Thursday, December 24, 2015

வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்லமாட்டான் (2015)- சினிமா விமர்சனம்

நடிகர் : பிரவீன் குமார்
நடிகை :ஷாலினி வட்னிகட்டி
இயக்குனர் :அபிநிந்திரன்
இசை :ஜோஷ்வா ஸ்ரீதர்
ஓளிப்பதிவு :சாரங்கராஜன்
சிறுவயதிலேயே தாயை இழந்த பிரவீன் குமார், தனது அப்பா ஜெயப்பிரகாஷ் மீது அதிக பாசம் கொண்டவராக இருக்கிறார். என்ஜினீயரிங் முடித்த அவர், தனது மனைவி சனம் ஷெட்டி மற்றும் கைக்குழந்தையுடன் வெளிநாட்டிற்கு சென்று வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சென்னையில் வசிக்கும் ஜெயப்பிரகாஷ் புற்று நோயால் பாதிக்கப்படுகிறார். இதனால் பிரவீன் குமார் தனது குடும்பத்துடன் சென்னைக்கு வருகிறார். 

தனது அப்பாவிற்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய ரூ.50 லட்சத்திற்கும் மேல் செலவு செய்ய வேண்டியிருக்கிறது. தனது கையில் அவ்வளவு பணம் இல்லாததால் தனது நண்பரிடம் உதவி கேட்கிறார். அவரது நண்பன் பாலசரவணன் மூலமாக கந்து வட்டிக்காரர் அருள்தாஸிடம் ரூ.50 லட்சம் வட்டிக்கு வாங்கி தனது தந்தைக்கு அறுவை சிகிச்சை செய்கிறார். பின்னர் அருள்தாஸுக்கு சரியான நேரத்தில் பணம் தரமுடியாமல கார்த்திக் சிக்கலில் மாட்டிக் கொள்கிறார். 

அருள்தாஸ் இதனால் பிரவீனுக்கு தொல்லை கொடுக்க ஆரம்பிக்கிறார். கடனை அடைக்க வழியில்லாமல் தவிக்கும் அவருக்கு, தனது முன்னாள் காதலியான ஷாலினி வட்னிகட்டி பெரிய பணக்காரரை திருமணம் செய்துகொண்டு சந்தோஷமாய் இருப்பது தெரியவருகிறது. இதனால், இவர்கள் காதலிக்கும்போது ஒன்றாக சேர்ந்து எடுத்த போட்டோக்களையெல்லாம் காட்டி அவளிடம் பணம் பறிக்க திட்டம் போடுகிறார். 

இந்த திட்டத்தை தனது நண்பன் பாலசரவணனிடம் சொல்லி செய்யச் சொல்கிறான். முதலில் தயங்கும் பாலசரவணன் பின்னர் பிரவீன் மற்றும் ஜெயப்பிரகாஷ் மீதுள்ள பாசத்தால் ஒப்புக்கொள்கிறான். பாலசரவணன் மிரட்டலுக்கு பயந்து ஷாலினி பணம் தருவதாக கூறுகிறாள். ஆனால், அவ்வளவு பணம் இல்லாததால் பிரவீனை சந்தித்து இதற்கு உதவி கேட்கிறார். மேலும், தனது கணவர் கார்த்திக் குமாரை மிரட்டி பணம் பறிக்கும்படி யோசனை கூறுகிறார்.

டாக்டராக இருக்கும் கார்த்திக் குமாரோ, இதற்காக தன்னுடைய ஆஸ்பத்திரியில் மகளின் கருக்கலைப்புக்காக வரும் கோடீஸ்வரரை மிரட்ட சங்கிலித் தொடர் போன்று இந்த மிரட்டல் நீண்டுகொண்டே போய் கடைசியில், மிகப்பெரிய தாதாவான நரேனிடம் போய் நிற்கிறது. அவர் தனது சொல்வாக்கை பயன்படுத்தி இந்த மிரட்டல் எங்கிருந்து ஆரம்பித்தது என விசாரிக்கிறார். அப்போது, இதற்கு முதற்காரணம் நாயகன் பிரவீன் என்பதை கண்டுபிடிக்கிறார். இறுதியில் அவரை நரேன் என்ன செய்தார்? என்பதே மீதிக்கதை. 

நாயகன் பிரவீன் குமார் புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட தனது அப்பாவை காப்பாற்றுவதற்காக பிளாக்மெயிலில் ஈடுபடும் மகன் கதாபாத்திரத்தில் அப்பாவியாக நடித்திருக்கிறார். தனது அப்பா இன்னும் சிலகாலம் தான் உயிருடன் இருப்பார் என்றதும் மருத்துவமனையில் இவர் கண்கலங்கி நிற்கும் காட்சிகள் கண்கலங்க வைக்கிறது. 

நாயகனுக்கு அடுத்தபடியாக ஜெயப்பிரகாஷ், பாசமுள்ள அப்பாவாக நடித்து மனதில் ஆழமாக பதிகிறார். தனது மகனை பாசத்துடன் விசாரிப்பதில் இருந்து, மகனின் கஷ்டத்தை புரிந்து தனது நிலையை தளர்த்திக் கொள்ளும் இடங்களில் பாராட்டு பெறுகிறார். பாலசரவணன் வழக்கமாக காமெடிக்காக மட்டுமில்லாமல், இப்படத்தில் நல்ல குணச்சித்திர கதாபாத்திரக் கேரக்டரிலும் நடித்து கைதட்டல் பெறுகிறார். 

இவர்களையெல்லாம் கடந்து மனதை தொடுபவர் நரேன். பெரியவராக வரும் இவர், வில்லன் கலந்த குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் கவர்கிறார். சனம் ஷெட்டி, ஷாலினி வட்னிகட்டி இருவரும் ஒருசில காட்சிகளே நடித்தாலும், தங்கள் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள். 

கொஞ்சம் நகைச்சுவை, அதிக திருப்பங்கள் நிறைந்த வித்தியாசமான கதையாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் அபிநிந்திரன். படத்தின் ஆரம்ப காட்சிகள் நிமிர்ந்து உட்கார வைக்கிறது. பின்னர், சங்கிலி தொடர்போல் செல்லும் பிளாக் மெயில் காட்சிகள் பொறுமையை சோதிக்கின்றன. இடைவேளைக்கு பிறகு கதையுடன் ஒன்ற வைத்துவிடுகிறார் இயக்குனர். 

சாரங்கராஜன் ஒளிப்பதிவில் காட்சிகள் எல்லாம் அழகாக இருக்கின்றன. ஜோஷ்வா ஸ்ரீதர் இசையில் பின்னணி இசை மிரட்டுகிறது. அதேநேரத்தில் பாடல்களில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். 

மொத்தத்தில் ‘வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்லமாட்டான்’ வசீகரிக்கிறான்.

http://cinema.maalaimalar.com/2015/12/24121253/vellaiya-irukkiravan-poi-solla.html

1 comments:

'பரிவை' சே.குமார் said...

அப்ப பாக்கலாங்கிறீங்க..