'2.0' படத்தில் சிட்டி பாத்திரம் விரிவாகியிருப்பதாக அப்படத்தின் வசனகர்த்தா ஜெயமோகன் தெரிவித்திருக்கிறார்.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் '2.0' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கி நடைபெற்று வருகிறது. அக்ஷய்குமார் முக்கிய வேடத்தில் ரஜினியுடன் இணைந்து நடிக்கிறார். ஏமி ஜாக்சனும் ரஜினியுடன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருக்கிறார். லைக்கா நிறுவனம் இப்படத்தை பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறது.
'2.0' படத்தில் ஷங்கருடன் இணைந்து முதன் முறையாக வசனம் எழுதியிருக்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன். '2.0' குறித்து ஜெயமோகன் தனது வலைப் பக்கத்தில் இதுவரை எதுவும் தெரிவிக்காமல் இருந்தார்.
இப்போது முதன் முறையாக '2.0' குறித்து தனது வலைப் பக்கத்தில் எழுதியிருக்கிறார் ஜெயமோகன். அப்பதிவில், "எந்திரனில் என் பணிகள் முடிந்து பல மாதகாலம் ஆகிறது. சின்னச்சின்ன மெருகேற்றல்கள் மட்டுமே எஞ்சியிருந்தன. அர்னால்ட் நடிப்பதாக அனேகமாக உறுதியாகி இருந்தது. இறுதிநேரம் வரை முயன்றும் அதில் உள்ள சர்வதேச நிதிச்சட்டச் சிக்கல்களால் நடக்கமுடியாமல் போயிற்று.
அக்ஷய்குமார் அந்த வலுவான எதிர்நாயகன் வேடத்தில் நடிக்கிறார். தமிழின் இன்னொரு பெரிய கதாநாயகனை எண்ணி உருவாக்கப்பட்ட கதாபாத்திரம் அது. பலமுகங்கள் கொண்டது.
உடல்நலம் நன்கு தேறி இருபடங்களில் ஒரேசமயம் ரஜினிகாந்த் நடிப்பது மிக உற்சாகமான செய்தி. அவருடைய குறும்பு, வேகம், சினம் மூன்றுக்கும் இடமுள்ள கதாபாத்திரமாக சிட்டி மேலும் விரிவாகியிருக்கிறது.
ஷங்கர் படங்கள் அவருக்கே உரிய தெளிவான ஆனால் சுருக்கமான திரைக்கதை அமைப்பு கொண்டவை. என் பார்வையில் அவரது மிகச்சிறந்த திரைக்கதை அந்நியன். அதைவிட இது ஒரு படி மேல் எனத் தோன்றுகிறது. வலுவான எதிர்நாயகன் காரணமாக 'எந்திரன்' முதல் பகுதியைவிட இது தீவிரமானது. நான் எப்போதுமே ஜேம்ஸ் பாண்ட் வகை படங்களுக்கும் அறிவியல் புனைவு படங்களுக்கும் ரசிகன்.
என்னுள் உள்ள சிறுவனை உற்சாகமடையச் செய்த கதை இது. இதில் பங்கெடுத்தது நிறைவூட்டுகிறது" என்று கூறியிருக்கிறார்.
தஹிந்து
0 comments:
Post a Comment