனால், அவர்களின் சேட்டைகள், குறும்புகளுக்கும் தியேட்டர் விழுந்து விழுந்து சிரிக்கிறது. அச்சரம் பிசகாத நடிப்புக்கு கிளாப்ஸ் பறக்கிறது.
நிஷேஷின் டான்ஸ் ஃபெர்பாமன்ஸுக்கு அரங்கம் அதிர்கிறது. வைஷ்ணவியின் பிஞ்சுக் குரலில் இருக்கும் தவிப்பைப் பார்த்து கண்கள் கசிகின்றன. இந்த சுட்டிகளுக்கு தமிழ் சினிமா சிவப்புக் கம்பளம் விரிக்கிறது.
அடங்காத பையனை வைத்துக்கொண்டு அவதிப்படும் அப்பாவாக 'முனீஸ்காந்த்' ராமதாஸ் பின்னி இருக்கிறார். கார்த்திக் குமார், பிந்து மாதவி, வித்யா ஆகியோர் பொருத்தமான தேர்வு.
பிளே ஸ்கூல் டீச்சரைப் போன்ற ஒரு கதாபாத்திரத்துக்கு அமலாபால் சரியான தேர்வு. விழிகளை அசைத்து குழந்தைகளுக்கு பாவனை காட்டும் நடிப்பும், அவர் குழந்தைகளை அணுகும் முறையும் ரசிக்க வைக்கிறது.
படத்தின் கதை நகர்த்தலுக்கு முக்கியமான கருவியாக சூர்யா செயல்படுகிறார். ஆனால், அவர் அறிவுரை சொல்லும்போதுதான் கொஞ்சம் செயற்கையாக இருக்கிறது. இன்னும் கௌதம் மேனன் படத்தில் பேசுவதைப் போலவே எல்லா இடங்களிலும் பேசுவது நல்லா இருக்குமா சார்? டயலாக் டெலிவரியை மாத்துங்களேன் ப்ளீஸ்.
பாலசுப்ரமணியெத்தின் கேமரா குழந்தைகள் உலகை வண்ணமயமாகக் காட்டி இருக்கிறது. தன் ஒளிப்பதிவு மூலம் படத்துக்கு பலம் சேர்த்திருக்கிறார் பாலசுப்பிரமணியெம்.
அரோல் கொரெலி இசை உறுத்தாமல் இருக்கிறது. சோட்டாபீம் பாடலும், காட்டுக்குள்ள கண்ணைவிட்டு பாடலும் கவனம் பெறுகின்றன.
''பசங்க கெட்ட வார்த்தைகளைப் பேசுறதில்லை. கேட்ட வார்த்தைகளைத்தான் பேசுறாங்க.''
''உங்க பசங்க தனிச்சு நிற்குறவங்க இல்ல. தனித்துவமா நிற்குறவங்க.''
''மதிப்பெண்களை எடுக்கணும்னு நினைக்காம மதிப்பான எண்ணங்களை வளர்க்கணும்'' போன்ற பாண்டிராஜின் வசனங்களுக்கு கரவொலி கூடுகிறது.
குழந்தைகளை பெரிய மனிதர்களாக காட்ட அதிகம் முயற்சிக்கவில்லை என்பதற்காகவும், போகிற போக்கில் ரியாலிட்டி ஷோக்களின் ஆபத்தை சுட்டிக் காட்டியதற்காகவும் பாண்டிராஜுக்கு நன்றி.
குழந்தைகள் படத்தை முழுமையாக தர வேண்டும் என்பதற்காக நிறைய விஷயங்களை பாண்டிராஜ் அப்டேட் செய்திருக்கிறார். ஆனால், ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப்பில் உலவும் வசனங்களை, ஐடியாக்களை பயன்படுத்தி இருக்கீங்களே நியாயமாரே?
சூர்யாவின் குழந்தை ஃபிளாஷ்பேக்கில் கொஞ்சம் கத்தரி போட்டிருக்கலாம்.
குழந்தைகளை தன் போக்கில் வளர விடுவதா? பெற்றோர்களுக்காக மாறுவதா? என்ற சிக்கல்களுக்கான தீர்வை இன்னும் கொஞ்சம் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கலாம்.
மொத்தத்தில் பெற்றோர்களும் குழந்தைகளும் பார்க்க வேண்டிய படம் 'பசங்க 2'.
பெற்றோர்களுக்கு ஒரு கோரிக்கை:
குழந்தைகள் துறுதுறு என்று இருந்தாலோ, பக்கத்து வீடுகளிலோ, பள்ளிக்கூடங்களிலோ உங்கள் பிள்ளை குறித்து ஏதாவது சொன்னாலோ பதறிப் போகாதீர்கள். குழந்தைகளை எப்படி வளர்க்கக்கூடாது, எப்படி வளர்க்கலாம்? என்பதை 'பசங்க 2' பார்த்து முடிவு செய்யுங்கள்.
பாண்டிராஜுக்கு ஒரு கோரிக்கை:
கமர்ஷியல் சினிமாதான் பண்ணுவேன் என அடம்பிடிக்காமல் குழந்தைகளுக்காக படம் எடுங்க சார். அந்த குழந்தைகள் உலகம் உங்களைக் கொண்டாடும்.

ஹிந்து

0 comments: