Wednesday, December 09, 2015

நிவாரணப் பணிகளில் கவனிக்கத்தக்க 10 குறிப்புகள்: கடலூரில் களப்பணியாற்றிய நடிகர் சித்தார்த் பட்டியல்

  • கோப்புப் படம்
    கோப்புப் படம்
  • சித்தார்த்தின் ட்விட்டர் பக்கம்
    சித்தார்த்தின் ட்விட்டர் பக்கம்
சென்னையில் மழை பாதிப்பு ஏற்பட்ட சில நாட்களிலேயே அதைப் பற்றி தொடர்ந்து ட்விட்டரில் பேசி வந்த நடிகர் சித்தார்த், வட இந்திய ஊடகங்கள் தமிழக மழை செய்தியை புறக்கணித்ததையும் விமர்சித்தார். அதோடு நில்லாமல் களத்திலும் இறங்கி, ஆர்ஜே பாலாஜி உள்ளிட்டோருடன் இணைந்து நிவாரணப் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
கடலூருக்கும் நிவாரணப் பொருட்களோடு சென்ற சித்தார்த், தற்போது அங்கு தன் களப் பணிகளை முடித்துவிட்டு திரும்பியுள்ளார். தொடர்ந்து கடலூர் பயணத்திலிருந்து தான் கற்ற 10 விஷயங்கள் குறித்தும், அதையொட்டி நிவாரண உதவி செய்யும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை பற்றியும் ட்விட்டரில் பட்டியலிட்டுள்ளார். அதன் விவரம்:
"கடலூரிலிருந்து வந்துவிட்டேன்.. கற்றவை
1. பாய், படுக்கை, போர்வை, கொசுவர்த்தி உள்ளிட்டவற்றை அனுப்புங்கள்.
2. குறுகலான சாலைகளில் செல்லக்கூடிய அளவுக்கு சிறிய வண்டிகளில் பொருட்களை அனுப்புங்கள்.
3. எளிதில் செல்ல முடியாத குக்கிராமங்களுக்கு உதவும் குழுக்களை அடையாளம் கண்டுகொள்ளுங்கள்.
4. பிரதான சாலைகளிலிருந்து விலகி இருக்கும் சிறிய கிராமங்களுக்கு முதலில் உதவுங்கள்.
5. நிவாரண பொருட்களை எடுத்துச் செல்லும் வண்டிகளில் பேனர்களை ஒட்டி தெரிவிக்க வேண்டாம். நீங்கள் வழியில் தாக்கப்படலாம்.
6. உள்ளூரில், போலீஸ் துணையோடு இருக்கும் உதவிக் குழுக்களை நாடுங்கள்.
7. சமைத்து சாப்பிட வசதியுள்ளதா என்பது தெரியாமல் அரிசி, பருப்பு உள்ளிட்ட பலசரக்கு / மளிகை பொருட்களை அனுப்பவேண்டாம்.
8. கடலூருக்கு கண்டிப்பாக உதவி தேவை. ஆனால் பீதியோ, அச்சமோ தேவையற்றது. தேவையில்லாத பொருட்களைக் கொண்டு உபரியால் நிரப்ப வேண்டாம்.
9. நாங்கள் 15 கிராமங்களுக்கு சென்றோம். அவை மூழ்கிவிட்டது என்றும், பட்டினியால் வாடுகிறது என்றும், சேவை செய்ய யாரும் செல்லவில்லை என்றும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளன. இது உண்மையல்ல.
10. வெளியிலிருந்து கொண்டே கடலூரைப் பற்றிய கருத்துகள் கூற வேண்டாம். கஷ்டப்படும் பகுதிகள் அங்கே இருக்கின்றனர். அக்கறையோடு இருங்கள். ஆனால் அதை மிகைப்படுத்த வேண்டாம். நிவாரணப் பணிகளில் குழப்பம் வேண்டாம்.



இவ்வாறு அந்த ட்வீட்டில் அவர் தெரிவித்துள்ளார்.
இதோடு கடலூரில் தேவைப்படும் இடங்களுக்கு நிவாரண உதவிக்காக 20 வண்டிகளை தனிப்பட்ட முறையில் சித்தார்த் ஒருங்கிணைத்துள்ளார். ஆனால் தனது களப் பணி தொடர்பான எந்த புகைப்படங்களையும் சித்தார்த், பாலாஜி உள்ளிட்டோர் இதுவரை பகிரவில்லை. விளம்பரம் தேடமால் அவர்கள் செய்யும் இந்த பணிக்கு சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

-தஹிந்து

0 comments: