ஜனவரி 2ம் தேதி வெளியான ‘திரு.வி.க பூங்கா' உள்ளிட்ட 3 படங்களில் ஆரம்பித்து தற்போது வெளியாகியிருக்கும் ‘பசங்க 2' உள்ளிட்ட 3 படங்களோடு 2015-ல் மொத்தம் 204 படங்கள் வெளியாகியிருக்கின்றன. இவற்றில் தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் என அனைத்துத் தரப்பினருக்குமே லாபம் என சொல்லக்கூடிய படங்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் இருக்கின்றன.
‘தங்கமகன்', ‘பசங்க 2' மற்றும் ‘பூலோகம்' ஆகிய படங்கள் தற்போதுதான் வெளியாகியிருக்கின்றன. ஆகையால் அப்படங்களின் வசூல் நிலவரங்கள் உள்ளிட்டவை இதில் கணக்கில் கொள்ளப்படவில்லை.
இந்த ஆண்டில் தொலைக்காட்சி உரிமம் என்பது தமிழ்த் திரையுலகின் முக்கியப் பிரச்சினையாக, தயாரிப்பாளர்களுக்குப் பெரிய தலைவலியாக இருந்தது. தொலைக்காட்சி உரிமம் விற்காமல் பல்வேறு படங்கள் முடங்கிக் கிடப்பது பெரிய இழப்பாக இருக்கிறது.
அனைத்துத் தரப்புக்கும் லாபம்
‘காக்கா முட்டை', ‘தனி ஒருவன்', ‘பாகுபலி', ‘காஞ்சனா 2', ‘மாயா', ‘த்ரிஷா இல்லன்னா நயன்தாரா', ‘டிமாண்டி காலனி', ‘கொம்பன்', ‘பாபநாசம்', ‘ரோமியோ ஜூலியட்', ‘டார்லிங்', ‘ஓ காதல் கண்மணி', ‘வேதாளம்' மற்றும் ‘ஈட்டி' ஆகிய படங்கள் அனைத்துத் தரப்பினருக்கும் லாபம் சம்பாதித்துக் கொடுத்தன. பெரிதும் பாராட்டப்பட்ட ‘காக்கா முட்டை' சிறு முதலீட்டில் எடுக்கப்பட்டு, பல்வேறு திரைப்பட விழாக்களில் பங்கேற்றது.
‘தனி ஒருவன்', ‘பாகுபலி', ‘காஞ்சனா 2' ஆகிய படங்களுக்குப் பெரும் ஆதரவு கிடைத்தது. அதில் திரையரங்க உரிமையாளர்கள் மத்தியில் ‘காஞ்சனா 2' தான் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது. 2015-ம் ஆண்டில் அதிக மக்கள் பார்த்த படம் ‘காஞ்சனா 2' தான் என்கிறார்கள். அதற்கு அடுத்த நிலையில் ‘தனி ஒருவன்', ‘பாகுபலி' ஆகிய படங்கள் இடம் பிடித்திருக்கின்றன. ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா' படத்துக்கு விமர்சகர்களிடையே பெரும் எதிர்ப்பு இருந்தாலும், மக்களிடையே வரவேற்பைப் பெற்றது.
தொடர்ச்சியாகப் பேய்ப் படங்கள் வரவேற்பைப் பெற்றுவந்த நிலையில், வித்தியாசமான முறையில் அமைந்த ‘மாயா', ‘டிமாண்டி காலனி' ஆகிய படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ‘ரோமியோ ஜூலியட்' மற்றும் ‘ஓ காதல் கண்மணி' ஆகிய படங்களின் இசைக்கும் படத்துக்கும் இளைஞர்கள் மத்தியில் வெற்றி கிடைத்தது. இவ்வருடத் தொடக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நாயகனாக அறிமுகமான ‘டார்லிங்' படம் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருக்கும் மகிழ்ச்சியைக் கொடுத்தது. தீபாவளிக்கு வெளியான ‘வேதாளம்' அனைத்துத் தரப்பினருக்கும் நல்ல லாபம் கொடுத்திருக்கிறது.
முதலீட்டுக்கு மோசமில்லை!
தொலைக்காட்சி உரிமம் என்பது ஒரு திரைப்படத்தின் வசூலில் பெரும் பங்கு வகிக்கிறது. அந்த வகையில் தொலைக்காட்சி உரிமத்தின் துணையோடு சில படங்கள் தயாரிப்பாளர்களுக்கு முதலுக்கு மோசமில்லாதவையாக அமைந்தன.
‘ஐ', ‘அனேகன்', ‘மாரி', ‘காக்கி சட்டை', ‘36 வயதினிலே', ‘இனிமே இப்படித்தான்', ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க', ‘ஆம்பள' ‘நானும் ரவுடிதான்’ ஆகிய படங்கள் இந்த ரகத்தைச் சேர்ந்தவை. பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்ட 'ஐ' திரைப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தாலும், தொடக்கக் கட்ட வரவேற்பு நீடிக்கவில்லை. தாமதமாக வெளியானதால் தயாரிப்பாளர் செலவு செய்த பணம் மட்டுமே கிடைத்தது என்கிறார்கள். சீனாவில் வெளியிட இருப்பதாகத் தயாரிப்பாளர் தெரிவித்தாலும், இன்னும் வெளியாகவில்லை. அங்கு வெளியிடப்பட்டால் தயாரிப்பாளருக்கு லாபம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்றும் தெரிகிறது.
பாராட்டுப் பெற்ற படங்கள்
‘ராஜதந்திரம்', ‘குற்றம் கடிதல்', ‘கிருமி', ‘குற்றம் கடிதல்' ஆகிய படங்களுக்கு விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ‘கிருமி' படத்தின் தொலைக்காட்சி உரிமை இன்னும் விற்பனையாகவில்லை.
எதிர்பார்ப்பும் நஷ்டமும்
பெரிய அளவுக்கு விளம்பரப்படுத்தப்பட்டு, பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான சில படங்கள் மக்கள் மத்தியில் நிராகரிக்கப்பட்டு, தயாரிப்பாளர்களுக்கும் நஷ்டத்தை ஏற்படுத்தின. ‘என்னை அறிந்தால்’, ‘புலி', ‘பாயும் புலி', ‘10 எண்றதுக்குள்ளே', ‘மாஸ்', ‘எலி', ‘எனக்குள் ஒருவன்', ‘வலியவன்', ‘இஞ்சி இடுப்பழகி', ‘உத்தம வில்லன்', ‘புறம்போக்கு' ஆகியவை அந்த ரகத்தைச் சேர்ந்தவை. ‘எலி', ‘வலியவன்' உள்ளிட்ட சில படங்களின் தொலைக்காட்சி உரிமைகளைப் பெற இதுவரை எந்த நிறுவனமும் முன்வரவில்லை.
பேய்களின் ஆண்டு
இந்த ஆண்டில் அதிகமான பேய்ப் படங்கள் வெளியாயின. அவற்றில் பல படங்கள் ஒரே மாதிரியான கதைக்களத்தைக் கொண்டிருந்தன. வித்தியாசமான கதைக்களத்தில் வெளியான சில படங்களுக்கு வரவேற்பு கிடைத்தது. இந்தாண்டு வெளியிட முடியாமல்போன பல பேய்ப் படங்கள் அடுத்த ஆண்டு வெளியாகக் காத்திருக்கின்றன.
வசூல் நாயகர்கள்
அஜித் மற்றும் ஜெயம் ரவி இருவரும் விநியோகஸ்தர்கள் மத்தியில் நல்ல இடத்தைப் பிடித்திருக்கிறார்கள். ‘வேதாளம்', ‘தனி ஒருவன்' படங்கள் பெருமளவில் லாபம் சம்பாதித்துக் கொடுத்திருக்கின்றன. ‘தனி ஒருவன்' வெளியான அன்று முதல் காட்சிக்குக் கூட்டம் குறைவாகத்தான் இருந்தது. அக்காட்சி முடிந்தவுடன் ‘படம் சூப்பர்' என்று அனைவரும் தெரிவிக்க, மாலைக் காட்சியில் இருந்து தொடர்ச்சியாக 10 முதல் 15 நாட்களுக்கு அரங்கு நிறைந்ததாக கூறுகிறார்கள் விநியோகஸ்தர்கள். பி, சி சென்டர்கள் எனக் கூறப்படும் பகுதிகளில் ‘வேதாளம்' நல்ல வசூலைச் சம்பாதித்துக் கொடுத்தது.
முக்கிய நிகழ்வுகள்
நடைபெற்ற நடிகர் சங்கத் தேர்தல்கள் பெரும் பரபரப்பைக் கிளப்பின. சரத்குமார் அணி மற்றும் விஷால் அணியினர் மாறி மாறிக் குற்றச்சாட்டுகளை அடுக்கினார்கள். தேர்தல் நடைபெற்ற அன்று சட்டசபைத் தேர்தல்போல அனைத்துத் தொலைக்காட்சிகளும் நேரலை ஒளிபரப்பு செய்து முக்கியத்துவம் அளித்தன. எம்.எஸ்.விஸ்வநாதன் மற்றும் ‘ஆச்சி' மனோரமா இருவரின் மறைவு தமிழ்த் திரையுலகினர் மனங்களில் பெரும் துயரமாக அமைந்தது. சென்னை, கடலூர் ஆகிய பகுதிகள் மழை, வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டபோது நடிகர்களில் சிலர் களத்தில் இறங்கிப் பணிபுரிந்து தங்கள் சமூக உணர்வை வெளிப்படுத்தினார்கள். ‘நீங்கள் என்ன செய்தீர்கள்?’ என்று ஒரு சில நடிகர்களைப் பார்த்து மக்கள் கேள்வி எழுப்பினார்கள்.
வெள்ள பாதிப்பின் துயரத்திலிருந்து விடுபடுவதற்குள் சிம்பு, அநிருத் கூட்டு முயற்சியில் உருவானதாகச் சொல்லப்படும் ‘பீப்’ பாடல் குறித்த சர்ச்சை வெடித்தது. இருவர் மீதும் வழக்குத் தொடுக்கப்பட்டிருக்கிறது. நிவாரணப் பணிகள் குறித்த நிகழ்ச்சிக்கு வந்த இசையமைப்பாளர் இளையராஜாவிடம் இது பற்றி நிருபர் ஒருவர் கேட்கப்போக, இளையராஜா கோபப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
எப்படி இருக்கும் 2016?
புத்தாண்டின் முதல் தினத்திலேயே சில படங்கள் வெளியாக உள்ளன. இளையராஜா இசையமைக்கும் 1,000-வது படமான ‘தாரை தப்பட்டை’(இயக்குநர் பாலா இயக்கம்), சூர்யாவின் ‘24’, விஷாலின் ‘கதகளி’ ஆகிய படங்கள் உள்படப் பல படங்கள் வரிசையில் தயாராக இருக்கின்றன. தொலைக்காட்சி உரிமம், நடிகர்களின் சம்பளம், வரிச்சலுகை உள்ளிட்ட விஷயங்களை எவ்வளவு சீக்கிரம் பேசி முடிக்கிறார்களோ, அந்த அளவுக்குப் புத்தாண்டு தமிழ் சினிமாவுக்கு நல்ல ஆண்டாக இருக்கும் என்கிறார்கள் திரைப்படத் துறையைச் சேர்ந்தவர்கள்
தஹிந்து
0 comments:
Post a Comment