சென்னை வாசிகளை புரட்டிப்போட்ட கனமழை, பாடங்கள் பலவற்றைக் கற்றுக் கொடுத்துள்ளது. பெருகிவந்த வெள்ளம் தந்த படிப்பினைகள் எப்போதும் நினைவில் கொள்ளவேண்டியவையே...
1. மக்கள் அவரவர் மதம், மொழி, இனம் போன்றவற்றை எல்லாம் வீட்டிலேயே வைத்துவிட்டு , வீதிகளுக்கு உதவ முன்வந்தனர் கடவுளாக..!
2. உதவாமல் இருந்தவர்களின் பெருமைகள் எல்லாம் ஒரே மழையில் உலகிற்கு தெரிந்து விட்டது.
3. ஊருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணமும், வெள்ளத்தில் இறங்கி வேலை செய்ய வேண்டிய தைரியமும், வெகு விரைவாக மக்கள் மனங்களில் பரவியது.
4. அன்பும் அரவணைப்பும் , வன்முறைகளை விட , வதந்திகளை விட ,வேகமாக பரவியது.
5. தட்டப்படாமலே, உதவுவதற்காக அனைவரின் வீட்டு கதவுகளும் திறந்தே இருந்தன.
6. தங்கள் வீட்டு சொந்த சமையலறையை கூட காணாத கணவர்கள் எல்லாம், நிவாரண முகாம்களில் அமைக்கப்பட்டிருந்த சமையல் கூடங்களில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். எந்த வசதியும் இல்லாத இடங்களில் தங்கவைக்கப்பட்ட போதும் கூட, மகிழ்ச்சிக்கு குறைவின்றி , மனம் திருப்தியடைந்தது.
7. வீட்டில் குழந்தைகளை மட்டுமே கவனித்து கொண்டிருந்த பெண்கள் எல்லாம், தெருவில் மிகப்பெரிய மீட்பு பணிகளில் இறங்கி சாதித்தனர்.
8. பத்திரமாய் பாதுகாத்த வந்த பணமுடிச்சுகளும், பர்ஸ்களும், விலை உயர்ந்த உடைமைகளும் எந்தவித பாதுகாப்பும், கேட்பாரும் இல்லாமல் வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தது.
9. இந்துக்கள் வீட்டில் இஸ்லாமிய சகோதரர்கள் தொழுகை செய்தனர். இஸ்லாமியர்கள் வீட்டில் கிறிஸ்துவர்கள் பிரார்த்தனை செய்தனர். கிறிஸ்துவர்கள் வீட்டில் சீக்கியர்கள் இறைவனை வேண்டினர். ஒரு வார்த்தை, அல்லது ஒரு சிறிய மறுப்பு கூட இல்லாமல் இவை எல்லாம் நடந்தது.
10. குறும்புத்தனமாக இருந்த நம் இளைஞர்கள் எல்லாம், இன்று உலகிற்கு நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக மாறியிருக்கின்றனர்..
11. முதல் முறையாக உதவிகளும், ஆதரவும் எளியோர்களிடம் இருந்து, சாமானியர்களிடமிருந்து , பணக்காரர்களின் கைகளுக்கு சென்று கொண்டிருக்கிறது.
12. பள்ளிகள்,கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் எல்லாம் இந்த முறை, தோழமை என்றால் என்ன? ஒற்றுமை என்றால் என்ன? சேவை என்பது என்ன? என்ற புதிய பாடங்களை , அங்கு தங்கியிருந்த மக்களுக்கு கற்றுக்கொடுத்துள்ளது.
13. உணவு, உடை, உடைமை என சகலமும் இழந்தாலும், நம்பிக்கை இன்னும் மிச்சமிருப்பதால் , முகத்தில் புன்னகை மட்டும் இன்னும் மறையவில்லை.
14. எந்த நாய் மீது கல்லெறிந்து விரட்டினார்களோ, அதற்கே தற்போது அன்புடன் உணவளித்து வருகின்றனர்.
15. மிகப்பெரிய அரக்கன் என சித்தரிக்கப்பட்ட சமூக வலைத்தளங்கள் எல்லாம் ஒரே இரவில் கடவுளாக மாறிப்போயின. லட்சக்கணக்கானோர் மீட்கப்பட, உதவிகள் பெற்றிட அதுவே உதவி செய்தது.
16. பெரும்பாலான வீடுகள் திறந்தே இருந்த போதும், வீட்டில் இருந்த மக்கள் அனைவரும் வீதியில் இருந்த போதும் கூட, எந்த வீட்டிலும் திருட்டோ, மற்ற குற்றங்களோ நடைபெற வில்லை.
17. பாதிக்கப்பட்டவர்களை தங்கள் வீட்டில் தங்க அனுமதித்த எந்த மனிதரும், உணவளித்த எந்த மனிதரும் “நீங்கள் என்ன ஜாதி?” என கேட்டு உதவி செய்யவில்லை.
18. ஆடி, பி.எம்.டபிள்யூ போன்ற சொகுசு கார்கள் வைத்திருந்த நடிகர்கள், அரசு அதிகாரிகள், வி.ஐ.பி கள் என பலரையும் மீட்டது சாதாரண இளைஞர்களும், சின்டக்ஸ் டேங்க் படகுகளும்தான்.
19. ஏ.டி.எம், நிவாரண மையங்கள், பால் விற்பனை மையங்கள் போன்ற பொது இடங்களில் பொதுமக்கள் பொறுமையாக கியூவில் நிற்க கற்றுக்கொண்டனர்.
20. அனைத்து உதவிகளும், தாமதம் ஆகாமல் சரியான நேரத்திற்கு கொண்டு செல்ல, அரசை விட, தன்னார்வலர்களால் முடிந்தது.
21. திருப்பி செய்யப்படாத, செய்ய முடியாத உதவி என்று தெரிந்தே பலரும் நிவாரண தொகை, நிவாரண பொருட்களை சென்னைக்கு அனுப்பி வைத்தனர். எந்த பிரதி பலனும் எதிர்பாராது செய்த உதவிகள்தான் வெள்ளத்தினை விட, பெரிது.
22. நம்மில் இருக்கும் வேற்றுமைகளை விட, சகோதரத்துவம் என்ற ஒற்றுமையின் மூலம் நிறைய செய்ய முடியும் என்பது தெரிந்தது.
23. பள்ளி, கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டிருந்தாலும் கூட, மாணவர்கள் மனித வாழ்க்கையின், சமுதாயத்தின் பெரிய பாடங்களை இந்த விடுமுறையில்தான் கற்றுக்கொண்டனர்.
24. அரசு இயந்திரத்தை விடவும், பன்மடங்கு விரைவாக இந்த சமூகம் ஒன்றிணைந்தால் செயல்படமுடியும் என்பது தெரிந்தது.
25. “அரசியல்வாதிகள் எப்போதும் திருந்தமாட்டார்கள்” என்ற உண்மையை பேய்மழைப் பெருவெள்ளத்தால் கூட, அசைக்க முடியவில்லை.
-ஞா.சுதாகர்
விகடன்
0 comments:
Post a Comment